Friday, April 9, 2010

போர் என்றால் நிறுத்தம் உண்டல்லவா?

சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில் நடந்த அந்த தாக்குதலில், அரசப்படை பெரும் உயிரிழப்பை சந்தித்தது. தாக்குதல் பற்றியும், படைவீரர்களின் இறப்பைப் பற்றியும் நாடே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது, உள்துறை அமைச்சர், நாம் ஒரு போரில் இருக்கிறோம் என்று அறிவித்தார். அரசாங்கத்தின் மீது மாவோயிஸ்டுகளால் ஒரு போர் திணிக்கப் பட்டுள்ளது என்பது அவரது விளக்கம். அதே சமயம் இந்திய அரசின் விமானப்படையை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாய மில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அப்படி ஒரு தேவையையும் மீண்டும் பரிசீலிப்போம் என்பதாக கூறியிருந்தார். அரசாங்கம் விமானப் படையை இறக்க வேண்டும் என்ற முடிவை எடுக்குமானால், தாங்கள் அதற்கு தயாராக இருப்பதாக விமானப் படை தலைமை தளபதி பி.வி.நாயக் கூறினார். நாம் ஒரு போரில் இருக்கிறோம் என்பதாக உள்துறை அமைச்சர் கூறிய கூற்றை, சில ஊடகங்கள் தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டுள் ளன.
போர் என்பது இரண்டு அரசாங்கங்களுக்கு மத்தியில், அதிலும் இரண்டு படைகளுக்கு மத்தியில் நடக்கின்ற ஒரு அரசியல் மோதல். மாவேயிஸ்டுகளுடன் இந்திய அரசாங்கத் திற்கு இருக்கின்ற முரண்பாட்டை, யாரையும் விட இந்தியாவின் உள்துறை அமைச்சர்தான் ஒப்பீட்டளவில் சரியாக மதிப்பீடு செய்ய முடியும். அப்படி அவர் செய்த மதிப்பீட்டில் தான், போரில் இருக்கிறோம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் இரண்டு அரசாங்கங்கள், இரண்டு படைகள் ஆகியவை இங்கே அங்கீகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அரசாங்கமும், இன்னொன்றை அனுமதிக்கத் தயாராய் இல்லை என்பதை யும், ஒவ்வொரு படையும் அந்தப் பகுதியில் பிறிதொன்றை இயங்க விடத் தயாராய் இல்லை என்பதும் நடந்து வரும் மோதல்கள் மூலம் தெளிவு படுத்தப்படுகிறது. இது இரண்டு நாடுகளுக்கு மத்தியில் நடத்தப்படும் ஆயுத மோதல் அல்ல. அப்படியானால் ஐ.நா. போன்ற உலக பொது அமைப்புகள் தலையிட முடியும். இந்திய அரசாங்கத்திற் கும், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் நடந்து வரும் மோதல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் விசயத்தில், ஐ.நா. போன்ற பொது அமைப்பு கள் தலையிடலாம். ஆனால் மாவோயிஸ்டு களுக்கும், மத்திய அரசுக்கும் நடக்கும் மோதலில் வெளியார் நேரடியாக எப்படி தலையிட முடியும்? இது உள்நாட்டிற்குள் நடக்கின்ற ஒரு பிரச்சினை. இன்னமும் சொல்லப்போனால் இது ஒரு உள்நாட்டுப் புரட்சி சம்பந்தப்பட்ட விவகாரம். அதாவது தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளும், அவர்களை ஆதரிக்கும் மக்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். அதே போல இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட துணை ராணுவப் படையினரும், அதன் தலைமை யான மத்திய அரசும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். இப்படி இரண்டு உள்நாட்டு சக்திகள் மத்தியில், போர் நடக்குமானால் அது முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு, இந்த நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் சொந்தமானது.
போர் ஒன்று ஒரே நாட்டில் வாழும் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்பு களுக்குள், நடைபெறும் போது, அது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்பதைத்தான் சமாதானம் விரும்பும் இந்த நாட்டு மக்கள் விரும்புவார்கள். அதற்கு போர் நிறுத்தம் என்பது கட்டாயத் தேவையாக இருக்கிறது. போர் என்று வந்தாலே, நிறுத்தம் என்று ஒன்று வரத்தானே செய்ய வேண்டும்? மேற்கண்ட கருத்தை எதிரொலிக்கும் நிலையில், ஆங்கில ஏடு ஒன்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர், எழுத்து மூலம் ஒரு மாவோயிஸ்ட் தலைவரிடம் கேள்வி கேட்டு பதிலையும் பெற்றிருக்கிறார். அந்த மாவோயிஸ்ட் தலைவருக்கு பெயர் ஆசாத். ஆசாத் என்றால் விடுதலை என்று பொருள். அப்படிப்பட்ட பெயர் வைத்துக் கொண்டுள்ள அந்தத் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்)யின் மத்திய குழுவின் பேச்சாளர் என்பதாகத் தெரிகிறது. அவரது பதில்களில் அரசாங்கத்துடன் பரஸ்பர போர் நிறுத்தத்திற்கு மாவோயிஸ்டுகள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி யுள்ளது.
உள்துறை அமைச்சர் மாவோயிஸ்ட்டு களை, வன்முறையை விட்டுவிடும் படி கோரினாரே தவிர, அரசாங்கத்துடன் போர் நிறுத்ததிற்கு வாருங்கள் என அழைக்க வில்லை என்பது ஆசாத்தின் குற்றச்சாட்டு. அதற்கு அவர் காட்டுகின்ற உதாரணமும் வித்தியாசமாக இருக்கிறது. அதாவது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுடன், மத்திய அரசாங்கம் ஒரு போர் நிறுத்தத்தை செய்து அதன் பிறகு பேச்சு வார்த்தையை இப்போது நடத்தி வருவது போல, தங்களை அழைக்கவில்லை என்பது அவரது வாதம்.
வன்முறையை கைவிடுங்கள் என்று மாவோயிஸ்ட்டுகளைப் பார்த்து, சிதம்பரம் கூறுவது பொருத்தமற்றது என்கிறார் அவர். ஒரே நேரத்தில் இரண்டு பக்கத்திலிருந்தும் போர் நிறுத்தத்தை அறிவித்து, இருபுறமும் இருக்கின்ற பகை உணர்வை போக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசாத் கூறியிருக்கிறார். அடுத்த கட்டமாக பேச்சு வார்த்தைக்கு செல்வதாக, உகந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இரண்டு புறத்திலும் பரஸ்பர போர் நிறுத்தத்திற்கு விருப்பம் இருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம் என ஆசாத் கூறியுள்ளார். சட்டப்பூர்வமான சமாதான நடைமுறைகளில் ஈடுபடவேண்டும் என்று விரும்பும் பட்சத்தில், மாவோயிஸ்ட் கட்சியின் மீது அறிவிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கையை அவர் அதில் வைத்துள்ளார். தங்கள் மீதான தடையை நீக்காமல், தாங்கள் எப்படி சட்டப்பூர்வமான போராட்டங் களையும், கூட்டங்களையும் தங்கள் பெயரிலேயே நடத்த முடியும் என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.
அப்படிப்பட்ட வெளிப்படையான போராட்டங்களை தங்கள் பெயரில் செயல் பட்டால், தாங்கள் தடை செய்யப்பட்ட ஒரு கட்சியால் வழிகாட்டப்படும் சட்ட விரோதமான செயல்பாட்டுக்காரர்கள் என்று முத்திரைக்குத்தப்படமாட்டோமா? என ஒரு கேள்வியையும் கேட்கிறார். சிறையில் இருந்து சில தலைவர்களை விடுதலை செய்தால் தான் பேச்சு வார்த்தையும் நடத்தப்படமுடியும் என்றும் கூறுகிறார். இல்லாவிட்டால் முழு கட்சியும் சட்டவிரோதமானது என்பதால், யாருமே பேச்சு வார்த்தையில் ஈடுபடமுடியாது என விளக்குகிறார். தலைமறைவாக இருக்கும் தங்கள் தலைவர்களில், யாரையும் பேச்சு வார்த்தையின் பொருட்டு, வெளியே கொண்டு வரமுடியாது என்று ஆசாத் கூறியுள்ளார்.
பேச்சு வார்த்தைக்கு வருவது என்பது, தொடர்ந்து இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு சிறிது தளர்வான சூழலை ஏற்படுத்த உதவும் என்றும் ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஆசாத் குறிப்பிட்டுள்ள நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற புரட்சிகரமான அரசாங்கத்தையும், புரட்சிகர ராணுவத்தையும் கையில் வைத்திருக்கும் அமைப்பின் தலைவர்கள் மத்திய அரசுடன் பேசி வருகிறார்கள். கடந்த மார்ச் 21ம் நாள் அவர்கள் தங்களுடைய நாகாலாந்து குடியரசு தினத்தின் 30வது ஆண்டுவிழாவை அந்த புரட்சிகர இயக்கத் தலைவர்கள் நடத்தினார்கள். அதே பெயரில் உள்ள இரண்டு அமைப்புகள் நாகாலாந்தில் செயல்படுகின்றன. இரண்டுமே டெல்லியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. நாகாலாந்தின் பிரதமர் என தங்கள் அமைப்பின் தலைவரை, இரண்டு அமைப்புகளும் அறிவித்துள்ளன. 30வது ஆண்டு விழாவில் இரண்டு பிரதமர்களும் உரையாற்றி உள்ளனர். இப்படியாக நாம் அறியப்படும் இந்தியாவிற்குள்ளேயே, நாகாலாந்து ஆயுதம் தாங்கியப் புரட்சியாளர்களுடன், போர் நிறுத்தம் செய்து பேச்சு வார்த்தை நடத்த, மத்திய அரசால் முடிகிறது என்பது நமக்கு விளங்குகிறது. அப்படியானால் ஏன் அதே போர் நிறுத்தத்தை, மாவோயிஸ்டுகளுடனும் அறிவித்து, அதே போல பேச்சு வார்த்தையை மத்திய அரசு நடத்தக் கூடாது என்ற கேள்வி நமக்கு எழுகிறது.