Wednesday, April 28, 2010

சார்க் மாநாடு பசுமையையும், மகிழ்ச்சியையும் தருமா?

இன்று பூடான் நாட்டின் தலைநகரான திம்புவில் சார்க் நாடுகளின் உச்சி மாநாடு தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு என்பது தான் சார்க் என அழைக்கப்படுகிறது. 8 நாடுகள் இந்த கூட்டமைப்பில் இருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, பூடான் ஆகிய நாடுகள் சார்க் கூட்டமைப்பு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்துழைப்பதற்காக என்ற பெயரில் பார்வையாளர் நாடுகளாக ஆறு நாடுகள் இருக்கின்றன. அவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, பர்மா ஆகியவை. இப்போது இருக்கும் 8 நாடுகளும் அநேகமாக இந்திய அரசின் செல்வாக்குக்கு உட்பட்டு இருப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. நாடுகள் என்று கூறும்போது, அந்தந்த நாட்டு அரசுகள் தான் சார்க் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளார்கள். அதனால் அரசுகளின் மனப்பான்மைகளும், சிந்தனைப் போக்குகளும் இந்த கூட்டமைப்பில் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முறை திம்புவில் நடக்கும் 16வது சார்க் உச்சிமாநாட்டில் புதிய உறுப்பினர்களாக சீனாவையும், ஈராக்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை பாகிஸ்தான் ஏற்கனவே முன்வைத்தது. ஆனால் இந்திய அரசு அந்தப் பிரச்சினையை தந்திரமாக கையாண்டு தள்ளி வைத்து விட்டது. அதாவது கடந்த கால சார்க் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதற்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை இந்திய அரசு முன்வைத்து, அதை மற்ற நாடுகளும் ஏற்றுக் கொண்டு விட்டன. 3 ஆண்டுகளுக்கு முன்னால் சார்க் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானை இணைப்பதற்கு இந்தியா வைத்த முன்வைப்பு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2012ம் ஆண்டில் பார்வையாளர் தகுதிக்கு பர்மா, ஈராக் மற்றும் சீனாவை சார்க் ஏற்றுக் கொள்ள இருக்கிறது. பூடான் நாட்டின் 25 ஆண்டு ஓட்டத்தில் முதன் முறையக பிராந்திய கூட்டமைப்பை கூட்டும் பெருமையைப் பெறுகிறது. அதனால் திம்புவில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இந்த மகத்தான உச்சி மாநாட்டிற்கு வருகின்ற விருந்தாளிகளை வரவேற்க பரோவிலிருந்து, திம்புவிற்கு மற்றும் புயன்ட்ஷோலிங்கிலிருந்து திம்புவிற்கு வருகின்ற நெடுஞ்சாலையில், பெரிய வாயிற்கதவுகள் நிறுவப்பட்டுள்ளன. பூடான் அரசுக்கு வருக என்பதாக எழுதப்பட்டுள்ளன. பூடானில் இப்போதும் மன்னராட்சிதான் நடந்து வருகிறது. திம்பு நகரை சுத்தமாக்கும் திட்டத்தில், ஏழ்மையானவர்கள் அகற்றப்பட்டு விட்டார்கள். நடைமேடைகள் சீர் செய்யப்பட்டுள்ளன. கழிப்பிடங்கள் சுத்தமாக்கப்பட்டுள்ளன. உச்சிமாநாட்டின் முழக்கத்திற்குஒப்ப நகரை பசுமையாக மாற்ற , சில இடங்களில் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஏப்ரல் 19ம் நாள் தொடங்கிய பருவநிலை மாற்றம் பற்றிய தேசிய கலைப் போட்டி ஏப்ரல் 28ம் நாள் வரை நடைபெறுகிறது. பூடான் அரசப்படை 8 நாடுகளின் தேசிய கீதத்தையும் பாட பயிற்சி பெற்று விட்டார்கள். சார்க் விருந்தினர்கள் தங்குவதற்காக சுற்றுலாவாசிகள் அறைகளிலிருந்து காலி செய்யப்பட்டு விட்டனர். சார்க் நாடுகளின் அரசாங்கங்கள், மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்ற கருத்தை எதிரொலித்து, மாற்று கருத்தை முன்வைக்கும் மக்கள் சார்க் என்ற அரசுசாரா நிறுவனங்களின் கூட்டத்தை பூடானில் கூட்டுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை. அதனால் அந்த மக்கள் சார்க் சில நாட்கள் முன்பு டெல்லியில் கூடியது. அதில் மனித உரிமைகளுக்கும், ஊடக உரிமைக்கும் சார்க் அரசுகள் செய்து வரும் அடக்கு முறைகளை எதிர்த்தன. பூடான் நாட்டு அகதிகள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பிரச்சினையை எழுப்பி விடக்கூடாது என்பது மக்கள் சார்க் நடத்துவதை பூடான் அரசு எதிர்ப்பதற்கான முக்கிய காரணமாக தெரிகிறது. சார்க் கூட்டம் பல உள்நாட்டு விவகாரங்களை விவாதிக்காமல், தப்பிப்பது உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன்னால் பூடான் நாட்டில் கருத்துரிமை கேட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். பூடான் அரச வம்சம் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனக்குழுவைச் சேர்ந்தது. வேறு இனக்குழுவை சேர்ந்த மக்கள், வெவ்வேறு பண்பாடுகளை பின்பற்றினார்கள். அரச குடும்பத்தைப் போன்ற உடைகளை அணிவதும், பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுவதும், மற்ற இனக்குழுக்கள் மீது திணிக்கப்பட்டன. அதனாலேயே அந்த நாட்டை விட்டு அவர்கள் வெளியேறி னார்கள். ஒரு லட்சத்து 8,000 பூடான் அகதிகள், கிழக்கு நேபாளத்தில் ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் கண்காணிப்பில், மூடப்பட்ட முகாம்களில் வாழ்கின்றனர். அங்கேயே 10,000 பூடான் அதிகாரிகள் வெளியே வாழ்கின்றனர். நேபாளம் தான் பூடான் அகதிகளில் அதிகமானவர்களை தாங்கிக் கொண்டிருக்கிறது. 6வது பூடான் அரசாட்சியில் இருக்கும் மக்கள் தொகையில், 6ல் ஒரு பங்கு அகதிகளாக வெளியில் இருக்கின்றனர். புத்தமதத்தை தழுவாது இருக்கும் நபர்கள் அகதிகளாகஆக்கப் பட்டுள்ளனர். அகதிகளில் இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று விடுகின்றனர். நேபாளத்திலிருக்கும் பூடான் அகதிகளில் 30 விழுக்காடு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகளில் புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டார்கள். அகதிகளின் தலைவர்கள் நடைபெறும் சார்க் மாநாட்டில், தங்கள் மீள் குடியேற்றம் பற்றி பேசவேண்டும் என வற்புறுத்துகின்றனர். சார்க்கின் 8 நாட்டு அரசுகளுக்கும் அதுபற்றி மனு எழுதியுள்ளனர். பூடான் சிறையில் தங்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை விவரித்துள்ளனர். மரியாதையுடன் தாங்கள் நடத்தப்படவேண்டும் என்றும், 1990ம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும், மக்கள் தொகையில் வாக்களிக்க மறுக்கப்படும் 14 விழுக்காடு வாக்காளர்களுக்கு, வாக்குரிமை வேண்டும் என்றும் அவர்கள் எழுதியுள்ளனர். இந்தியாவிலும் பூடான் அகதிகள் 25,000 பேர் இருக்கிறார்கள். உலகம் எங்கும் 30,000 அகதிகள் சிதறி வாழுகிறார்கள். நேபாளமும், பூடானும் அகதிகளின் மீள் குடியேற்றம் பற்றி 15 மேசைப் பேச்சுகள் நடத்திவிட்டன. நேபாள தலைமை அமைச்சர் மாதவ்குமார் நேபாள், சார்க் மாநாட்டில் அகதிகளை திருப்பி எடுத்துக் கொள்ளுதல் சம்பந்தமாக பேச வேண்டும் என கூறியுள்ளார். இந்தியா இதில் தலையிடாமல் பூடான் அகதிகள் நாட்டிற்கு திரும்ப வழியில்லை என்றும், பூடான் அகதிகளின் தலைவர் பலராம் பௌதைல் கூறினார். இவர் பூடானில் ஜனநாயகத்திற்கான தேசிய முன்னணி என்ற எதிர்கட்சி தலைவர். இந்திய அரசே இது இரு நாடுகளுக்கும் மத்தியில் உள்ள பிரச்சினை என்பதாக தட்டிக் கழிக்கிறது. இலங்கை அரசத்தலைவர் மகிந்தா, இந்திய பிரதமர் மன்மோகனை சார்க் மாநாட்டில் சந்திக்கிறார். போருக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றி பேச இருக்கிறார். பசுமையுடன் கூடிய, மகிழ்ச்சியான தெற்காசியா என்பது மாநாட்டின் முழக்கம். வேண்டுமானால் அரசுகள் அந்தப் பெயரில் உள்ள பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, தங்களை வர்த்தகத்தை பெருக்கிக் கொள்வார்கள். அது எந்த வகையிலும் எந்த நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது. பேரழிவுகளுக்கு எதிரான பொது திட்டத்தை வகுப்பதிலும், பிராந்திய உள் தொடர்புகளை வளர்ப்பதற்கான ஒப்பந்தங் களும் ஏற்படலாம். சார்க் பல்கலைக்கழகம் ஒன்றை டெல்லியில் நிறுவ விதிகளும், ஒழுங்குகளும் இந்த மாநாட்டில் உருவாக்கப் படலாம். மக்களிடமிருந்து மக்களுக்கான தொடர்புகளையும் பொருளா தார மற்றும் சமூக தொடர்பு களையும் ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த மாநாடு விவாதிக்கும் என கூறுகிறார்கள்.ஆனால் அரசுகளின் பிரதிநிதித்துவமும், இந்திய அரசின் செல்வாக்கும் உச்சிமாநாட்டு திசைவழியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாதா? பூடானும், மால்தீவும் ஏற்கனவே இந்திய அரசின் செல்வாக்குப் பகுதிகளாக இல்லையா? வங்காள தேசத்துடனும், நேபாளத்துடனும் இந்தியாவிற்கு இருக்கின்ற நதிநீர் பிரச்சினைகள் பாரபட்சமின்றி தீர்க்கப்பட முடியுமா? சீனா பங்கு கொள்ளாத கூட்டத்தில் இந்திய அரசின் செல்வாக்கு இலங்கையில் அதிகமாவதற்கு இந்த மாநாடு பயன்பட்டு விடுமா? இதுபோன்ற கேள்விகள்தான் தெற்காசிய நாடுகளின் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.