Tuesday, April 13, 2010

கல்விக்கூடத்தில் எதிரொலிக்கும் மாவோயிசம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏப்ரல் 6ம் நாள் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் 76 வீரர்கள் மட்டுமே இறந்து போனதாக, மத்திய சிறப்பு காவல்படை சார்பாக அரசு அறிவித்தது. அதன் பிறகு அது பற்றிய பல்வேறு விவாதங்கள் நாடெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கில காட்சி ஊடகங்களில் அதிகமான அளவு, அரசு தரப்பு தாக்குதல்கள் உள்நோக்கம் கொண்டவை என்பதாக சொல்லப்பட்டு வருகின்றன. அதாவது பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில், மலைகளிலும், காடுகளிலும் கிடைக்கின்ற கனிம வளங்களை கொள்ளையடித்துச் செல் வதற்கு வருகின்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு அரசு தாரை வார்க்கிறது என்பது அத்தகைய உள்நோக்கத்தின் அடிப்படைக் கருத்தாக இருக்கிறது. அப்படிச் சூழலில் பாரம்பரியமாக தாங்கள் காத்து வரும் கனிமவளங்களை, அந்நிய னுக்கு கொள்ளை போக அனுமதிக்க தயாராக இல்லாத தன்மைதான் மோதலை ஏற்படுத்தியுள்ளது என அவை சித்தரிக்கின்றன. கட்டாயமான இடம் பெயர்தலை விரும்பாத பழங்குடி மக்களும், அவர்களுடைய நலனுக்காக ஆயுதம் தூக்கி உள்ள மாவோயிஸ்ட்டுகளும் இந்தப் போரில் அங்கம் வகிப்பதாக அவை கூறுகின்றன. பரபரப்புக்காகவும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், கருத்துச் சொல்வதன் மூலம் அத்தகைய ஊடகங்கள் வணிகம் செய்கிறார்கள் என்று கூட நாம் எண்ணிப்பார்க்கலாம். ஆனால் நாட்டுப்பற்று கொண்ட, அறிவாளி பிரிவினரான அதிலும் முன்னோடிப் பாத்திரத்தை வகிக்கின்ற, மாணவச் சமூகம் இதுபற்றி விவாதித்தால், கவனமாக கவனிக்கவேண்டியுள்ளது. ஏனென்றால் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நாட்டுப் பற்றை இழந்து, தனி மனித லாபத்திற்காக ஊழலில் ஈடுபடலாம். ஆனால் இந்த நாடு எதிர்காலத்தை வளரும் இளைய சமுதாயத்திடம், குறிப்பாக மாணவச் சமுதாயத்திடம் ஒப்படைத்திருக்கிறது. அப்படிப்பட்ட மாணவ சமூகத்திற்குள், இந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்ட்டு தாக்குதல் விவாதிக்கப்படும் போது, அல்லது சச்சரவாக மாறும்போது, அதிக கவனத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது.இந்தியாவிலுள்ள கல்விச்சாலைகளில் அதிலும் உயர்கல்விச் சாலைகளில், அதிகளவில் முன்னேறிய பல்கலைக்கழகமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மதிக்கப்படுகிறது. இதுவும் மற்றவை போல சுயாட்சித் தன்மை கொண்டதாக, உயர்ந்த கல்வியாளர்களின் வழிகாட்டலில் நடத்தப்படும் பல்கலைக்கழகம். அதில் கடந்த வெள்ளிக்கிழமை, அய்சா என்ற அகில இந்திய மாணவர் கழகமும், டி.எஸ்.யூ. என்ற டெல்லி மாணவர் கழகமும் நடத்திய, மக்கள் மீதானப் போர் என்ற பெயரில் ஒரு மன்றத்தை தொடங்கினார்கள். அதில் சத்தீஸ்கர் விவகாரம் விவாதிக்கப்பட்டது. அதைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்திய தேசிய மாணவர் சங்கமும், பா.ஜ.க. தலைமையிலான அகில பாரதீய வித்யார்தி பரிஷத்தும் சேர்ந்து, கருத்தரங்கு நடத்தியவர்களை தாக்கி இருக்கிறார்கள். அதற்கு ஒரு காரணத் தையும் அவர்கள் சொல்கிறார்கள். அதாவது மாவோயிசத்தை ஆதரித்து, சத்தீஸ்கரில் அரசப்படை வீரர்கள் கொல்லப்பட்டதை வரவேற்று கருத்தரங்கு நடத்தியதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் கருத்தரங்கு நடத்திய மாணவரமைப்புகள் அதை மறுத்தன. மக்கள் மீது அரசப்படை போர் நடத்துவதாகவும், அதை எதிர்த்துத்தான் தாங்கள் கருத்தரங்கு நடத்துவதாகவும் அவர்கள் கூறினார்கள். மறுநாளே நக்சல் எதிர்ப்பு மன்றம் என்பதாக காங்கிரஸ், பா.ஜ.க. மாணவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி விட்டார்கள். அவர்களுடன் இட ஒதுக்கீட்டை மறுக்கும் மாணவர் அமைப்பான, சமத்துவத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பும் சேர்ந்து கொண்டது. நேற்று இந்த நக்சல் எதிர்ப்பு மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பல்கலைக்கழக வளாகத்திற்குள், நிர்வாக அனுமதியின்றி எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்பது அவர்களது கோரிக்கை. அதில் மத்திய ஆட்சியாளர்களின் விருப்பங்கள் பிரதிபலித்தன. கடந்த 40 ஆண்டுகளாக ஜே.என்.யூ. மாணவர் பேரவை, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிகரமாக மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அது அங்கீகரிக்கப்பட்ட ஜே.என்.யூ. மாணவர் பேரவை சட்ட திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடைசியாக நடந்த மாணவர் தேர்தல் 2007ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு லிங்டாக்குழு பரிந்துரைகளின் படி, உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் மாணவர் பேரவைத் தேர்தல் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் கல்விச்சாலைகளின் வரலாற்றிலேயே, பணமோ, ஆள்பலமோ இல்லாமல் ஜனநாயக ரீதியாக நடந்து வந்த தேர்தல்,ஜே.என்.யூ. மாணவர் பேரவை தேர்தல் மட்டுமே. அதற்கும் வேட்டு வைத்து விட்டது புதிய குழுவின் பரிந்துரை.இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புரட்சிகரமான மார்க்சிய லெனினிய கட்சியின் வழிகாட்டலில் செயல்பட்டு வரும் அய்சா என்ற மாணவர் அமைப்பு, ஜே.என்.யூ. மாணவர் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது. 1990ம் ஆண்டில் ஆகஸ்ட் 9ம் நாள் அலகாபாத்தில் தோன்றிய இந்த மாணவர் அமைப்பு, ஜே.என்.யூ. என்ற முன்னேறிய அறிவாளித் தளத்தில் தொடர்ந்து மாணவர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. 1994 மற்றும் 1995 ஆண்டுகளில் இந்த அய்சாவின் பிரபல முன்னோடியான சந்திரசேகர், ஜே.என்.யூ. மாணவர் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை பண்ணை ஆதிக்கவாதிகள் உதவியுடன் லாலு கட்சி எம்.பி. 1997ம் ஆண்டு பீகாரில் சிவான் பகுதியில் சுட்டுக் கொன்றார். அது டெல்லியிலுள்ள ஜே.என்.யூ.வில் எதிரொலித்தது. 16 மாநிலங்களில் வேலை செய்தாலும் அய்சா அமைப்பு, ஜே.என்.யூ. வில் தான் பிரபலமாக இருக்கிறது. 2006ம் ஆண்டு அய்சாவைச் சேர்ந்த, ஒரு அமெரிக்க குடிமகனான டெய்லர் வாக்கர் வில்லியம்ஸ், ஜே.என்.யூ. மாணவர் பேரவையில் துணைத் தலைவராக வெற்றி பெற்றார். 2007ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் நந்திகிராம் வன்முறையின் எதிரொலியாக, சி.பி.எம்மின் மாணவர மைப்பான எஸ்.எஃப்.ஐ. தோற்கடிக்கப் பட்டு, ஜே.என்.யூ. மாணவர் பேரவையில் 4 முக்கிய இடங்களையும் அய்சா கைப்பற்றி யது. இத்தகைய தொடர் வெற்றிகளை புரட்சிகரமானவர்கள் சங்கம் எப்படி பெறலாம் என்ற ஆதங்கத்தில்தான், அரசாங்கத்தின் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தடைகள் இரண்டு ஆண்டுகளாக, ஜே.என்.யூ.வின் மாணவர் பேரவையை செயல்பட விடாமல் செய்துள்ளது. ஜனநாயக முறையில் நம்பிக்கை உள்ளவர்களாக அறிவித்துக் கொள்ளும் ஆளும் வர்க்க கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் இணைந்து, பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயக இயங்குதலுக்கு தடையாக இருப்பது எதனால்? சென்ற வாரம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் சுனில் மாண்டிவால் என்பவர், மாவோயிஸ்ட் தலைவர் கோபாத் காண்டியு டன் தொடர்பு கொண்டிருந்தார் என்று காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். இவர் மாவோயிஸ்ட் இலக்கியங்களை படித்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. ஜே.என்.யூ. ஆசிரியர் சமூகமும், 40 ஆண்டுகளாக நடந்து வந்த மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து கிறது. 1960ன் கடைசியில் உருவான நக்சல்பாரி விவசாய ஆயுதப் போராட்டம், இந்திய நாடெங்கும் இருக்கும் உயர்கல்விச் சாலைகளில், மாவோ சிந்தனையை நோக்கி பல மாணவர்களை அணி திரட்டியது. அடக்கு முறை எங்கெல்லாம் இருக்குமோ, அங்கெல் லாம் எதிர்ப்பு இருக்கும் என்ற மாசே துங்கின் மேற்கோள் இங்கே உண்மையாகிக் கொண்டிருக்கிறது. கல்வியறிவு கிடைக்கப் பெறாத, வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே வாடும் பழங்குடி மக்களை விரட்டுவதற்காக, அவர்கள் மீது அரசப் படைகளை ஒரு புறம் ஏவிக் கொண்டே, அதன் எதிரொலியாக ஜனநாயக குரல் எழுப்பும் மாணவ சமூகத்தை எதிர்ப்பதற்கும் இந்தியாவை ஆளும் கட்சிகள் தயாராகி வருவது ஆரோக்கியமாகத் தெரியவில்லை.