Tuesday, May 25, 2010

கள்ளத்தோணியும், நல்ல தோணியும்

இந்திய அரசுக்கு எப்போதுமே அறிக்கைகள் கொடுப்பதில் ஒரு அலாதி பிரியம் உண்டு. அதுவும் இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு பதில், அமைச்சர்களுக்கு பதில், உயர் அதிகாரிகள் மூலம் அறிக்கைகள் கொடுப்பதில்தான் அந்த அலாதிப் பிரியம் வெளிப்படும். இந்தமுறை அத்தகைய ஒரு அறிக்கையை மத்திய உள்துறையின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா மூலம் வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் உள்நாட்டு அடக்குமுறையை மாவோயிஸ்டுகள் பெயரில் கட்டவிழ்த்துவிட, உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மூலம் வெளியிடுவார்கள். அதை அடுத்த ஒரு திட்டத்திற்கு இப்போது இணைச் செயலாளரை பயன்படுத்துகிறார்கள் போலத்தெரிகிறது. இந்த அறிக்கையில் மத்திய அரசின் குறி, விடுதலைப்புலிகள் மீது. இந்திய அரசும், இலங்கை அரசும் ஏற்கனவே விடுதலைப்புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று அறிவித்தார்களே என்று நீங்கள் அப்பாவித்தனமாக கேட்கலாம். அதுவும் உண்மைதான். திட்டமிட்டு ஏழு நாடுகள் அல்லது இப்போது புரிவதுபோல இருபது நாடுகள் சேர்ந்து திட்டமிட்டு புலிகள் இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்று, இலங்கை அரசுக்கு முழுமையான உதவியைச்செய்தன. அதன் உண்மைப்பொருள் புலிகள் இயக்கத்தை அல்ல, ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தை என்பதை அப்போது பலரும் புரிந்து கொள்ளவில்லை. உள்ளபடியே இலங்கை அரசுக்கும், அண்டை நாடுகளில் உள்ள விரிவாக்க சிந்தனையுள்ள அரசுகளுக்கும், தமிழ் இனத்தின் எழுச்சி என்பதன் மீது ஒருவிதமான அச்சம் இருக்கிறது.
பாரம்பரியமிக்க தமிழ் தேசிய இனம், ஆங்கிலேயரின் ஆட்சி காலத்திலேயே அவர்களது தேவைக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். அதாவது அன்று ஆங்கிலேயர்களுக்கு குடிக்க தேநீர் தேவைப்பட்டது. அதற்காக தேயிலைத்தோட்டங்களை மலைப்பகுதிகளில் நிறுவ முயன்றனர். தாங்கள் காலனிகளாக ஆக்கிரமித்துள்ள நாடுகளில் மலைப்பிரதேசங்களை அடையாளங்கண்டனர். அப்படி அவர்கள் அடையாளங்கண்ட நாடுகள் மலேசியாவும், இலங்கையும். அந்த இரு நாடுகளுக்கும் தேயிலைத்தோட்டங்களை உருவாக்க கடினமாக உழைக்கும் கூட்டம் அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த கடின உழைப்பாளர்கள் தமிழர்களே. அதனாலேயே இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலேயிருந்து கூலித்தொழிலாளர்களை கூட்டம், கூட்டமாக அந்த இரு நாடுகளுக்கும் ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர். அப்படி அந்த நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் இலங்கையிலும், மலேசியாவிலும், மலைகளை, காடுகளை வெட்டி, பண்படுத்தி, தோட்டங்களாக மாற்றி, அவற்றில் தேயிலைச் செடிகளை வளர்த்து, அந்த தேயிலைச் செடிகளுடன் அதிகாலை ஆறு மணியிலிருந்து போராடி, மாலை வரை உழைத்து, கோடி, கோடியாக அந்த நாடுகளுக்கு சம்பாதித்து கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட தமிழர்களை இலங்கை அரசு, குடியுரிமை தராமல் பல ஆண்டுகள் அடிமைகளாக நடத்தி வந்தது. அதன்பிறகு இன்று வரை மலையக தோட்டத்தொழிலாளர்களான இந்திய வம்சாவழியினருக்கு, எந்த ஒரு முன்னேற்றமும் கொடுக்க வில்லை. மாறாக அவர்களது அரசியல் பிரதிநிதிகளை அடிமைகளாக இலங்கையின் சிங்கள அரசு நடத்தி வருகிறது. சுதந்திரமான தொழிற்சங்கத்தையோ, தொழிலாளர்களின் அரசியல் பிரதிநிதிகளையோ வளர விடுவதில்லை. அன்றைய காலத்தில் ஷண்முகதாசன் தொடங்கி, இன்றைக்கு மனோகணேசன் வரை தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலிருந்து வளரும் தலைவர்களை வெற்றி பெற விடுவதில்லை.
அதையும் மீறி எதிர்கட்சியான ஐ.தே.க. எம்.பி.யாக, மலையகப் பகுதியான நுவரலியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காதரையும் ஆளுங்கட்சி இப்போது இழுக்கிறது. தென்னிலங்கையில் இந்திய வம்சாவழி தமிழர்கள், சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்துடன்தான் வாழ முடிகிறது. இதே நிலைமைதான் மலேசியாவிலும் நடந்து வருகிறது. மலேசியாவில் மலாய் இனத்தவருக்கு போட்டியாக பெரும்பான்மையாக இருக்கும் சீன இனத்தை இணைத்துக் கொண்டுதான், தமிழர்கள் அங்கே அரசியல் களத்தில் வெற்றி பெற முடிகிறது. உதாரணமாக ஜனநாயக செயல்கட்சி என்ற சீன இனத்தவர் தலைமையிலான கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு, பிணாங்கு மாநிலத்தில் துணை முதல்வராகவும், அதேபோல எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் தமிழர்கள் தங்களை அறுதியிட்டுக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திறமையும், தகுதியும், கடின உழைப்பும் உள்ள தமிழர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆளுகின்ற ஆட்சியாளர்கள், இந்த வட்டாரத்திலும் எண்ணுகிறார்கள்.
அதன் பாதிப்புதான் இன்றைக்கு விடுதலை புலிகளுக்கு எதிராக மத்திய அரசு திடீரென எதிர்பாராதவிதமாக கொடுத்திருக்கின்ற அறிக்கை. ஈழத்தில் 4வது வன்னிப்போர் தோற்றப்பிறகு, ஆயுதம் தாங்கிய தமிழர்களின் படை தோற்கடிக்கப்பட்ட பிறகு, அவர்களது அனைத்து நாட்டு தொடர்புகளும், போராளிகளும், பிடிபட்டபிறகும் ஆள்வோருக்கு ஏன் இந்த கொலைவெறி என்பதாக தமிழர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு, அடுத்த நாடான இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு தடை நீடிப்பு. அதையொட்டி, இப்போது அச்சுறுத்தும் வகையில் கள்ளத்தோணி பற்றி மத்திய உள்துறையின் அறிக்கை.
புலிகள் இயக்கத்திலிருந்து தப்பியோடி வந்தவர்கள், பழைய போராளிகள் இவர்களெல்லாம் மீண்டும் தமிழ்நாட்டில் கூடி, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறார்கள் என்று நம்ப முடியாத ஒரு புதிய கதையை நமது உள்துறை அறிவித்துள்ளது. அதற்காக மூன்று காரணங்களையும் வரிசைப்படுத்தி எழுதியுள்ளது. வன்னிப்போரில் இந்திய அரசின் தமிழர் விரோத பங்களிப்பை பற்றி கோபத்துடனும், ஆதங்கத்துடனும், அழுகையுடனும் உலகம் முழுவதும் தமிழர்கள் எழுதி வருகின்ற எழுத்துக்கள், மத்திய அரசால் இங்கே கோடிட்டு காட்டப்படுகின்றன. உள்ளபடியே அரசியல் போராட்டத்தில் இனி ஈடுபடுவது மட்டுமே,
தமிழ் தேசிய இனத்திற்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உலகத் தமிழினம் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஒரு வடிவமைப்பையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் ஏற்படுத்தி வருகிறது. எந்த விதத்திலும் ஆயுதங்களை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல், அரசியல் போராட்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து உலகத் தமிழர்கள் தங்கள் பாதைகளை வடிவமைத்து வருகின்றனர். தமிழ் தேசிய இனத்தின் உலகம் தழுவிய தாக்கத்தை புரிந்து வைத்துக் கொண்டுள்ள, எதிர் சக்திகள் இப்போது அத்தகைய அரசியல் போராட்டத்தை உடைப்பதற்காக பல்வேறு வழிகளில் சதிகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
அவற்றில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்றும், மீண்டும் புலிப் போராளிகள் தாக்குவார்கள் என்றும் வீர வசனங்களை பேசுகின்ற உணர்ச்சித் தமிழர்களையும், அப்பாவித் தமிழர்களையும் ஒருபுறம் அனுமதிக்கிறார்கள். இன்னொரு புறம், ஈழத்தில் மீண்டும் காடுகளில் ஆயுதம் தாங்கிய புலிகள் இருப்பதாக, அல்லது அணி சேர்வதாக ஒரு மாயையை, கதை வடிவில் வசனங்களுடன் வெளியிடுகிறார்கள். அதன்மூலம் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள ராணுவத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கும், அவசர நிலையை இலங்கைத் தீவில் தொடர வைப்பதற்கும், மிச்சமீதி போராளிகளை அடையாளம் கண்டு கைப்பற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கு அதையே காரணமாக பயன்படுத்துகிறார்கள். இப்போது, மேற்கண்ட தகவல்களை காரணங்களாக மாற்றி, ஓடிவந்த அல்லது தப்பிவந்த அல்லது விரக்தியடைந்த அல்லது மனைவி, மக்களுடன் நிம்மதியாக தமிழ்நாட்டில் வாழ்வதற்காக அடைக்கலம் தேடிவந்த, ஈழத் தமிழர்களை மேலும் ஒடுக்குவதற்காக இத்தகைய அறிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதுமட்டுமின்றி மாநில அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சியின் மீது, ஒரு விதமான நெருக்கடியை உருவாக்குவதற்காக, மத்திய அரசு இத்தகைய அணுகுமுறைகளை செய்கிறதா என்ற சந்தேகம் மாநில ஆளுங்கட்சி வட்டாரத்தில் பிரதிபலிக்கிறது.
எது எப்படி இருந்தாலும், இந்திய குடிமக்களாகிய நாம் மத்திய அரசின் கொள்கைகளையும், அறிக்கைகளையும் நம்பி மட்டுமே வாழ்ந்து வருகிறோம். தமிழர்களுக்கு அமைதி வழியில், அறவழிப்பாதையில், அரசியல் போராட்டங்களின் மூலம் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க, இன்றைய சூழலில் உறுதி எடுக்க வேண்டியது தேவையாக இருக்கிறது.