Thursday, April 1, 2010

ஆயுதம் விற்கும் சாவு வியாபாரிகளைத் தடுக்க முடியுமா?

சமீபத்தில் ஒவ்வொரு நாட்டின் ஆயுத வியாபாரிகள் பற்றிய செய்திகளும் பகிரங்கமாக வந்து கொண்டிருக்கின்றன. சிறிய ஆயுதங்கள் என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கிகள், பிஸ்டல்கள் முதல் தானியங்கி ஆயுதங்களான ஏ.கே47 மற்றும் சிறிய இயந்திர துப்பாக்கிகள், நடுத்தர இயந்திர துப்பாக்கிகள், ஏவுகணை ஆயுதங்களான சாம்7, ராக்கெட் புரொப்பல்லர் போன்ற எல்லாவகை ஆயுதங்களும், அவற்றிற்கான தோட்டாக்களும், சிறிய வகை பீரங்கிகள் அவற்றிற்கான ஷெல்கள், கிரனேடுகள் மற்றும் கையெறி குண்டுகள் என பல்வேறு வகைப்பட்ட ஆயுதங்களும் இன்றைய உலகச்சந்தை யிலே காசிருந்தால் வாங்கலாம் என்ற நிலைமை இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் இங்கிலாந் திலிருந்து 2 நாட்களுக்கு முன்னால் வந்த செய்தி ஆச்சரியத்தைத் தருகிறது. இலங்கை நாட்டிற்கு ஆயுதங்களை இங்கிலாந்து நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்த 9 நிறுவனங்களின் உரிமங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இலங்கைக்கு போர் நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில், இங்கிலாந்திலிருந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வந்த நிறுவனங்களின் செயல்களுக்காக, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்களவை வருத்தம் தெரிவித்துள்ளது. ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அதன் உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக் குழு அளித்துள்ள அறிக்கையை இரண்டு நாள் முன்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வெளி யிட்டார்கள். அதில் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த குழு முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இங்கி லாந்தின் வெளிவிவகார காமன்வெல்த் அலுவலகத்திற்கான அமைச்சர், நீண்ட காலமாக இலங்கைச் சூழ்நிலை பற்றி இங்கிலாந்து அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகிறது என்றார். அதேநேரம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது என்றார். இங்கிலாந்து அரசாங்கம் மறுஆய்வு செய்ததின் அடிப்படையில் தான் 2009ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் 9 நிறுவனங்களுக்கான உரிமம் பறிக்கப்பட்டது என்று அமைச்சர் விளக்கியிருந்தார். இலங்கையில் இருக்கும் மோதல் சூழ்நிலை பற்றி, ஆயுத எதிர்ப்பு துறையின் துணைத் தலைவரான டேவிட் ஹால், கடந்த காலத்தில் நடந்த ஆதாரங்களை கணக்கிலெடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என உறுதி அளித்தார். அதிலும் குறிப்பாக நிலையற்ற நாடுகள் பற்றிய மதிப்பீட்டிற்கு காலம் எடுத்துக் கொண்டு கவனிப்பது என்றும், அமைதி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைத் தேட வேண்டும் என்றும் கூறினார்.
உலகம் முழுவதும் இன்று ஆயுதப் பண்பாடு அதிகமாகப் பரவி வருகின்ற வேளையில், அதை ஆட்சியில் அமர்ந்தி ருக்கின்ற அமைப்பாக்கப்பட்ட அரசுகள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதும், சுதந்திரமான கட்டுப்பாடற்ற உற்பத்தி முறை மற்றும் சுதந்திரமான வணிகம் என்ற பெயரில் லாபநோக்கத்தை மட் டுமே குறிவைத்து செயல்படும் சில பன் னாட்டு மூலதன வியாபாரிகள் இதற்கு காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள் என் பது அடிப்படையான ஒரு உண்மை. சமீ பத்திய நாட்களில் நடந்த ஆயுத வியா பா ரிகளின் விற்பனைகளை கணக்கில் எடுத் தாலும் நமக்கு வியப்பாக இருக்கும்.
நேட்டோ படைவரிசையில் ஒரு பகுதி யான துருக்கி நாட்டின் கப்பல்படை 8 ஹெலிகாப்டர்களை நிறுத்தக் கூடிய தளம் கொண்ட ஒரு கப்பலை வாங்குவ தற்கான முயற்சியில் இறங்கியது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்று அழைக்கப்படும் ஒரு பின்மெக்கானிக்கா கம்பெனி, கூடுதலாக இங்கிலாந்து ராணு வத்திற்கு 10 லின்ஸ் எம்.கே.9 வகை ஹெலிகாப்டர்களை விற்பதற்கு 4 கோடி டாலர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. கத்தார் நாட்டின் தோஹா துறைமுகத்தில், 2வது தோஹா அனைத்து நாட்டு கடல்வழி பாதுகாப்பு கண்காட்சிக்கு குறைந்தபட்சம் 15 போர்க் கப்பல்களை, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து தருவிக்கிறது. அவற்றில் பெரிய கப்பலாக அமெரிக்க கப்பல்படையின் 208 எம் நீளமுள்ள மேசா வெர்டே இருக்கும். அதற்கு சமமாக இங்கிலாந்து நாட்டின் கப்பல் படையின் ஆர்.எப்.ஏ. என்ற லைமேபே என்ற 190எம் நீளம் கொண்ட போர்க்கப்பல் இருக்கும். அந்த கண்காட்சியில் துருக்கியின் 139 எம் கொண்ட டி.சி.ஜி. ஜெம்லக், 133 எம் உள்ள அமெரிக்க கப்பல் படையின் எச்.எம்.எஸ். செயிண்ட் அலபான்ஸ், 125 எம் கொண்ட பிரான்ஸ் போர்க்கப்பல், 118 எம் கொண்ட ஆஸ்திரேலியா போர்க்கப்பல் ஆகியவற்றுடன் 126 எம் கொண்ட ஐஎன்எஸ் பிட்வா என்ற இந்திய போர்க் கப்பலும் இடம்பெறுகிறது. இதன் மூலம் உலக ஆயுதமயமாக்கல் என்ற அழிவுப் பாதையிலே, மேற்கத்திய நாடுகளின் ஆயுதந்தாங்கிய அணிவகுப்புப் பட்டியலில், இந்திய அரசும் இணைந்துக் கொண்டுள்ளது என்பது பட்டவர்த் தன மாகியுள்ளது.
தோஹா துறைமுகத்தின் ஆயுதந் தாங்கிய போர்க்கப்பல்களின் வரிசையில் பட்டியல் இடப்படும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தில், வளர்ந்த நாடுகளாக வரிசைப்படுத்தப்பட்டவை. ஆனால் இந்தியா மட்டும் வளரும் நாடாகவோ, வளராத நாடாகவோ, ஏழை நாடாகவோ விவரிக்கப்படும் ஒரு நாடு. பெருவாரியான தங்கள் நாட்டு மக்கள் தொகையை, வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களாகவோ அல்லது அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கக்கூடியவர்களாகவோ வைத்திருக்கின்ற ஒரு நாடு, இவ்வாறு உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, ஆயுதபாணியாக்கப்பட்ட பட்டியலில் சேர்ந்திருப்பது பெருமைக்குரியதா?
மேற்கண்ட கேள்வியை அமைதி விரும்புவோரும், போர் எதிர்ப்பாளர் களும், ஆயுதக் கலாச்சாரத்தை மறுப்ப வர்களும், அணு ஆயுத உற்பத்தியையும், சோதனையையும், பயன்படுத்தலையும் எதிர்த்துக் குரல் கொடுப்பவரும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கிலாந்தில் இருக்கின்ற ஆயுத வியாபார நிறுவனங்கள், இங்கிலாந்து ஆயு தப் படைகளுடன், தொழிற்
சாலையில் தொடங்கி போர்க்களம் வரை இணைந்தே செயல்படுகிறார்கள். உதார ணமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இறக்கி விடப்பட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்துடன் இணைந்து, இங்கிலாந்து ஆயுத தொழிற்சாலைகளைச் சேர்ந்த 4,000 பேர் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது பன்னாட்டு மூலதன ஆயுத உற்பத்தியாளர்களான, லாபம் ஈட்டும் தனியார் நோக்கங் களுக்கு ஏற்றாற்போல், ஒரு நாட்டின் வெளி விவகாரக் கொள்கை தீர்மானிக்கப்படும் என்பதை நிரூபித்து நிற்கிறது. ஆயுத உற்பத்தி செய்யும் ஒரு தனியார் நிறுவனம், தன்னுடைய உற்பத்தி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தான் விரும்ப முடியும். அதற்காக தொடர்ந்து போர்கள் நடந்து கொண்டேயிருக்க வேண்டும். இப்படிப்பட்ட போர்களை நடத்துகின்ற அல்லது திட்டமிடுகின்ற அரசுகளுடன் போர்க்களத்தில் இறங்கி தனியார் நிறுவன ஊழியர்கள் செயல்பட அனுமதிப்பது என்பதே, அவர்களது லாபவெறிக்கு துணைப் போவது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
இப்போது ரஷ்ய நாடும் தென்அமெரிக் காவில், வெனிசுலா மட்டுமல்லாமல் வியட்நாம் உட்பட நாடுகளுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. அதேபோல ரஷ்ய ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், குறிப்பாக வடஆப்பிரிக்க நாடுகளுக்கும் விற்கப் படுகின்றன. இந்தியாவிற்கு 2007ம் ஆண்டு 800 கோடி டாலருக்கும், 2008ம் ஆண்டு ரஷ்யா 835 கோடி டாலருக்கும் ஆயுத விற்பனை செய்துள்ளது.
இப்போது நிர்ப்பந்தமான நிலையை எடுத்திருக்கும் இங்கிலாந்து அரசு 2008 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 2009 மார்ச் 31ம் தேதி வரை இலங்கை அரசக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய 31 உரிமங்களை வழங்கியுள்ளது. அவை அனைத்துமே இலங்கை அரசால் விடு தலைப்புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றைக்கு அரசியல் அதிகார சமன்பாட்டில் வந்தி ருக்கும் மாற்றங்களையொட்டியும், பொது மக்களின் எதிர்ப்பையும், ஈழத் தமிழர்களின் விழிப்புணர்வால் இங்கி லாந்து நாட்டிற்குள் உருவாகியுள்ள அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கணக்கில் கொண்டு, சில மாற்றங்கள் ஏற்பட் டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் இத்தகைய நாட்டு அரசுகள் தனியார் ஆயுத வியாபாரிகளை ஊக்குவித்து, பிற்போக்கு அரசுகளுக்கு வியாபாரம் செய்து, உரிமைக்குப் போராடும் மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. ஆகவே ஆயுத விற்பனை செய்யும் சாவு வியாபாரிகளுக்கு எதிரான, உலகம் தழுவிய ஜனநாயக குரலை எழுப்புவது ஒரு அவசியத் தேவையாகிறது.