Wednesday, April 7, 2010

சரணடைந்த புலிகளை சுட்டவர்கள், உலகம் முன் மண்டியிடுவார்களா?

இலங்கைத் தீவு தேர்தலை எதிர்கொண் டிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவாதப் போரை நடத்திய ராஜபக்சே அரசாங்கம் செய்த மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் பட்டியலிடப் படுகின்றன. ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி, தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும், இந்திய வம்சாவழி தமிழர்களான மலையக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் தமிழின உணர்வு மேலொங்கும் நிலையை, வன்னிப் போர் ஏற்படுத்தி விட்டது. அதுமட்டுமின்றி இந்த மூன்று பிரிவு தமிழர்களின் ரத்த உறவுகள், உலகெங்கும் பரவிக்கிடக்கி றார்கள். அவர்கள் நடந்து முடிந்த வன்னிப் போர் பற்றி, கடுமையான கண்டனத்தை ராஜபக்சே அரசாங் கத்தின் மீது கொண்டிருக்கி றார்கள். பயங்கரவாதத்தை எதிர்த்த போரை நடத்துகிறோம் என்று சொல்லி சிங்கள பெரும்பான்மை மக்களை, போருக்கு எதிராக குரல் எழுப்பவிடாமல், ராஜபக்சே அர சாங்கம் தந்திரமாக இதுவரை தடுக்க முடிந்தது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான இனவாதப் போரை நடத்திய ராஜபக்சே அரசாங்கம், நாட்டை இன ரீதியாக நிரந்தரமான பிளவுக்கு இட்டுச் செல்கிறது என்று நாட்டுப்பற்று உள்ள சிங்கள மக்கள் அப்போதே எண்ணினார்கள். அவர்களது எண்ணிக்கை பெரும்பான்மை சிங்களர்களை தாக்கம் செலுத்தவில்லை.
ஆனாலும் வன்னிப்போரில் சிங்கள ராணுவம் கொடூரமான கொலைகளை செய்தது என்ற செய்தி மெல்ல, மெல்ல வெளியானது. நிராயுதபாணியான அப்பாவி மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்ற செய்திகளும் ஒவ்வொன்றாக வெளிவந்தன. இது பயங்கரவாத எதிர்ப்பு போர் என்ற பெயரில் சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே பெற்றிருந்த செல்வாக்கை சிறிது, சிறிதாக குறைத்தது. படக்காட்சிகளும், காணொளி களும், ராணுவத்தின் அட்டூழியங்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தின. இதுவே உலக சமூகத்தின் உணர்வுகளை தட்டி எழுப்பியது போலவே, சிங்கள ஜனநாயக சக்திகள் மத்தியிலும், ராஜபக்சே ராணுவத்தின் மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தியது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய பொன்சேகா, அரசாங்கத்திற்கு எதிராக அப்ரூவரானார். அதுவும் அரசாங்கத்தை தலைமை தாங்கிய ராஜபக்சேயிக்கு எதிராகவே, அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்படிப்பட்ட பொன்சேகா கொடுத்த ஒரு செய்தி, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை கிளப்பியது.
வன்னிப்போரின் உச்சக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான போராளிகளாக இருந்த ஆண்களையும், பெண்களையும் ராஜபக்சே குடும்பத்தினர் கொடுத்த கட்டளையின் கீழ், வட்டார ராணுவத் தளபதிகள் சுட்டுக் கொன்றார்கள் என்ற செய்தியை, அன்றைக்கு ராணுவத்திற்கு தலைமையேற்றிருந்த சரத்பொன்சேகா கூறினார். அதையே மகிந்தா அரசாங்கம் மாபெரும் துரோகம் என்பதாக பொன்சேகாவுக்கு எதிராக குற்றம் சாட்டியது. போரின் இறுதிக்கட்டத்தில் முக்கியமான புலிப்படை தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் என்ற முக்கிய தளபதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சரணடையப் போகிறார்கள் என்ற செய்தியை தனக்கு அரசாங்கம் கொடுக்கவில்லை என்று பொன்சேகா கூறினார்.
அதே சமயம் சரணடைவு பற்றி விடுதலைப் புலி தலைவர்களுக்கும், நார்வே நாட்டு அரசாங்கத்திற்கும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுக்கும், மகிந்தாவின் தம்பியும், நியமன நாடாளுமன்ற உறுப்பினரும், அதிபரின் ஆலேசகருமான பசில் ராஜபக்சேவிற்கும் இடையில் மட்டும்தான் பரிமாற்றம் இருந்தது என்பதை அப்போது அவர் தெரிவித்தார். சரணடைந்த புலிப்படை தலைவர்களை, உலக போர் விதிகளுக்கு எதிராக, போர் குற்றம் புரிந்த நிலையில், சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது என்ற அந்தக் கொடிய வன்செயலை பின் னால் தான் தெரிந்து கொண்டேன் என்பதாக பொன் சேகா கூறினார்.
பொன்சேகாவின் கூற்றுப்படி மேற்படி சரணடைதல் என்ற செய்தியை பசில் ராஜபக்சே, மகிந்தாவின் இன்னொரு தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சேவிற்கு தெரிவித்திருக் கிறார். கோத்தபாய ராஜபக்சே அந்த செய்தியை, ராணுவத்தின் 58வது பிரிவின் தளபதியாக இருக்கும் பிரிகேடியர் சாவேந்திர சில்வா என்ற கொடியவனுக்கு கூறியிருக் கிறார். கூறியது மட்டுமல்லாமல் சரணடையக் கூடிய முயற்சிகளில் எந்தவொரு விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் அனுமதிக்க கூடாது என்றும், அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்றும், கோத்தபாய ராஜபக்சே, பிரிகேடியர் சாவேந்திர சில்வாவிடம் கட்டளை யிட்டுள்ளார். மேற்கண்ட செய்தியை தாமதமாகப் பெற்ற நிலையில், அதிபர் தேர்தலில் மகிந்தாவிற்கு எதிராக போட்டி யிடும் போது, சரத்பொன்சேகா ஊடகங் களுக்கு வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட நிகழ்வு உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் நடந்ததில்லை. ஏனென்றால் உலகப் போருக்குப் பிறகு, ஜெனீவா ஒப்பந்தம் என்ற போர் விதிகள் பற்றிய ஒரு ஒப்பந்தம் நாடுகளுக்குள் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் ஆயுதம் தாங்கிய இரண்டு படைகள் போரில் ஈடுபடும் போது, யாராவது ஆயுதங்களை கீழேப் போட்டு விட்டு, சரணடைவு என்பதாக வருவார் களானால் அவர்களை எந்தத் துன்புறுத்தலும் செய்யாமல், அனுமதிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. போரில் சரணடைந்த வீரர்களை, போர்க் கைதிகள் என்பதாக எந்த ஒரு அரசாங்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். போர்க் கைதிகளை சுயமரியாதை யுடன், அனைத்துவித உதவிகளும் செய்து நடத்த வேண்டும். மேற்கண்ட விதிகள் ஜெனீவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரிந்த ஒரு செய்தி.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதாக ராஜபக்சே அரசாங்கம் அறிவித்து இருந்தது. அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மீதும், வாஷிங்டனில் பென்டகன் என்ற அமெரிக்க ராணுவ தலைமையகம் மீதும், கடுமையான விமானத் தாக்குதலை அல்கொய்தாவினர் நடத்திய பிற்பாடு, உலகம் எங்கிலும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பரப்புரையை, திட்ட மிடுதலை, ஒருங்கிணைப்பை அமெரிக்க அரசாங்கம் செய்தது. அப்படிப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு போரை தானும் நடத்துவதாக மகிந்தா அரசாங்கம் அறிவித்த போது, மேற்கத்திய நாடுகள் அதை நம்பி இனவாத போரின் சாராம்சத்தை உணராமல் இருந்தனர். அதே சமயம் ராஜபக்சே அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த அண்டை நாட்டு அரசாங்கங்கள், அதையே காரண மாக்கி ராஜபக்சேயின் இனவாத போருக்கு உதவிகள் செய்தனர். அதனாலேயே அந்த இனவாத போர், தமிழின அழிப்பு போராக மாறியது.
வன்னிப்போர் முடிவுக்கு பிறகு, பொன்சேகா சாட்சியம் கொடுத்தப் பிற்பாடு உலக சமூகத்திற்கு மேலே குறிப்பிட்ட போர்க்குற்றம் அம்பலத்திற்கு வந்தது. குறிப்பாக சரணடைந்த புலிப்படை போராளி களை சுட்டுக் கொன்ற கோழைத்தனமான, ராஜபக்சே குடும்பத்தின் அத்துமீறல் வெளியே தெரிந்தது. அதுதான் உலக அரங்கில், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மத்தியில் இன்றைக்கு பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியா நாடுகளின் அரசாங்கங்களை, ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக கணக்குப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை ஏற்க வைத்துள்ளது.
மே 17ந் தேதி நள்ளிரவில் நடந்த அந்த சரணடைவில், விடுதலைப் புலிகளின் அரசியல் அணி தலைவரான பாலசிங்கம் நடேசன், விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் தலைமையான சீவரத்தினம் புலித்தேவன் மற்றும் விடுதலைப்புலியின் மூத்த தளபதியான ரமேஷ் ஆகியோர் முக்கியமாக தலைமை வகித்தனர். அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்ட அரசத்தலைவரின் சகோதரர் களின் கொடூரச்செயல் இப்போது பயங்கர வாதி யார் என்பதை உலக அரங்கில் தோலுரித்துக் காட்டியுள்ளது.
பயங்கரவாதிகள் என்று முத்திரையால் விடுதலைப்புலிகள் இயக்கத்தை, பல நாட்டு அரசாங்கங்கள் தனிமைப்படுத்த முடிந்தது. அதே சமயம் பகிரங்கமாக, உலக நாடுகளுக்கும், ஐ.நா.சபைத் தலைவர் களுக்கும் அறிவித்துவிட்டு அவர்கள் மூலம் சரணடைந்த புலிப்படைத்தலைவர்களை படுகொலை செய்ததன் மூலம், உண்மையான பயங்கரவாதி என்பதாக ராஜபக்சே அரசாங்கம் இந்த உலகத்தின் முன்னால், குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. ஆகவே புலிப்படைத்தலைவர்களின் குறிப்பிட்ட சரணடைவு என்பது ஒரு அரசியல் போராட்டத்தின் வீச்சை, தொடங்க வைப்பதற்கு காரணமாக ஆகியுள்ளது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் மரணத்திற்கு தயாராக இறங்குவது போலவே, சரணடைவு என்ற அரசியல் நிகழ்ச்சியின் மூலம், உலக அரங்கில் எதிரியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடிந்திருக்கிறது என்பதுதான் விடுதலைப்புலிகளின் வெற்றியாக அமைந்திருக்கிறது. இதைக் கணக்கில் கொண்டு, ராஜபக்சே கூட்டத்திற்கு எதிராக தங்களது வாக்குகளை, இலங்கை மக்கள் பதிவு செய்வார்களா என்று உலகம் கேட்கிறது.