Thursday, May 13, 2010

ஐ.நா. தீர்மானம் ஒரு பைசாவிற்கு கூட பயனில்லை

ஈரான் நாட்டில் அணுஆயுதங்கள் தயார் செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. அதற்காக ஐக்கிய சபை மூலம் ஈரான் நாட்டிற்கு எதிராக அனைத்து காய் நகர்த்தும் வேலைகளையும் அமெரிக்கா செய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஈரான் நாட்டின் தலைநகரான் டெஹ்ரானில் இந்த ஆண்டு ஏப்ரல் 17,18 தேதிகளில், ‘அணு சக்தி எல்லோருக்கும். அணு ஆயுதம் யாருக்கும் இல்லை’என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை ஈரான் நடத்தியது. அந்த மாநாட்டிற்கு இந்திய பிரதிநிதி செல்லக் கூடாது என்ற கருத்தை அமெரிக்கா வைத்திருந்தது. 55 நாடுகளிலிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும், அணுசக்தி நிபுணர்களும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில், ஈரான் நாட்டில் இந்திய தூதராக இருக்கின்ற சஞ்சய் சிங், கலந்து கொள்வதையே அமெரிக்கா விரும்பாமல் இருந்தது. ஏனென்றால் ஈரான் நாட்டினுடைய அணுசக்தி திட்டத்தின் மீது குற்றம்சாட்டி அதையொட்டி ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடையை அமெரிக்கா தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 12,13 தேதிகளில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மன்மோகனும் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசினர்.
ஏற்கனவே ஈரான் நாட்டிலிருந்து எரிவாயுவை குழாய் மூலம் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குக் கொண்டு வரும் திட்டத்தை அமெரிக்கா எதிர்த்தாலும், இந்திய நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு தேவைக்காக, வளர்ந்து வரும் பொருளாதார நிலையில், டெல்லி அரசு ஆதரித்து வருகிறது. ஏற்கனவே சென்ற மார்ச் மாதத்திலேயே பாகிஸ்தான் அரசு ஈரான் நாட்டுடன் ஒரு பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள வாயு குழாய் மூலம் இரண்டு நாடுகளையும் இணைப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவும் அந்த குழாய் திட்டத்தை தன் நாட்டை நோக்கி நீட்டிக்க விரும்பி வருகிறது. இவையெல்லாமே அமெரிக்க அரசால் செரிக்கப்பட முடியவில்லை.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்தாலும், அமெரிக்காவில் உள்ள பெரும் முதலாளிகளும், வணிகர் சங்கமும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை கொண்டுவரும் அமெரிக்க சபையான காங்கிரசின் திட்டத்தை, அவர்கள் எதிர்க்கிறார்கள். அது அமெரிக்க நலனுக்கு உகந்ததல்ல என்பது அவர்களது கருத்து. அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன், அமெரிக்காவில் இருக்கின்ற பொருளாதார, தூதரக, சட்டபூர்வமான உறவுகளில் மோதலை, அத்தகைய பொருளாதார தடை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் கடிதம் மூலமாக அமெரிக்க பெரு வணிக சங்கங்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதமே தெரிவித்திருந்தன. உலகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு நாடுகளுடன் உள்ள வர்த்தக உறவுகள், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இதனால் பாதிக்கப்படும் என்பது அவர்கள் வாதம். ஆனால் அமெரிக்காவின் ஹவுஸ் மற்றும் செனட் ஆகிய இரண்டு பிரதிநிதித்துவ சபைகளும் அப்படிப்பட்ட தடையை முன்வைத்தன.
இது அமெரிக்க பொருளாதாரத்திற்குள் இருக்கின்ற இரண்டு வகையான பெரு முதலாளிகளுக்குள் நிலவும் முரண்பாடு. அதாவது ஆயுதங்களை உற்பத்தி செய்யும் சாவு வியாபாரிகள், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை செல்வாக்குச் செலுத்துவதில் எப்போதுமே முதன்மைப் பங்கை வகித்து வருகிறார்கள். அவர்கள் தான் ஈரானுடன் இருக்கின்ற உறவை உடைத்து, அதையே ஒரு போருக்கு தள்ளிவிட முயல்பவர்கள். அதன் மூலம் அவர்களால் தங்களது ஆயுத விற்பனையை அமெரிக்க அரசாங்கத்திற்கும், மற்ற நட்பு நாடுகளின் ராணுவங்களுக்கும், அதேசமயம் வேறு வழியில் எதிர்தரப்பு நாடுகளுக்கும் செய்து விட முடியும். அது அவர்களுக்கு பெரும் லாபத்தை கொண்டு வந்து குவிக்கும். அதே நேரத்தில் விவசாயப் பொருட்களையும், நுகர்வுப் பொருட்களையும் தயார் செய்கின்ற பெரு முதலாளிகள் தங்களது வர்த்தக உறவுகள் பாதிக்கப்படுமே என அஞ்சுவதிலும் நியாயமிருக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கா அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் போது, அதை அதே நிலையில் தக்கவைக்கின்ற திறமை ஆயுத வியாபாரிகளிடம் இருந்தது. ஆனால் இன்று பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்கா இருக்கும் போது, ஆயுத உற்பத்தி அல்லாத பிற உற்பத்திகளில் ஈடுபடுகின்ற பெரு முதலாளிகள் செல்வாக்கு அதிகமாகி வருகிறது. ஆனாலும் கூட வரலாற்றுக் காரணங்களால் செனட்டிலும், ஹவுசிலும் இரு சபைகளிலுமே ஆயுத வியாபாரிகளின் நலன்களை ஊக்குவிக்கும் பிரதிநிதிகள் அதிகமாக இருப்பது புலனாகிறது.
இத்தகைய சூழலில் மக்கள் சீன குடியரசு, ஈரான் நாட்டின் மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடையை எதிர்க்கிறது. ஈரான் நாட்டின் அணுசக்தித் திட்டத்தின் மீது, அனைத்து நாட்டு புறக்கணிப்பை கூடுதலாக அறிவிப்பதை சீன நாட்டின் துணை வெளிவிவகாரத்துறை அமைச்சர் எதிர்த்துள்ளார். டெஹ்ரானில் நடந்த அனைத்து நாட்டு அணுஆயுத ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சீனா அந்த மாநாட்டை ஆக்கபூர்வமானது என்று வரவேற்றுள்ளது. இப்படியொரு மாநாட்டை நடத்தியதற்காக ஈரானை சீனா பாராட்டியுள்ளது.
ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிராக நான்காவது முறையாக பொருளாதார தடையை திணிப்பதற்கு, அமெரிக்கா பரப்புரை செய்யும் நேரம், அந்த கவுன்சிலில் தீர்மானங்களை நிராகரிக்கும் வீட்டோ உரிமையைப் பெற்ற ஒரு உறுப்பினரான சீனா அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக தயாராகயில்லை. ஈரான் நாடு ஆக்கப்பூர்வமான தேவைகளுக்காக அணுசக்தியை உற்பத்திச் செய்யும் திட்டத்தை பொய்யாக அறிவித்து விட்டு, ராணுவ தேவைகளுக்கான அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஒரு புறம் ஈரான் மறுத்து வருகிறது. அணுசக்தி தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றத்தை ஈரான் நாடு அடைய கூடாது என மேற்கத்திய நாடுகள் தடுத்து வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. அதேசமயம் தங்களது மத நம்பிக்கையின் படி, பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கோ, வைத்துக் கொள்வதற்கோ இடமில்லை என்று ஈரான் திரும்ப, திரும்ப சொல்லி வருகிறது. அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்களை உலக அளவில் அழிக்க வேண்டும் என்றும் ஈரான் அறைகூவல் விடுகிறது.
இதையே கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் கூறினார். அப்போது அணு ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் நாடுகள் எப்படி அணு ஆயுதங்களுக்கு எதிராக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு அணு ஆயுதங்களை அதிகமாக சேமித்து வைத்திருக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். சில வாரங்களுக்குள் ஈரானுக்கு எதிரான புறக்கணிப்பை கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா துடி துடிக்கிறார். ஆனால் அதற்கு சீனா உடன்படவில்லை. சீனாவைத் தவிர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களும் அமெரிக்காவின் முயற்சிக்கு உடன்பட்டு விட்டனர். ஈரான் நாட்டின் சார்பாக அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தலைவர் சையத் ஜலிலி சீன நாடு சென்றிருக்கும் நேரத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமா சீனத் தலைவர் ஹுவுடன் தொலைபேசியில் இதுபற்றி பேசினார்.
ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம் நிர்ப்பந்தம் செய்வது எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்வியை ஜலிலி எழுப்பினார். அமெரிக்கா தயார் செய்துள்ள தீர்மான நகலில், ஈரானின் புரட்சிகர படையும் மற்றும், ஈரானின் கம்பெனிகளின் சொத்துக்களும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றும், ஈரான் வணிகர்களுடன் காப்பீடும், கப்பல் உறவும் தடுக்கப்பட வேண்டும் என்றும், ஈரான் நிதி நிறுவனங்களின் கறுப்புப் பட்டியலில், ஈரான் மத்திய வங்கியும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. அதன் மீது விவாதிக்க தயாராகும் சீனாவை, ரஷ்யாவும், பிரேசிலும் ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் ஐ.நா.வில் நிறைவேறும் தீர்மானம் ஒரு பைசாவுக்கு கூட பயனில்லை என்று உறுதியாக ஈரான் நாட்டு அதிபர் அஹமதி நிஜாத் அறிவித்துள்ளது, உலக மக்களின் பகுத்தறிவு உணர்வுகளை, போர் எதிர்ப்பு சிந்தனைகளை உசுப்பி விட்டுள்ளது.