Saturday, February 20, 2010

ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுவை வெறுக்கும் வெளிநாட்டவர்

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் ஒரு பிரபலமான நிறுவனம். இந்த ஆலை தாமிர உருக்காலை திட்டத்தை செயல்படுத்துகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த ஆலை, முத்துநகரில் தொடங்கப்பட்டு பல்வேறு புதிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தி, அவ்வப்போது மூடப்பட்டு, பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, உயிர்பலிகள், மூச்சுத் திணறல்கள், காற்று மாசுப்படுத்தல், நீர் வளத்தைக் கெடுத்தல், மண் வளத்தை சேதப்படுத்தல் போன்றவற்றில், புகழ் வாய்ந்த பெயரை எடுத்துள்ளது. தொடர்ந்து ஆட்சியாளர்களால் அரவணைக்கப்பட்டும், சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டும், அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு பயன்படும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஇலாகா ஆகியவற்றின் நற்சான்றிதழ்கள், இந்த ஆலையின் தொடர்ந்த இயங்குதலுக்கு உதவிகரமாக இருக்கிறது.
இந்த தாமர உருக்காலைத் திட்டத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுவினர், உலக அளவில் பெரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் வந்திருக்கின்ற செய்திப்படி, இங்கிலாந்தில் இருக்கின்ற ஜோசப் ரவுண்ட்ரீ தர்ம அறக்கட்டளை என்ற நிறுவனம், தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 22 லட்சம் டாலர் பெறுமான பங்குகளை, சில நாட்கள் முன்பு விற்று விடுவது என முடிவு செய்து விட்டது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், சுற்றுப்புறச்சூழலை வேதாந்தா குழு, கெடுத்து வருகிறது என்பதுதான். உதாரணமாக ஒரிசா மாநிலத்தில், கோந்த் ஆதிவாசிகள் வசிக்கின்ற நியாம்கிரி மலைகளை, சுரங்கம் தோண்டுவது என்ற பெயரில் வேதாந்தா குழுமம் அழித்து வருகிறது என்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற நியாம்கிரி மலைகளில், பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற கோந்த் பழங்குடி மக்கள், அந்த மலையை தங்களது புனிதத்தலமாக நினைக்கிறார்கள். அந்த மலையை ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம், தாதுப்பொருட்களை கொள்ளை யடிப்பதற்காக, சுரங்கம் தோண்டுவதற்கான உரிமத்தை ஏதோ ஒரு வகையில் அரசிடம் பெற்றுக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் இருப்பிடங்களை விட்டு, அவர்களை நிர்பந்தமாக இடம் பெயர வைப்பதும், மலை வளங்களை அழிப்பதும் என்று சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்த முயலும் போது, அந்த ஆதிவாசிகளின் பெரும் கோபத்திற்கு உள்ளாகிறார்கள்.
கோந்த் பழங்குடி மக்கள், அந்த நியாம்கிரி மலைகளைச் சார்ந்துதான், தங்களது உணவுகளையும் தேடிக்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி அந்த ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரமே, நியாம்கிரி மலைகள்தான் என்ற அளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள். இயற்கையைச் சார்ந்து, மலைகளையும், நதிகளையும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொண்டு, பல நூறு ஆண்டுகளாக நியாம்கிரி மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் அந்த ஆதிவாசி மக்களின், பண்பாட்டு அடையாளங்களும், அந்த மலைகளைச் சார்ந்தே உள்ளது. இது மாநகரங்களிலும், நகரங்களிலும் வாழ்ந்து வரும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு புரிய நியாயமில்லை. அதுமட்டுமின்றி சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து வரும், மாநகர வளர்ப்பான பெரிய அதிகாரிகள் தாங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகங்களில் பணியாற்றினாலும், இயற்கையான ஆதிவாசிகளின் பண்பாட்டு அடையாளங்களையோ, அவற்றை செயற்கைத் திட்டங்களால் அழிப்பதையோ, உணரப் போவதில்லை. அதனால்தான் அத்தகைய அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் அனுமதியின் பேரில், இப்படிப்பட்ட மாசுபடுத்தும் சுரங்கங்களும், நிறுவனங்களும் உள்ளே நுழைகின்றன.
இங்கிலாந்தில் உள்ள ஜோசப் ரவுண்ட்ரீ நிறுவனம், சில நாட்கள் முன்பு தனது வேதாந்தா பங்குகளை விற்றது போலவே, சென்ற வாரம் ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. இங்கிலாந்தின் திருச்சபை என்ற அமைப்பு, தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 21 லட்சம் டாலர் பங்குகளை, சுற்றுச்சூழலை கெடுக்கின்ற வேதாந்தா நிறுவனத்திலிருந்து, நீதிக்கொள்கையின் அடிப்படையில் விற்றுவிட முடிவு செய்தது. இதே போல 2007ம் ஆண்டில் ஒரு லட்சத்து 30,000 டாலருக்கான தங்கள் பங்குகளை, நார்வே நாட்டு அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதி அமைப்பு, வேதாந்தா குழுமத்திலிருந்து விற்றுவிட்டது. 2009ம் ஆண்டில் 23 லட்சம் டாலர்கள் பெருமான பங்குகளை, வேதாந்தா குழுமத்திலிருந்து மார்ட்டின் கேரி என்ற நிறுவனம் தான் போட்ட மூலதனத்தை, விற்றுவிட்டது. இப்படியாக ஒவ்வொரு பங்குதாரரும், மேற்கண்ட பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் மோசமான, மக்கள் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட நேரத்திலேயே, தங்கள் பங்குகளை விற்றுவிடுகிறார்கள் என்ற செய்தி இத்தகைய மாசுபடுத்தும் நிறுவனங்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
மனித உரிமை மீறல்களை செய்கின்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, புதிய முறையில் இதுபோன்ற எதிர்ப்புகள் காட்டப்படுவது, அந்த நிறுவனங்களின் அடிப்படையாக இருக்கின்ற பொருளாதார அடித்தளத்தையே நிலைகுலைய வைக்கும் செயல். ஆனால் மேற்கண்ட வேதாந்தா நிறுவனமோ, தான் மக்களுக்காக சேவை செய்வதாக பரப்புரை செய்து வருகிறது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தாங்கள் மேலாண்மை செய்து வருவதாகவும், ஒரு வலுவான உள்கட்டுப்பாடு இயங்கி வருவதாகவும் தனது கார்ப்பரேட் நிர்வாக ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. அது தவிர தங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு என்ற பெயரில், ஒரு தொகையை ஒதுக்கி அதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் என்ற தன்மையில், தாங்கள் கெடுத்துவரும் சுற்றுச்சூழலில் வாழ்ந்து வரும் மக்களிடையே, காசுகளை இறைத்து செயல்பட்டு வருவதை பெருமையாக தங்கள் ஆண்டறிக்கையில் கூறுகிறார்கள்.
இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த, உலக அளவிலான பெரும் தொழிற்சாலை விபத்தாக, போபால் யூனியன் கார்பைடு நச்சு வாயு கசிவு அறியப்படுகிறது. அதற்கு பிறகு இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிமுறைகள், பல்வேறு சட்டங்களின் மூலமாக வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அல்லது ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க போன்ற வெளிநாட்டவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அதே சமயம் அத்தகைய ஒழுங்கு படுத்தல் எதுவுமே நடைமுறையில் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் உண்மை. இந்தியாவின் மலைகளிலும், காடுகளிலும் வசித்து வரும் ஆதிவாசி மக்களின் மற்றும் தலித் மக்களின் பாரம்பரிய உரிமைகள், மண்ணுரிமை, வாழ்வுரிமை, பண்பாட்டு உரிமை ஆகியவற்றை தகர்த்தெறியும் நடைமுறைகளை, சட்ட அங்கீகாரத்தையும், அரசாங்க ஒப்புதலையும் பெற்றுக் கொண்டு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, உலக அரங்கில் தெரியத் தொடங்கியுள்ளது. அவ்வாறு சுரங்கம் தோண்டுதல் என்ற தொழிலில், வேதாந்தாவின் செயல்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இன்றைய காலத்தில், புதியதொரு செயல் தந்திரத்தை மேற்கொள்கிறார்கள். ரோகர் மூடி என்ற ஒரு சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான இங்கிலாந்து நாட்டுக்காரர், வேதாந்தா குழுமத்தில் சிறியதொரு பங்குதாரராக சேர்ந்து கொண்டு, லண்டனில் நடந்த பங்குதாரர் கூட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் அந்த நிறுவனம் நடத்தி வரும் சுற்றுச்சூழல் கேடுகளை பட்டியல் போட்டு அம்பலப்படுத்தினார்.
இதுபோன்ற அம்பலப்படுத்தல்கள், உலக அரங்கில் சுற்றுச்சூழல்வாதிகளால் செய்யப்படும் போது, வேதாந்தா போன்ற சூழலைக் கெடுக்கும் கார்ப்பரேட்டுகள், பொதுவான பங்குதாரர்கள் மத்தியில் அசிங்கப்பட்டு தனிமைப்படுகின்றன. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற மூதாதையர் பழமொழி போல, நமது ஊரில் சூழலைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலை, சற்று காலம் சென்று பங்குதாரர்கள் மத்தியில் பகிரங்கமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணம் இனி மனித உரிமை ஆர்வலர்களால் பயன்படுத்தப் படமுடியும். ஒவ்வொரு தவறுக்கும், கார்ப்பரேட்டுகள் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.