Saturday, March 13, 2010

ஜெயிக்கற சேவல் என் சேவல் என்பதா?

ஒரு வாரமாக நடந்து வரும் உச்சகட்ட விவாதம், 14 ஆண்டுகளாக ஓரங்கட் டப்பட்ட விவாதம் தான். ஆனாலும் ஒரு வாரமாக தவிர்க்க முடியாமல் முக்கிய நீரோட்ட விவாதமாக அது ஆக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மற்றும் அனைத்து சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற சட்ட முன்வடிவு, பாதிக் கிணறைத் தாண்டியிருக்கும் நேரம் இது. அதாவது முக்கி, முனகி, முழக்கமிட்டு, முடிவாக மாநிலங்களவையில் பெய ரளவிற்கான ஒற்றைவாக்கு எதிர்ப் புடன், பெண்கள் சட்டமுன்வடிவு அரங்கேறி யிருக்கிறது. ஆனாலும் கூட இது பாதிக் கிணறு தான். மீதிக்கிணறு பாழ் கிணறு என்று சொல்வோரும் உண்டு. ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை சட்ட முன்வடிவாக கொண்டு வரும்போது, அதை எதிர்த்து கடுமையாக பேசி வந்த சில எதிர்க்கட்சிகள், பல்வேறு முறைகளில் ஆளும் கூட்டணிக்கு மிரட்டல்கள் விடுத்துப் பார்த்தனர். அப்போது கூட மடங்காமல் அந்த சட்டமுன்வடிவை விடாப்பிடியாக, பெரிய எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு, ஆளும் கூட்டணி மாநிலங்களவையில் தாக்கல் செய்து அதில் வெற்றியும் பெற்றது. ஏதாவது ஒரு முறையில் எதிர்ப்பதற்கு நியாயங்களைத் தேடிவந்த அந்த சிறிய எதிர்க்கட்சிகள், கடைசியாக தாங்களும் பெண்களுக்கான இடஒதுக் கீட்டுக்கு ஆதரவாளர்கள் தான் என பேசத் தொடங்கிவிட்டனர். இத்தகைய மனோ பாவம் தான் பொதுவாக சமூகத்தில் நிலவு கிறது. அதையே சில ஊடகங்களும் கூட எதிரொலிக்கின்றன.
மேற்கண்ட மனோபாவம் என்பது பிரபலமடையும் ஒரு விவகாரத்தை, நேரடியாக எதிர்ப்பதற்கு மனத்தளவில் திராணியில்லாமல், அதில் அங்கே ஓட்டை, இங்கே ஓட்டை என புலம்புவது நாம் காணும் சமூகத்திலுள்ள பழக்கமாக உள் ளது. அதுவே தான் இங்கே பெண்கள் இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரச்
சனையிலும் நடந்துள்ளது. பொதுவாக நமது நாட்டில் அரசாங்கம் ஒரு செயலை செய்தால், அதை ஏற்றுக் கொள்வது என்ற மனோபாவம் மேலோங்கி நிற் கிறது. இது கருத்தாளர்களுக்கோ, அரசியல் வாதிகளுக்கோ, ஊடகக்காரர்களுக்கோ கருத்துறுதி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
உதாரணமாக ஒரு பிரபலமான மடாதி பதி, ஒரு கொலை வழக்கில் தமிழ்நாட்டு காவல்துறையால், அண்டை மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரு டைய மடம் இருக்கின்ற நகரில், ஒரு கோவில் மேலாளர் கொலை செய்யப்பட்ட போது, அதை சில ஊடகங்கள் மடாதி பதிக்கு சம்பந்தப்படுத்தி முதலில் எழுதின. அப்போது தமிழ்நாட்டில் இருக்கும் பக்தர்கள் யாரும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. ஏற்காதது மட்டுமல்ல விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. அதன்பிறகு அரசு செயல்படத் தொடங்கியது. எதிர்பாராத ஒரு நிலையை அன்றைய அரசாங்கத்தின் தலைமை எடுத்தது. ஆதாரம் இருக்குமானால் எத்தகைய பிரபலமானவர்களும் கைது செய்யப்படலாம் என்ற நிலைப்பாடு, காவல்துறையை ஊக்குவித்தது. அதை யொட்டி காவல்துறை விரைந்து செயல் பட்டது. அதன் விளைவாக அண்டை மாநிலத்திற்கு சென்றிருந்த மடாதிபதி, அங்கேயே கைது செய்யப்பட்டார். இது அவர் தப்பித்துச் செல்ல விடாமல் எடுத்த முயற்சியாக இருக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனோநிலை எப்படி மாறியது என்பது தான் நமது விவாதம். அரசாங்க நடவடிக்கைக்குப் பிறகு, பொதுமக்கள் கருத்து முழுமையாக மடாதிபதிக்கு எதிராகத் திரும்பியது. தாங்கள் போற்றிப் பாராட்டி வந்த ஒரு பிரபலத்தை, அரசாங்கம் குற்றம் சாட் டிய பிற்பாடு, அதையொட்டி நடவ
டிக்கை எடுத்ததற்குப் பிறகு, உள்ளதில் பிரபலமான அரசாங்கத்தின் கருத்திற்கு அல்லது காவல்துறையின் கருத்துக்கு பொதுமக்கள் மாறத் தொடங்கினார்கள். இது சர்க்கார் சொன்னால் எல்லாம் சரிதான் என்ற மனோபாவம். இதேபோலத் தான் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசாங்கம் எடுக்கின்ற நிலைப்பாடுகளை ஒட்டியே சிந்திப்பதும், அதைச் சார்ந்தே தங்கள் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதும் ஒரு பழக்கமாக இருக்கிறது. இத்தகைய மனப்பாங்கு தான் இப்போது பெண்கள் இடஒதுக்கீடு சட்ட முன் வடிவிலும் செயல்படுகிறதோ என்ற கேள்வி நமக்கு எழுந்துள்ளது.
ஏனென்றால் உள்ஒதுக்கீடு பேசியதன் மூலம், சட்டமுன்வடிவின் தாக்கலை எதிர்த்த வடஇந்தியத் தலைவர்கள், தாங்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு இல்லை என்றும், நிறைவேறிய பிறகாவது தாங்கள் கேட்கும் சமூகங்களுக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் என்றும் கூறத் தொடங்கியுள்ளனர். அரசியல்வாதிகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறலாம். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் மாறிக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாக அரசியல்வாதிகளை வேண்டுமானால் பலரும் குறை கூறலாம். ஆனால் ஊடகங் களின் கருத்துக்கள் அப்படியிருக்கக் கூடாது என்பது தானே பொதுவான எதிர் பார்ப்பு?
கட்சிகளில் அடிமட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை பெண்களுக்கான சரிபாதி இடங்களை கொடுத்துவிட்டு, பிறகு பெண்கள் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவை கொண்டு வந்தால் மட்டும் தான் அது பலனளிக்கும் என்று பெண்களுக்குச் சாதகமாக இப்போது சில ஊடகங்கள் பேசுகின்றன. தொடக்கத்திலிருந்தே தற்காலிக சட்டமுன்வடிவு எதிர்க்கப்பட வேண்டுமென்றோ, திசைதிருப்பல் என்றோ, குறைபாடுகள் கொண்டது என்றோ அதை எதிர்த்து கூறி வந்தவர் களாக அவர்கள் இருக்கின்றனர். வண் டிக்கு முன் மாட்டைக் கட்டுவதா, அல்லது மாட்டுக்கு முன் வண்டியைக் கட்டுவதா என்ற கேள்வியாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் இன்று ஆணாதிக்க சமூகம் நிலவி வருவது மறுக்க முடியாத ஒரு செய்தி. எந்தவொரு பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் நீர்த்துப்போக வைக்க, அந்த ஆணாதிக்கம் தயாராக இருக் கிறது என்பதும் கூட ஊரறிந்த ரகசியம். அப்படியிருக்கையில் முழுமையான தீர்வை முன்வைத்து, அரை குறையாக இருந்தாலும் எடுத்து வைக்கப்படும் முதல் அடியை அல்லது படியை எதிர்ப்பது எத்தகைய போக்கு என்ற கேள்வி எழுகிறது.
கட்சிகள் பெண்களுக்கான இடஒதுக் கீடு செய்தால் போதும் என்றும், நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளில் அது தேவையில்லை என்றும் ஒரு கருத்து முதலில் உலாவியது. அதை முன் னாள் நீதியரசர் ராஜிந்தர் சச்சார் சரியாக அம்பலப்படுத்தினார். அதன்பிறகு இப்படி சுற்றி வளைத்து அதே கருத்து வருகிறதா என்று தெரியவில்லை. இதற்கிடையில் ஆணாதிக்க மனோபாவத்தில் தவிர்க்க முடியாமல் இன்றைய சமுதாய அமைப்பில் இயங்கி வரும் கட்சிகளிலேயே, பெண் ணுரிமைக்கான நியாயமான குரல் எழுந்து வருவதையும் கவனிக்கத் தவறக் கூடாது. உதாரணமாக ஒரு கட்சியின் தலைமை கொடுத்திருக்கின்ற அறிக்கையில் பாலினப் பாகுபாடு நிகழ்வுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பெண்கல்வி மறுக்கப் படுவது சுட்டிக் காட்டப்படுகிறது. பெண்களை வீட்டுக்குள்ளே முடக்க ஆணாதிக்கம் திட்டம் தீட்டியுள்ளதாக பகிரங்கமான அறிவிப்புகள் வெளிவருகின்றன. அந்த அளவிற்கு இந்த இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு, ஒரு பொதுமக்கள் கருத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. தலைமை பெண்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்க திட்டமிட் டுள்ளது. தி.மு.க. தலைமையோ ஏற்கனவே பெண்களுக்கான அரசியல் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கிவிட்டது. இவையெல்லாம் நல்ல தொடக்கங்கள் என்று தான் ஊடகவியலாளர்கள் சிந்திக்க வேண்டும். மாறாக தங்கள் கருத்துக்களை வாதத்தில் வெல்ல வைப்பதற்காக, எழுதத் தொடங்கினால் அந்த எழுத்துக் கள் நிலைத்து நிற்பது கடினமாகிவிடும். பெண்ணியச் சிந்தனைகளை ஆண்கள் ஏற்பது கடினமான ஒரு முயற்சி தான். நமது நாட்டில் நிலவுகின்ற சாதி மற்றும் மதப் பிடிப்புகள், பெண்களை சமமாகக் காண்பதற்குத் தடையாக மட்டுமே இருக்கின்றன. அதனால் அப்படிப்பட்ட செல்வாக்கிலிருந்து குறிப்பாக ஆண்கள் விடுதலையாவது கடினமானது என்பது நமக்கும் புரிகிறது.
ஆனால் இங்கே நடக்கின்ற நாடகம் வேறு மாதிரி இருக்கிறது. கிராமத்தில் நடக்கின்ற சேவல் சண்டையில், இரண்டு புறமும் பந்தயம் கட்டுவார்கள். அதில் ஒருவன் ஜெயிக்கற சேவல், என் சேவல் என்பானாம். இதுதான் நமக்கு நினை வுக்கு வருகிறது.