Saturday, April 10, 2010

ராஜினாமா செய்வது பொறுப்பேற்கும் அணுகுமுறையா?

மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பொறுப்பேற்று, ராஜினாமா செய்கிறேன் என்று தலைமை அமைச்சரிடம் கூறினாராம். தலைமை அமைச்சர் அதை நிராகரித்தாராம். சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று பா.ஜ.க. கூறியுள் ளது. இது வெளிவந்திருக்கும் செய்தி. இதே போல வெளிவந்திருக்கின்ற பல்வேறு செய்திகள் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. 77 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சத்திஸ்கர் மாநிலத்தின் டி.ஜி.பி.யான விஷ்வரஞ்சன், தங்கள் மாநிலக் காவல்துறைக்கும், துணை ராணுவத்திற்கும் எந்தவொரு தவறான புரிதலும் இல்லை என்று கூறுகிறார். அதே சமயம் பாதுகாப்பு படைகளால் அந்த இடம் பற்றி தவறாக புரியப்பட்டு விட்டது என்பதாக அவர் கூறுகிறார். தாக்குதல் நேரத்தில் துணை ராணுவப் படையினர் தூங்கிக் கொண்டிருந்தனர் என்ற செய்தி தவறானது என்றும் அவர் கூறுகிறார். ராணுவத்தினருடைய பிணங்கள் சிதறிக் கிடக்கும் தன்மையிலிருந்தே அது தெரிகிறது என்கிறார் அவர். தாக்குதலில் தப்பி உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு 5 விழுக்காடு தான் என்றும் தெரிவிக்கிறார். வெளிப்படை யான மைதானத்தில், ராணுவத்தினர் மறைவதற்கான இடமில்லை என்பதையும் டி.ஜி.பி.யே கூறுகிறார். உளவுத்துறை மூலம் அண்டை மாநிலங்களிலிருந்து அதிகமான அளவில் கொரில்லா போராளிகள் உள்ளே வந்துள்ளதாக செய்தி வந்தது என்கிறார் அவர். 500 மாவோயிஸ்ட்டுகள் ஏப்ரல் 4ந் தேதி முதல் மார்ச் 8ந் தேதி வரை மாநிலத்திற்குள் வந்திருப்பதாக 4 முறை தங்களுக்கு செய்தி வந்தது என்கிறார் அந்த டி.ஜி.பி. அப்படியானால் கவனக்குறைவாக இருந்த துணை ராணுவப்படையின் வழிகாட்டும் தலைமையான உள்துறைதான் தவறு செய்ததா? அதனால் உள்துறை அமைச்சர் ராஜினாமா நியாயம்தானா? தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் மோகனரங்கன், வேலூர் மாவட்டம் தொக்கியத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் அனந்தமங்கலத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய மூவரும் கொல்லப்பட்ட துணை ராணுவப் படையின் வீரர்கள். இதைக்கண்டு தமிழகமே அஞ்சலி செலுத்துகிறது.
இந்திய நாட்டின் ராணுவத்திற்கு, தாய்நாட்டைப் பாதுகாக்க வாருங்கள் என்பதாக நாட்டுப்பற்றை முன்நிறுத்தி ஆள் எடுக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைப் பயன்படுத்தி, கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்ற விளம்பரங் களைச் செய்து ஆள் எடுக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிகிறது. அதற்காகத்தான் ஆட்சியாளர்கள் இந்த நாட்டிலே வேலை யில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்பது புரியவில்லை. வேலையில்லாப் பட்டாளம் ஒன்று இருந்தால்தான், காவல் துறைக்கும், ராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் மைதானங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு, மோதிக்கொள்வார்கள் என்பதை எதிர்பார்க்கிறார்களா? நடந்த துயரச் சம்பவத்தை ஆய்வு செய்ய, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முன்னாள் தலைவரை நியமித்திருக்கிறார்கள்.
மத்திய சிறப்பு பாதுகாப்புப் படை முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன என்று தண்டேவாடாவில் உள்ள ஒரு சோதனைச் சாவடியை படம் எடுத்து ஒரு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராடுவதற்காக போர்முனைக்கு அனுப்பப் படும் மத்திய சிறப்பு காவல்படையினர் காய்ந்த வயிறுகளுடன், போதுமான குடிதண்ணீர் இல்லாமல், மருத்துவ வசதியில்லாமல் அனுப்பப்படுகிறார்கள் என்பதாக அம்பலப்படுத்தியுள்ளது. இத்த னை அவலச் சூழலுக்கும் பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் ராஜினாமா செய்கிறேன் என்கிறாரா? போதுமான உணவின்றி தாங்கள் ரோந்து சுற்ற அனுப்பப்படுவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்திய ராணுவத்திற்கு உலர்பழங்களை போர் முனைக்குச் செல்லும்போது கொடுக்கிறார்கள் என்றும், தங்களை வெறும் வயிற்றுடனும், உலர்ந்த தொண்டையுடனும் அனுப்பி விடுகிறார்கள் என்றும் அந்த மத்திய துணை ராணுவப் படையினர் முறையிடுகிறார்கள். காடுகள் அடர்ந்த அந்தப் பகுதியில் மலேரியா தாக்குதல் அதிகமாக இருக்கிறது என்றும், அதனால் பலர் நோய்வாய்ப்படுகிறோம் என்றும், சிலர் தொடர்ந்து நோய் விடுப்பு போட வேண்டியிருக்கிறது என்றும், அதற்கேற்ற மருத்துவ உதவி இல்லை என்றும் அவர்கள் முறையிடுகிறார்கள். இதற்கெல்லாம் பொறுப்பு எடுத்துதான் ப.சிதம்பரம் ராஜினாமா செய்தாரா? சில நேரங்களில் தாங்கள் அழுக்கு நீரை குடிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது என்று அந்த துணை ராணுவப் படையினர் கூறியிருக்கிறார்கள். அந்த வட்டாரத்தில் முறையான மருந்து கடைகளில் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். காடுகளும், மலைகளும் சூழ்ந்து இருக்கும் அந்த வட்டாரத்தில், இப்படித்தான் எந்த ஒரு வசதியும் இல்லாமல் ஆதிவாசிமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையை இதன் மூலமாவது இவர்கள் புரிந்து கொள்கிறார்களா? பாம்புகளும், நச்சுப் பூச்சிகளும் நிறைந்திருப்பதாக அரசப் படையினர் அஞ்சுகிறார்கள். அவற்றின் மத்தியில் தான் அங்கே போராடும் மக்களும், அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் போராளிகளும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இந்த நாடு புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இரவு நேரங்களில் எது கடிக்கும் என்றே தெரியாது என்பதாக துணை ராணுவத்தினர் புலம்புகிறார்கள். ரோந்து செல்லும்போது மட்டுமல்ல, முகாம்களிலும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் அந்த அரசப்படை வீரர்களின் குமுறலாக இருக்கிறது. பாம்புக்கடிக்கும், பூச்சிக்கடிக்கும் கூட மருந்து இல்லாமல் சாகத்தான் வேண்டும் என்பது அவர்களது பரிதவிப்பு. சிறப்பாக செயல்பட்டால் கூட, தட்டிக் கொடுக்க யாரும் இல்லை என அரசப்படைகள் வருத்தப்படுகிறார்கள். கட்டுப்பாடு என்ற பெயரில் தொடர்ந்து தங்கள் மீது சித்திரவதைச் செய்யப்படுகிறது என்பதும் கூட அவர்களது புலம்பல். போர் அறைகூவலை, அரசியல்வாதிகள் அறிவித்து விடலாம், ஆனால் களத்திற்குச் செல்லும் அரசப்படைக்குத்தான் அதன் இன்னல் புரியும் என்கிறார்கள் அவர்கள். பேசித் தீர்க்கவேண்டிய ஒரு காரியத்தை, தங்களை அனுப்பி மோதித் தீர்க்கப்பார்க்கிறார்களே என அந்த அரசப்படை வீரர்கள் அலறுகிறார்கள்.
உள்துறை அமைச்சர் மாவோயிஸ்ட்டு களை கோழைகள் என்று முத்திரைக்குத்திய பிறகுதான் இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதும் கூட அங்கே கணக்கிடப்படலாம். அரசப்படை வீரர்களின் மன உறுதி கெடுவது என்பது, எத்தகையப் போரிலும் வெற்றியை ஈட்டித்தராது. இத்தகைய அவலச்சூழ்நிலையை ஏற்படுத்தி யதற்காக ராஜினாமா செய்வது என்றால், அது ஒரு அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த அமைச்சரவையே செய்ய வேண்டிய ராஜினாமா அல்லவா?
தாக்குதலுக்குள்ளான மத்திய சிறப்பு காவல்படையின் 62வது பட்டாலியன் பற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, அது காடுகளுக்குள் போர் புரிவதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளாத வீரர்கள் கொண்டது என்று கூறினாராம். இதற்காக மட்டுமே பாதுகாப்பு அமைச்சரும், ராஜினாமா செய்ய வேண்டாமா? தாக்குதல் நடத்தப்பட்ட அதே இடத்தில், மாவோ யிஸ்ட்டுகளால் 3 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன என்று பட்டியலிடு கிறார்கள். முதலில் மார்ச் 1ம் நாள், பிறகு மார்ச் 10ம் நாள், இப்போது ஏப்ரல் 6ம் நாள் என்பதாக அதே பகுதியில், துணை ராணுவம் தாக்கப்பட்டுள்ளது. அந்த சிந்தல்நார் முகாம் வீரர்கள் காடுகளுக்குள் தேடுதல் நடத்திவிட்டு, வெளிப்படையான வெளிக்கு வரும்போது, தாக்கப்பட்டுள் ளார்கள். 1000 போராளிகள் வரை மாவோயிஸ்ட்டுகள், அந்த தாக்குதலுக்காக பயன்படுத்தி யிருக்கிறார்கள். வி வடிவில் கொரில்லாப் படைகளை வரிசையாக நிறுத்திக் கொண்டு, தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். சிறிய எந்திர துப்பாக்கிகளை அதிகமாக மாவோயிஸ்ட் டுகள் பயன்படுத்தியிருக் கிறார்கள். மரங்களில் அவற்றை வைத்துக் கொண்டு, கிளைகளில் போராளிகள் அமர்ந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி யிருக்கிறார்கள். ஒரு துப்பாக்கி வீரர் கொல்லப்பட்டால், அடுத்த வீரர் மரத்தில் ஏறி சுடத்தொடங்குகிறார்கள். இப்படியாக அந்த தாக்குதல் வர்ணிக்கப்படுகிறது. இத்தனை சூழலுக்கும் சேர்த்து, அமைச்சர் பொறுப்பு ஏற்கிறாரா?
அரியலூரில் ரயில் விபத்து. அழகேசா! நீ ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என்று தி.மு.க. அன்றைக்கு ரயில்வே துணை அமைச்சர் ஓ.வி.அழகேச னைப் பார்த்து கேள்வி கேட்டது. இப்போது சிதம்பரத்தைப் பார்த்து அப்படிக் கேள்வி கேட்க எந்தக் கட்சியும் இல்லை. அதனால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ராஜினாமா என்பது பொறுப் பேற்கும் தன்மை கொண்டதா? அல்லது நழுவி ஓடும் தன்மைத்ததா? இப்படி கேள்வி நமக்கும் எழுகிறது.