Wednesday, March 3, 2010

வரலாற்றில் உருவாக்கப்பட்ட சாதியம், மறுதலிக்கப்படுகிறதா?

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கடை சியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வுரை வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக அம்பேத்கர் நோக்கில் சாதிகளுடைய தோற்றம் பற்றி விரி வாகக் கூறப்பட்டது. அம்பேத்கர்
சாதியத்தை அழிப்போம் என்று எழு திய நூல் ஆழமான அடித்தளத்தை முன்வைக்கிறது. சாதியம் ஒரு நோய் என்று ஏற்கப்பட்டாலும், அது இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் சிவசுப்பிரமணியன் சிலவற்றை கோடிட்டு காட்டுகிறார். 1946ம் ஆண்டு இந்தியாவில் சாதிஅதன் செயல்பாடு தோற்றம் என்ற நூலை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹட்டன் எழுதியதையும் மேற்கோள் காட்டினார். இதுவரை 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இந்தியாவில் உள்ள சாதிகள் பற்றி வெளியாகியுள்ளன. சமூகக் கொள்கைகளின் அடிப்படையில்
சாதிகளை ஆய்வு செய்யும் தன்மையுள்ள நூல்களை மட்டும், இவற்றில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் மற்ற நூல்கள் ஒவ்வொரு சாதியையும், வானம் வரை உயர்த்தி எழுதப்பட்ட நூல்களாக இருக்கின்றன. உதாரணமாக தமிழ்நாட்டில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள் என்பது வரலாறு. தங்கள் சாதியை மன்னர் பரம்பரை என்று
சொல்லிக் கொள்ள, ஒவ்வொரு சாதிக் காரர்களும் விரும்புகிறார்கள். இதுதான் பெருமைக்குரியது என்றும் நம்புகிறார்கள். அதனால் சேர, சோழ, பாண்டிய மன்னர்களாக தங்கள் சாதியை சேர்ந்த வர்கள்தான் ஆண்டார்கள் என்று சொல் லிக் கொள்வதில் அத்தனை விருப்பம். அத்தனை வேகம். அதன் விளைவாக ஒரு
சாதியைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் தனக்கு நெருக்கமான பேச்சாளரிடம், நிதி கொடுத்து தங்கள் சாதியின் வரலாறு பற்றி ஆய்வு செய்யச் சொன்னாராம். அவரும் மூவேந்தர்களும் தங்கள் சாதிதான் என்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதி விட்டாராம். அந்த குறிப்பிட்ட சாதியை எதிர்த்து தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்த விரும்பிய இன்னொரு
சாதியின் திடீர் பணக்காரர் ஒருவர், தங்கள்
சாதியின் படித்த ஒருவரை அழைத்து வந்து, லட்சங்கள் செலவழிக்க தயார் என்றும், தங்கள் சாதிதான் மூவேந்தர்களாக ஆண்டு வந்தவர்கள் என்பதாக ஒரு வரலாற்று ஆய்வை எழுதச் சொல்லிப் பணித்தாராம். இப்படித்தான் இங்கே சாதிப் பெருமை பீற்றிக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட பொய்யான அல்லது போலியான அல்லது மாயையான தோற்றத்தை உருவாக்க எண்ணுபவர்கள், வேதங்களையும், உபநிசத்துக்களையும், ஆதாரமாகக் காட்டி, தங்கள் சாதியின் தோற்றம் மிகவும் பழமையானது என்றும் வாதாடுகிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் சாதிகளின் பங்களிப்பு, பகிரங்கமாக வெளிப்படுகிறது. அதைப் பயன்படுத்தி இன்றைய அரசியல் அதிகாரத்தில் மேலே வருபவர்கள், அத்தகைய ருசியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். தமிழகத்து அரசியலில் ஒவ்வொரு மாவட்டத்திலும், செல் வாக்குப் பெற்ற சாதியினர் மட்டுமே எல்லாக் கட்சிகளிலும், பொறுப்புக்கு வரமுடியும். அதைப் போல அந்த மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்ற சாதியின் பிரதிநிதிகள்தான், நாடாளுமன்றம், சட்ட மன்றம் ஆகியவற்றிற்கான தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கமுடியும். முற்போக்கு பேசுகின்ற கட்சிகளானாலும், சாதி மறுப்பு கொள்கைகளை பேசுகின்ற கட்சிகளானாலும், மாவட்ட கட்சியின் தலைமைக்கான தேர்தல் வரும்போதும், சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் வரும்போதும், தங்கள் கட்சியில் உள்ள குறிப்பிட்ட பகுதிச் செல்வாக்குக் கொண்ட சாதியின் அடையாளத்துடன் கூடிய நபர்களையே நியமனம் செய்கிறார்கள். ஓரங்கட்டப்பட்டு வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை, மேற்கண்ட பொறுப்புகளுக்கு நியமிக்காத போக்கே இருந்து வந்தது. விளிம்பு நிலைப் பட்டியலில் இருந்து வந்த தலித் சமூகம், தங்கள் சுயமரியாதைக்காக லட்சக்கணக்கில் தெருவில் இறங்கி போராட வந்தபோது, அவர்களது சமூக இயக்கம் பிரதான நீரோட்டமாக இருக்கின்ற சமூக, அரசியல் நீரோட்டத்தில் அறுதியிடத் தொடங்கியது. அதுவே பெரிய கட்சிகளை சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அத்தகைய சமூகத்தைச்
சேர்ந்த பிரதிநிதிகளை இணைச் செயலாளர் களாகவும், துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கத் தொடங்கினர்.
இந்தியாவில் இருக்கின்ற சாதிகள், நிலவும் நிலவுடைமை உற்பத்தி உறவுகளுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஆகவே அத்தகைய நிலவு டமை உறவுகளை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மை மதமும், சாதிப் பிரிவினைகளுக்கு முழுமையாக இடம் கொடுக்கிறது. சாதிகளை முறைப் படுத்த வருணம் என்பது தொடக்கக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்திற்குள் பல்வேறு வருணங்கள் இருக்கலாம் என்ற ஒரு பண்டைக்காலம் இருந்து வந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில், பழங்கால கல்வெட்டு ஒன்று உள்ளது. அது குடவோலை முறை தேர்தல் பற்றி பறை சாற்றும் ஒரு ஆதாரமான கல்வெட்டு. ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப் படுவதற்காக போட்டிப் போடுவதற்கு தகுதியுள்ள நபர்கள் பற்றி அதில் எழுதப்பட்டுள்ளது. 4 வகை வேதங்களை கற்றவர்களும், நிலத்தை சொத்தாக வைத்திருப்பவரும் மட்டுமே ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிபந்தனை அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் மட்டுமே, அரசியல் அதிகாரத்தில் அமரமுடியும் என்ற சூழல், தொடக்க கால தேர்தல் முறையிலேயே அடிப்படையாக இருந்திருப்பது அம்பலமாகிறது. அந்த அளவிற்கு ஆழமாக நாம் நடந்து வந்த அல்லது கடந்து வந்த வரலாறு என்பது சாதிகளையும் குறிப்பாக ஆதிக்கசாதியின் அரசியல் அதிகாரப் பிடிப்பையும் கொண்டதாகத் தான் இருந்திருக்கிறது என்பது இங்கே வெளிப்படுகிறது.
உழைக்கும் வர்க்கமாக அறியப்படும் சா திகள் கீழே அழுத்தப்பட்டுள்ளன. ஆதிக்க சாதிகள் தான் நிலவுடமைகளை கைப்பற்றி வைத்திருந்ததாக வரலாறே கூறுகிறது. அதனால் மன்னர்களாக இருந்தவர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள் அல்ல. உழைக்கும் வர்க்க சாதிகளை அடக்கி, ஒடுக்கி, சுரண்டிக் கொழுத்தவர்களே மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால் தங்கள் சாதிதான் மன்னர்களாக இருந்தவர்கள் என்று பீற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உழைக்கும் வர்க்க சாதியினருக்குத் தேவையில்லை. ஆனால் 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணும் இடைப்பட்ட சாதியினர், தங்களுடைய விருப்ப ஆய்வில், மன்னர் பாரம்பரியமாக சித்தரித்துக் கொள்கிறார்கள். உழைக்கும் வர்க்கமாக இருக்கும் பாரம்பரியம்தான் சிறந்தது என்ற பண்பு இங்கே பரப்பப் படவில்லை. மாறாக மன்னர் வழி என்பது மதிக்கத்தக்கது என்ற புரிதல் இன்னமும் தூசு தட்டப்படாமல் இருக்கிறது.
சாதியத்தின் தோற்றக்காலங்களில் இருந்த சாதிகளுக்கு இடையிலான இடைவெளி, இடைக்காலங்களில் மோதல்களாக மாறி, புதிய சமன்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. தமிழகம் சாதி மறுப்பு திருமணங்கள் பலவற்றை சந்தித்து விட்டது. பரப்புரை அளவிலாவது சாதி மறுப்பு என்பது இங்கே பகிரங்கமாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் வடஇந்திய மாநிலங்களிலோ, சாதிப் பாகுபாடு இன்று வரை பகிரங்கமான அறிவிப்பாகவும், ஒவ்வொரு
சாதியும் தனித்தனியாக செயல்படுவது நடைமுறையாகவும் இருந்து வருகிறது. தமிழகம் அந்த விதத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்களை, குறைந்த பட்சம் சாதி மறுப்பு விசயத்திலாவது, உள் நீரோட்ட சிந்தனையாகக் கொண்டுள்ளது. ஆகவே இன்று கிளப்பப்படும் சாதி அடையாளங்கள், ஒன்று அடக் கப்பட்டவரின் அறுதியிடலுக்காகவோ, அல்லது ஆதிக்க சாதிகளில் இருக்கின்ற தனி நபர்களின் நலன்களுக்காகவோ மட்டும்தான் வெளிவருகிறது. காலப் போக்கில் கண்டிப்பாக உதிர்ந்து விடும் என்ற இந்த சாதி அடையாளங்கள், அனைத்து மக்கள் அதிகாரத்தின் மூலம் வெளித்தள்ளப்படுவது உறுதி.