Friday, March 26, 2010

பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா உண்மையில் விரும்புகிறதா?

இந்தியாவில் நடந்த மும்பை பயங் கரவாத தாக்குதல், உலக அரங்கில் பிரபலமான ஒரு தாக்குதல். ஏனென்றால் ஆங்கிலப் படங்களில் தொடர் காட்சிகளாக வருவதுபோல, பயங்கரவாதிகள் தாஜ் ஓட்டலில் மற்றும் மும்பையின் ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல்களை, உலகமே காட்சி ஊடகங்களில் கண்டுக் கொண்டிருந்தது. இந்தத் தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப் யார் என்பது பற்றி இன்று வரை குழப்பமான செய்திகளைத் தான் இந்திய மக்கள் கேட்டு வருகிறார்கள். நேபாளத்தில் பிடிபட்டு மும்பையில் கிடைத்தது போல காட்டப்பட்டார் என்று ஒரு செய்தி வந்தது. துப்பாக்கியுடன் கசாப் தாஜ் ஓட்டலுக்குள்ளே இருந்ததை ஊடகங்களில் பார்த்தவர்களும் உண்டு. பிடிபட்ட பின் கசாப், அமெரிக்க உள்நாட்டு புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ.யால், மும்பையில்
விசாரணைக்குள்ளாக்கப்படுகிறார். நீதி மன்றத்தில் பல விஷயங்களை கசாப் ஒப்புக்கொள்கிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு அனைத்தையும்
கசாப் மறுக்கிறார். கசாப்பிற்காக வாதம் செய்ய வந்த வழக்கறிஞர் பிரச்சனைக் குள்ளாக்கப்படுகிறார். கடைசியாக அமெரிக்காவில் மும்பைத் தாக்குதலுக்காக டேவிட் ஹெட்லியும், ராணாவும் பிடிபடுகிறார்கள். ஹெட்லி இந்தியாவிற்கு பலமுறை வந்துப் போனவர் என்று அரசுகள் அறிவித்தன. தன்னை விசாரிக்க வந்த அதிகாரிகளில் ஹெட்லியும் இருந்தார் என்று கசாப் கூறினார். இப்போது ஹெட்லியை அமெரிக்கா சென்று விசா ரிக்க, இந்திய அதிகாரிகளுக்கு உரிமை உண்டா? இல்லையா? என்ற விவாதம் நடக்கிறது.
அதிலும் அமெரிக்க நீதித்துறை தலைவர் எரிக் ஹோல்டர், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தொலைபேசியில் பேசியதாக செய்தி வெளியானது. அதில் ஹோல்டர் அமெரிக்காவிற்கு சென்று, இந்திய புல னாய்வுத் துறை அதிகாரிகள் ஹெட்லியை விசாரிக்கலாம் என்று கூறியதாக சிதம்பரம் சொன்னார். அதையொட்டி புதிதாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து புலனாய்வுத் துறைகளையும் ஒருங்கிணைத்த அமைப்பான, தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம், அமெரிக்கா செல்வதற்கும் ஹெட்லியை நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதற்கும் தேவையான ஆவணங்களை தயார் செய்யும்படி சிதம்பரம் உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் அமெரிக்க தூதர் திமோதி ரோய்மர், இந்திய விசாரணைக்கு அனுமதிக்க இன்னமும் முடிவுசெய் யவில்லை என்று கூறினார். ஏன் இந்த முரண்பாடு என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உள்துறை அமைச் சர் மீது பாய்ந்தார்கள். லண்டனுக்கு பறந்து சென்றிருந்த அமைச்சர் சிதம்பரம் அங்கிருந்தே அதற்கு பதில் கூறினார். அமெரிக்கர்களின் அறிவிப்புகளில் முரண்பாடுகள் இல்லை என்றார். எதற்காக அமெரிக்கர்கள் அடித்த பல்டியை, சிதம்பரம் சமாளிக்க வேண்டும் என்று ஊடகங்கள் கேட்டன. அதேசமயம் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, அமெரிக்கா ஹெட்லி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு உள்துறை அமைச்சகமும் அனுமதிக்காக ஒரு கடிதம் அனுப்புகிறோம் என்று கூறி யுள்ளனர்.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி வலுவாக எழுந்துள்ளது. இந்திய காவல்துறையின் பிடியில் இருக்கும் அஜ்மல் கசாபை, இந்திய நாட்டில் நடந்த ஒரு தாக்குதல் பற்றி விசாரணைச் செய்வதற்கு, சம்மந்தமேயில்லாத அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ.க்கு இந்திய அரசு அனுமதிக் கொடுத்தது. எதற்காக அப்படிப்பட்ட அனுமதியை கொடுக்க வேண்டும்? ஆனால் அதேசமயம் இந்திய நாட்டிற்குள் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர் என்று அறியப்பட்ட டேவிட் ஹெட்லி, அமெரிக்க காவல் துறையின் பிடியில் இருக்கும் போது, இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அங்கே
சென்று விசாரிப்பதற்கு இத்தனைத் தூரம் தயக்கங்களையும், தடங்கல்களையும் ஏற்படுத்துவதுள எதனால்? மேற்கண்ட கேள்விகளைக் கேட்காமல் இருந்தோம் என்றால், பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற நோக்கத்திலேயே பிழை இருக்கிறது என்று அர்த்தம்.
ஏனென்றால் அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலும், பெண்டகன் ராணுவத் தளத்திலும் பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, அமெரிக்கா அரசு உலக முழுவதிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என அறைகூவி அழைத்தது. அந்த அறைகூவலை சிரமேற்ற இந்திய அரசு, தன்னையும் அத்தகைய உலகு தழுவிய பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டது. இப்போது ஒரு குறிப்பிட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட் டப்படும் பயங்கரவாதிகளை விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில், அமெரிக்காவும், இந்தியாவும் மாறுபட்ட நிலைகளை எடுப்பதற்கான காரணம் என்ன?
அமெரிக்கா உண்மையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நம்பிக்கைக் கொண்டுள்ளதா? அல்லது அதைப் பயன்படுத்தி தனது ஆயுத வியாபாரத்தை, உலகெங்கிலும் நடத்துவதற்கு ஏற்ற சூழலை, நிரந்த ரமாக உருவாக்க எண்ணுகிறதா? பயங்கர வாதிகள் தொடர்ந்து உலகில் இருந்தால் தான், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்தில் நடந்து வந்தால் தான், அமெரிக்காவின் சாவு வியாபாரிகள் என அழைக்கப்படும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து வியாபாரமாகும் என்று அமெரிக்கா கருதுகிறதா? அதனாலேயே பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அடிப்படையான விவரங்களை பாதிக்கப்பட்ட நாடுகள் கூட, தெரிந்துக் கொள்ள கூடாது என்று கருதுகிறதா? இத்தனைக் கேள்விகள் எழுகின்ற நேரத்தில் 2005ம் ஆண்டு மத்ரித் பிரகடனம் என்பது நினைவுக்கு வருகிறது.
2005ம் ஆண்டு மார்ச் 8 முதல் 11 வரை மத்ரித் நகரில் நடத்தப்பட்ட ஜன நாயகம், பயங்கரவாதம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அனைத்து நாட்டு உச்சி மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஐ.நா.சபையின் அன்றைய செயலாளர் நாயகம் கோபி அன்னன் கலந்துக் கொண்டார். உயர்மட்ட கூட்டத்தில் மிரட்டல், சவால்கள், மாற்றம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. உயர்மட்ட குழுவின் ஆலோசனைகள் மீதான நடவடிக்கைகள் என்பதை மத்ரித் நிகழ்ச்சி நிரல் என்பதாக அறிவித்தார்கள். அதில் எந்தவொரு மன்னிப்போ, நியாயப்படுத்தலோ காட்டாமல், முழுமையான தீமை என்பதாக பயங்கரவாதம் பார்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் போது, எதிர் பயங்கரவாதம் என்பதே அதற்கான வழியை உருவாக்கி விடக் கூடாது என்று அரசுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்து நாட்டு சமூகத்தின் பொறுப்பு என கூறப்பட்டது. மேற்கண்ட எல்லா அறிவிப்புகளுமே, இன்றைய அமெரிக்காவின் அணுகு முறையில் மீறப்பட்டுள்ளது. ஹெட்லி அமெரிக்க அரசிடம் ஒப்புக் கொண் டதற்காக, அவனது தண்டனை குறைக் கப்படும் என்கிறது அமெரிக்கா. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாக வடஅமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் கருதப்படுகிறதே தவிர, 1956க்குப் பின்னால் தொடர் தாக்குதல் களைச் சந்திக்கும் இந்தியா அவ்வாறு பட்டியலிடப்படவில்லை.
மத்ரித் பிரகடனத்தில் கூறப்பட்ட, பயங்கரவாதம் என்பது அனைத்து மானுடத்திற்கும் எதிரான ஒரு குற்றம் என்ற கருத்துக் கோப்பை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா செயல்படுவதாக தெரியவில்லை. அந்த பிரகடனத்தை அறி வித்த ஐ.நா.வின் பொதுச் செயலாளர், அரசால் ஏற்படுத்தப்படும் பயங்கரவாதம், பாதிக்கப்படும் அரசுக்கு எதிரான ஒரு மறைமுக ஆக்கிரமிப்பு என்று கூறினார். இங்கே மும்பைத் தாக்குதலை ஒரு மறைமுக ஆக்கிரமிப்பாக நடத்திய அரசப் பயங்கரவாதம், பாகிஸ்தானுடையதா அல்லது அமெரிக்காவினுடையதா என்ற கேள்வி தானாகவே எழுகிறது. எப்படியிருந்தாலும் இன்று அமெரிக்கா அரசை ஒவ்வொரு விஷயத்திலும் சார்ந் திருக்கும் இந்திய அரசு, இந்த உண் மையை விவாதிக்க தயாராயிருக்குமா என் பதே நமது கேள்வி.