Sunday, May 9, 2010

கசாப் மரணதண்டனை, ஒரு தப்பித்தலா?

இன்று நாட்டில் ஆங்கில காட்சி ஊடகங்களில் விவாதிக்கப்படும் பெரிய விவாதமே, கசாபிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனை பற்றியதுதான். முதலில் மரணதண்டனை என்பதே சரியா அல்லது தப்பா என்ற கேள்வி விவாதிக்கப்படுகிறது. மரணதண்டனை என்பது தண்டனையே அல்ல என்று உலகம் தழுவிய அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் விவாதித்து வருகிறார்கள். ஆம்நெஸ்டி இன்டர்நேஷனல் எனப் படும் உலகப்பொது மன்னிப்பு சபை இந்த மரணதண்டனையை எதிர்த்து கடுமையாக பரப்புரை செய்து வருகிறது. உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐ.நா. சபையில் மரணதண்டனைக்கு எதிராக தீர்மானமே கொண்டுவரப்பட்டது. 2007ம் ஆண்டு நவம்பர் 15ம் நாள் ஐ.நா.சபையின் பொதுச்சபை குழு கூடி மரணதண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. சபையின் மூன்றாவது குழு மனிதஉரிமைகளை கையாளுவதனால், அதில் வாக்குக்கு விடப்பட்ட போது, மரணதண்டனையை எதிர்த்து 99 வாக்குகளும் ஆதரவாக 52 வாக்குகளும் விழுந்தன. அடுத்த மாதம் டிசம்பர் 18ம் நாள் ஐ.நா. வின் 62வது பொது சபையின் 76வது மற்றும் 77வது கூட்டத்தில் மரணதண்டனைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை 104 நாடுகள் வரவேற்க, 54 நாடுகள் எதிர்க்க, 29 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தன. சமூக, மனிதாபிமான, பண்பாட்டு பணிகளை செய்யும் அந்த மூன்றாவது கமிட்டி, ஐ.நா.பொதுசபையின் வரலாற்று மைல்கல்லாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் கலந்து கொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ளாத நாடுகளும்கூட, மரணதண்டனையை கைவிடவேண்டும் என ஐ.நா. கேட்டுக்கொண்டது. அந்த வேண்டுகோளைக்கூட இந்திய அரசோ, இந்திய நாடாளுமன்றமோ, இந்திய நீதித்துறையோ சட்டை செய்யவில்லை. அதனால்தான் மும்பை நீதிமன்றம் இப்படிஒரு தீர்ப்பை கொடுத்துள்ளது. தீர்ப்புக்கு முன்பே நாடு தழுவிய அளவில் கசாபிற்கு மரணதண்டனை கொடுக்கப்படுமா இல்லையா என்ற விவாதமே ஊடகங் களால் நடத் தப்பட்டது. இந்த நாட்டில் இப் போதெல்லாம் ஊடகங்கள் தீர்ப்பு எழுததொடங்கிவிட்டன. சென்சேசனல் கேசெஸ் என்று சொல்லப்படுகின்ற இதுபோன்ற உணர்ச்சிவசப்படுத்தும் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே மக்களால் அல்லது ஊட கத்தாரால் அல்லது அரசியல்வாதிகளால், அல்லது மதவாதிகளால், அல்லது தேசிய குருங்குழுவாதிகளால், பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு, உச்சகட்ட தீர்ப்பை எப்படியும் கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தை, நீதியரசர்களின் மூளைக்குள் ஏற்றிவிடுகிறது. அதனா லேயே மக்கள் எதிர்ப்பார்க்கும் தீர்ப்பு வெளிவந்துவிடுகிறது. அப்படி வந்தது தான் கசாப் தீர்ப்பும்.
அதேசமயம் உலக மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எதிர் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஒரு வழக்கில் கொடுக்கப்படும் தண்டனை என்பது, குற்றம் சாட்டப்பட்ட மனிதனைத் திருத்துவதற்காக கொடுக்கப்படுகிறது. மாறாக பழிவாங்க அல்ல. இது இந்த தீர்ப்பில் அணுகப்படவில்லை.
அதாவது மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்த நீதியரசர் இந்த குற்றவாளியான
கசாப் திருந்தவே முடியாத ஆள் என்று கூறி விட்டார். இப்படி சோசியம் சொல்வதற்கு நீதிபதிகளுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. நீதியரசர் களிடம் நாடு எதிர்பார்ப்பதும் அதுவல்ல. திருத்துவதற்காக தண்டனை கொடு என்றால் கதை சொல்லிக்கொண்டிருக்க நீதியரசருக்கு வேலை இல்லை.
இப்படி சோசியம் தெரிந்தவர்களை மரத்தடியில் அமர்த்தலாம். அவர்கள் நீதித்துறைக்கு எப்படி வந்தார்கள் என்பது ஆச்சர் யமான செய்திதான்.ஆனாலும் எப் படியோ ஒரு மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பை அவர்கள் கொடுத்துவிட்டனர். அதாவது கசாபிற்கு மரணதண்டனை என அறிவித்துவிட்டனர்.
இப்போது அது விவாதிக் கப் படுகிறது. மரணதண்டனை என்பது ஒரு வழக் கில் நிரூபிக்கப்பட்ட குற்ற வாளியை திருத்துவதற்கு பதில் பழி வாங்கும் நடவடிக்கையாக இருக் கிறது என்பதே மனித உரிமை ஆர்வலர் களின் குற்றச்சாட்டு. கண்ணுக்கு கண் என்றோ பழிக்குப்பழி என்றோ கூறும் அடிப்பயைக்கொண்டது அல்ல இந்திய தண்டனைச்சட்டம். அது குற்றம் செய்த வர்களைத்திருத்துவதற்கானது அப்படி திருத்துவதற்கு மரணதண்டனையில் இடம் இல்லை. ஆகவே இது அடிப் படியில் மனித உரிமை அல்ல. அடுத்து மரணதண்டனை கொடுப்பதால் குற்றங்கள் நின்று விடுமா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுகிறார் வீ.ஆர். கிருஷ்ணய்யர். அவர் கூறும்போது மூன்று காரணங்களுக்காக ஒருவர் மரண தண்டனை தரும் அளவுக்கு குற்றம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்படி செய்பவர் திட்டமிட்டு குற்றம் செய்து அதில் தப்பித்து விடலாம் என்று எண்ணு வாரானால், அப்படி திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள் இந்த மரண தண்டனை நீடிப்பதனால் திருந்தப்போவதில்லை.
ஏனென்றால் அவர்கள் திட்டமிட்டு தவறு செய்து தப்பித்து விடலாமென எப்போதும் நினைப்பார்கள். அடுத்து திடீரென கொலை போன்ற பெரிய குற்றங்களை செய்பவர்கள்.
அவர் களும் மரணதண்டனை இருக்கிறதே என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு செய்யும் குற்றங்களைத்தவிர்க்க முடியாது அடுத்து கொள்கைக்காக பயங்கரக்குற்றங்களை செய்பவர்கள். அவர்களும் எந்த மரணதண்டனை பற்றியும் பயப்படப்போவதற்கில்லை. ஆகவே மரணதண்டனையால் எந்த குற்றத்தையும் தடுக்க முடியாது. அப்படியானால் மரணதண்டனை எதற் காக என்று கிருஷ்ணய்யர் கேள்வி எழுப் புகிறார்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மரணதண்டனை கொலை செய்யப் பட்ட தனது கணவனையும், தனது பிள்ளையையும் இழந்த ஒரு தாயாரால் எதிர்க்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலில் ஒபராய் ஹோட்டலில் வெர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஆலன்ஸ்கெர் என்ற தனது கணவனையும், நவோமி என்ற தனது 13வயது மகளையும் பலிகொடுத்த, கியாஸ்கெர் என்ற விதவை அமெரிக்க பெண்மணி, என்றைக்குமே தான் மரணதண்டனையை ஆதரிக்கவில்லை என்றும், கசாபிற்கு ஆயுள்தண்டனை தான் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இன்று அன்னையர் தினம் என்பதால் நாம் அதை நினைவு கூறல் சரியாக இருக்கும். தனது பிள்ளையை இழந்ததால் இன்னொரு தாயாரும் தனது பிள்ளையை இழக்க வேண்டும் என இந்த தாயார் எண்ணவில்லை.
அது மட்டுமல்ல இப்போது கொடுக்கப்பட்டுள்ள மரண தண்டனை அடுத்து இந்தியச்சட்டப்படி மேல்முறையீடுக்கு செல்லும். அதன் பிறகு உச்சநீதிமன்றம் செல்லும். அதற்குப்பிறகு குடியரசுத்தலைவரின் கருணை மனுவிற்கு செல்லும். காலம் நீட்டப்படும். அதற்குள் இந்திய பாகிஸ் தான் உறவு நல்ல உறவாக மாறலாம். காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் வரலாம். அதற்கு அமெரிக்கா முழு முயற்சி எடுக்கலாம்.
அப்போது இந்த கசாப்புக்கு மன்னிப்பு வழங்கப்படலாம். அப்படி நடக்காவிட்டாலும், இதுவரை இந்தியாவின் சிறைகளில் மரணதண்டனைக்காக காத்துக்கொண்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 50ஐ தாண்டுகிறது. அவர்களுக்கு மரணதண்டனை கொடுக் கலாமா வேண்டாமா என்ற விவாதம் உள்துறையில் நடந்து வருகிறது.
அதில் கசாப் வழக்கு கடைசி வழக்கு என்பதால் அதிக காலம் ஆகலாம். அதற்குள் நிலைமைகள் மாறலாம். ஆகவே கசாபிற்கு ஆயுள் தண்டனை கொடுத்திருந்தால் அதுவே அவனுக்கு அதிகபட்ச தண்டனையாக இருந் திருக்கும். உணர்ச்சிவசப்பட்டு மரண தண்டனை அறிவித்தது கசாபிற்கு நல்லதுதான்.
அதுவே ஆயுள் தண்டனை ஆகி இருந்தால், கசாப் அதிகம் கஷ்டப் பட்டிருப்பான். ஆகவே இது
கசாபிற்கு லாபமான தண்டனையா என்றும் விவாதம் எழுகிறது. எப் போதுமே அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது இதுதானோ?