Wednesday, March 17, 2010

நாடாளுமன்றத்தில் இழுபறியாகும் சட்டமுன்வடிவுகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றோடு நிறைவுற்றது. மீண்டும் ஏப்ரல் 12ம் நாள் கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறை நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியமான சட்டமுன் வடிவுகள் தாக்கல் செய்யப்படும் புதிய சூழல் உருவானது. 14 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்த, பெண்கள் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு, தனது மாநிலங்களவை தாக்கலிலேயே பெரும் புயலைக் கிளப்பி விட்டது. அதற்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, என்றும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் எதிர்த்து முழக்கமிட வும், வெளிநடப்பு செய்யவும் என்பதாக புதிய கலகலப்பு, அந்த கட்டிடத்தில் எதிரொலித்தது. அதை விட அதிகமான தாக்கத்தை, பெண்கள் இடஒதுக்கீட்டின் சட்டமுன்வடிவு ஏற்படுத்தியது. மாநிலங்க ளவையில் அந்த முன்வடிவை தாக்கல் செய்வதையே எதிர்த்து சில எதிர்கட்சிகள் கிளர்ச்சி செய்தன. குடியரசு துணைத் தலைவர் அன்சாரியின் மைக் பறிக்கப் பட்டது. பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டமுன்வடிவு பறிக்கப்பட்டு, கிழிக்கப் பட்டது. இந்த முறையில் போராடினால் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டமாவதை தடுத்துவிடலாம் என சில நாடாளுமன்ற கட்சிகள் நினைத்தார்கள் என்றால் அது ஒரு ஆச்சரியமான செய்திதான். அதற்காக சில உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டார்கள். மன்னிப்புக் கேட்டால் மீண்டும் அவைக்கு வரலாம் என்ற குடியரசு துணைத் தலைவரின் அறிவிப்பைக் கூட ஏற்பதற்கு சிலர் தயாராக இல்லை. இந்த அளவுக்கு ஆண் உறுப்பினர்களிடமிருந்து, பெண் இடஒதுக் கீட்டிற்கு எதிர்ப்பு என்பது எந்த ஒரு தாக்கத்தையும், இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு நாடாளுமன்ற அவை விவகாரங் கள், நாட்டு மக்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
மாநிலங்களவையில் வாக்குக்கு விடப் பட்ட சட் டமுன்வடிவு, ஒரே ஒரு எதிர்ப்பு வாக்கை மட்டும்தான் பதிவு செய்தது என்பது இன்னொரு செய்தி. இத்தகைய செய்தி எந்தவொரு புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு, மக்களவையில் எதிர்ப்புக் கொடுப்போம் என்ற செய்தியை எதிர்ப்பவர் கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சில எதிர்கட்சிகள் விவாதம் இல்லாமல் எப்படி நிறைவேற்ற முடியும் என்ற கேள்வியை எழுப்பினார்கள். அதையொட்டி அனைத்துக் கட்சிகளையும் கூட்டி விவாதம் நடத்திவிட்டு, மக்களவைக்கு கொண்டு வருவோம் என அமைச்சர் உறுதி கூறியுள்ளார். அதன் பிறகு பல எதிர்ப்பாளர்கள் உடன்பட்டிருக்கிறார் கள். இப்போது தள்ளிவைக்கப்படும் நாடாளு மன்ற அவை, ஏப்ரல் 12ம் நாள் கூடும் என்கிறார்கள். அப்போதுதான் இந்த பெண்கள் இடஒதுக்கீடுப் பற்றிய அடுத்தகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப் படும். அதற்குள் ஆளும் கூட்டணி, அனைத்து கட்சிகளையும் இணங்க வைத்து அமைதியான முறையில் அதை நிறைவேற வைத்தால், அதுவே பெரும்பாடு.
இந்த சூழ்நிலையில் நவம்பர் 20ம் நாள் மத்திய அமைச்சரவையின் எதிர்ப்பற்ற ஒப்புதலைப் பெற்றுக் கொண்ட, அணு உலை விபத்துகளுக்கான இழப்பீட்டை, பொதுமக்கள் மேல் சுமத்தக்கூடிய இன்னொரு சட்டமுன்வடிவு எதிர்பார்க்கப்படு கிறது. ஊடகங்களில் மற்றும் எதிர்க்கட்சி களில் எதிர்ப்பு முழக்கம் வந்தால், திங்கட்கிழமை அதைக் கொண்டு வராமல், ஆளுங்கட்சி சுதாரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அடுத்த மாதம் அமெரிக்க செல்ல இருக்கும் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், அந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றிய கையோடு சென்றால் மட்டும்தான் மரியாதை என்று எழுதுகிறார்கள். யாருக்கு யாரிட மிருந்து மரியாதை என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங் களிடமிருந்து, மன்மோகன் சிங்கிற்கு கிடைக் கும் மரியாதைதான் இந்த நாட்டிற்கான பெருமையா? அமெரிக்காவிடமிருந்து 10,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அணு உலைகளை வாங்கிக் கொள்வதாக, வாஷிங்டன்னுக்கு இந்திய அரசு வாக்குறுதி கொடுத்ததால், இத்தனை அவசரம் காட்டப்படுகிறது என்று சி.பி.எம். பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறுகிறார். ரஷ்யாவுடனும், பிரான்சுடனும் அணு உலைகளை வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும், அந்த நாடுகள் அமெரிக்கா கேட்பது போல, அணு உலைகளை விலைக்கு வாங்குவதற்கு முன்பே, இழப்பீட்டுத் தொகையை பொது மக்கள் பொறுப்பேற்கும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்க வில்லை என்பது காரத்தின் வாதம். கடந்த ஆண்டே அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார உதவிச் செயலாளர் ராபர்ட் பிளேக், இதுபோன்ற ஒரு சட்டத்தை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் என மத்திய வெளிவிவகாரக் குழுவிடம் கூறிவிட்டார் என்ற செய்தி, மேலும் மத்திய அரசு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இப்போது இடதுசாரி கட்சிகள் மற்ற எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவை, இந்த சட்டமுன்வடிவுக்கு எதிராகத் திரட்டி வருகின்றனர். இந்த சட்டமுன்வடிவு நாட்டினுடைய இறையாண் மையையே கேள்விக்குறியாக ஆக்கக் கூடியது. அடுத்து ஒரு சட்ட திருத்தம் அறிமுகப்படுத்தப் படுவதற்காகத் தயாராக இருக்கிறது. அதுவும் பெண்கள் சம்பந்தப் பட்ட ஒரு சட்டத்திருத்தம்தான். கற்பழிப்பு என்ற சொல்லை, பாலியல் தாக்குதல் என்பதாக மாற்ற வேண்டும் என்று கூறக்கூடிய சட்டம் முன்வடிவு. இதையும் பெண்களுக்கு ஆதரவான ஒன்று என்ற எண்ணத்தில், லாலுவும், முலாயமும் எதிர்ப்பார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கற்பழிப்பு என்ற சொல், பல ஆண்டுகளாக இருந்து வரக்கூடியது என்றும், அதை மாற்றக் கூடாது என்றும் அவர்கள் வாதிடலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எப்படி பெண்கள் இடஒதுக்கீடு சட்டமுன் வடிவு பொதுவான ஆதரவைப் பெற்றதோ, அதே போல இந்த சொல் மாற்றும் திருத்தமும் ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு நடைமுறையில் தேர்தல்க ளிலும், நிறுத்தும் வேட்பாளர்களிலும் செயல்பட்டு வருவதால், உள்ஒதுக்கீட்டிற் கான மாபெரும் கிளர்ச்சி எழவில்லை. அதுபோல கற்பு என்ற சொல்லை, இருபாலருக்கும் பொதுவென வைப்போம் என்று கூறிய பாரதியும், கற்பு என்ற சொல் பெண்களை அடிமைப்படுத்துவதற்கான சொல் என்று கூறிய பெரியாரும் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதால், இங்கே பெரும் எதிர்ப்பு எழ வாய்ப்பில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டின் பிரபல ஊடகங்கள் பாலியல் வன்முறை, பாலியல் தாக்குதல், பாலியல் வன்புணர்ச்சி ஆகிய சொற்களைப் பயன் படுத்தி வருவதாலும், இங்கே எதிர்ப்பு க்கு அதிக வாய்ப்புகள் இல்லை. ஆனால் கிரிமினல் புரொசீஜர் கோடு என அழைக்கப் படும் குற்றயியல் நடைமுறைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது என்பதற்கான சட்டமுன்வடிவு வர இருக்கிறது. அதில் 7 ஆண்டு தண்டனைப் பெறக்கூடிய குற்றங்களுக்கான புகார்களின் மீது, ஒருவர் கைது செய்யப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற திருத்தமும், கைது செய்யப்பட்டாலும், கைது செய்யப்படா விட்டாலும் அதற்கான காரணத்தை குறிப்பிட்ட அதிகாரி விளக்க வேண்டும் என்ற திருத்தமும் முக்கியமானவை. மாலிமத் குழுவின் இந்தப்பரிந்துரை வழக்கறிஞர்கள் மத்தியில் கூட, எதிர்ப்பை உருவாக்கியது. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்டால், இதுவரை கடுமையான குற்றப்புகார்களில் கூட, தப்பித்துவிடும் பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சிக்கலாகி விடும். 150 ஆண்டு வரலாறு கொண்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தில், இப்படி சில மாற்றங்கள் கொண்டு வருவதே கூட, பாலினப் பார்வையில் வந்துள்ள சிறிய மாற்றம்தான்.
இன்னொரு சட்டமுன்வடிவு மத்தியமைச் சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்தியக் கல்வி வளாகங்களில், அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் வருவதற்கு அனுமதி கொடுப்பது என்ற ஒரு முடிவு, இப்போது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. 50 கோடி ரூபாயை முன்பண மாகக் கட்டக்கூடிய, அந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உள்ளே நுழைவது, இந்த நாட்டின் கல்வியை எங்கே கொண்டு செல்லும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. கல்வியை வியாபாரமாக்கி தனியாருக்கு விற்றதனால், ஏற்கனவே கிளம்பியுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்விச் சூழலைக் கெடுத்து வருகின்றன. சுயநிதி கல்விச் சாலைகளைச் சார்ந்து இருக்கும் இந்த நாடு, நாட்டு முன்னேற்றத்திற்குக் கல்வியை பயன்படுத்தவிடாமல் தடுக்கின்ற நிலையில் உள்ளது. இந்நேரத்தில் அன்னியப் பல்கலைக் கழகங்கள் நாட்டிற்குள் நுழைந்தால், கல்வி நிலை என்னாகும்? இப்படி எல்லாமே இந்திய நாட்டின் இறையாண்மையை உடைக்கின்ற செயல் திட்டங்களாக வருவதை, பொது மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
சமூக முன்னேற்றத்திற்கான பாலின உரிமைகளுக்கான சட்டமுன்வடிவுகளும், அன்னிய நாட்டு நிறுவனங்களுக்குச் சொந்த நாட்டை அடகு வைக்கும் சட்டமுன் வடிவுகளும் ஒரே நேரத்தில் கொண்டு வரும் கூட்டணி ஆட்சி, இந்திய மக்கள் மீது தந்திரமாக ஒரு தாக்குதலை நடத்துகிறதா என்று கேள்விக் கேட்கத் தோன்றுகிறது.