Saturday, May 22, 2010

ராஜிவ்காந்தி நிலைப்பாடு தொடர்கிறதா?

19 ஆண்டுகளுக்கு முன்னால், மே 21ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள திருப்பெரும்புதூரில், முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ்காந்தி மனித வெடிகுண்டின் மூலம் கொல்லப்பட்டார். அந்த நாள் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. ராஜிவ்காந்தி உயிரோடு இருக்கும் போது கடைப்பிடித்து வந்த கொள்கைகள், நிலைப்பாடுகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையால் செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை கேட்க வேண்டிய நாள் இது.
ராஜிவ்காந்தியின் நிலைப்பாடு என்றால் என்ன என்ற கேள்வி முதலில் எழுகிறது. ராஜிவ்காந்தி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருவதன் மூலம் திடீர் பணக்காரர்களை கல்வி வள்ளல்களாக மாற்றக்கூடிய சுயநிதி கல்விச் சாலைகளையும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பது உண்மை தான். அதன் விளைவாக கல்வியின் தரம் குறைந்து, காசுக்காக கல்வியை விற்கின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அதுவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையை பாதித்துள்ளது. அதன் விளைவாக இப்போது நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பற்றி, மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதுகூட அவரது நிலைப்பாட்டின் தொடர்ச்சிதான்.
ராஜிவ்காந்தியின் தாயார் இந்திராகாந்தி, இந்திய தலைமை அமைச்சராக கடமையாற்றும் காலத்திலேயே, சீக்கிய பயங்கரவாதிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் சேவாதள உறுப்பினர்கள், டெல்லியில் சீக்கிய வீடுகளில் புகுந்து மூவாயிரம் இளைஞர்களை படுகொலை செய்தனர். ஆத்திரத்தில் ராஜிவ்காந்தி அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி பேசினார். அத்தகைய அரசமனப்பான்மை இன்றைக்கும் காங்கிரஸ் தலைமையில் தொடர்கிறது. அதனால் அவரது நிலைப்பாடு தொடர்கிறது என்று சிலர் கூறிக்கொள்ளலாம். அரச வம்சமும், வாரிசு மனப்பான்மையும், பண்ணையாதிக்கச் சிந்தனையும், பழிவாங்கும் மனப்போக்கும், வன்முறையை நியாயப்படுத்தும் தன்மையும் மட்டுமே அவரது நிலைப்பாடுகள் என யாராவது எண்ணினார்கள் என்றால், அவர்கள் அவரது நிலைப்பாடு முறையாக தொடரத்தானே செய்கிறது என்று வாதிடலாம்.
ஆனால் இந்தியா என்ற மாபெரும் தீபகற்ப நாட்டில், 100 கோடிக்கு மேல் மக்கள் வாழும் போது, அவர்களது எதிர்காலத்திற்காகவும், இந்தியாவின் நிலையான தன்மைக்காகவும், ராஜிவ்காந்தி அளித்த பங்களிப்பு தொடர்கிறதா என்பது தான் ஆராயப்பட வேண்டிய கேள்வி. அதிலும் கூட இலங்கைத் தீவில் சமாதானம் ஏற்படுத்த என்ற பெயரில் ராஜிவ்காந்தி, இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தது தமிழர்களுக்கு எதிரானது தானே என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி தமிழர்களுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாட்டை, மேலும் வலுப்படுத்தி ஈழத்தமிழர்களை இன அழிப்புச் செய்த, இனவாதப் போரை நடத்திய மகிந்தா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது அவரது நிலைப்பாட்டை மேலும் தொடர்வது தானே என்று சில காங்கிரசார் வாதம் செய்யலாம்.
இந்தியா இலங்கை என்ற அளவில் தனது தலையீட்டை செய்து வந்த ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை விட, இன்றைய காங்கிரஸ் தலைமை இலங்கை ஆட்சியாளர்களின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு நேரடியாக துணை நிற்பதும், அவர்களை உலக அரங்கில் நியாயப்படுத்த அனைத்து பணிகளையும் செய்வதும், ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவில்லையா என்றும் அவர்கள் வினவலாம். ஆனால் நமது கேள்வி இந்திய மக்களுக்கு, இந்திய நாட்டிற்கு ராஜிவ்காந்தி அளித்த சாதகமான பங்களிப்பு இப்போது என்ன ஆயிற்று என்பது தான்.
ராஜிவ்காந்தியின் தாயாரான இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டு வரும் காலத்தில், அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. பொருளாதார கொள்கைகளில் பண்ணையார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அதிகாரவர்க்க மூலதனத்திற்கும் வலுவேற்றிய பணியைத் தான் இந்திராகாந்தி செய்து வந்தார் என்பது போன்ற விமர்சனங்கள் உண்டு. ஜனநாயக உரிமைகளை மறுத்து, அவசர நிலை போன்ற பிரகடனங்களை செய்து, எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளையும், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளையும் நசுக்கி வந்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் அப்போதும் எழுந்தன. ஆனாலும் இந்திராகாந்தி சுயசார்பு பற்றி அதிகமாக பரப்புரை செய்தார். அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை அப்பட்டமாக எடுப்பதற்கு தயங்கினார்.
தன் தாயைப் போலவே இந்திய மக்கள் மத்தியில் பெருமளவில் செல்வாக்கை ராஜிவ்காந்தி பெற்றிருந்தார். அதன் காரணமாக அவர் தலைமையில் இருந்த போது, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தை தேர்தலில் எட்ட முடிந்தது. அதன் மூலம் இந்திய அரசு நினைத்தப்படி, தங்களது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்க முடிந்தது. அதாவது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை சார்ந்து மட்டுமே சிந்திக்கும் நிலையில் அப்போது அரசாங்கம் இல்லை. எப்போதெல்லாம் ஒரு நாட்டின் தலைமை ஆட்சியாளர்கள், பெருத்த செல்வாக்கில் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அமைக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் அவர்களால் உலக அரங்கில் சில முக்கிய விஷயங்களிலாவது, சுயமாக முடிவெடுக்கும் நிலைப்பாட்டை தக்கவைக்க முடியும்.
அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாடு இன்று இருக்கிறதா? இந்தக் கேள்வியை இப்போது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ராஜிவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசை ஆள்வதற்காக காங்கிரஸ் சார்பாக பி.வி.நரசிம்மராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்போது அவரது ஆட்சி சிறுபான்மை அரசு என்ற நிலையில் தான் நிற்க வேண்டி இருந்தது. 1991ம் ஆண்டு இந்தியாவின் தலைமை அமைச்சராக நரசிம்மராவ் இருக்கும்போது தான், புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரில், அமெரிக்க வழிகாட்டலில் இந்திய கொள்கைகள் வகுக்கப்பட்டன. டங்கல், காட் போன்ற ஒப்பந்தங்கள் வந்திறங்கின. உலகமயமாக்கலின் தொடக்கம் இந்தியாவிற்குள் வரவேற்கப்பட்டது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவை இந்தியாவின் முக்கிய பொருளாதார கொள்கைகளாக மாற்றப்பட்டன. நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்தில் இருந்த பொதுத்துறை மெல்ல, மெல்ல வலுவிழக்கச் செய்யப்பட்டது. இத்தனையும் ராஜிவ் மரணத்திற்குப் பிறகு, நரசிம்மராவின் தலைமையிலான சிறுபான்மை காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. அதனால் அதிகமாக பயனடைந்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தான். ராஜிவ் மரணம் இவ்வாறாக அமெரிக்க உள் நுழைதலுக்கு பயன்பட்டது.
இன்று மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேரடி அன்னிய மூலதனம் பெருமளவில் உள் நுழைந்துள்ளது. மன்மோகன், ப.சிதம்பரம், மான்டெக்சிங் அலுவாலியா ஆகியோர் பகிரங்கமாகவே அமெரிக்க பொருளாதார கொள்கைகளை பின்பற்றுபவர்கள் என்பது வெள்ளிடை மலையாக உள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அமெரிக்காவுடன் ராணுவ கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது. அமெரிக்காவுடன் இந்திய கடலை கண்காணிக்கும் பங்காளியாக, இந்திய அரசு மாறுகிறது. இவையெல்லாம் ராஜிவ் காந்தி காலத்திய நிலைப்பாட்டின் தொடர்ச்சியா?
குடும்ப வாரிசும், கட்சி வாரிசும் நிலைப்பாடுகளை தீர்மானிப்பதில்லை. நாட்டிற்கு வகுக்கப்படும் கொள்கைகள் தான், நிலைப்பாடுகளை தீர்மானிக்கிறது. அவ்வகையில் பார்ப்போமானால், ராஜிவ்காந்தியின் மரணத்தால் இந்தியா இழந்திருக்கிறது; அமெரிக்கா பலனடைந்திருக்கிறது. இத்தகைய கணக்கீட்டை இந்திய மக்கள், இந்த நாளில் மதிப்பீடு செய்து பார்க்க வாய்ப்பிருக்கிறதா?