Sunday, April 4, 2010

குடிசைவாசிகளும், சாலையோர வாசிகளும் நமது மக்களே!

இரண்டு நாட்களாக இந்தியத் துணைக் கண்டம் எங்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப் பட்டுள்ளது. இந்தியாவின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் குடியரசு தலைவர், மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் குடியாக பதிவு செய்யப்பட்டார். அதேபோல இரண்டாவது குடிமகனாக, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் பதிவு செய்யப்பட்டுள்ளார். அவர்களது பதிவுகளைக் கூட ஒரு விழாவாக ஆக்கி, இந்திய அரசு அகமகிழ்ந்து கொள்கிறது. மன்மோகன் சிங் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதை, சாதாரணமாக எண்ணிக்கை ரீதியான புள்ளி விவரமாகக் காணாமல், அதுவே நாட்டின் வளர்ச்சித் திட்டங் களுக்கு அடிக்கோலாக அமை யக்கூடியது என்று கூறியுள்ளார். இது வரை இந்தியாவில் அரசாங் கத்தால் அறிவிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாமே, அவை நிறு வப்படும் பகுதிகளின் மக்களிடம் கலந்தாலோசிக்காமல், அந்த மக் களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொள்ளாமல், வளர்ச்சித் திட்டத்தின் கட்டாயத்தைக் கருதி பாரம்பரியமாக அந்த வட்டாரத்தில் வாழ்கின்ற மக்கள் தொகையினரை, இடம்பெயர்த்தலுக்கு உள்ளாக்கும் நிலமையைத் தான் உருவாக்கியிருக்கிறது. மேற்கண்ட நிர்ப்பந்தமான இடம்பெயர்தலுக்கு, பல்வேறு உதாரணங்களை நாடெங் கும் காட்ட முடியும். அதில் 2,00,000 ஆதிவாசி மக்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்யும், சர்தார் சரோவர் அணைக்கட்டு என்ற மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள, நர்மதா நதிக்கு குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டு என்ற வளர்ச்சித் திட்டம், பத்தாண்டுகளுக்கு மேலாக மக்களால் எதிர்க்கப்படுகிறது. மேதா பட்கர் தலைமையிலான அந்த நர்மதா இயக்கம், மாற்று இடத்தை, மறு வாழ்வு திட்டத்தை அளிக்காமல் இருக்கும் இந்திய அரசை கேள்விக் கேட்கிறது. இதுபோன்ற கட்டாய இடம்பெயர்தல்கள், இந்தியா எங்கும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வந்திறங்கியுள்ளன. அவற்றினால் மரபு ரீதியாக தாங்கள் வாழ்ந்து வரும் வயல் வெளிகளையும், மலைகளையும், வனங்களையும், கடற்கரைகளையும் விட்டு மக்கள் வெளியேற்ற கட்டாயப் படுத்தப்படுவார்களானல், அவர்கள் தங்களது மறுவாழ்வுக்கு என்ன செய் வார்கள் என்ற கேள்வி நாடெங்கும் எழுந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சனைகள் தான் முக்கியமாக நமது மக்கள் மத்தியில் அலை பாய்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களுடன் இணைத்து சுட்டிக்காட்டியுள்ள தலைமை அமைச்சரின் பார்வை, மக்களுக்கு சாதகமாக இனியாவது அரசாங்கம் வளர்ச்சித் திட்டங்களை மாற்றியமைப்பார்களா என்ற நப்பாசையை நமக்குக் கிளப்பி யுள்ளது.
அதேசமயம் தொடங்கியுள்ள இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி, கருத்துக் கூறியுள்ள நமது தமிழக முதல்வர், சாலையோரம் வசிப்பவர்களும், அரவாணிகள் என்ற திருநங்கைகளும் அதில் சேர்க்கப்பட வேண்டும் என்பதாக அறிவித்துள்ளார். இது மேலும் ஒரு ஆறுதலான அணுகுமுறையாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. சாலையோரம் வசிப்பவர்கள் என்ற பெயர், உள்ளபடியே நகரங்களில் வீடுகள் அற்றவர்கள் என்பதாக பொருள்படும். அதேபோல திருநங்கைகளும் கூட, இந்த சமுதாய அமைப்பில் அடிப்படை அலகுகளாக இருக்கின்ற குடும்பங்களில் இணைத்துக் கொள்ளப்படாமல், வெளியே அனுப்பப்பட்ட அரவானிகள் என்ப தாகவும் நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட இரண்டு பிரிவினரையும், அவர்களும் மனிதர்கள் தான் என்ற அடிப்படை உணர்வோடு, அவர்களும் இந்த நாட்டு குடிமக்கள் தான் என்ற குடியுரிமை சிந்தனையோடு, அவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்ற முதல்வரது கோரிக்கை, நல்லதொரு அணுகுமுறை.
தலைமை அமைச்சரின் உரைகள், மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை உரைக் கல்லாக வைத்து பார்க்கப்பட வேண்டும் என்று நாம் கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் மாநாடுகளிலும், விழாக்களிலும் அரசியல் தலைவர்களும், தலைமை அமைச்சர் கூட, பல்வேறு முன்னேறிய கருத்துக்களை கூறக்கூடும். அதேசமயம் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் இருந்து வெளியே வருகின்ற வளர்ச்சித் திட்டங்கள், மக்களை கணக்கிலெடுக்காமல், அவர்களது மறுவாழ்வுக்கு திட்ட மிடாமல், முடிந்த அளவில் அவர்களது வாழ்க்கைத் தேவையை வளப்படுத்தும் எண்ணத்தைக் கொள்ளாமல் உரு வாக்கப்படுகின்றன என்பதே கிடைத் திருக்கும் அனுபவம்.
அதேபோல சாலையோரவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற சரியான கருத்தை முன்வைக்கும்போது, அத்தகைய சாலையோர வாசிகள் உருவாகி வரும் புறச்சூழலை நாம் எப்படி சந்திக்கப்போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. குடியிருப்பதற்கு குடிசை கூட இல்லாத நிலையிலுள்ளவர்கள் தான், சாலையோர வாசிகள். அத்தகைய சாலையோர வாசிகள், கடந்த 30 ஆண்டுகளுக்குள் நகரை நோக்கி நகர்ந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். வீடற்ற இந்த கூலி மக்கள், அன்றாடம் வேலைக்குச் செல்கிறார்கள்.
சென்னை நகரின் அடிப்படையான பணிகளைச் செய்வதில் இவர்களும் பங்களிப்புச் செலுத்துகிறார்கள். அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்
சென்னை நகர சாலையோரவாசிகளாக வாழ வந்த குடும்பங்களில், பிறந்து வளர்ந்த இளைஞர்கள் கல்லூரி படிப்பு வரை படித்து, வேலைக்குச் செல்வதையும் காண முடிகிறது. இன்றுவரை இப்படிப்பட்டவர்களுக்கு வீடு கொடுக்க முடியாத ஒரு நிலை, ஆரோக்கியமான சூழ்நிலை அல்ல. வீடற்றவர்கள் என்பதால் இவர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் என ஆகிவிடக் கூடாது என்பது சரியான சிந்தனை. அதேநேரம் வீடற்றவர்களாக இப்படியொரு பிரிவினரை வைத்திருப்பது எப்படி ஆரோக்கியமான சூழலாக இருக்கும்?
வீடு இருந்தும் தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்ட மக்கள் பலரும், நகரங்களில் வாழ்ந்து வருகி றார்கள். அவர்கள் குடிசைவாசிகள் என்பதாக அழைக்கப்படுகிறார்கள். குடிசைகள் இல்லாத நகரங்களை உருவாக்குவோம் என்பது, இன் றைய நாகரீகமான ஒரு முழக்கம். நகர்மயமாதலில் தோற்றுவிட்ட பகுதிதான் குடிசைகள் என்பதாக ஒரு கருத்து இருக்கிறது. திட்டமிடப்படாத நகரம் என்பதாக குடிசை பகுதிகள் அழைக்கப்படுகின்றன. அவை திட்ட மிடப்படாத பகுதிகள் மட்டுமல்ல. அவை கண்ணுக்குத் தெரியாத பகுதிகளாக நகரங்களில் இருக்க வேண்டும் என்று ஆள்வோர் விரும்புகிறார்கள்.
டெல்லியில் நடைபெறப் போகின்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக, அந்த நகரம் விமர்சையாக தயாராகி வருகிறது. அதில் ஒன்று டெல்லியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை, அந்த விளையாட்டுப் போட்டிக் காலத்தில் கண்களில் காட்டாமல் மறைப்பது என்பதாக திட்டமிடுகிறார்களாம். மும்பையிலும் இதேபோல குடிசைப் பகுதிகளை, சுற்றுலா வருகின்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கு கண்களுக்குத் தெரியாமல் மறைக்க முயலும் திட்டம் ஒன்று இருக்கிறது.
நகரங்களில் திடீரென்ற குடிசைப் பகுதிகள் தோன்றுவதற்கான அடிப் படைக் காரணங்கள் களையப்படாமல், குடிசைப் பகுதிகளை நீக்குவது அல்லது மாற்றியமைப்பது அல்லது இனி வருங்காலங்களில் இல்லாமல் செய்வது என்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. எப்படியோ இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பாவது ஆட்சியாளர்கள் மத்தியில், மக்களின் பல்வேறு பிரிவினர்கள் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறதே என்பதாக நாம் இப்போது ஆறுதல் கொள்கிறோம்.