Wednesday, March 24, 2010

பகத்சிங் நினைவுகளும், சமரசமற்ற போராட்டங்களின் தேவைகளும்

நேற்று மார்ச் 23ம் நாள். மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள். பகத் சிங்குடன், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள். அவர்கள் மீது ஆங்கிலேய அர
சாங்கம் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டியது. ஆங்கிலேயர்களுடைய அடிமை அவையாக இருந்த இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது வெடிகுண்டு வீசினார் என்பது பகத்சிங் மீதான ஒரு குற்றச்சாட்டு. ஆயுதந்தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டார் என்பதும், இந்திய விடுதலைக்காக அப்படிப்பட்ட ஒரு பாதையை தேர்ந்தெடுத்தார் என்பதும் அவர் மீது ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட கோபம். அதே நேரத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக என்ற ஒரு முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு, மகாத்மா காந்தியின் வழிகாட்டல் இருந்து வந்தது. மகாத்மா என்று அழைக்கப்பட்ட, பிறகு தேசத் தந்தை என்று வருணிக்கப்பட்ட கரம்சந்த் காந்தி, அகிம்சை வழியில் அத்தகைய சுதந் திரப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவித்துச் செயல்பட்டவர். அந்த செயல்பாடுகளில் இருந்து பார்க்கும் போது, ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான செயல்பாடுகளில் இருந்த பகத்சிங்கும் தோழர்களும் பயங்கரவாதிகள் என்று தான் சித்தரிக்கப்படுவார்கள் என்பது புரிய முடிகிறது. அந்த நேரத்தில் காங் கிரஸ் கட்சியின் பெரியதொரு மாநாடு நடப்பதாகயிருந்தது. காந்திஇர்வின் ஒப்பந்தம் போடப்படுவதற்கான சூழல் கணிந்திருந்தது.
நடக்கயிருக்கும் மாநாட்டில் ஒட்டு மொத்த காங்கிரஸ் பிரதிநிதிகள், பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலைக்காக தீர்மானத்தை நிறைவேற்றி விட்டால், அதன்பிறகு தனது அகிம்சை வழி தோற் கடிக்கப்பட்டு விடுமே என்று காந்தியார் கருதியிருக்கலாம். அதனால் பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலைக்காக, இர்வின் பிரபுவிடம் காந்தி பேச வேண் டும் என்ற மற்றத் தலைவர்களது கோரிக்கையை மகாத்மாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வன்முறைப் பாதை என்ற தவறான பாதையில் செல் பவர்களை ஆதரிக்க முடியாது என்ற கருத்தை காந்தியார் கொண்டிருந்தார்.
அப்போது காந்தியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த ஜவ ஹர்லால் நேரு, பகத்சிங் மற்றும் தோழர்களது விடுதலைக்காக இர்வின் பிரபுவிடம் பேசக் கோரி வேண்டினார். அமைதியாக ராட்டிணத்தை காந்தியார் சுற்றிக் கொண்டிருந்தாராம். உடனடியாக கோபம் மேலோங்க ஜவஹர்லால் நேரு, நமது நாட்டின் மலர்கள் எரிந்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புத்தரைப் போல ராட்டிணத்தை மவுனமாக சுற்றிக் கொண்டிருக்கலாமா என்று கேட்டாராம். இது ஆங்கில ஏடுகளில் அன்றைய காலத்தில் அம்பலப்படுத்தப்பட்ட செய்தி. அதனால் பகத்சிங்கின் நினைவு நாள், 2 செய்திகளை நமக்கு சொல்கிறது. ஒன்று ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்திய நாட்டை காலனியாக அடிமைப்படுத்தி வைத்திருக்கும் காலத்தில், புரட்சியா ளர்களை கொடுமையான முறையில் தூக்கிலிட்டார்கள் என்பது ஆங்கிலே யனின் கொடூரத்தைப் பற்றி பதிவு செய்யப்பட்ட செய்தி. இரண்டாவதாக வாய்ப்பிருந்தும் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக இல்லாமல், ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான கருத்தை சுதந்திரப் போராட் டத்தின் குரலெழுப்பியவர்களும் செயல்படுத்தினார்கள் என்ற செய்தி. இப்படியாக எதிரிகளையும், துரோகி களையும் அடையாளம் காட்டிய ஒரு நிகழ்வாக பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சி நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
இப்படித் தான் ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்திலும், எதிரியின் குணமும், துரோகம் இழைத்தவரது பண்பும் அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த விடுதலைப் போரில், ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அவ்வாறு துப்பாக்கித் தூக்கிய வாஞ்சிநாதன், தன்னைத் தானே சுட்டுக் கொண்டும் இறந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வாஞ்சிநாதனுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்திய
சுதந்திரப் போரில் எண்ணற்ற வீரர்கள் இதுபோல, தங்கள் உயிரை துச்சம் என மதித்து தியாகம் செய்துள்ளனர்.
வெள்ளையர்கள் நடத்திய கிழக் கிந்திய கம்பெனியின் கப்பல் போக்கு வரத்தை எதிர்த்து, அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பலத்த அடி கொடுப்பதற்காக, தூத்துக்குடியில் சொந் தமாக கப்பல் ஒன்றை வாங்கி அதை கடலிலே அனுப்பி போட்டிப் போட்டு போராடியவர் வ.உ.சிதம்பரனார். அவரை அதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று அழைத்தார்கள். அதற்காகவே வெள்ளை ஏகாதிபத்தியம், வ.உ.சிக்கு சிறை வாழ்க்கை என்பதை உருவாக்கியது. சிறையில் அடைக்கப்பட்ட கரம்சந்த் காந்தியோ, ஜவஹர்லால் நேருவோ இன்னபிற தலைவர்களோ, புத்தகம் படித்தார்கள்; புதிய புத்தகங்களை எழுதினார்கள். ஆனால் வ.உ.சி மட்டும் ஆங்கிலேயர்களால் சிறைக்குள்ளேயே, செக்கிழுக்க வைக்கப்பட்டார். அவர் தமிழர் என்பதால், சமரசத்திற்கு சரியவில்லை என்பதால், சமரிலே சரியாக நின்றார் என்பதால் அப்படிப்பட்ட தண்டனையை ஆங்கிலேயர்கள் அளித்தார்கள். ஆதிக்கவாதி எப்போதுமே போர்க் களத்தில் நிற்பவர்களில் யார், யார் எப்படிப்பட்ட மனோபலம் உள்ள வர்கள் என்று அறிந்து செயல்படும் ஆற்றல் உள்ளவன். அதனால் தான் வடஇந்திய தலைவர்களுக்கு ஒருநீதி; தமிழின தலைவர்களுக்கு மறுநீதி என அமுலாக்கப்பட்டுள்ளது போலும்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம், வீர பாண்டிய கட்டபொம்மனை எதிர்த்து போராடியது என்பது ஒரு வரலாற்றுப் பதிவு. அந்தப் போராட்டத்தில் கடைசி யாக, வீரபாண்டிய கட்டப்பொம்மனும் ஆங்கிலேயர்களால் கயத்தாறில் தூக்கி லிடப்படுகிறார் என்பது வரலாறு. புரட்சி கரப் பாதையை ஏந்திச் சென்ற மாவீரன் பகத்சிங் எப்படி தூக்கிலிடப்பட்டாரோ, அதேபோல ஆயுதந்தாங்கிய தன்னுடைய படைவரிசை மூலம், வெள்ளையர்களின் படையை எதிர்த்து போர்க்களம் கண்ட கட்டபொம்மனும் தூக்கிலிடப்பட்டார். முன்னவர் வடஇந்தியரானாலும் புரட்சிகரப் பாதையை கையாண்டதால், அவருக்கு பயங்கரவாதி என்ற முத்திரை விழுந்தது; அதற்காகவே அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனாலும் இன்றைய இந்திய அரசு பகத்சிங்கும் மற்றும் தோழர்களும் நினைவை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் படைவரிசையில் தளபதியாகவும், ஒற்றர்படை தலைவராகவும் பணி யாற்றியவர் மாவீரன் சுந்தரலிங்கம். போர்க்களத்தில் நெருக்கடியான கட்டத்தில், ஆங்கிலேயனின் ஆயுதத் தளவாட குவிப்பை, அழிப்பதற்காக தன் உடலில் மட்டுமின்றி, தன் காதலியின் உடலிலும் சேர்த்து வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு, எதிரியின் தளவாட சேமிப்பிற்குள் குதித்து, அனைத்தையும் வெடிவைத்து தகர்த்து தன்னுயிரை, தன் காதலியுடன் இணைந்தே கொடுத்தவர் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்து சென்றிருக்கிறார். உலக புரட்சிகர வரலாற்றில், அன்னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து, தன்னைத் தானே மனித வெடி குண்டாக மாற்றிக் கொண்டு தியாகம் செய்து எதிரிக்கு சேதங்களை விளை வித்த முதல் வீரன் அந்த சுந்தரலிங்கம். அவரையும் தமிழ்நாட்டு மண் தான் வரலாற்றில் சந்தித்திருக்கிறது.
இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், தமிழ் இளைஞர்கள் மட்டுமின்றி, தமிழ் யுவதிகளும் தங் களை மனிதவெடிகுண்டுகளாக மாற்றிக் கொண்டு, கரும்புலிகளாக புறப் பட்டிருப்பதால் தான், ஈழப்போரும், வன்னிப்போரும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே தமிழீழம் காண ஒரு அரசியல் போராட்டம் உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதான் பகத்சிங் நினைவுநாள் நமக்குக் காட்டும் சமரசமற்ற விடுதலைப் பாதை.