Thursday, February 25, 2010

மனித உரிமை போராளிகளும், மாவோயிஸ்ட்களும்!

மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டால், பேச்சு வார்த்தை நடத்தலாம் என்கிறார் உள்துறை அமைச்சர். 72 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கத் தயார் என்று மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் கூறுகிறார். இடையில் அவ்வப்போது மத்திய உள்துறை அமைச்சர், வன்முறை செய்யும் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகப் பேசுகின்ற மனித உரிமை ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், சமூக ஆர்வலர் களும் தங்கள் ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிவருகிறார். உள்துறை அமைச்சரின் தாக்குதல் இலக்கு முக்கியமாக மனித உரிமை ஆர்வலர்கள் மீது தான் இருக்கிறது. அப்படிப்பட்ட பட்டியலில் இருக்கின்ற மனித உரிமை ஆர்வலர்கள், காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் தங்கள் பக்கத்து வாதங்களை முன்னெடுத்து வைக்கிறார் கள். அப்படி அவர்கள் தங்கள் கருத்துக்க ளைக் கூறும்போது, தெளிவாக தாங்கள் அனைத்து வன்முறைகளுக்கும் எதிராக இருக்கிறோம் என்பதை மறுக்காமல் பதிவு செய்கிறார்கள். சமீபத்தில் அவ்வாறு பதிவு செய்த டாக்டர் பினாயக் சென், தனது காட்சி ஊடக நேர்காணலில் வன்முறை எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும், அது சாதாரண மக்களின் அமைதியான வாழ்நி லையை பாதிக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார்.
அதே போல மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற பி.யூ.சி.எல். அமைப்பின் பொதுச் செயலாளர், ஒரு காட்சி ஊடகத்தில் கூறும்போது, தங்கள் அமைப்பு அனைத்து வகையான வன்முறைக்கும் எதிரானது என்று கூறியுள்ளார். ஆனாலும் கூட 72 நாள் போர் நிறுத்த அறிவிப்புக்கு தயார் எனக் கூறிய மாவோயிஸ்ட் தலைவர் கிஷன் ஜி, அரசாங்கத்துடன் நடத்த இருக்கும் பேச்சு வார்த்தைக்கு, இடை ஏற்பாட்டாளராக மனித உரிமை ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசு தரப்பு ஒரு புறமும், மாவோயிஸ்ட் தரப்பு மறுபுறமும் நவீன ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, மோதல்களையும், துப்பாக்கிச் சூடுகளையும், உயிர்பலிகளை யும் ஏற்படுத்தி வரும் வேளையில் வன்முறையை அங்கீகரிக்காத மனித உரிமை போராளிகளை, இரு தரப்புமே குறி வைத்துப் பேசுவது நிகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட மனித உரிமை முன்னோடி அமைப்பான, பி.யூ.சி.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அமைப்பாளர்கள், இந்த தீவிரமான சச்சரவு பற்றி கூடி விவாதித்திருக்கிறார்கள்.
கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில், பெங்களூரில் கூடிய தங்களது தேசிய கவுன்சில் கூட்டத்தில், இந்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், சத்திஸ்கர் மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் நடந்து வரும் அரசாங்க கெடுபிடிகளையும், சல்வாஜூடும் என்ற கூலிப்படையை ஏவி விடும் காவல் துறையின் நடவடிக்கைகளையும்,
சாதாரண ஜனநாயக சக்திகளும், காந்தியவாதிகளும் ஆதிவாசி மக்களை பாது காப்பதற்காக குறைந்தபட்ச அறவழிப் போராட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலை இருப்பதையும், விரிவாகவும், விளக்கமாகவும் அலசினார்கள்.
இதே போல ஏற்கனவே பிரபல பெண் எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், நடந்து வரும் சத்திஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வன்முறைகளும், அரசாங் கம் ஆதிவாசி மக்கள் பகுதிகளின் மீது நடத்தும் போர் என்று கூறியிருந்தார். அதற்காக அருந்ததிராயைக் கூட, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தயங்காமல் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவு தருபவர் என்பது போல முத்திரைக் குத்தியிருந்தார். பன்னாட்டு மூலதன நிறுவனங்களுடன், இந்திய அரசு செய்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அந்தப் பிராந்தியத்தின் காடுகளையும், மலைகளையும் ஆதிவாசிகளின் கரங்க ளிலிருந்து பறிப்பதற்காக திட்டமிடுகின்றன என்று அருந்ததிராய் கூறியிருந்தார். அதற்காகவே ஒரு போர் நடத்த மத்திய அரசு தயார் செய்கிறது என்றும் கூட குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய அம்பலப்படுத்தலுக்காகவே எழுத்தாளர் அருந்ததிராய் போன்ற மனித உரிமை ஆர்வலர்களை, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வம்புக்கு இழுப்பது போல, அவ்வப்போது பேசி வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் சத்திஸ்கர் மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் முதன்மையாக செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பான, மக்கள் சிவில் உரிமைக்கழகம் அந்த மாநிலத்தின் பொறுப்பாளர்களுடன், அகில இந்திய அளவிலான தேசிய செயற்குழு உறுப் பினர்களையும் அமர வைத்து, விவா தித்து இதற்கெல்லாம் விடை தேட முயற்சித்தது. இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, இதே பி.யூ.சி.எல். அமைப்பின் அகில இந்திய மாநாட்டை, ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சியில் கூட்டியிருந்தார்கள். அதிலும் மாவோயிஸ்ட்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையிலான போர் பற்றியும், பாதிக்கப்படும் ஆதிவாசி மக்களின் அவலம் பற்றியும், அதில் அமைதி ஏற்படுத்துவதற்கான பி.யூ.சி.எல். அமைப்பின் முயற்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அந்த அகில இந்திய மாநாட்டை நடத்திக் காட்டிய, ஜார்கண்ட் மாநில பி.யூ.சி.எல். தலைவர் சுப்ரத்தோ பட்டாசார்ஜீ சமீபத்தில் மரணம் அடைந்தார். அத்தகைய சூழலில்தான் இப்போது அவர்கள் தேசிய கவுன்சிலில் கூடினார்கள்.
ஜார்கண்ட் மாநில பி.யூ.சி.எல். போல் அல்லாமல், சத்திஸ்கர் மாநிலத்தில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆளுகின்ற மாநில அரசாங்கத்தால் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கின்ற சிபுசோரன், ஆதிவாசிகள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். அதே சமயம் அவர் சில தொகுதிகளில் மாவோயிஸ்ட்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். அங்கே நடந்த ஒரு ஊராட்சி ஒன்றிய அதிகாரியை, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று, கைதாகி உள்ள அப்பாவி ஆதிவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, சமீபத்தில் அந்த கோரிக்கையை ஏற்று மாநில முதல்வர் சிபுசோரன், அப்பாவி ஆதிவாசி களை விடுதலை செய்தார். அதே போல மாவோயிஸ்டுகளும் தாங்கள் பணயக் கைதியாக பிடித்து வைத்த, பி.டி.ஓ.வை விடுதலை செய்தார்கள். இத்தகைய செயல்பாடு ஜார்கண்ட் மாநிலத்தில் சாத்தியமாக இருக்கிறது. ஆனால் சத்திஸ்கர் மாநிலத்தில் நிலைமை அப்படியில்லை என்பதுதான், மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தேசிய செயற்குழுவில் ஏற்பட்ட புரிதலாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ மயமாக்கும் ஒரு தந்திரத்தை பெரி யளவில் முயற்சிக்கிறாரா என்ற கேள்வி கூட அங்கே எழும்பியுள்ளது.
பச்சை வேட்டை என்ற பெயரில் ஒவ்வொரு வாரமும், சல்வாஜூடும் என்ற கூலிப்படையை ஏவி விட்டு 30லிருந்து 40 வரை பொதுமக்களை, குறிப்பாக ஆதிவாசிகளை கொலை செய்யக்கூடிய, ஒரு கொலை வெறித் தாண்டவம் சத் திஸ்கர் மாநிலத்தில் நடந்து வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது. தெற்கு சத்திஸ்கரில் உள்ள பாஸ்டர் பகுதியில், அந்த வட்டாரத்தையும், சல்வாஜூடும் அமைப்பையும், மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் தோழமை அமைப்பாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற செய்தி, பி.யூ.சி.எல். தேசிய கவுன் சிலையே அதிர வைத்தது. எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல், ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு 15,000 எஸ்.பி.ஓ.க்கள் என்ற சிறப்பு காவல் படை அங்கே இறக்கிவிடப்பட்டுள்ளது.
உண்மை அறியும் குழாமாக அந்த வட்டாரத்திற்கு சென்ற மனித உரிமை ஆர்வலர்களை ஆயுதம் தாங்கிய 500 பேர் கொண்ட கூலிப்படை சுற்றி வளைத்துக் கொண்டு, முட்டைகளால் தாக்கியது. அந்த தாக்குதலில் மேதாபட்கர் உட்பட அடிபட்டார்கள். இத்தகைய தொடர் தாக்குதல்களால் 643 கிராமங்களைச் சேர்ந்த, 60,000 ஏழை மக்கள், ஊர்களை காலி செய்து கொண்டு இடம் பெயர்ந்துள்ளனர். துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 70,000 கிராம மக்கள் இடம் பெயர்ந்த அகதிகளாக அங்கே இருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம்., டாட்டா, புஷ் கம்பெனி ஆகிய முதலாளிகள் உள்ளே நுழைவதற்காக, ஆர்.எஸ்.எஸ்.ம், சல்வாஜூடுமும் இணைந்து வேலை செய்கிறார்கள்.
கிராமங்களில் மக்களின் வீடுகள் எல்லாம் எரிக்கப்பட்டு, விளைச்சல் நிலங்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டு, கால்நடைகள் கடத்தப்பட்டு, வெறும் கைகளுடன் உள்நாட்டு அகதிகளாக மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களுடனோ, அல்லது அரசு படைகளுடனோ மட்டும் தான் ஒருவர் உயிர் வாழ முடியும் என்ற நிலைமை நிலவுகிறது. எதிர்ப்பு குரல்கள் நெறிக்கப்படுகின்றன. காந்திய வாதி ஹிமன்ஷýகுமார் நடத்திய பாத யாத்திரை தடுக்கப்பட்டது. பிப்.6,7 தேதிகளில் நடத்தப்பட இருந்த பொது விசாரணைக்கு வர ஒப்புக் கொண்டிருந்த மத்திய அமைச்சர் சிதம்பரம், வராமல் புறக்கணித்தார். அரசாங்க நிதியுதவியுடன் இயங்கி வந்த வனவாசி சேத்னா ஆசிரமமும் கூட உடைக்கப்பட்டது. மார்ச் மாதம் 6ம் நாள் நடக்க இருக்கும் சத்திஸ்கர் மாநில பி.யூ.சி.எல். மாநாட்டையும் குலைக்க, பா.ஜ.க. அரசு சதி செய்கிறது.
இப்படிப்பட்ட பின்னணியில்தான் இப்போது மத்திய உள்துறை அமைச்சர், மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தைப் பற்றி சிலாகித்து வருகிறார். மனித உரிமை அமைப்பை அங்கீகரித்து, மத்திய அரசு அந்த வட்டாரத்திற்கு அமைதி திரும்ப ஏற்பாடு செய்யுமா? செய்யாதா? என்ற கேள்வி முதன்மையாக நிற்கிறது.