Saturday, March 20, 2010

நானாவதி கமிஷன், காலாவதி ஆனதா?

2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் குஜராத் மாநிலத்தில் கோத்ரா நகரில் அந்த விபத்து நடந்தது. சபர்மதி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ரயில் வண்டியில் பயணமாகி வந்த கரசேவகர்கள், உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பரப்புரை ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, திரும்பி வரும்போது ரயில் பெட்டி எரிந்து, 59 பேர் தீயில் கருகிச் செத்தார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள். அந்த ரயில் வண்டி 11 பெட்டிகளைக் கொண்டது. 1100 பேர் வரை இருக்கைகள் கொண்டது. அதில் அன்று 2000 பேர் பயணம் செய்தார்கள். அவர் களில் 1700 பேர் கரசேவகர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்து ஒரு திட்டமிட்ட சதி என்பதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். உடனடியாக வி.எச்.பி.யிலிருந்து பந்த் அறிவிக்கப்பட்டது. அதில் மாநிலம் எங்கும் 1167பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதில் பெருவாரி யான வர்கள் முஸ்லிம்கள். அந்த தொடர் வன்முறை மாநிலத்தில் 993 கிராமங்களில் நடத்தப்பட்டது. 151 நகரங்களிலும் வன்முறை தாண்டவமாடியது. குஜராத் மாநிலத்திலிருக்கின்ற 464 காவல் நிலை யங்களில், 284 நிலையங்கள் உள்ள பகுதிகளில் அந்த வன்முறைத் தீ பற்றியெரிந்தது. அந்த மாநிலத்தில் மொத்தம் இருக்கின்ற 182 தொகுதிகளில், 153ல் இந்த முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையை, அரசு ஆதரவுடன் இந்துத்துவா அமைப்புகள் நடத்தின. அதுபற்றி ஆய்வறிக்கையைக் கொடுத்த பெண்கள் நாடாளுமன்றக் குழு 1லட்சத்து 32 ஆயிரத்து 532 பேர் வன்முறையால் இடம்பெயர்ந்ததாக கூறுகிறது. அவர்களுக்கான 121 அகதிகள் முகாம்கள் அந்த மாநிலத்திற்குள்ளேயே ஏற்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக் கான வீடுகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் வசித்து வந்தவை, நொறுக்கப்பட்டது. அதை கணக்கிட்டதில் நகர்ப்புறங்களில் 2023 என்றும், கிராமப்புறங்களில் 2931 என்றும், ஆகமொத்தம் 4953 என்றும் ஒரு பட்டியல் வெளியானது. இது முழுமையாக உடைக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை. பாதியளவு உடைக்கப்பட்ட வீடுகள் என்பதாக 2002ம் ஆண்டு ஜூன் மாதம் வரை எடுத்த கணக்கெடுப்பு, நகர்ப்புறத்தில் 11,199 வீடுகளையும், கிராமங்களில் 7,095 வீடுகளையும் சேர்த்து 18,942 என்று கூறப்பட்டது. ஜுன் மாதத்திற்குப் பிறகு நகர்ப்புறங்களில் 5,000 வீடுகளும், கிராமப்புறங்களில் 1,000 வீடுகளும் சேதமாக்கப்பட்டன. பா.ஜ.க. ஆட்சியாளர்கள் ஒரு சார்பாக நடந்து கொண்டாகள் என்பதாக, எல்லாத் திசையிலிருந்தும் கூக்குரல் கிளம்பியது.
2002ம் ஆண்டு மார்ச் 6ம் நாள், குஜராத் மாநில அரசு 1952ம் ஆண்டின் சட்டப்படி ஒரு மனிதர் ஆய்வு ஆணையம் ஒன்றை ஓய்வு பெற்ற நீதியரசர் கே.ஜி.ஷா தலைமையில் நிறுவியது. இந்த ஷா தான் ஏற்கனவே 1985ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த மதவாத வன்முறை வழக்கில் சிக்கலுக்குள்ளான நீதியை வழங்கினார் என்பது இன்னொரு கதை. ஆணையம் கோத்ரா வன்முறையையும், பிறகு நடந்தவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது வழிகாட்டலாகக் கொடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய எதிர்ப்புக் குரலுக்கு இணங்க 2002ம் ஆண்டு மார்ச் 21ம் நாள், நீதியரசர் நானாவதியை ஆணையத்திற்குத் தலைவராகப் போட்டு மாநில அரசு உத்தரவுப் பிறப்பித்தது. 1984ம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த சீக்கியர்கள் மீதான வன் முறையைப் பற்றிய ஆய்விற்கான ஆணையத்திற்கு இதே நானாவதி தலைமைத் தாங்கியிருந்தார். நானாவதி ஆணையத்தின் நோக்கத்தில், நடந்த வன்முறைகளில் முதல்வர், அமைச்சர் கள், மற்றவர்கள், அமைப்புகள் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் நடந்து கொண்ட விதங்கள் பற்றியும் ஆய்வு செய்ய இணைக்கப்பட்டிருந்தது. பெரிய அளவில் குஜராத் மாநில ஆட்சி யாளர்கள், நடந்து முடிந்த முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகளுக்கு குற்றம் சாட் டப்பட்ட ஒரு நிலைமை அப்போதே உருவாகிவிட்டது. அதையொட்டி 2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு, குஜராத் முதல்வர் பற்றியும், அவரது சங்பரிவார் பற்றியும் எழுந்துள்ள வன்முறைக் குற்றச்
சாட்டுகளை ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை போடுவதாக இருந்தது. அதையொட்டியே முந்திக் கொண்ட குஜராத் மாநில அரசு 2004ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, அதே அம்சங்களை நானாவதி ஆணையத்திற்கு உள்ளேயும் இணைத்துக் கொண்டு உத்தரவிட்டது. அதன்பிறகு நானாவதி ஆணையம் 13 முறை நீட்டிக்கப்பட்டது. 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் இந்த ஆணையத்தின் அறிக்கை தயார் செய்வதற்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. 2008ம் ஆண்டு மார்ச் மாதமே நீதியரசர் ஷா மறைந்து விட்டார். அவர் இடத்தில் நீதியரசர் அக்ஷாய் மெர்தா நியமிக்கப்பட்டார்.
நானாவதி ஆணையம் 2002ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதியே பொது மக்களை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. அதில் 46,494 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. 1,106 சாட்சிகள் கிடைத்தனர். சபர்மதி விரைவு வண்டியில் எரிந்து போன எஸ்6 என்ற எண்ணுள்ள பெட்டியை, பல முறை இந்த ஆணையம் நேரில் பார்த்தது. 2008ம் ஆண்டு செப்டம்பர் 18ல், இந்த இரு உறுப்பினர் ஆணையம் தனது முதல் பகுதி அறிக்கையை, முதல்வரிடம் கொடுத்தது. அதை 2008ம் ஆண்டு செப்டம்பர் 25ம் நாள் சட்டமன்றம் முன்னால் அரசு வைத் தது. ஆணைய அறிக்கையின் இரண் டாவது பகுதி 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் வைக்கப்படும் என்று அப்போது கூறினார்கள்.
மத்திய அரசு 2004ம் ஆண்டு செப்டம்பரில், யூ.சி பேனர்ஜி ஆணை யம் என்ற ஒன்றை நிறுவி, அதன் மூலம் எஸ்6 ரயில் பெட்டியில் தீ எரிந்தது எப்படி என்பதாக ஆய்வு செய்யக் கூறியது. ஆனால் அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு குஜராத் உயர்நீதிமன்றம் தடைபோட்டு விட்டது. நானாவதி ஆணையத்தின் முதல் அறிக்கைப்படி எஸ்6 ரயில்பெட்டி விபத்தால் எரிய வில்லை என்றும், பெட்ரோல் ஊற்றி நெருப்பிட்டதால் எரிந்தது என்றும் கூறுகிறது. வெளியே நின்ற கும்பல் தீயணைப்பு வண்டிகளையும், ரயில் பக்கத்தில் வரவிடாமல் தடுத்ததாகவும், அந்த கும்பலை ஹாஜி பிலால், அப்துல் ரகுமான் மற்றும் சிலர் தூண்டி விட்டதாகவும் அது கூறியது. காவல் துறை 140 லிட்டர் பெட்ரோலை ஊற்றியதாக கூறிய விளக்கத்தை சார்ந்தே அந்த முதல் அறிக்கை இருந்தது. சிலர் பெட்டிக்குள் ஏறியும் பெட்ரோல் ஊற்றியிருக்கலாம் என்பது அதன் சந்தேகம். அதேசமயம் மோடி மற்றும் அமைச்சர்கள் மீது சந்தேகம் இல்லை எனவும் அந்த முதல் அறிக்கை கூறியது.
மத்திய அரசு நிறுவிய பேனர்ஜி ஆணைய அறிக்கை, வெளியில் இருந்து யாருமே தீ வைக்கவில்லை என்றது. மின்சார காரணங்களாலோ, சமையல் காரணங்களாலோ நெருப்புப் பிடித்து, காற்றில்லாத சூழலில் மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அது கூறுகிறது. ரயில்வே நிலையத்தில் அந்நேரம் எந்தக் கூட்டமும் இல்லை என்பதாக பேனர்ஜி அறிக்கை கூறுகிறது. அன்றைய மத்திய அரசான, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக அரசாங்கத்தின் ரயில்வே அமைச்சர் கோத்ராவிற்கு வந்து பார்க்கவில்லை என்றும் அது கூறியுள்ளது. நானாவதி ஆணையத்தை தேசிய மனிதஉரிமை ஆணையமும் சாடுகிறது. நானாவதியின் முதல் அறிக்கை தேர்ந்தெடுக்கப்பட்ட, நோக்கத்துடன் கூடிய ஒன்று என அதன் சாடல் தெரிவிக்கிறது. அது உண்மைக்கு மாறானது என்றும் தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த நீதியரசர் ஜே.எஸ்.பெர்மா கூறியிருந்தார். அகதிகள் முகாம்களைக் கூட அரசியல் தலைவர்களோ, பெரிய அதிகாரிகளோ சென்று பார்க்கவில்லை என்பது இவரது குற்றச்சாட்டு. பதிவான செய்திகளின் படி கோத்ராவில் 1925, 28,46, 48, 50, 53, 80, 81, 85, 86, 88, 89, 90, 91, 92, ஆகிய ஆண்டுகளில் மதக்கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வரலாற்றை நானாவதி கண்டு கொண்டதாக தெரியவில்லை. கரசேவகர்களை ஏற்றிக் கொண்டு பல ரயில்கள் வந்தாலும், ஏன் சபர்மதி எக்ஸ்பிரசை, பிப்ரவரி 27ல் அதிலும் எஸ்6 பெட்டியை நெருப்பிட தேர்வு செய்தார்கள் என்று விளக்க நானாவதி தயாராயில்லை. காயம்பட்ட பயணிகளிடம் விசாரித்த பேனர்ஜி ஆணையம், வெளியில் இருந்து எறியப்பட்ட எரிபொருள் என்ற காரணத்தை மறுத்துள்ளார். கோத்ராவில் 59 கரசேவகர்கள் மரணத்திற்கு உண்மைக்காரணம் என்ன என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் நானாவதி தனது முழு அறிக்கையை வைப்பதாக இருந்தது. இதுவரை 13 நீட்டிப்புகளை பெற்ற அந்த ஆணையம், எந்தவொரு அறிக்கையையும் இந்நாள் வரை முன்வைக்கவில்லை. காலாவதியான அறிக்கையாக நானாவதி அறிக்கை மாறி விட்டதா? பா.ஜ.க.போல காங்கிரஸ் கட்சியும், ஏதாவது ஒரு வடிவத்தில் இந்துத்துவாவை வழி மொழிவதால், தாமதத்தை தங்கள் கொள்கையாக கொண்டிருக்கிறார்களா? இதுவே பொதுமக்களின் சந்தேகம்.