Wednesday, May 5, 2010

கேரள அரசின் பேய் பங்களா?

கேரளாவில் நடந்துவரும் ஆட்சி வித்தியாசமான செய்திகளை அன்றாடம் நமக்கு தந்து வருகிறது. கர்நாடக அரசுதான் தனது அமைச்சர் ஒருவரை பாலியல் குற்றங்களுக்காக பதவியிறக்கம் செய்தது என்றால், அதை ஒட்டி அவர்மீது வழக்கு போட்டது என்றால், அதனாலேயே அவர் தலைமறைவாகப் போய்விட்டார் என்றால், தமிழ்நாடு அரசு எந்த சிக்கல் எந்த அமைச்சருக்கு வந்தாலும், தலைசிறந்த ஒரு அரசியல் மேதையை முதல்வராகக் கொண்டிருப்பதால் தப்பித்து விடும் என்றால், கேரளா அரசு அப்படிப்பட்ட நிலை இன்றி, மாட்டிக்கிட்டு முழிக்குதே என்று என்ன வேண்டியிருக்கிறது.
ஏன் என்றால் அங்கு முதல்வருக்கும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளருக் கும் மத்தியில் உள்ள தகராறுதான் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும். அதாவது வி.எஸ்.அச்சுதானந்தத் திற்கும், பினராய் விஜயனுக்கும் இருக்கின்ற முரண்பாடுதான் எல்லோர் நினைவிற்கும் வரும். ஆனால் இப்போது வந்திருப்பது இடதுசாரிக் கூட்டணிக்கும் காங்கிரசிற்கும் மத்தியில் உள்ள பிரச்சனை, சமீபத்தில் இடதுசாரி கூட்டணியில் ஒரு கட்சியாக இருபது ஆண்டுகளாக இருந்துவரும் கேரளா காங்கிரசு ஜோசப் கட்சிக்கும் உள்ள பிரச்ச னையாக இது இப்போது எழுந்துள்ளது.
பி.ஜே.ஜோசப் என்ற அந்த பொதுப் பணித்துறை அமைச்சர் இப்போது இடது கூட்டணிக்கு தலைவலி கொடுத்து வெளியே வந்து விட்டார். இவரது கட்சிக்கு நாலு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்தக்கட்சியின் தலைவரான பி.ஜே.ஜோசப், பொதுப்பணித்துறை அமைச்சராக இருபது ஆண்டுகள் இருந்தது மாத்திரமின்றி, இடது சாரி கூட்டணிக்கு தொடர்ந்து தோழமையாக இருப்பவர். இவர் கடந்த சில வாரங்களாக இடது கூட்டணியை விட்டு வெளியே வரும் நோக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் துணையோடு செயல்பட்டு வருகிறார். இப்போது முழுமையாக இடது கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டார். அத்தோடு நில்லாமல் தன்னோடு சேர்த்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் வெளியே கொண்டுவந்து விட்டார். இவரது கட்சியைச்சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பிடித்து வைத்துக்கொண்டு அவரை அமைச்சராக ஆக்கிவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி. இப்போது கட்சி தாவல் தடைச்சட்டப்படி அந்த மீதமிருக்கும் உறுப்பினர் பதவி இழப்பார் என்பது வெளியே வந்தவர்களின் குற்றச்சாட்டு. அதேசமயம் அங்கே இருக்கும் சட்டமன்றத்தில் மொத்தம் நூற்று முப்பத்தி நாலு உறுப்பினர்கள் உண்டு. அவர்களில் இடது கூட்டணி முதலில் நூற்று இரண்டு பேருடன் இருந்தது. இருபத்தி ஆறு பேர் முஸ்லிம் லீகில் மட்டும் சட்ட மன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இப்போது மார்க்சிஸ்ட்களுடன், சி.பி.ஐ.யும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் மட்டும் தான் அவர்களது கூட்டணியில் உள்ளனர், இதற்கு இடையில் காங்கிரஸ் மோனி கோஷ்டி என்ற ஒருகட்சி இருக்கிறது. இவர்களுக்கு பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வரை இருக்கிறார்கள். மோனி கோஷ்டியும், ஜோசப் கோஷ்டியும், கிருத்துவர்களின் ஓட்டுக்களை முழுமையாக வாங்கிவிடுகிறார்கள். முற்போக்கு கேரளாவில் கிருத்துவர் ஒட்டு கிருத்துவர் கட்சிக்குத்தானா எனக்கேட்டு விடாதீர்கள். தமிழ்நாட்டிலோ, வேறு எந்த மாநிலத்திலோ நீங்கள் பார்க்காத ஒரு செய்தியை கேரளாவில் காணலாம். அதாவது கிருத்துவர் வாக்கு கிருத்துவர் கட்சிக்கு என்ற உண்மையைப் பார்கலாம். கிருத்துவர்களில் இந்தியாவில் உள்ள அனைத்து சாதிகளும் இருந்தாலும் கூட, இந்த நிலைமை தொடர்கிறது. அதனால் தான் ஆதிவாசி மக்களுடைய நிலங்களை எல்லாம், கிருத்துவ பணக்காரர்கள் கைப்பற்றியிருந்த போது, அவற்றை ஆதிவாசிகளுக்கு எடுத்து கொடுப்பதற்கு பதில், ஆக்கிரமிப்பவர்களுக்கே சொந்தமாகும் சட்டத்தை மார்க்சிஸ்ட்டுகளே, கொண்டு வந்தார்கள். எத்தனை முறை குடியரசு துணைத்தலைவராக இருக்கும் போதும், பிறகு குடியரசுதலைவராக ஆனபோதும் கே.ஆர்.நாராயணனால் எவ்வளவு முயன்றும் தடுக்க முடியாத ஒரு சட்டமாக அது ஆகிவிட்டது. இந்த அளவு அங்கே பணம் படித்த கிருத்துவர்கள் அதிகாரம் இருக்கிறது. அது கட்சியிலும் செல்வாக்கு செலுத்தாமல் இருக்குமா?
வெளியே வந்திருக்கும் ஜோசப் கும்பலை காங்கிரஸ் ஒழுங்காக ஏற்றுக்கொள்ளுமா? அதுவும் பிரச்சனைதான். ஏன் என்றால் ஏற்கனவே காங்கிரசு கட்சியை நம்பி தேசியவாத காங்கிரசு கட்சியிலிருந்து வெளியே வந்த பிரபல முன்னாள் காங்கிரசுக் கட்சி தலைவர் கருணாகரனின் மகன் முரளீதரனை, ஒரு உறுப்பினராகக்கூட சேர்ப்பதற்கு காங்கிரசுக்கட்சி தயாராயில்லை. இது உம்மண்சாண்டி பாணி. இந்த சூழ்நிலையில் இப்போது பிரபலமாக இருக்கும் பேச்சு வேடிக்கையானது. திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள் தங்கும் அரசு பங்களா ஒன்று இருக்கிறது. அதற்கு மன்மோகன் பங்களா என்று பெயர். அந்த பங்களா இப்போது பேய் பங்களா என அழைக்கப்படுகிறது.
ஏன் என்றால் அதில் தங்கிய எல்லா அமைச்சர்களும் பதவி காலி ஆகி இருக்கி றார்கள். இது வரலாற்று நிகழ்வாக இருக் கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு காங் கிரசு கட்சியின் பெரும் தலைவரான கருணாகரன் முதலமைச்சராக இருக்கும் போது அந்த பங்களாவில் தங்கியிருந்தார். பாமாயில் ஊழலில் அப்போது சிக்கினார். உடனடியாக பதவி இழந்தார். அதே போல அந்த பங்களாவையும் காலி செய்தார். அதற்குப் பிறகு காங்கிரசு கட்சியின் போக்குவரத்து அமைச்சராக பாலகிருஷ்ணன் பிள்ளை இருந்தார். இதே மன்மோகன் பங்களாவில் தங்கி இருந்தார். வருவாய் துறை வரி ஏய்ப்பில் மாட்டிக்கொண்டார். பதவி இழந்தார். அந்த பங்களாவை காலி செய்தார். அடுத்து இடதுகளின் ஆட்சியில், அதாவது இப்போதுள்ள அச்சுதானந்தனின் ஆட்சியில், உள்துறை அமைச்சராக கொடியேறி பாலகிருஷ்ணன் இருந்தார். அவர் பினராய் விஜயனின் ஆள். அந்த பங்களாவை சீர்செய்வதற்காக என்று 59 லட்சரூபாயை செலவு செய்தார். முதல்வர் அச்சுதானந்தத்தால் கடுமையாக கண்டிக்கப் பட்டு, ஆட்சி வந்த ஒரு மாதத்திலேயே நான்கு ஆண்டுகள் முன்பு காலி செய்யப் பட்டார். அதன்பிறகு இந்த பொதுப் பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் அந்த பங்களாவில் குடியேறினார். ஒரு வருடம் முன்பு சென்னையிலிருந்து விமானத்தில் வரும்போது ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்ததற்காக பதவி இழந்தார். அதற்குப்பதில் அவரது கட்சியைச்சேர்ந்த பி.ஜே. குருவில்லாவை பொதுப்பணித்துறை அமைச்சராக ஆக்கினார்கள். அவர் புறம்போக்கு நிலத்தை பட்டா போட்டு தருவதாக சொல்லி 3 கோடி ரூபாயை வாங்கி பட்டாவும் கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு, பதவி இழந்தார். அதன்பிறகு கேரளா காங்கிரசுவின் இன்னொரு அமைச்சர் பதவி எடுத்தார். அதற்குள் அந்த கட்சியின் தலைவர் பி.ஜே.ஜோசப் வழக்கு முடிந்து விடுதலை யாகி மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார். அதனால் அந்த அமைச்சர் பதவியை, கட்சி தலைவரே எடுத்துக்கொண்டு, அந்த பங்களா வாசத்தையும் வாங்கிக்கொண்டார். இப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பி.ஜே.ஜோசப் தனது பதவியையும் இழந்து அதை ஒட்டி பங்களாவையும் இழந்து உள்ளார். ஆகவே அந்த மன்மோகன் பங்களா அவ்வளவு பிரபலமாக ஆகி விட் டது. மன்மோகன் பெயரில் இருப்பதினாலா? சரி.
எப்படியோ முற்போக்கு பேசும் கேரளாவில் இப்படி ஒரு மூடநம்பிக்கை இப்போது பேசப்படுகிறது. ஏற்கனவே இடதுசாரி கட்சியில் இருந்து கொண்டே ஐயப்பன் தரிசனம் போகிறவர்கள்தானே என்று நீங்கள் நினைக்கலாம். அது நமக்குத்தெரியாது. இப்போது வெளியே வந்துள்ள பி.ஜே.ஜோசப் மீது பெரிய குற்றத்தை முதல்வர் போட்டுவிட்டார். பொதுப்பணித் துறையில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் 300 வீடுகளை, மோசடி செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டில் அத்தனை வீடுகளையும் ரத்து செய்து விட்டார். அதுவே வழக்காக மாறும். ஜோசப் உள்ளே போக வேண்டி வரும். அடுத்து இருபத்திஎட்டு கோடி ரூபாயை வாய்வழி மூலமே, சாலை போட பொதுப்பணித்துறை யில் ஒதுக்கியதாக ஒரு குற்றச்சாட்டு. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளிலும் ஜோசப் தப்ப முடியாது. காங்கிரசு கட்சிக்கு சென்றாலும் எடுபடாது. அடுத்த தேர்தலில் நிற்க முடியாது. இது எப்படி இருக்கு? இதுதான் கேரளா அரசியல். இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.