Tuesday, February 23, 2010

இடம் பெற வேண்டியது குழுவிலா? கூட்டணியிலா?

முல்லைப் பெரியாறு பிரச்சினை மீண்டும் தமிழ் நாட்டிற்குள் அரசியல் விவாதமாகி இருக்கிறது. 2006ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பிப்.27ம் நாள் வழங்கிய தீர்ப்பில் அணை பலமாகவே இருக்கிறது என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். கேரள அரசு முல்லைப் பெரி யாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அதனால் புதிய அணை ஒன்றை அதன் அருகிலேயே கட்ட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தது. அந்த வாதத்திற்கு பதிலடியாகத்தான் மேற்படி கருத்தை உச்சநீதி மன்றம் தெரிவித்தது.
வெறும் வாதங்களின் மூலம் அப்படிப்பட்ட முடிவுக்கு, உச்சநீதிமன்றம் வர வில்லை. மாறாக மிட்டல் தலைமையில் 7 நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்த அணையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக் கோரியது. அப்படி ஆய்வு செய்யப்பட்டு கொடுக்கப் பட்ட பரிந்துரையை அடிப் படையாகக் கொண்டு தான், மேற்கண்ட தீர்ப்பை, அதாவது அணை பலமாக இருக்கிறது என்ற கருத்தை உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டு கூறியது. அப்போது தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தது. அதை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறி யது. அதாவது நிலவும் முல்லைப் பெரியாறு அணையிலேயே, அதிக மான அளவு நீரைச்
சேர்த்து, போதுமான அளவு தமிழ்நாட்டிற்கு வழங்க முடியும் என்பதுதான் அந்த தீர்ப்பின் பொருள். அதன் மூலம் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கின்ற தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்ற விவசாயத்திற்கு மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதுதான் அந்த தீர்ப்பையொட்டி, தமிழக மக்களின் எதிர் பார்ப்பு.
மேற்கண்ட தீர்ப்பை கேள்விப்பட்ட வுடனேயே கொந்தளித்து எழுந்தது கேரள சட்ட மன்றம். அப்போது கேரளாவில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது மார்க்சிஸ்ட் கட்சி. கேரள மாநிலத்தை ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், எதிர்கட்சி வரிசையிலிருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியும், சற்றும் மாறுபாடு இல்லாமல் தங்கள் மாநிலத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, சட்டமன்றத் தில் ஒரு சட்டத்தை இயற்றி னார்கள். வழக்கமாக சட்ட மன்றங்களில் இயற்றப் படும் சட்டங்களுக்கான மசோதா, அந்த மாநில பிரச்சினைக்காக கொண்டு வரப்படும். ஆனால் அடுத்த மாநிலத்திற்கு பயன்படும் வகையில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மறுப்பதற்காக அல்லது எதிர்ப்பதற்காக ஒரு சட்டம், பேரவையில் நிறைவேற்றப்படுகிறது என்றால் அது ஒரு விசித்தி ரமான நிகழ்வு.
அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என்ற ஆலோசனையை அல்லது உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உடனேயே, கேரள சட்டமன்றத்தில் புதிய அணை ஒன்று முல்லைப் பெரியாறு அருகே கட்டப்பட வேண் டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, சட்ட மாக்கப்பட்டது என்பதே அந்த விசித்திரம். அதற்கு அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கான திருத்தம் என்று பெயரிட்டு, அதன் மூலம் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்தப்பட முடியாத ஒன்றாக ஆக்கி னார்கள்.
மேற்படி கேரள சட் டப்பேரவை இயற்றிய சட்டம் அல்லது சட்டத் திருத்தம் செல்லுமா? என்ற கேள்வியை, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் எழுப்பி னார்கள். விவாதித் தார்கள். அத்தகைய கேள்வி தமிழகத்தின் நலனிலிருந்து மட்டுமே எழுப்பப்பட்ட கேள்வி அல்ல. மாறாக ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் போது, அதற்கு எதிராகவே ஒரு மாநி லத்தின் சட்டப்பேரவை சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டு வரமுடியுமா என்று எழுப்பப்பட்ட கேள்வி. அதாவது மேற்படி செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதாக எடுத்துக்கொள்ளப் பட வேண்டாமா என்பதுதான் தமிழக அரசு தொடுத்த வழக்கின் முக்கியமான முன் வைப்பு. ஆனால் தங்களது அதாவது உச்சநீதி மன்றத்தின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள, மதிப்பை நிலைநாட்டிக் கொள்ள தமிழக அரசு
கொடுத்த ஒரு நல் வாய்ப்பு என்பதாகத் தான் உச்சநீதிமன்றம் அந்தப்பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு, முல்லைப் பெரியாறு அணை பற்றிய ஆய்வை மீண்டும் செய்வதற்காக, மீண்டும் ஒரு நிபுணர் குழுவை, மீண்டும் உச்சநீதிமன்றம் நிறுவியுள்ளது என்பதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தது.
புதிய நிபுணர் குழு 5 பேரைக் கொண்டதாக இருக்கும் என்பது உச்சநீதி மன்றத்தின் முன்வைப்பு. இந்த புதிய நிபுணர் குழுவே தேவையில்லை என்பதால், அதில் தமிழக அரசு கலந்துகொள்ள வேண்டிய தேவையில்லை என்று ஆளுங்கட்சியான தி.மு.க. தனது பொதுக்குழுவில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானம் உரைப்பது போலவே, தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. மேற்படி தீர்மானத்தை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுகின்றார். அதாவது உச்சநீதிமன்றத்தின் முன் வைப்பை பயன்படுத்தி, தமிழகத்தின் சார்பான நிபுணர் ஒருவரை, அதற் குள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அவரது வாதம்.
தமிழகத்தின் சார்பில் யாரும் நியமிக்கப்பட வில்லை என்றால், தமிழகத் தின் கருத்துக்களை எப்படி பிரதிபலிக்க முடியும் என்று கேட்டு வைக்கிறார். அது தமிழகத்திற்கு எதிராகவும், கேரள அரசுக்கு சாத கமாகவும் அமையக் கூடிய ஒரு தீர்ப்பை வெளியிடும் நிலைமைக்கு கொண்டு போய் தள்ளிவிடாதா என்பதே முன்னாள் முதல்வரின் வாதம். அவரது வாதத்திற்கு வலு சேர்ப் பதற்காக சில சேதிகளையும் அவர் கூறுகிறார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனப்பிரிவு தான், மேற்படி ஐவர் குழுவை அறிவித்துள் ளது என்றும், அதில் மத்திய அரசின் சார்பாக இரண்டு தொழில் நுட்ப நிபுணர்கள் இருந்தால், தமிழக அரசு சார்பாக ஒருவரும், கேரள அரசு சார்பாக ஒருவரும் இருக்க வேண்டும். அதில் தமிழக அரசு சார்பான தொழில் நுட்ப வல்லுநர் நியமிக்கப்படாமல் இருந் தால், தமிழகத்திற்கு சாத கமான முடிவு எப்படி கிடைக்கும் என்பதுதான் அவருடைய வாதமாக இருக்கிறது.
அதையும் தாண்டி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சின் தீர்ப்பை உதாசீனப்படுத்துவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் கடுமையான ஒரு கருத்தை வைக்கிறார். இது அரசியல் எதிரிகளுக்குள் நடக்கின்ற வாதமாக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் இதே போல கர்நாடக மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்ந்து இருந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் நிறுவப் பட்ட காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பைக் கூட, கர்நாடக அரசு நிறைவேற்ற வில்லை. ஆகவே அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பிரச்சினை வரும் பொழுதெல்லாம், உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல்களை அத்தகைய அண்டை மாநிலங்கள் மீறுகின்றன. இதைக் கேட்பாரே கிடையாதா என்ற நிலையில்தான், ஆளுங்கட்சியின் பொதுக் குழு மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றும்படி தள்ளப்பட்டுள்ளது என் பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கூடலூர் பகுதியில், அம்பலமூலா என்ற கிராமத்தில் தமிழர்களுக்கும், மலை யாளிகளுக்கும் பிரச்சினை உருவாகியுள்ளது. அதா வது கேரள எல்லையில் உள்ள அந்த கிராமத்தில் தமிழர்கள் உருவாக்கிய முருகன் கோவிலின் அருகே உள்ள அம்மன் சிலை மீது ஜீப்பை மோதி உடைத்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகள் அதிகமாகாமல் தடுப்பதற்கு அரசியல்வாதிகள்
ஆவ ன செய்ய வேண்டும். மாறாக நீதிமன்றம் அறி வித்த குழுவில் சேருவதா, இல்லையா என்பது, தற்போதைய சூழலில் கூட்டணியில் சேருவதா, இல்லையா என்ற அடிப்படையிலிருந்து பார்க்கப்பட்டு விடக் கூடாது.