Thursday, March 18, 2010

ஆஸ்திரேலியா தமிழர்களுக்கு பாதுகாப்பான நாடு: இந்தியர்களுக்கு இல்லையா?

ஆஸ்திரேலிய நாட்டில் படிக்கச்சென்ற இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதாகச் செய்திகள் கூறப்படுகின்றன. இது இனவெறித் தாக்குதல் என்பதாகவும் வருணிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அரசு தொடர்ந்து இதை மறுத்து வருகிறது. இந்திய மாணவர்கள் மீது நடந்த வன்முறை தாக்குதல்களில் சில இனவெறித் தாக்குதல்களும் நடந்துள்ளன என்றும், ஆனால் எல்லாத் தாக்குதல்களும் இனவெறித் தாக்குதல் அல்ல என்றும், ஆஸ்திரேலிய அரசு நிர்வாகம் கூறி வருகிறது. இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் பீட்டர் வர்கீஸ், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடக்கின்ற வன்முறைகள் பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதிலும் முக்கியமாக இலங்கைத் தமிழர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, ஆஸ்திரேலிய தூதர் நமது முதல்வரிடம் பேசியிருக்கிறார் என்பது தான். தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு, அனைத்து நாட்டு விதிகள் படி ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தருவதற்கான வாய்ப்புக்களைப் பற்றியும், அவர் அப்போது எடுத்துச் சொன்னார் என்பது ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. சட்டவிரோத நுழைவுகளைத் தான் தாங்கள் உற்சாகப்படுத்த முடியாதே தவிர, நியாயமான அகதிகளை சட்டப்பூர்வமாக அதிகமாக எடுத்துக்கொள்ள ஆஸ்திரேலியா தயார் என்பதையும் அப்போது கூறியுள்ளார். இது முக்கியமாக கவனிக்கத்தக்க ஒரு செய்தி. ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகமான பாதிப்புக்கு மத்தியில் உழன்றுக் கொண்டிருக்கும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை கொடுக்கலாமா என்பது பற்றி ஒரு விவாதம் இங்கே அரசியல் அரங்கில் எழுந்தது. அவர்கள் வேண்டுவது பத்தாண்டுகளுக்கான நிரந்தர பாஸ்போர்ட் தான் என்பதையும் கூட, எடுத்துச்சொல்லியிருந்தார்கள். இத்தகையச் சூழலில் ஆஸ்திரேலிய அரசே நேரில் வந்து இதுபோன்ற அடைக் கலம் கொடுப்பதற்கு சிவப்பு கம்பளம் விரிப்பது என்பது, உலகத்தமிழர்கள் மத்தியில் ஆறுதலான ஒரு சொல்தான். அதனால் தமிழர்கள் அனைவரும் இந்த நேரத்தில், ஆஸ்திரேலியாவில் நடப்பதாகக் கூறப்படும் இனவெறி தாக்குதல் பற்றி அதாவது இந்திய எதிர்ப்பு தாக்குதல் பற்றி உண்மையான நிலவரங்களைத் தெரிந்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களில், தென்னிந்திய மாணவர்கள் மீது குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்கள் மீது எந்தத் தாக்குதலும் இதுவரை நடந்ததில்லை. அப்படியானால் அங்கே என்னதான் நடக்கிறது. கிட்டத்தட்ட 1991ம் ஆண்டிலிருந்து இந்திய மாணவர்களுக்கு, கல்விக் கற்க ஆஸ்திரேலிய விசா கொடுக்கப்படுகிறது. வணிகம் பற்றிய உயர்க் கல்வி படிப்பிற்காக இங்கிருந்து
செல்லும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவோ, உயர்கல்வி முடித்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது. அதன்பிறகு 2001ம் ஆண்டிற்குப் பின் கல்விக்கான விசா நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. பட்டப்படிப்பு படிப்பதற்கே இங்கிருந்து மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 2004ம் ஆண்டையொட்டி அதுவும் கூட தளர்த்தப்பட்டது. சாதாரணமான படிப்புகளாக இருக்கும் சமையல்கலை, பீங்கான் சாமான் செய்தல், வெல்டிங், கணினி வேர்டு டாக்குமென்ட், தாள் கலைகள் போன்ற குடிசைத் தொழில் மட்டத்திலான கல்விகள் கற்க செல்லும் மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். 12ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும் என்ற நிபந்தனையுடன் பல மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட கல்வி கற்றுக் கொடுக்க, வீட்டிலேயே அலுவலகம் மற்றும் கல்விக் கூடத்தை உருவாக்கியுள்ள போலி கல்வி தாளாளர்கள் அதிகமாகத் தொடங்கினர். அவர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவும், குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த பட்டேல்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய கல்விக்கான விசா கொடுப்பத்தில் அரசு அறிவித்த தளர்வு தான், ஆஸ்திரேலிய அரசு செய்தத் தவறு. அதிகமாக பணம் வரும் என்பதனால் இத்தகைய தளர்வுகளை அனுமதித்திருந்தார்கள். அதன் விளைவு பல்லாயிரக்கணக்கில் அங்கே சென்ற வடஇந்திய மாணவர்கள், அரசு அனுமதித்த வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை என்பதையும் செய்துவிட்டு, சட்டவிரோதமாக மேலும் 20 மணி நேர வேலையை ஒவ்வொரு வாரமும் செய்து, பொருள் ஈட்டினார்கள். ஒரு மணி நேரத்திற்கு வேலைச் செய்தால், 15 ஆஸ்திரேலிய டாலர் சம்பளம் கிடைக்கும். அது இந்திய பணம் ரூ.41க்கு சமம். பல்கலைக்கழகங்களில் படிக்கச் சென்றால் ரூ.15 லட்சம் செலவாகும். போலி நிறுவனங்களான சிறிய வேலைகளுக்கு படிக்கச் சென்றால் ரூ.5 லட்சம் மட்டுமே செலவாகும். ஆங்கிலம் தெரியாத, இந்தி மட்டுமே பேசத் தெரிந்த வடஇந்திய மாணவர்கள், இரண்டே வருடங்களில் சம்பாதித்து, சேமிக்கத் தொடங்கினார்கள். ஒரு அறையில் சட்டப்படி ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்ற அந்த நாட்டு விதியை மீறி நாலு பேர் வரை தங்கினார்கள். இரண்டு பேர் தங்கும் அறைகளில் 10 பேர் தங்கினார்கள். வடஇந்திய கிராமப்புறத்து இளைஞர்கள் தாங்கள் வளர்ந்து வந்த இந்திய பண்பாட்டுப் படி, அந்த நாட்டு பண்பாட்டைப் புரியாமல் குழு, குழுவாக அலைந்தார்கள். 10,000 பேருக்குப் பதில், 1,00,000 பேர் வந்ததால், ஆஸ்திரேலியாவிற்கு அதிக பணம் கிடைத்தது. ஆனால் சமீபத்திய நடவடிக்கைகள் புதிய குழப்பத்தையும், முத்திரையையும் கொடுத்து விட்டது.
இந்தியர்கள் தங்களை பிறர் மதிக்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் அங்கே விலைக்கூடிய கைப்பேசி, ஷûக்கள், வாட்ச்கள், கார்கள், லேப்டேப்புகள் ஆகியவற்றுடன் பவனி வந்தார்கள். வெள்ளைக்கார பெண்களையும், ஆண்களையும் பார்த்து முறைத்துப் பார்த்தார்கள். இதுவே தனிநபர் உரிமைகள் சமூகத்தைப் பாதிக்கக் கூடாது என கருதும் ஆஸ்திரேலியர்களுக்கு எரிச்சலை உருவாக்கும். வெயில் காலத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அங்கே கொளுத்தும் வெயிலைப் பார்க்கலாம். அப்போது வெள்ளைக்காரர்கள் கடற்கரைக்கு அரைக்கால்
சட்டையுடனோ, ஜட்டியுடனோ, பாதி உடையிலோ வருவது வழக்கம். இதற்கு நேர்மாறாக வடஇந்திய இளைஞர்கள் ஜீன்ஸ், முழுக்கைச் சட்டை, ஷûக்கள்
சகிதம் 10 பேராக நடமாடுவார்கள். இந்தி மொழி மட்டுமே சத்தமாகப் பேசுவார்கள். இதுவே அங்குள்ள பொதுச் சூழலை அதிரவைக்கும்.
நடந்த வன்முறைகளின் பட்டியலை ஆய்வுச் செய்தால், நள்ளிரவில் வேலை முடித்து தனியாக வந்த இந்திய இளைஞனை காசுக்காக அடித்த பொறுக்கிகளின் செயல் என்ற ஒரு வகை குற்றம் புரியப்படும். பச்சிளம் குழந்தையை கொலை செய்ததாக வந்த சமீபத்திய குற்றச்சாட்டு, இந்திய வாடகைக் கார் ஓட்டுனரே செய்தார் என்றும் அம்பலமாகியுள்ளது. தனது காருக்கு காப்பீடாக 10,000 டாலர் கிடைக்கும் என்பதற்காக, வடஇந்திய மாணவர் தீ வைத்த சம்பவமும் அம்பலமானது. லெபனான் நாட்டு இளைஞர்களுக்கும், வடஇந்திய இளைஞர்களுக்கும் பலமுறை போதையில் சண்டை நடந்துள்ளது.
தமிழ்மொழி அனைத்து ஆஸ்திரேலிய பள்ளிகளிலும், 2வது மொழியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. அது ஈழத் தமிழர்கள் எழுப்பிய உரிமைக் குரலால் கிடைத்த பரிசு. முருகன் கோவில், வெங்கடேச பெருமாள் கோவில், துர்காதேவி கோவில் ஆகியவை அரசு நிதியிலேயே கட்டப்பட்டுள்ளன. பாலஸ்தீனர்களுக்காக மசூதிகளையும் அரசு கட்டிக் கொடுத்துள்ளது. அங்கு காவல்துறை ஒரு பைசாக் கூட லஞ்சம் வாங்குவது இல்லை.
இத்தனை வன்முறைகள் நடந்ததாக வருணிக்கப்பட்டாலும், எந்த இந்திய மாணவனும் இந்தியாவிற்கு திரும்பி வரவில்லை. இப்போது ஆஸ்திரேலியா அரசு கல்வி விசாவில் உள்ள தளர்வுகளை நிறுத்தி விட்டது. பட்டதாரிகளை மட்டும் உயர் கல்விக்காக எடுப்பது என முடிவு செய்துள்ளது. போலி இந்திய கல்வி வியாபாரிகளது கூடங்களை மூடிவிட்டது. அதனால் வடஇந்திய போலி வியாபாரிகள் பாதிக்கப்படுவதால், அவர்கள் இந்திய ஊடகங்களில் பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கலாம். அதற்கு இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும் பலியாகயிருக்கலாம்.
இதே நேரத்தில் ஈழத் தமிழர்கள் அங்கே ஜனநாயக உரிமைகளுடன் செயல்பட முடிகிறது. சிட்னியிலும், மெல்போர்னிலும், கேன்பராவிலும் 10,000 பேர் கலந்துக் கொள்ளும் பேரணிகளை, ஈழத்திற்காக நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் 2,000 பேர் வரை வெள்ளைக்காரர்களே, தோழமைக் காட்டி கலந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே ஆஸ்திரேலியா தமிழர்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதில் இரண்டாவது கருத்து உருவாக வழியில்லை. வடஇந்திய இளைஞர்களின் பண்பாட்டு செழிப்பையும், மொழி கற்றலையும் மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசிடம் இருக்கிறது.