Friday, May 14, 2010

தமிழர்களுக்கு எதிரான உளவியல் போர்

உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இலங்கைத் தீவிலும், இந்திய நாட்டிலும், மலேசியாவிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் பற்றி வருகின்ற செய்திகள் முதன்மையாக உள்ளன. அதில் இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் தங்களுடைய சுயநிர்ணய உரிமைப் போருக்காக பல்வேறு வடிவங்களில் போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டம் ஆயுதப் போராட்ட வடிவம் எடுத்த போது மட்டுமே, உலகம் அவர்களைத் திரும்பிப் பார்த்தது. ஒரு கட்டம் வரை அவர்களது உரிமைப் போராட்டத்தை, தங்களது கட்டுப்பாட்டிற் குள் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிய வெளிநாட்டு சக்திகள், அது இயலாது என்ற நிலை வந்தபிறகு அந்த உரிமைப் போரை நசுக்கத் தலைப்பட்டன. அத்தகைய வெளிநாட்டு சக்திகளில் பிராந்திய மேலாதிக்க சக்திகளும், உலக வல்லரசு சக்திகளும் அடக்கம்.
இந்தியாவிற்குள் இருக்கின்ற தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்காக, உரிமைப் போர் வழியில் தந்தை பெரியார் குரல் கொடுத்து வந்த காலத்தில் டெல்லிக்கு ஒரு விதமான கலக்கம் இருந்தது. அதன் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் தலைமையை ஏற்ற சக்திகள், இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிரான அம்சங்கள் சேர்க்கப்பட்ட பிறகு, தங்களது அணுகு முறையை மாற்றிக்கொண்டார்கள். அதன் பிறகு தமிழகத்து அரசியல் என்பது டெல்லி அரசியலுடன் இணைந்தும், இழைந்தும், பங்கெடுத்தும் செல்வதாக மாறியது. அதனால் இந்திய பேரரசு தங்களுக்கு ஒரு தலைவலி தீர்ந்தது என்பதாக எண்ணத் தொடங்கியது. அதே சமயம் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களது உரிமைக் குரல் என்பது அரவணைக்கப்படாமல், அங்குள்ள அரசால் ஒடுக்கப்பட்டது. அதன் விளைவாக 60 ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களில், ஈழத்தமிழர்களது உரிமைப் போர் விடுத லைப் போராக வடிவெடுத்தது.
இலங்கையில் வாழும் தமிழர்களை ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், இந்திய வம்சாவழியான மலையகத் தமிழர்கள் என்பதாகப் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கோரிக்கைகளும், தயார் நிலைகளும் இருக் கின்றன. அவரவர் கடந்து வந்த பாதையை யொட்டி, அவரவரது அரசியல் வழிமுறை தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சூழலிலும் கூட, அதன் எதிரொலியாக அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, டி.என்.ஏ. என்ற தமிழர் தேசிய கூட்டமைப்பு செயல்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் உலகில் பல நாடுகளிலும் நடந்துள்ளன.
அயர்லாந்து நாட்டில், ஐரிஷ் குடியரசு படை என்ற ஐ.ஆர்.ஏ. கொரில்லா போராட்டங்களின் மூலம் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வந்தது. அவர்கள் கத் தோலிக்க கிறித்துவ சமூகத்தவராக இருந்தார் கள். அந்த ஐ.ஆர்.ஏ. சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்த மாசேதுங்கின் சிந்தனை களை வழிகாட்டியாக கொண்டு போராடி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டின் ராணுவம், உல்சர் என்ற பிராட்டஸ்டண்ட்களை பயன்படுத்தி வந்தது. அப்போது பேச்சு வார்த்தைகளை நடத்து வதற்கும், மக்களை அரசியல் வழிப்படுத்து வதற்கும், தங்களது அரசியல் பிரதிநிதிகளாக, சின்பியான் என்ற அமைப்பை ஐ.ஆர்.ஏ. பயன்படுத்தினார்கள். அதுபோலவே காஷ்மீரத்தில் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தை சில குழுக்கள் நடத்துகின்றன. அவர்களது அரசியல் விருப்பங்களை, கருத்துக்களை அங்கே இருக்கும் ஹூரியத் மாநாடு அமைப்பினர் பிரதிநதித்துவப் படுத்துகின்றனர். இந்திய அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் ஹூரியத் மாநாடு பிரதிநிதிகளுடன் சமரசப் பேச்சு வார்த்தைகளை நடத்துவது எளிதாக இருக் கிறது. இவையெல்லாம் அரசியல் போராட் டத்தின், அதை நடத்துவதற்கான அணியின் அல்லது அமைப்பின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இதே போல ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், நேரடியாக தனக்கான அரசியல் அமைப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அமைப்பை யோகி தலைமையிலும், பிறகு மாத்தையா தலைமையிலும் புலிகள் அவ்வப்போது முயற்சி எடுத்தார்கள். பிறகு தங்களுக்கான அரசியல் அணியை சுப.தமிழ்செல்வன் தலைமையில் அமைத்தார்கள். ஆயுதப் போராட்டத்தை அதிகமான ஆயுத வலுக் கொண்டு தடுத்து விடவோ, அழித்து விடவோ முடியும் என்று உலகில் உள்ள வல்லாதிக்க சக்திகள் எப்போதுமே நம்பு கின்றன. அதில் பிராந்திய மேலாண்மை சக்திகள் மாறுபட்டவை அல்ல. அதே சமயம் அரசியல் தலைமையை, அரசியல் அமைப் பை, அரசியல் அணியை சந்திப்பதும், எதிர்கொள்வதும் கடினமானது என்பது பிற்போக்கு அரசியல் வல்லாண்மை சக்திகளுக்கு தெரிந்த செய்தி. ஏனென்றால் விடுதலையும், உரிமைகளும், சுயநிர்ணய மும் இயற்கையான உண்மைகள். அவை மக்கள் மத்தியில் ஊறி விட்டால், உணர்வு களை அழித்தல் எளிதானதல்ல. அதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “அடக்குமுறை செய்திடல் முடியும். கொள்கை அழிக்குமுறை எவ்வாறு முடியும். ஒடுக்கு சிறை காட்டுதல் முடியும். உணர்வொடுக்குதல் எவ்வாறு முடியும்.” என்று எழுதினார்.
இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ள வல்லாண்மை சக்திகள் நார்வே நாடு சென்று சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு திரும்பிய சுப.தமிழ்செல்வன் முன்வைக்கும் அரசியலை தொடரவிடத் தயாராயில்லை. அதனால் தான் அவரது இருப்பிடம், செயற்கை கோள் மூலம் பிராந்திய வல்லாதிக்க சக்திகளால் அடையாளம் காணப்பட்டு, சிங்கள ராணுவத்தால் அழித்தொழிப்பு செய்யப்பட்டது. அடுத்து அரசியல் அணியை புலிகளுக்காக தலைமை தாங்கிய நடேசனை, வெள்ளைக் கொடியுடன் அறிவித்து விட்டு சரணடைந்த போதும் படுகொலை செய்தது. தமிழின அழிப்பு சக்திகளுக்கு விடுதலைப் போரின் அரசியல் பிரதிநிதிகள் மீது எப்போதுமே ஒரு ரத்த வெறி இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற் கான முயற்சிகளை உலக அரங்கில் எடுக்கின்ற ஜனநாயக அரசியல் சக்திகளின் மீது பாய்கிறது.
ராணுவ நடவடிக்கைகளை 7 நாடுகளின் உதவியுடன் நடத்திய கொழும்பு அரசாங்கம், இப்போது உளவியல் போரில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் உயர்ந்த கட்டமாக, உலகெங்கிலும் அரசியல் போராட்டம் நடத்தப்படுவதை தாங்க முடியா மல், அதை உடைத்து விட உளவியல் போர் அவர்களுக்கு உதவுகிறது.
ஆயுதப் போராட்டத்திற்கும், அரசியல் போராட்டத்திற்கும் இருக்கின்ற இயற்கை யான விதிகளை புரிந்து கொள்ள முடியாத போராளிகள் மற்றும் ஆதரவு சக்திகள் மத்தியில், போலியான தோற்றங்களை காட்டி திசைத் திருப்ப திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். அதற்கு பிராந்திய மேலாண் மை மற்றும் உலக வல்லரசு நாடுகளின் உளவுத்துறைகள் சிறப்பான முறையில் உதவிகள் செய்கின்றன. அதைத்தான் இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட போதிலும், அனைத்து நாட்டு ரீதியில் போர் தொடர்வதாக இலங்கை ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார். அதில் வெற்றி பெற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளார். அத்தகைய தொடக்கங்கள்தான் உளவு நிறுவனங்களின் ஊடுறுருவல் செயல்பாடுகள். இதை உலகத் தமிழர்கள் உணர்ந்து கொள்வதை யொட்டி தான், சரியான நண்பர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்.
இந்த நிலையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலிருந்தும், இலங்கை சிங்கள பௌத்த அரசுக்கு எதிராக போராட்டங்கள் தோன்று கின்றன. கொழும்பில் கொம்பனி வீதியில் வீடுகள் உடைக்கப்பட்டன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் சார்க் மாநாட்டு சூழலில், அதே இடத்தில் தமிழ் பேசும் முஸ்லிம் சிறுவியாபாரிகளின் வீடுகள் உடைக்கப்பட்டன. இப்போது அங்கு தொடங்கி இருக்கும் அரசாங்க அடக்கு முறை, தலைநகர் எங்கும் விரிவாகும் என்ற புரிதலில் ஆர்ப்பாட்டத்தை கொழும்பு குடியிருப்புகள் பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. இதுபோன்ற ஒவ்வொரு சிறிய ஜனநாயக போராட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
உலகத் தமிழர்கள் மத்தியிலும், உள்ளூர் தமிழர்கள் மத்தியிலும், தமிழ் பேசும் அனைத்து மதத்தினர் மத்தியிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப் படும் பிளவுகளை முறியடித்து முன்னேறு வதில்தான் தமிழர்களின் உரிமைக்குரல் எழமுடியும். உளவியல் போருக்கான உளவு நிலைப் போரை ஆதிக்க சக்திகள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். மே 12 லிருந்து, மே 18 வரையுள்ள வலி சுமந்த வாரத்திலா வது, இதை நாம் உணர வேண்டும் என்பதே உலகத்தமிழருக்கான ஒரே செய்தி.