Wednesday, May 12, 2010

பிரபலங்களிடையே சிக்கிய பிரபல அமிதாப் பச்சன்

திரைத்துறையின் பிரபலங்கள் எப்போதுமே உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், சாதாரண குடிமக்களை விட அதிகமாக கவனிக்கப்படுகிறார்கள். அதிகமாக விரும்பப்படுகிறார்கள். அதனால் அரசியலிலும், வணிகத்திலும் அதிகமாக திரையுலக பிரமுகர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான யாரையும், எதையும் வணிகக்குழுமங்களுக்கு சமமாக இன்றைக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த விரும்புகிறார்கள். பிரபலங்கள் மூலம் தங்கள் கட்சியும் அதன் செயல்பாடும் பிரபலமடையும் என்று அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். அதன் மூலம் பொதுமக்களை ஈர்த்து தாங்கள் வாக்குகள் பெறுவது எளிதானது என்பதாக அவர்கள் நம்புகிறார்கள். வணிகக்குழுமங்கள் தங்களது சரக்குகளை விற்பனைச் செய்ய, விளம்பரங்களில் பிரபலங்களை ஆடவிட்டு, ஓடவிட்டு, பேசவிட்டு அதன்மூலம் லாபம் அடைகிறார்கள். இன்று அரசியல் ஒரு வணிகமாகிப்போனதினாலோ என்னவோ, அரசியலிலும் பிரபலங்களை நோக்கி ஓடுகின்ற ஒரு போக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது.
திரைத்துறையில் பிரபலமான கலைஞர்கள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும், மத்திய அரசிலும் கூட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய வரலாறுகள் நம் கண் முன்னே உள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக வந்திருக்கின்ற எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அதற்கான சாட்சியங்கள். அதேபோல கவிஞர் கண்ணதாசன் முதல் நடிகை தீபா வரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி கூட தயங்கியதில்லை. வைஜயந்திமாலா பாலி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததும், தமிழ் திரையில் இருந்து வடஇந்திய திரைத்துறைக்குச் சென்ற நடிகை ஹேமமாலினி அன்று முதல் இன்று வரை பா.ஜ.க. கட்சியில் பொறுப்புக்கு வருவதும் இதற்கான கூடுதல் சாட்சிகள்.
தமிழ்நாட்டு அரசியலில் சரத்குமார், விஜயகாந்த், பாக்கியராஜ், சந்திரசேகர், லஷ்மி முதல் அம்பிகா, சிம்ரன் வரை தொடர்ந்து ஈடுபட்டு வருவது புதிய செய்தி அல்ல. ஆந்திராவில் எடுத்துக்கொண்டால் என்.டி.ராமாராவ் தொடங்கி கிருஷ்ணா மற்றும் இன்று சிரஞ்சீவி வரை அரசியல் அரங்கை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. வடக்கே சத்ருகன் சின்கா முதல் ராஜ் பப்பர் வரை அவ்வாறு இழுக்கப்பட்டவர்கள் தான். தெலுங்கானா தனிமாநில போராட்டம் என வந்தாலும், நடிகை விஜயசாந்தி வருகை தான் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயபாதுரி, ஜெயபிரதா என்று உத்திரபிரதேச அரசியலிலும் நடிகைகள் ஈர்க்கப்படாமலில்லை. இத்தகைய சூழலில் தான் அமிதாப் பச்சனுக்கு, பிரபலமே சிக்கலாக வந்து சேர்ந்திருக்கிறது.
அமிதாப் பச்சன் இந்தியாவின் பரந்த சந்தையைக் கொண்ட இந்திப் படவுலகின் இமாலயம் என்று கூறலாம். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நண்பராக மட்டும் தான், அவரது அன்றைய அரசியல் பங்கு இருந்தது. அவரது மனைவி ஜெயபாதுரி உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதும், அமிதாப் அரசியலில் இறங்கவில்லை. திரைத்துறையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான சூழ்நிலையை அமிதாப் எட்டியிருக்கும் போது, அரசாங்கங்கள் அவரது பிரபலத்தை பயன்படுத்த முயன்றன.
மதவாதியாக படம் பிடித்துக் காட்டப்படும் குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, அவரது மாநில அரசாங்கத்தின் தூதராக பிரபல அமிதாப்பை நியமித்தார். அதன் பிறகு மும்பையிலிருக்கும் ஒரு பாலத்தின் திறப்பு விழாவிற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். அப்போது மாநில அரசின் அமைச்சர்கள் அழைத்ததின் பேரில், அமிதாப்பும் விழாவில் கலந்து கொண்டார். இதுவே விழாவை நடத்திய மஹாராஷ்டிர அரசாங்கத்திற்கு தலைவலியாகப் போய்விட்டது.
அன்னை சோனியா கோபித்துக் கொண்டார் என்பதால், மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைமை, அமிதாப்பின் வருகை பற்றி குழப்பமான எதிர்ப்பைத் தெரிவித்தது. அதற்கு பதில் கொடுக்க பிரபல அமிதாப்பிற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இணையதளத்தில் இருக்கும் தனது வலைத்தளத்தில் அழைப்பில் தனது பெயரைப் போட்டு, தன்னை மாநில அமைச்சர் அழைத்ததினால் தான் கலந்து கொண்டேன் என்று சுய விளக்கம் கூறியிருந்தார். பா.ஜ.க.வின் குஜராத் ஆட்சிக்கு தூதராக நியமிக்கப்பட்டதால் தான், அன்னை சோனியா கோபம் கொண்டார் என்பதாக ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால் ராஜிவ் காந்தி காலத்திய குடும்ப நண்பர், ராஜிவ் மறைவிற்குப் பின் பிரிந்து நிற்கும் சூழலில் அவர்களுக்குள் என்ன முரண்பாடு என்று ஆய்வு செய்ய ஊடகங்கள் முயலவில்லை.
அடுத்து கேரள மாநிலத்தை ஆளுகின்ற இடதுசாரி அரசாங்கம், பிரபல திரைப்படக் கலைஞர் அமிதாப் பச்சனை தங்கள் அரசாங்கத்தின் தூதராக தேர்வு செய்தனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையில் அமர்ந்திருக்கின்ற சீத்தாராம் யெச்சுரி, அந்த முடிவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். அதன் விளைவாக மாநில அரசாங்கம் சுயமாக தங்களுடைய அரசாங்க பிரபலத்திற்கும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் ஒரு பிரபலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக்கு குஜராத் மாநில பா.ஜ.க. அரசாங்கத்தின் தூதர் என்ற அளவுகோல் மட்டுமே உதவியது. அதேநேரம் கேரள சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக, பல்வேறு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒரு பிரபல இந்தி திரைப்பட பிரமுகரான அமிதாப் பச்சனை பயன்படுத்த அந்த மாநில அரசாங்கத்தால் முடியாமல் போனது.
அதேபோல டெல்லியிலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. டெல்லி மாநில அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது. உலகம் முழுவதும் பூமி நாளை, உலக வனத்தள நிதியம் கடைபிடிக்கும் போது, டெல்லியில் மாநில அரசாங்கம் மூலம் அது ஏற்பாடு செய்யப்பட்டது. செய்யப்பட்ட ஏற்பாட்டில் அமிதாப் பச்சனின் மகனான பிரபல அபிஷேக் பச்சன் பேசிய ஒலி நாடா வெளியிடப்படுவதற்காக தயாரானது. அங்கங்கே அபிஷேக் பச்சனின் படங்களும் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் பூமி நாளன்று அனைத்து விளம்பர பலகைகளும் நீக்கப்பட்டது. அபிஷேக் பச்சனின் பேச்சு கொண்ட ஒலி நாடாவும் நீக்கப்பட்டது. இவையெல்லாமே டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் செய்த ஏற்பாடு என்பதாக தெரிந்தது. கடைசி நேரத்தில் ஷீலா தீட்சித் அன்னை சோனியாவின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க அதை செய்து விட்டார் என்று கூறப்பட்டது. இதையும் கூட அமிதாப் தனது வலைத்தளத்தில் எழுதினார்.
காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சியும் இப்படி ஒரு முடிவை எடுக்குமானால், அதே போன்ற முடிவை குஜராத்தை ஆளும் பா.ஜ.க. கட்சியும் எடுத்து விட்டது. குஜராத் அரசாங்கத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டதை காங்கிரசும், இடதுசாரிகளும் குற்றமாகப் பார்த்தால், கடைசியாக குஜராத்தின் நரேந்திர மோடி அரசாங்கமே, அமிதாப்பை தூதர் நிலையிலிருந்து துரத்தி விட்டது.
இந்திய அரசியல்வாதிகளின் பல்வேறு பிரிவுகளாலும் துரத்தப்பட்ட நிலையில், இலங்கை அரசின் அதிபரிடமிருந்து அமிதாப்பிற்கு அழைப்பு வந்தது. இது தொல்லையல்ல என்று எண்ணி அமிதாப்பும் அதை ஏற்றுக் கொண்டார். இந்தியாவின் பிரபலங்களை பயன்படுத்துவதில் கூர்மையாக உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அமிதாப்பை, அனைத்து நாட்டு திரைப்பட விழாவிற்கு முக்கியத் தூதராக அறிவித்தார். உடன் நின்று படமெடுத்துக் கொண்டார்.
ஆனால் இது தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவால் என்பது அமிதாப்பிற்கு முதலில் தெரிந்திருக்கவில்லை. தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழ் திரைத்துறையினர் மற்றும் தமிழ் சின்னத்திரைக் கலைஞர்கள் இத்தகைய இலங்கையின் முயற்சிக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த பிறகு முடிவுகள் திக்குமுக்காடுகின்றன. அமிதாப் பச்சனின் மும்பை இல்லம் தொடர்ந்து தமிழர்களால் முற்றுகையிடப்படுகிறது. இப்போது அத்தகைய அவல விளையாட்டிற்கு செல்லாமல் நிறுத்திக்கொள்வார் என்று அமிதாப் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. பிரபலங்களை விட பிரபலங்களை பயன்படுத்த விரும்பும் அரசியல் தலைவர்கள் தான் ஆபத்தானவர்கள் என்பது நமக்கு விளங்குகிறது.
ஒரு லட்சம் தமிழர்களை புதைத்த சுடுகாட்டு மண்ணில், திரைப்பட விழாவா என்ற கேள்வி தமிழ் தேசிய இனத்தின் விடுதலை உணர்வுகளிலிருந்து எழுகிறது. அதற்கு மதிப்பளித்தால் மட்டும் தான், பிரபலங்கள் உண்மையான பிரபலங்களாக இருக்க முடியும்.