Wednesday, March 31, 2010

எதிர்கட்சியில்லா தேர்தல் ஜனநாயகம் எங்கே இழுத்துச் செல்லும்?

மியான்மர் நாடு தேர்தல் பாதைக்கு திரும்பப் போகிறதாம். அதையொட்டி வருகின்ற தேர்தலில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் போட்டியிடக் கூடாது என்று ஒரு சட் டம் வந்துள்ளதாம். அதனால் எதிர்கட்சி தலைவியாக அறியப்பட்ட ஆங் சான் சூ கி தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமை எழுந்தது. அதையொட்டி அவரது கட்சியான தேசிய ஜனநாயக லீக் இந்த தேர்லைப் புறக்கணித்துள்ளது. அதன் மூலம் மியான்மர் என்ற பர்மாவில் நடக்கயிருக்கும் தேர்தல் அல்லது அரசியல் பாதை தவறானது என்ற செய்தியை உலக சமூகத்திற்கும், பர்மாவின் மக்களுக்கும் அதேசமயம் அங்கே ஆளுகின்ற ராணுவ ஆட்சியாளர்களுக்கும் அறிவிப்பதாக அது இருக்கிறது. அதேசமயம் இத்தகைய புறக்கணிப்பு தேசிய ஜனநாயக லீக் கட்சியை தனிமைப்படுத்தி விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஜனநாயகத்திற்கு ஆதரவான கட்சி என்று அறியப்படும் அந்த கட்சியை இதை வைத்தே கேள்வி கேட்கும் நிலையும் வரும். அதேசமயம் ராணுவ ஆட்சியாளர்களை யாருமே எதிர் கொள்ள முடியாது என்ற உணர்வும் எழலாம். அனைத்து நாட்டு சமூகத்திற்கு சூ கியும், தேசிய ஜனநாயக லீக்கும் மியான்மரில் ஜனநாயகத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலும், அவர்கள் தான் மக்களின் தேர்வு என்ற புரிதலிலும் இருந்தார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது அந்த அனைத்து நாட்டு சமூகத்திற்கு ஒரு பெரும் அதிர்ச்சியானச் செய்தி தான்.
எதிர்கட்சியின் புறக்கணிப்பு தந்திரத்தின் மூலம், மீண்டும் ராணுவ தளபதிகளை ஆட்சியில் அமர்த்தக் கூடிய ஒரு செயல் நிறைவேறி விடும். நூற்றுக்கணக்கான தேசிய ஜனநாயக லீக் ஊழியர்களை சிறையில் அடைத்து, பல ஆண்டுகளாக அவர்களது கட்சி அலுவலகத்தை மூடி வைத்து, இந்த மாதம் அவற்றை மீண்டும் திறக்க அனுமதித்துள்ள ராணுவ தளபதிகள் மீண்டும் அதிகாரத்தில் தொடர்வதற்கு ஏதுவாகப் போய்விட்டது என்ற கருத்தும் அங்கே இருக்கிறது.
இந்தியாவின் எல்லையோரத்தில் இருக்கும் பர்மா என்ற இந்த மியான்மர் நாட்டில் 1990ம் ஆண்டிற்குப் பிறகு இப்போது 2010ல் தான் தேர்தல் அறிவிக் கப்படுகிறது. 90ம் ஆண்டில் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சூ கி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 59% வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மியான்மர் நாடாளுமன்றத்திற்கான 492 தொகுதிகளில், 394ல் சூ கியின் கட்சி வெற்றி பெற்றிருந்தது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, ராணுவ தளபதிகளால் சூ கி வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் அவர் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தார். 1990ம் ஆண் டிலேயே ராப்டோ பரிசு, சகரோ பரிசு ஆகியவற்றை கருத்துரிமைக்காக அவர் பெற்றிருந்தார். 91ம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றார். 92ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அனைத்து நாட்டு புரிதலுக்கான ஜவ ஹர்லால் நேரு விருது பெற்றார். இப்போது 64 வயதடைந்துள்ள ஆங் சான் சூ கி, உலக மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் பெற்றிருந்தும் கூட, மீண்டும் ஜனநாயக ரீதியாக வெல்ல முடியாத நிலைமை.
1945ம் ஆண்டு ஜுன் 19ம் நாள் ரங்கூனில் பிறந்த சூ கியின் தந்தை நவீன பர்மாவின் ராணுவ நிறுவனராகவும், தளபதியாகவும் இருந்தார். 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் பர்மாவின் விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்றவர் அவர். அதே ஆண்டில் எதிர்ப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். சூ கி தனது பட்டப் படிப் புக்குப் பிறகு நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்தார். ஐ.நா.சபையின் பணிகளில் மூன்றாண்டு பணியாற்றினார். 1972ல் டாக்டர் மைக்கேல் அரிஸ் என்பவரை மண முடித்தார். அவருக்கு அலெக்சாண்டர் அரிஸ், கிம் என்ற மகன்கள் பிறந்தனர். 1988ல் பர்மாவுக்கு திரும்பினார். 1999ல் தனது 53வது வயதில் அவரது கணவர் அரிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார். 1989ல் இருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்து சூ கியை தனது இறுதி நாட்களில் 5 முறை மட் டுமே அவரது கணவரால் சந்திக்க முடிந்தது. இங்கிலாந்தில் இருக்கும் தனது குழந்தைகளுடனும் தொடர்பறுந்த நிலை யில் சூ கி வீட்டுச் சிறையில் இருந்தார்.
1988ம் ஆண்டிலேயே ராணுவ தளபதி நீவின் ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்திற்கான மக்களின் போராட்டம் வெடித்தது. அப்போது சூ கி 5 லட்சம் மக்களுக்கு மத்தியில் ஜனநாயகத்திற்காக உரைநிகழ்த்தியுள்ளார். அதன்பிறகு புதிய ராணுவத் தலைமை ஆட்சியை கைப்பற்றியது. அதையொட்டியே சூ கியை பொதுச்செயலாளராக கொண்டு ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உரு வானது. நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால், வீட்டுக் காவலில் இருந்து விடுதலைச் செய்கிறோம் என்பது தான், கடந்த 20 ஆண்டுகளாக சூ கி முன்னால் வைக்கப்பட்ட கட்டளையாக இருந்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை மாற்று வதற்கான முயற்சியை மேற்கொள்ளாத இந்திய அரசும், சீன அரசும் சமீபத்திய ஐ.நா.வின் முயற்சிகளையும், அமெரிக்காவின் தலையீடுகளையும் எதிர்க்க முடியவில்லை. மியான்மரின் முன்மாதிரி என்பது, பொதுவாகவே உலக அரங்கில் தேர்தல் ஜனநாயகம் என்ற முன்னேறிய ஒரு வழிமுறை அமுலாகின்ற ஒவ்வொரு நாட்டிலும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. சமீபத்தில் அதிபர் தேர்தலை முடித்து விட்டு, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்ற இலங்கைத் தீவில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ள ஒரு குழுவினர், இதேபோலத் தான் நடந்துக் கொள்கிறார்கள். எப்படி எதிர்கட்சிகளை லாவகமாக இல்லாமல் செய்து, எதிர்ப்பாளர்களை சிறைக்குள் தள்ளி தொடர்ந்து ஆளக் கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தலாம் என்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இதனால் ஆட்சி முறைகளிலேயே, நாடா ளுமன்ற பாதை தான் சிறந்தது என்பதும், அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவது என்பதும் கேலிக்குரியதாக ஆகிக் கொண் டிருக்கிறது என்ற புதிய செய்தியை ஜனநாயக உணர்வாளர்கள் கண்டிப்பாக கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கத்திய நாடுகளான ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இஸ்ரேல், ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஆதரவு பெற்றிருந்தும் கூட, உலக அரங்கில் ஜனநாயகத்திற்கான மியான்மர் இயக்கத்திற்கு ஆதரவு இருந்தும் கூட, ஆங் சான் சூ கியால் தனது நாட்டில் ஜனநாயகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியவில்லை. மியான்மர் நாட்டில் 14 மாநிலங்கள் இருக்கின்றன. அவை மாவட்டங்களாகவும், நகரங்களாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் போன்ற ஒரு கட்டமைப்பு தான் அங்கே இருந்துக் கொண்டிருக்கிறது. மியான்மர் மீது பொருளாதார தடையை விதித்திருந்த அமெரிக்கா சமீபத்தில், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உத்தர வாதத்தில் அதை திரும்பப் பெற்றது. அப்படி மீட்டெடுக்கப்படும் ஜனநாயகம் தான் இந்த தேர்தலை இப்படி நடத்துகிறது. அனைத்துலக சமூகங்களும் ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்பட்டது என்று காட்டப்பட்டாலும், உள்நாட்டில் எதிர்கட்சி செயல்படுவதற்கே அனுமதிக் கப்படவில்லை என்ற அளவில் தான் அந்த தேர்தலும் நடைபெறுகிறது. மியான்மர் நாட்டிற்கு வெளிநாட்டு மூல தனம் என்பது மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் இருந்து வருவதில்லை. சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, இந்தியா, தாய்லாந்த் ஆகிய நாடுகளில் இருந்து தான் மூலதனம் இறக்குமதியாகிறது. நாட்டின் 60% விளைச்சல் நிலத்தில் நெல் உற்பத்தியை செய்கிறார்கள். அப் படிப்பட்ட ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியான தேர்தல் முறையை சதிசெய்து உடைப்பது என்பது அங்கே பகிரங்கமாக நடந்துள்ளது. இதேநிலைமை தான் இலங்கைத் தீவில் நடத்தப்படுகின்ற தேர்தல்களிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல் முறைகளில், எதிர்கட்சிகளை உடைப்பது, இல்லாமல் செய்வது ஆகிய தந்திரங்களை செயல்படுத்திக்காட்டாத ஆளும் கட்சி களை காண்பது அரிதாக இருக்கிறது. அதனால் இந்தக் காலகட்டம் ஜனநாயக தேர்தல் முறைகளை, உடைப்பதற்கான காலகட்டமா? மரத்தின் நுனிக்கிளையில் இருந்தே, அடிக்கிளையை வெட்டுகின்ற காலகட்டமா? எதிர்கட்சிகளை இல்லாமல் செய்வது ஆளும் கட்சிக்கு தற்காலிக வெற்றியை அளிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைக்கு நிரந்தரத் தோல்வியை அளிக்காதா? இந்தியாவில் இருக்கும் ஜனநாயக சக்தி கள், இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடினால் நல்லது.