Sunday, March 28, 2010

படுகொலைகளுக்காக ஒரு முதல்வர் விசாரிக்கப்படலாமா?

குஜராத் மாநிலத்தின் முதலமைச்
சர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு புல னாய்வு குழு முன் தோன்றி பல்வேறு கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார் என்று செய்தி வெளியாயின. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் தோற்றுவித்தது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்காக 8 ஆண்டுகள் கழித்து அந்த மாநிலத்தின் முதல்வர் விசாரிக்கப்படுகிறார். நேற்று மதியம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட மோடியின் வயது 59. அவர் விசாரிக் கப்படுவதற்கு காரணமாக இருந்த படு கொலைகள் எண்ணிக்கை 70. மக்கள் மீதான படுகொலைகளுக்காக, அதாவது குற்றயியல் வழக்குகளுக்காக ஒரு முதல மைச்சர் முக்கியமாக விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார் என்றால், அதுவும் அவரும், அவரது நிர்வாகமும், அவரது தலைமையிலான மாநில அரசாங்கமும் படுகொலைகளுக்கு உதவி செய்து, ஒத்துழைத்தனர் என்ற குற்றச்சாட்டில்
விசாரிக்கப்படுகிறார் என்றால், அது நரேந்திர மோடியாக மட்டும் தான் இருக் கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகம தாபாத்தில் இருக்கும் ஒரு பகுதியில் நடந்த படுகொலைகளைப் பற்றிய விசா ரணையே அது.
2002ம் ஆண்டில் குல்பர்கா சமூகத்தில் நடந்த பெரும் கலவரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரே மற்றும் 69 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த முன் னாள் எம்.பி.யின் மனைவியான ஷகியா ஜாப்ரே கொடுத்த புகாரின் பேரில், 8 ஆண்டுகள் இழுத்தடித்து இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் மோடி முதல் முறையாக விசாரிக்கப்படுகிறார். புகாரில் குறிப்பிட்டுள்ள படி, தனது அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதிர்கள் என்று மோடி உத்தரவிட்டார் என்பது முக்கியக் குற்றச்சாட்டு. முதல்வர் நாற் காலியில் அமர்ந்திருக்கும் போதே படுகொலைகளுக்காக விசாரிக்கப்படும் முதல் முதல்வர் நரேந்திர மோடி தான் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே மார்ச் 21ம் நாள் விசா ரணைக்கு மறுத்த மோடி, நேற்று விசா ரணையை சந்தித்திருக்கிறார். அவருடன் 62 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதில் மோடி அரசின் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் அடக்கம். இது ஒரு அர சாங்கத்திற்கு கிடைத்த அவமரியாதை என்கிறார் மோடி. பா.ஜ.க.விற்கு மானம் இருக்குமானால், மோடியை முதல்வர் பொறுப்பிலிருந்து இறக்கி விட்டு விசா ரணைக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ். பிரபல மதச்சார் பற்றவாதி, மதவெறி எதிர்ப்பு ஆங்கில ஏட்டை நடத்தும் டீஸ்டா செட்டல் வாட் இதை ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று குறிப்பிடுகிறார்.
படுகொலைகளில் மோடியின் நேர டியான பங்கெடுப்புப் பற்றி, ஒரு ஆங்கில ஏடு புலனாய்வு செய்தது. அதை அவர்கள் 2007ம் ஆண்டு அக்டோபர் 25,27 தேதிகளில் வெளியிட்டார்கள். அவர்கள் பதிவு செய்திருந்த நாடாக் களை தேசிய மனிதஉரிமை ஆணை யத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்டது. குஜராத் உயர்நீதிமன்றமும், இந்தியாவின் உச்சநீதிமன்றமும் அந்த சாட்சியங்களை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள் ளலாம் என்று உத்தரவிட்டது. அதில் உள்ள ஆதாரங்களை பொதுநலன் கருதி, பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட புலனாய்வு அம்பலப் படுத்தலில் வெளியாகியுள்ள ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. பாபு பஜ்ரங்கி பட்டேல் என்பவர், படுகொலையில் நேரடியாக மோடிக்கு முதன்மைப் பாத் திரம் இருந்தது என்று பேசியிருக்கிறார். மோடியின் கட்டளைகளால், காவல்துறை இயந்திரம் செயல்படாமல் ஆக்கப்பட்டது என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார். நீதித் துறை குழப்பி விடப்பட்டது என்பதாக கூறுகிறார். நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலைகள், கர்னக்கொடூரமான நிகழ்வுகளால் நிரப்பட்டிருந்தது. அதில் கவுசர் பானு என்ற கர்ப்பமாகியிருந்த முஸ்லிம் பெண் மணியின் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை யின் கரு வெட்டப்பட்டதை பாபு பஜ்ரங்கி ஒப்புதல் வாக்குமூலமாக அந்த இதழின் காணொளி நாடாவில் கூறியிருந்தார். அதை நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் பயன்படுத்தக் கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் நிற்கிறது.
அடுத்த சாட்சியாக அரவிந்த் பாண் டியா என்ற அரசு வழக்கறிஞர் தனது வாக்குமூலத்தைத் தருகிறார். அதில் குஜராத் மாநிலத்தின் முழுமையான குற்றயியல் நீதித்துறை கட்டமைப்பும், மோடியால் நேரடியாக உடைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.பல்கலைக்கழகத்தின் கணக்காயரான திமாந்த் பட் என்பவர், மோடியின் நேரடி பங்கு பற்றி இன்னொரு ஆதாரத்தைக் கூறியுள்ளார். 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு, கோத்ரா விபத்தையொட்டி நடத்தப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் மோடி கலந்துக் கொண்டது பற்றி விளக்கியுள்ளார்.
கோத்ராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட் கூறும்போது, வி.எச்.பி.யின் பந்தில் 3 நாள் எடுத்துக் கொண்டு, அதற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யும் படி மோடி உத்தரவிட்டதை அம்பலப்படுத்துகிறார்.
அதேபோல அகமதாபாத் நகர வி.எச்.பி. தலைவரான ராஜேந்திர வியாஸ், கோத்ராவில் எரிக்கப்பட்ட எஸ்6 பெட்டி இருந்த சபர்மதி விரைவு வண்டிக்கு, கரசேவகர்களுக்கு பொறுப்பெடுத்திருந்தது தான் தான் என்றும், அந்த வண்டியில் ஏறிய கர சேவகர்கள் எவ்வளவு மோசமாக நடந்துக் கொண்டார்கள் என்றும் பகிரங்கமாக அந்த காணொளியில் போட்டு உடைக்கிறார்.
நரோடா பாட்டியா பகுதியைச்
சேர்ந்த சுரேஷ் ரிச்சர்டு சாரா என்பவர், படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவர். 2002ம் ஆண்டில் பிப்ரவரி 28ம் நாள், படுகொலைகளையும், பாலியல் வன்புணர்ச்சிகளையும் செய்த கொடுமதியாளர்களை மோடி நேரில் பாட்டியாவில் மாலையில் சந்தித்து, மாலை அணிவித்து நல்ல பணியை முடித்தீர்கள் என பாராட்டினார் என்று சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வி.எச்.பி.சேர்ந்த ரமேஷ் தாவே, கோத்ரா நிகழ்வுக்கு முன்பே அதாவது பிப்ரவரி 27க்கு முன்பே வெடிகுண்டுகளும், திரிசூலங்களும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது என்று அந்த பதிவில் கூறியுள்ளார். வி.எச்.பி. ஜில்லா சஞ்ஜோயக் சபர்கந்தாவான தாவால் பட்டேல், கோத்ரா ரயில் எரிப்புக்கு முன்பே விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் பற்றி விளக்கியுள்ளார். குஜராத் வி.எச்.பி. விபக் பிராமுக்கான அணில் பட்டேல், ஆயுத விநியோகம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பே நடந்ததாக உறுதி கூறியுள்ளார்.
வி.எச்.பி. யின் தலைமை மெக்சா னாவான திலிப் திரிவேடி, இன்னொரு புறம் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த ஊடகத்தின் கேமரா முன்னால் சில உண்மைகளை பகிரங்கமாக உடைத்துள்ளார். அதில் குஜராத் மாநிலம் முழுவதும் நடந்த 1,800 கலவரம் சம்மந்தப்பட்ட வழக்குகளை இல்லாமல் செய்தவர் தான் தான் என பெருமையடித்துக் கொண்டார். அதேபோல 1,700 கலவர வழக்குகளை பொய்யான சாட்சிகளை உருவாக்கி தீர்த்து வைத்ததாகவும், அதில் 12 வழக்குகளில் மட்டுமே தண்டனை வாங்கிக் கொடுத்ததாகவும், ஆதார பூர்வமாக கூறியுள்ளார்.
மேற்கண்ட சில உண்மைகளே குஜராத்தில் 2002ம் ஆண்டில் நடந்த கொடுமைகளை எடுத்து வைக்க போதுமானவையாக இருக்கின்றன. இப்போது நரேந்திர மோடி என்ற ஒரு முதலமைச்சர், தனது மாநிலத்திலேயே முன்கூட்டி தயாரிக்கப்பட்ட ஒரு ஆயுதந்தாங்கிய மதவெறித் தாக்குதலை நடத்துவதற்காக, செயற்கையாக ஒரு சூழலை ஏற்படுத்தியதும், திட்டமிட்டு அதையே பயன்படுத்தி மாநிலமெங்கும் மதவெறிக் கலவரத்தையும், படு கொலைகளையும் செய்து,3,000 முஸ்லிம்களை வரை பலிவாங்கியதையும், ஆயிரக்கணக்கான கோடி பெருமான சொத்துக்களை அழித்ததையும் நம்மால் உணரமுடிகிறது. ஆனால் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நரேந்திர மோடி தான் என்பதை நாம் மறக்க முடியாது. இது இந்தியாவின் நாடாளுமன்ற பாதையை கேள்விக் குறியாக்குமா?