Thursday, April 15, 2010

உள்நாட்டுப் போரை, காங்கிரஸ் ஒரே கருத்தில் சந்திக்கிறதா?

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை எதிர்கொள்வதில், ஒரே கருத்துடன் இருக்கிறதா? அந்த கூட்டணியில் முதன்மைக் கட்சியாகவும், முக்கியக் கட்சியாகவும் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஒரே கருத்து செயல்படுகிறதா? ஒத்த கருத்து இல்லாமல் மத்திய அமைச்சரவை எந்த பிரச்சனையையாவது தீர்க்க முடியுமா? உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருப்பவர் சுயேட்சையாக முடிவு செய்து செயல்பட முடியுமா? அது சரியாக இருக்குமா? இதுபோன்ற கேள்விகள் இப்போது மத்திய அரசை குழப்பி வருகின்றது. முன்னேறிய ஆங்கில ஊடகம் ஒன்று இந்த பிரச்சனையின் ஆழத்தை அலசுவதற்காக பல்வேறு விவாதங்களை செய்கிறது. அதில் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பற்றி பல எதிர் விவாதங்களை கொண்டு வந்தது. சமத்துவமற்ற ஒரு சமூகபொருளாதார எதார்த்தம் இருக்கும்போது, அரசின் நிராகரிப்பும், கடுமையான சுரண்டலும், பீதியுறும் வகையில் எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது என்பது ஒரு கருத்து. மாவோயிஸ்ட் படையை முழுமையாக தூக்கியெறியாமல், வளர்ச்சிக்கான எந்தவொரு முயற்சியும் வீண்தான் என்ற இன்னொரு கருத்தும் வெளிவந்துள்ளது. இவை இரண் டையும் தாண்டி, வன்முறையை சந்திக்க வன்முறை தான் வழி என்று ஒரு கருத்து. பணக்காரர்களிடமிருந்து சீர்திருத்தம் செய்வது தான் ஏழைகளின் புரட்சி என்பதாகவும் சிலர் பேசுகிறார்கள். எத்தனை குற்றயியல் தன்மையோடு, அரசியல் நோக்கத்தோடு நக்சலைட்டு களின் சவால் இருந்தாலும், அது பணக் காரர்களுக்கும், ஏழைகளுக்கும் மத்தியில் ஒரு பங்குதாரர் உறவை ஏற்படுத்தக் கூடிய புதிய சமூக ஒப்பந்தத்தை உரு வாக்குகிறது என்றும் கூட கருத்து வெளி வந்துள்ளது. சீர்திருத்தம் என்ற வார்த்தையை இதுவரை நிதி சந்தைக்கும், தொழில் துறைக்கும் மட்டுமே அடையாளம் கண்டு வருகிறோம். மாறாக இந்தி யாவை புனரமைக்க, தாராள மயமாக்கல் என்ற விளக்கத்தை, அரசாங்கம், காவல்துறை ஆகியவற்றையும், நமது சிந்தனை களையும், வாழும் முறைகளையும் தாராள மயமாக்க வேண்டும். மேற்படி கருத்துக்களும் எதிரொலிக்கின்றன. மனதை சீர்திருத்தாமல், நேர்மையான தாராளமயம் வெற்றி பெறாது என்கிறார்கள் அவர்கள். ஏழைகள் இருக்கின்ற ஒரு நாட்டில், ஒரு மேட்டுக்குடி எவ்வாறு சிந்திப்பார் என கேள்வி எழுப்புகிறார்கள். தங்களுடைய வளர்ச்சிக்காக லாபங்களை தேடுபவர்கள், சில தானியங்களையோ அல்லது சிறுதுளி களையோ வேலையாட்களுக்கு வீசி எறிவது போல நடந்துக் கொள்கிறார்கள் என்றும் ஆள்வோர் பற்றி கருத்துக்கள் அத்தகைய ஊடகங்களில் வெளிப் பட்டுள்ளன. இப்படிப்பட்ட மனப் பான்மைகள் ஜமீந்தார்களுடைய மனப்பான்மைகளாக தெரிகிறதே தவிர, ஜனநாயகவாதிகளுடைய மனப் பான்மை அல்ல என்றும் அவர்கள் தெரிவித் தார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரு பிரிவினர் ஏழை மக்களை, வாக்கு எந்திரங்களாக பார்க்கின்றனர். அதற்காக அவர்களுக்கு ஏதாவது தர்மம் செய்ய வேண்டும் என எண்ணுகிறார்கள். பசித்த வாய்களுக்கு சிறிது தானியங்களை தூவுவது, உணவுக்கான உரிமை என்று எண்ணுகிறார்கள். கல்விக்கான உரிமை என்பதும் புத்தகங்களை ஏழைகள் மீது எறிவது என்பதாக புரிந்திருக்கிறார்கள். தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம், இடைக்கால நிலத்து வேலைகளுக்கு வாய்ப்பளிக்கிறது. குறைந்த காலத்தில், குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குகிறது. மீதம் இருப்பதை ஏழைகளுக்கு வழங்கு என்ற லாபம் தேடும் பண்ணையாதிக்க தன்மைத்ததாக ஐ.மு.கூ.வின் திட்டங்கள் இருக்கின்றன. எளிய மக்களை வருவாய் தேட உற்சாகப்படுத்தவில்லை. பணக் காரர்கள் போல முன்னேறி வளர எண்ணமூட்டவில்லை. இப்படிப்பட்ட கருத்துக்களும் ஊடகங்களில் வெளிப் படுகின்றன. கூட்டணி ஆட்சி பற்றி மக்களி டையே உள்ள கருத்துக்கள் இப்படி யெல்லாம் ஆங்கில காட்சி ஊடகங் களில் வெளிப்பட்டது என்றால், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முளைத்திருக் கின்ற கருத்து வேறுபாடுகள் கடுமை யாக இருக்கின்றன. இப்போது விவாதிக்கப் படும் மாநிலம் புதிதாக தோன்றியசத்தீஸ்கர் மாநிலம். இந்த மாநிலத்தின் பகுதிகள் அனைத்தும், கடந்த காலத்தில் மத்திய பிரதேச மாநிலத்திற்குள் அடக்க மாகியிருந்தன. அப்போது பிரபலமான காங்கிரஸ் ஆட்சியை நடத்தி வந்த முதல்வர், காங்கிரசின் மூத்த தலைவரான திக்விஜய்சிங். அதனால் அந்த மூத்த தலைவருக்கு, சத்தீஸ்கர் மாநில மக்கள் பற்றியும், அதிலும் குறிப்பாக பழங்குடி மக்களின் வாழ்நிலைப் பற்றியும் அடிப் படையான அறிவு இருக்கும் என்பது ஒரு பொதுவான பார்வை. இத்தகைய அடிப்படையான புரிதல்களை, மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கின்ற ப.சிதம்பரத்திற்கு இருக்குமா என்பது வெள்ளிடைமலை போல ஊரறிந்த ஒரு உண்மை. அப்படிப்பட்ட திக்விஜய்சிங் அடிப்படையிலேயே ப.சிதம்பரத்தின் அணுகுமுறை பற்றி மாறுபடுகிறார். அதாவது சட்டஒழுங்கு பிரச்சனையாக மாவோயிஸ்ட் பிரச்சனை பார்க்கப்படக் கூடாது என்பது திக்விஜய்சிங்கின் அழுத்தமான கருத்து. ஆனால் அப்படித் தான் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அந்த பிரச்சனையை பார்க்கிறார் என்று திக்விஜய்சிங் குற்றம் சாட்டுகிறார். சட் டம் ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்தின் முதலமைச்சரால் கவனிக்கப்பட வேண் டியது என்று முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் வலியுறுத்துகிறார். ஆனால் மத்திய அமைச்சகத்தில் உள்ள உள்துறை அமைச்சர் அதை சட்டஒழுங்கு பிரச்சனையாக பார்க்கக் கூடாது என்று திக்விஜய்சிங் ஆதங்கப் படுகிறார். இந்த இடத்தில் இன்னொரு அரசியல் பிரச்சனையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. சத்தீஸ்கர் மாநி லத்தை ஆள்வது பா.ஜ.க. அந்த கட்சி திக்விஜய்சிங்கிற்கு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அடித்தளத்தை காலி செய்து விட்டு, ஆட்சிக்கு வந்திருக்கிறது. பா.ஜ.க.வின் செயல்பாடுகளால், பழங்குடி மக்கள் பிரச்சனை விபரீதமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மாட்டிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசுக்கு பிணைக் கொடுத்து விடுதலைச் செய்யும் வேலையை, உள்துறை அமைச்சர் செய்கிறார் என்றும் கூட அந்த மூத்த காங் கிரஸ் தலைவர் எண்ணிப்பார்க் கலாம். பா.ஜ.க. சங் பரிவாரது அரசியல் கட்சியாக பயணம் செய்து வருகிறது. அதனால் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தோ, பஜ்ரங் தள்ளோ, ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கோ, அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்தோ, அடிப்படை மக்கள் மத்தியில் இறங்கி நல்ல அல்லது கெட்ட வேலைகளைச் செய்வார்கள். குஜராத்தில் வி.எச்.பி. செய்தது போல, சத்தீஸ்கரில் ஆர்.எஸ்.எஸ். செய்கிறது. அதாவது மாநில அரசு தனது காவல்துறை மூலம் ஏற்படுத்தியுள்ள சல்வா ஜுடும் என்ற கூலிப்படையை, கூட்டிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அப்பாவி பழங்குடி மக்கள் மீது சொல்லொணா கொடுமைகளை இழைத்து வருகிறது. இவ்வாறு சல்வா ஜுடும் மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் குண்டர்பாணி செயல்பாடுகளால் பாதிக்கப்படும் மக்கள், பாதுகாப்பிற்கு மாவோயிஸ்ட்கள் பக்கம் செல்கிறார்கள். இதைத் தான் சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகி கடுமையாக கண் டிக்கிறார். அஜித் ஜோகி கருத்துக்கும், திக்விஜய்சிங் கருத்துக்கும் மரியாதைக் கொடுக்காமல், அகில இந்திய காங் கிரஸ் தலைமையும், அவர்களால் நடத்தப் படும் மத்திய அரசும் என்ன செய்யப் போகிறார்கள்? காலப்போக்கில் தங்க ளுக்குள்ள அடித்தளங்களை இழக்கப் போகிறார்களா? எதை இழந் தாலும் இந்தியாவின் கனிம வளங்களை, அன்னிய பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விடுவதில் குறியாக இருக்கிறார்களா? இத்தகைய தொடர் போக்கின் மூலம், மத்திய காங்கிரஸ் தலைமை பா.ஜ.க.வின் வலையில் வீழ்ந்து விட்டதா? இவ்வாறு தான் அரசியல் அணி சேர்க்கையை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.