Thursday, May 6, 2010

மக்கள் கணக்கெடுப்பில், சாதி புள்ளி விவரம்

நேற்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி முக்கிய விவாதத்தை கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அவர்களுடன் பா.ஜ.க. உட்பட ஒரு பிரச்சினையை கிளப்பியிருக்கிறார்கள். தொடங்கப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான புள்ளி விவரங்களையும் சேர்த்து எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. நேற்றைய நாடாளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் எழுந்துள்ளது. அப்போது ஒரு பா.ஜ.க. உறுப்பினர், வங்கதேசத்தின் அகதிகளை கணக்கெடுக்கக்கூடாது என பிரச்சினையை, வேறுபுறம் திருப்பி விட்டார். 1931ம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகையை கணக்கெடுக்கும் போது, சாதிவாரியான புள்ளி விவரங்களையும் சேர்த்து எடுத்தது போல இப்போதும் கணக்கெடுப்பில் அதை இணைக்க வேண்டும் என்று இவர்கள் கேட்டனர்.
இந்த கோரிக்கை எதிர்க்கட்சிகள் மட்டத்தில் மட்டும்தான் நின்றதா? அப்படிக் கூறிவிடமுடியவில்லை. இன்று சாதிவாரி புள்ளி விவரங்களை கோரி வரும் பின் தங்கிய வகுப்பினர், ஆளும் கட்சியிலும், ஆளும் கூட்டணியிலும் இல்லையா? அப்படி இருப்பதனால்தான், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இதே கோரிக்கை பலரால் எழுப்பப்படுகிறது. அதன் விளைவாக மத்திய அமைச்சரவையிலும் அது எதிரொலிக்கிறது. அப்படி எதிரொலிக் கும் போது, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவை இதன் மீது விவாதிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அப்போது ஒத்த கருத்தில் மத்திய அமைச்சர வை இந்த விவகாரத்தில் இல்லை என்பது புரிந்திருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி புள்ளி விவரங்களை இணைக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர்களின் பெயர்கள் வெளி வந்துள்ளன. செவ்வாய்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சாதி கணக்கு எடுக்கக் கூடாது என அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல் ஆகியோர் வலியுறுத் தியுள்ளனர். ஆனாலும் அரசாங்கத்திற் குள்ளேயும், ஐ.மு.கூட்டணியில் உள்ள உறுப்பு கட்சிகளுடனும், அதிகமான விவாதம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதாக தலைமை அமைச்சர் கூறியுள்ளார்.
1881ம் ஆண்டு இந்திய கணக்கெடுப்புக் குழு தனது பணியை முதலில் தொடங்கியது. 1931ம் ஆண்டு வரை சாதி வாரி கணக்கெடுப்பையும் அது எடுத்தது. ஆனால் 80 ஆண்டுகளாக எஸ்.சி., எஸ்.டி. தவிர மற்ற பின்தங்கிய வகுப்புகளைப் பற்றிய புள்ளி விவரம் எடுக்கப்படவில்லை. இதுவே 80 ஆண்டுகளில் கூடியிருக்கும் தங்களது சாதி எண்ணிக்கையை கணக்கில் எடுக்காமல் இருக்கும் அவல நிலை என்று பாதிக்கப் பட்டோர் குரல் எழுப்புகின்றனர். 1931ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படியே மண்டல் ஆணைய அறிக்கை, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக் கீடு செய்துள்ளது. அத்தகைய மண்டல அறிக்கை இன்றைக்கும் அமுலில் இருப்பதால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக் கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளான இடஒதுக்கீடு, புதிய புள்ளி விவரங்களை கணக்கில் எடுக்காமல் எப்படி நியாயமாக கொடுக்கப்பட முடியும் என்பதே அவர்களது வாதம்.
சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துகின்ற ஒரு அரசாங்கம், அதை சரியாகவும், உண்மை யாகவும், புள்ளி விவரப்படியும் செய்ய மறுப்பது ஏன்? என்பதே அவர்களது கேள்வி.
இடஒதுக்கீடு என்பது ஒரு உலகம் தழுவிய விவாதமாக இருக்கிறது. அமெரிக்காவில் 1964ம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டத்தின் ஒப்புதலுக்கு பிறகு, 1970ன் ஆண்டுகளில் இன ரீதியான இடஒதுக்கீடு அமுலாகத் தொடங்கியது. அன்றைய அதிபர் ரிச்சர்டு நிக்சனின் தொழிலாளர் அமைச்சரான ஜார்ஜ் பி ஸ்குல்ஸ் என்பவர் கறுப்பர்களுக்கு எதிரான கட்டுமான சங்கங்களில், கறுப்பர்களையும் குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் இணைக்க வேண்டும் என்று கோரினார். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் வழக்கு ஒன்றில், இன ரீதியான பாரபட்சம் சட்ட விரோதமானது என்று கூறிய பிறகு, பல நிறுவனங்கள் தாங்களாகவே இடஒதுக்கீடு கொடுக்கத் தொடங்கினர். 1973ம் ஆண்டு நீதிமன்ற வழக்கில், கனக்டிக்கட் மாநில காவல் துறையில் புதிய ஊழியர்களை எடுக்கும் போது, பாதி பேராவது கறுப்பர்கள் இருக்க வேண்டும் என்பதாக தீர்ப்பானது. 1974ம் ஆண்டில் நீதித்துறை மற்றும் அமெரிக்க எஃகு தொழிலாளர் சங்கம் அதிகமான ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டது. 1978ம் ஆண்டு இதே போல உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று வெளியானது. 1989ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில், தனியார் நிறுவனங்களும் தங்களது இடஒதுக்கீட்டை அறிவிக்க வலியுறுத்தப்பட்டது. 1990ல் அமெரிக்க உச்சநீதிமன்றம், மாநில ஒப்பந்தக் காரர்கள் 10% இனவழி ஒதுக்கீடு செய்ய அனுமதி கொடுத்தது. அதே சமயம் 1991ல் அதிபர் ஜார்ஜ் புஷ் இது போன்ற இடஒதுக்கீடுகளை அறவே நீக்க முயற்சி எடுத்தார். அதை 1991ன் சிவில் உரிமைகள் சட்டம் என்பதாக உருவாக்க முயன்றார். ஆனால் வெல்லவில்லை. ஜார்ஜ் புஷ் அணுகுமுறையை, இந்தியாவின் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கபில்சிபல் ஆகியோர் பின்பற்று கிறார்களா என்பது தெரியவில்லை.
அமெரிக்காவில் ஆக்கபூர்வமான ஒதுக்கீடு அணுகுமுறை என்று 1961ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியால் கையெழுத்திடப்பட்டது. அதே போல நிர்வாக ஆணை 1965ம் ஆண்டு செப்டம்பர் 24ல் அதிபர் லிண்டன் ஜான்சனால் கையெழுத்திடப்பட்டது. பெண் களுக்கு இடஒதுக்கீட்டையும் இணைக்க வேண்டும் என்று 2967ம் ஆண்டு அக்டோபர் 13ம் நாள் அமெரிக்க நிர்வாக ஆணை அமுலாக்கப்பட்டது. அமெரிக்காவி லேயே இத்தகைய நிலை என்றால், சாதி ஏற்றத்தாழ்வு உள்ள இந்தியாவில் ஏன் ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது அரசாங்கத்திலும், பொதுத்துறையிலும் மற்றும் தனியார் கல்வி சாலைகளிலும் இருக்கிறது. ஆனாலும் கூட மத, மொழி அடிப்படையிலான கல்வி நிறுவனங்களில் கட்டாயப் படுத்தப் படுவதில்லை. இட ஒதுக்கீடு 50%க்கு மேல் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 27% என்பது அமுலில் உள்ளது.
மண்டல் ஆணைய அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள சாதிகளின் பின்தங்கிய நிலைமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதையொட்டி பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் இடஒதுக்கீடு என்பது அமுலாக்கப்பட்டது. மண்டல் அறிக்கையை அமுலாக்கினால், உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று கூறியவர்களும் உண்டு. அத்தகைய சக்திகளின் மிச்ச சொச்சங்களால் இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி வாரி புள்ளி விவரத்தை எடுக்கவிடாமல் தடுக்க வைக்க முடியலாம். ஆனால் அதுவே இந்தியாவின் எதிர்காலமாக இருக்காது.
மண்டல் 11 விதமான அடையாளங்களை கூறியுள்ளார். சமூக ரீதியில் பின்தங்கிய சாதிகள். தங்கள் வாழ்க்கைக்காக உடல் உழைப்பை சார்ந்து நிற்கும் சாதிகள். 17 வயதிற்குள் திருமணமான பெண்கள் எண்ணிக்கை 25% என்று கிராமங்களிலும், 10% என்று நகரங்களிலும் இருந்தால், இடஒதுக்கீடு. 17 வயதிற்கு முன்னால் திருமணமான ஆண்கள் 10% கிராமத்திலும், 5% நகரத்திலும் இருந்தால் ஒதுக்கீடு. மாநில சராசரியை விட 25% அதிகமாக பணியில் ஈடுபடும் பெண்கள் இருந்தால் ஒதுக்கீடு. மாநில சராசரியை விட 25% பள்ளிக்கு செல்லாத 5 முதல் 15 வயதுள்ள குழந்தை கள். அதே போல பொருளாதார மதிப்பீட்டை யும் மண்டல் கூறுகிறார். மாநில சராசரியை விட 25% குறைவாக உள்ள குடும்பங்களின் சொத்துக்கள் மதிப்பீடு எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறார். 50% குடும்பங்கள் அரைகிலோ மீட்டருக்கு மேல் சென்று குடிதண்ணீர் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கும் ஒதுக்கீடு என்கிறார். மாநில சராசரிக்கு மேல் 25% நுகர்வு கடன் வாங்கும் குடும்பங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார். இப்படியாக சமூக, கல்வி, பொருளாதார நிலைகளையும் ஆய்வு செய்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை மண்டல் முன்வைக்கிறார்.
இத்தகைய விரிவான ஆய்வை அமுலாக்கி வரும் இந்தியாவில், எந்த ஒரு முறையான அளவு கோலையும் எடுத்துக் கொள்ளாமல் மக்கள் தொகை கணக்கீடு செய்து என்ன பயன்? நிலச்சீர்த்திருத்தங்களையும் மண்டல் முன்வைக்கிறார். அதுபோல சாதிவாரி புள்ளி விவரம் இணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே, இன்றைய இந்தியாவின் வறுமை சூழலை, மாற்றுவதற் கான திட்டத்தை முன்வைக்க ஆள்வோருக்கு உதவப் போகிறது. அத்தகைய அக்கறை ஆட்சியாளர்களுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.