Thursday, May 27, 2010

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏன் தாமதம்?

மத்திய அமைச்சரவை நேற்று கூடிய போதும், விவாதித்து ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. இந்தியாவில் நடந்து வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் இணைக்கப்பட வேண்டுமா என்பது பற்றி ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. இதுதான் இந்திய மத்திய அமைச்சகத்தின் கொள்கை நிலை. அமைச்சர்கள் குழு ஒன்றை நிறுவி, அந்த குழு தனது கருத்தை தெரிவிக்கும் என்பதாக ஒரு நழுவல்வாத முடிவை மத்திய அமைச்சகம் நேற்று எடுத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஏன் இந்த அளவுக்கு சர்ச்சைக்குள்ளாகிறது? இந்தியாவின் மத்திய அரசால் 1931ம் ஆண்டு, அரசியல் சட்டத்தின் 340வது பிரிவின் அடிப்படையில் நிறுவப்பட்ட காகா கலேல்கர் தலைமையிலான, பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம் நாடு தழுவிய அளவில் உள்ள சமூகரீதியில், கல்விரீதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை பற்றிய ஆய்வை செய்தது. அந்த காகா கலேல்கர் ஆணையம் 1955ம் ஆண்டு தனது அறிக்கையை கொடுத்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை அவர்களது வேலை அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும், எழுத்தறிவு விழுக்காடு அடிப்படையிலும், பொதுவான கல்வி முன்னேற்ற அடிப்படையிலும் அந்த ஆணையம் மதிப்பீடு செய்திருந்தது. அந்த ஆணையத்தின் அறிக்கை அப்போதே நாடாளுமன்றம் முன்னால் வைக்கப்பட்டது. ஆனாலும் கூட அதன் மீது எந்த விவாதமும் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவில்லை.
அதேசமயத்தில் 1961ம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுக்கு ஒரு வழிகாட்டல் அனுப்பியது. அதில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் வரையறைச்செய்யும்படி கேட்டுக்கொண்டது. அந்த வழிகாட்டலில் மத்திய அரசு, சாதிவாரியாக மதிப்பீடு செய்யாமல் பொருளாதார அளவுகோலை வைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அடையாளம் காணுமாறு கூறியிருந்தது. அதாவது அன்றைய சூழலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து, அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சென்ற, மற்றும் அரசு அலுவலகப் பணிகளுக்கு சென்ற, அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்த நபர்களுக்கு தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான இடஒதுக்கீட்டை, சமூக, கல்விரீதியான பின்தங்கிய நிலையை கணக்கில் கொண்டு அடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு கிடைக்கவில்லை என்பது புரிகிறது.
அதையொட்டி பல்வேறு மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை அடையாளம் காண தனி ஆணையங்களை நியமிக்கத் தொடங்கின. அதுதான் தமிழ்நாட்டில் அம்பாசங்கர் ஆணையம் என்ற ஒன்று உருவாவதற்கும் வாய்ப்பாக அமைந்தது. அம்பாசங்கர் ஆணையத்தின் வழிகாட்டல் தமிழ்நாட்டில் சில முன்னேறிய சாதிகளைக் கூட, பிற்படுத்தப்பட்ட சாதிகளாக அறிவிக்கும் நிலையை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறை அகில இந்திய ரீதியில் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களை அணுகிப்பார்த்த தன்மையிலிருந்து, மாறுப்பட்டு இருந்ததா என்பது இப்போதும் சர்ச்சைக்குள்ளாக்கப்படாமல் இருக்கிறது.
உதாரணமாக பீகார் மாநிலத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமிகார் என்ற சமூகம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தது. மண்டல் ஆணையத்தின் அறிக்கையில் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பற்றிய மறுஆய்வு வெளியிடப்பட்டது. அதில் பூமிகார் என்ற அந்த சமூகம் முன்னேறிய சமூகமாக அறிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட புதிய நிலைமைகளை ஒட்டிய மதிப்பீடுகளை, மண்டல் ஆணையம் தன்னால் முடிந்த அளவிற்கு செய்து காட்டியது. ஆனாலும் கூட 1931ம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான், மண்டல் ஆணையமும் தனது மதிப்பீட்டை செய்ய வேண்டியிருந்தது. அதுவே காலாவதியான கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டது என்பதால், சில இடங்களில் பொருத்தமாக இல்லை என்ற விமர்சனத்திற்குள்ளானது.
அதனால் தான் 1931ம் ஆண்டிற்குப் பிறகு, எடுக்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பு, இந்த முறையாவது மக்கள் தொகை கணக்கெடுப்பில் இணைக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை வலுவாக எழுகிறது. உள்ளபடியே இந்திய அரசியல் சட்டப்பிரிவுகள் 341 மற்றும் 342 ஆகியவற்றின் கீழ் இடஒதுக்கீடு, பட்டியலின சாதிகளுக்கும், பட்டியலின பழங்குடியினருக்கும் மட்டுமே, குடியரசுத் தலைவரின் அறிவிப்பாணையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதிகள் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கப்படவில்லை. மாறாக சமூக ரீதியில் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ள வகுப்புகள் என்ற பெயரில் இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு சட்டபிரிவு 340ன் கீழ், இன்னொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையமான மண்டல் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதில் சமூக, கல்வி ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை விளக்குவதற்காக 4 நிபந்தனைகள் கொடுக்கப்பட்டன. 1980ம் ஆண்டின் இறுதியில் மண்டல் தனது அறிக்கையை கொடுத்தார். அந்த அறிக்கையில் 3வது பாகத்தில் 1வது பிரிவில் காகா கலேல்கர் ஆணையம் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது. கலேகர் ஆணையம் சமூக, கல்வி ரீதியான பின்தங்கிய வகுப்புகளை சரியான நிபந்தனைகளுடன், புறநிலை சோதனைகளுடன் முன்வைக்க தவறிவிட்டது என்பதாக கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றமும், பல உயர்நீதிமன்றங்களும் இதே வரையறைகளை கேட்டுக்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் அடையாளங்களையும் கேட்டு வருகின்றனர். கெடுவாய்ப்பாக மண்டல ஆணையமும், அதை நிவர்த்திச் செய்யவில்லை. மண்டல ஆணையத்தின் 12வது பாகத்தில், 22வது பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், இந்திய மக்கள்தொகையில் 52% என்பதாக எழுதப்பட்டுள்ளது. அதுவும் 1931ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே தொடர்ந்து நிலையானது என்று எப்படி கூறமுடியும்?
1931ம் ஆண்டில் இந்தியா என்ற நாடு, பாகிஸ்தானையும், இன்றைய வங்காளதேசத்தையும் சேர்த்து இருந்தது. அப்போதுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இப்போது எப்படிப் பொருந்தும்? அதனடிப்படையில் 1981ம் ஆண்டிற்கும், அதன்பிறகு 2007ம் ஆண்டிற்கும் பொருத்திப் பார்க்கும் மத்திய அரசை எந்த நிலையில் ஏற்றுக் கொள்ளமுடியும்? 198283ம் ஆண்டு மண்டல் அறிக்கை நாடாளுமன்றத்தில் 2 முறை விவாதிக்கப்பட்டது. அப்போது மாநிலங்கள் அடையாளம் கண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும், மண்டல் அறிக்கையால் அடையாளம் காணப்பட்டதற்கும் மத்தியில் பெருத்த வேறுபாடு தெரிந்தது.
1991ம் ஆண்டு செப்டம்பர் 25ல், பிரதமர் வி.பி.சிங்கால், மண்டல் அறிக்கை மறுஉரு பெற்று அமுலாக்கப்பட்டது. மண்டல் அறிக்கையில் 3743 சாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், மண்டலால் 2 கிராமங்களும், ஒரு ஒன்றியமும் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 0.06% கிராமங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சமூகபொருளாதார கள ஆய்வு 3745 சாதிகளில், 406 சாதிகள் பற்றி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 11% சாதிகள் மட்டுமே கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதனால் தான் இப்போது எடுக்கின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் மீண்டும் வலுப்பெறுகிறது.
கலேல்கர் ஆணைய அறிக்கையில் தமிழ்நாட்டில் 156 பிற்படுத்தப்பட்ட சாதிகள் அடையாளம் காணப்பட்டன. அதேசமயம் தமிழ்நாடு அரசு 1245 சாதிகளை, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாக அறிவித்துள்ளது. அசாமிலும், கர்நாடகாவிலும், மஹாராஷ்ராவிலும் இதேபோல மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் உச்சநீதிமன்றம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான உயர்கல்வி இடஒதுக்கீட்டில் 27% கூட இடைக்கால தடைசெய்தது. அதற்கான காரணத்தைக் கூறும் போது, 1931க்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்பதையே கூறியிருந்தது. இத்தனை காரணங்களையும் எடுத்துச்சொல்லி, இன்னமும் பின்தங்கியிருக்கும் மக்கள் பிரிவினரை முன்னேற்ற, அரசாங்கம் திட்டங்களை தீட்டுவதற்கு, சாதிவாரி கணக்கெடுப்பின் காரணங்களை முன்வைத்து, தமிழக அரசு கடுமையாக போராட வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு.

பல்லுயிரியலை அழிக்கும் பன்னாட்டு மூலதனம்----திரைப்படங்கள்

நேற்று சென்னையில் பல்லுயிரியல் பற்றிய திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்த ஆண்டு ஐ.நா.சபையால், பல்லுயிரியல் ஆண்டு என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 21ம் நாள் அதற்கான உலக நாள் என்பதாகவும் கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டியே பல்லுயிரியல் பற்றிய திரைப்படங்களை, மரபணுமாற்று இயலுக்கு எதிராக தெற்கு என்ற அமைப்பிலிருந்து திரையிட்டார்கள். இயற்கையாக பல்லுயிரியல் எப்படி தாவரங்கள், விலங்கினங்கள், மனிதயினம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது என்பது இந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும். விவசாயத்தில் பல்லுயிரியல் எவ்வாறு ஆரோக்கியமான சூழலை உருவாக்கியிருந்தது என்பதை, இன்றைய அழிந்து வரும் சூழலில் நின்றுக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கிறது.
மாறிவரும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஒப்ப, ஒரே நிலத்தில் பல்வேறு வகையான பயிர்களை நமது விவசாயிகள் பயிரிடுவார்கள். அதில் சிறு தானியங்களின் உற்பத்தியும் அடங்கும். கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, திணை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, காடை, கண்ணி போன்ற சிறு தானியங்களை, நமது விவசாயிகள் பயிரிட்டு வந்ததை நாம் பார்த்திருக்கிறோம். நெல் உற்பத்திச் செய்கின்ற நிலத்திலேயே, காலத்திற்கு ஒப்ப கடலையையும் பயிரிடும் நமது பண்டைய விவசாயிகள், ஆரோக்கியமான சூழ்நிலையை தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். பல்வேறு பயிர்கள் ஒரே நிலத்தில் பயிரிடப்படும் போது, பூச்சிகளின் தாக்குதல்களும், நோய்வாய்படுதல்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பல்லுயிரியல் என்பது நமது பாரம்பரிய விவசாயத்தின் ஊறிப்போன ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது.
மேற்கண்ட பல்லுயிரியல், 1965ம் ஆண்டு இந்தியாவில் திணிக்கப்பட்ட, அமெரிக்காவின் பசுமைப்புரட்சி மூலம் விவசாயத்தில் முதலில் உடைக்கப்பட்டது. பாரம்பரிய பயிர்களின் விதைகள் நாடெங்கிலும் திரட்டப்பட்டு, பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தலைநகர் மணிலாவில், அமெரிக்காவால் நடத்தப்பட்ட சோதனைசாலையில் உருமாற்றம் செய்யப்பட்டு, வீரிய விதைகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. அந்த வீரிய விதைகள் இந்திய விவசாயத்தின் முகத்தையே மாற்றிவிட்டன. அவற்றை பயிரிட்ட நிலங்கள், சத்துக்களை இழக்கத் தொடங்கின. அதை ஈடுசெய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரசாயன உரங்கள், நமது நிலங்களில் இறங்கின. அவை ஏற்படுத்திய நோய்களைத் தீர்க்க, பூச்சிமருந்து கொல்லிகளை வெளிநாட்டவர்களே இறக்குமதிச் செய்தார்கள். இப்படியாக நமது பாரம்பரிய நிலங்கள் தங்களது சத்துக்களையும் இழக்கத்தொடங்கின. இது பல்லுயிரியலுக்கு கொடுக்கப்பட்ட முதல் அடி.
அடுத்து உலக அரங்கில் பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் மரபணுமாற்று விதைகள், பல்லுயிரியலை அழிப்பதற்கான வேலைகளை செய்யத் தொடங்கின. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் செயற்கை விதைகள், 80 விழுக்காடு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. வெற்றியைத் தேடி ஒரு பேராபத்து என்ற திரைப்படத்தின் மூலம், தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, வடஆப்பிரிக்காவின் மாலி ஆகிய நாடுகளில், மரபணுமாற்றியல் செயல்பட்ட விதம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் பி.டி.பருத்தி விதையின் வில்லங்கங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.
மான்சான்டோ நிறுவனம் மரபணுமாற்று உறுப்புகள் மூலம், பாதுகாப்பையும், அதிகமான பொருள் வரவையும் ஈட்டலாம் என்ற பரப்புரையை செய்து வருகிறது. ஆனால் அது எந்தளவுக்கு பொய்யானது என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தென்னாப்பிரிக்காவின் மகதினி என்ற பகுதியில், சிறு விவசாயிகளுக்கு மான்சான்டோவின் பி.டி.பருத்தி விதைகள் அதிக வெற்றியைக் கொடுத்திருப்பதாக, அந்த நிறுவனம் கூறியது. ஆனால் சிறு விவசாயிகளை அழிக்கத் தான் அந்த மரபணுமாற்று பருத்தி உதவியிருக்கிறது என்பதை இந்தப் படம் நேரடியாக விளக்குகிறது.
அதேபோல இந்தோனேஷியாவில் பி.டி.பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டு சுலாவாசி என்ற இடத்தில், ஓராண்டு கழித்து, சிறு விவசாயிகளை நட்டம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. அதேபோல தாய்லாந்தில் நிலவுகின்ற சட்டங்களை வஞ்சகமாக மீறி, விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட மரபணுமாற்று பருத்தி பெரும் தோல்வியை ஏற்படுத்தி, தாய்லாந்து விவசாயிகளை புலம்பவைத்துள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் மூலம் நாம் காணமுடிகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி நாட்டில், மரபணுமாற்று பருத்தி அறிமுகப்படுத்தப்பட்ட போது, அங்குள்ள சிறு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் மூலம் மாலி நாட்டிற்குள் மரபணுமாற்றியல் நுழையக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டதையும் இந்தப் படம் சித்தரிக்கிறது. அதேசமயம் இந்தியாவில் பி.டி.பருத்தி 5 ஆண்டுகளில் விவசாயிகள் மத்தியில் ஆழமான நெருக்கடியை ஏற்படுத்தி, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணமாக ஆனதையும் இந்த திரைப்படம் தெளிவாக காட்டுகிறது.
அடுத்து மான்சாடோவின் பார்வையில் உலகம் என்ற ஒரு திரைப்படம் காட்டப்பட்டது. ஒரு மணி நேரமும், ஐம்பது நிமிடங்களும் ஓடும் இந்தப் படம், மான்சான்டோவின் இணையதளத்திற்குள் சென்று, பல்வேறு விவரங்களை பட்டியலிடுகிறது. 1901ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்து தனது உற்பத்திகளில் உள்ள நச்சுத்தன்மைகளால், பல்வேறு வழக்குகளை சந்தித்தது என்பது காட்டப்படுகிறது. 2002ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ரூ.10,000 கோடி டாலரை, மான்சான்டோ நிறுவனம் சம்பாதித்துள்ளது. இந்த அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனம், பி.சி.பி என்று அழைக்கப்படும் பாலி குளோரினேட்டட் பைபினய்ல்ஸ் என்ற தனது உற்பத்தியின் மூலம், புற்றுநோயையும், தைராயிடையும் ஏற்படுத்தியதை நாம் காணமுடிகிறது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒப்புதல் குழு மூலம், நச்சுத்தன்மைக் கொண்ட மான்சான்டோவின் உற்பத்திகள் ஒப்புதல் பெற்றன என்பதும் இந்தப் படத்தில் தெரிகிறது. அதன் பல்லுயிரியல் ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மயன்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் திணறுவது இதில் காட்டப்படுகிறது. மான்சான்டோ உற்பத்திகளின் பக்கவிளைவுகளால் 1000 பேர் ஊனமுற்றதை அவரால் மறுக்க முடியவில்லை. அமெரிக்க குடிமக்களையே சோதனைப்பன்றிகள் போல, பயன்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் இந்த படத்தில் குற்றம்சாட்டுகிறார்கள். கனடாவில் அதிகாரப்பூர்வமற்ற நிலையிலும், ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்ட நிலையிலும் உள்ள போவின் வளர்ஹார்மோன்ஸை, மாடுகளுக்கு ஊசியின் மூலம் இறக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக கூறி, நச்சுத்தன்மையை பரப்பி வருவதையும் இதில் சுட்டிக்காட்டுகிறார்கள்.
வடஅமெரிக்க விவசாயிகள் ஒவ்வொருவருடனும், மான்சான்டோ நிறுவனம் கட்டாயமாக ஒப்பந்தம் போட்டு, தனது மரபணுமாற்று விதைகளை திணித்துள்ளது. அதில் நட்டம் அடைந்த விவசாயிகள் தங்களது பண்ணைகளுக்கு இனி மான்சான்டோ நுழையக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்ததையும் இப்படம் விளக்குகிறது. சோயா பீன்சிலும் மரபணுமாற்று வேலை செய்து தோல்வி அடைந்ததை காட்டுகிறார்கள். மெக்சிகோவில் பல பத்து லட்சம் விவசாயிகள் மத்தியில், பாரம்பரிய சோளத்தை அழித்து, மரபணுமாற்று சோளம் கொண்டு வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு காட்டப்படுகிறது. மான்சான்டோ நிறுவனம் உருவாக்கிய ரசாயன கலவையான ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சுப்பொருளை, அமெரிக்க ராணுவம் வியட்நாம் போரில் பயன்படுத்தியதால் 4 லட்சம் மரணத்தையும், 5 லட்சம் குழந்தைகளின் குறைப்பிரசவத்தையும் அடைந்ததை நாம் சிந்தித்துப்பார்க்க இந்தப் படம் உதவுகிறது.
இந்தியாவில் மஹிகோ என்ற விதைக் கம்பெனியை முழுமையாகவும், ஈ.ஐ.டி.பாரியின் சிறிய விதைப் பிரிவையும் மான்சான்டோ வாங்கி விட்டது. போன்கார்டு என்ற பெயரில் ஆந்திராவில் நுழைந்துள்ளது. அதன் விளைவாக 25 வயது விவசாயி உட்பட, பல ஆயிரம் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டதை இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ராசி 12, ராசி 14 என்ற பெயர்களில் மரபணுமாற்று பருத்தி விதைகளை, மான்சான்டோ மாற்றுப்பெயர்களில் சந்தையில் திணித்து வருகிறது. இந்தப்படங்கள் காட்டும் உண்மைகளை, காட்சிகளின் மூலம் ஆட்சிக்கு வரும் நமது அரசியல்வாதிகள் புரிந்துக்கொண்டு சுதாரிப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.