Monday, February 15, 2010

எண்ணெய்க்கான போர், இன அழிப்பானதா?

இலங்கைத் தீவில் நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள 4வது ஈழப்போர், சென்ற ஆண்டு மே 3ம் வாரம் முடிவுற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அந்தப் போரில் 40,000 தமிழ் மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஐ.நா.சபையே உறுதி செய்துள்ளது. போரை நடத்தியவர்கள் சிங்கள பேரினவாத அரசு சக்திகள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு உதவி செய்த 7 வெளிநாடுகளின் அரசுகளும் என்பதாகவும், பல நேரங்களில் பல சக்திகள் கூறியுள்ளன. இந்தியா, பாகிஸ் தான், சீனா ஆகிய நாட்டின் அரசுகள் தங்களுக்கு போரில் வெல்ல உதவி செய்ததாக, இலங்கை ஆட்சியாளர்கள் பகிரங்கமாகவே நாடாளுமன்றத்தில் கூறி யுள்ளனர். அதில் குறிப்பாக இந்தியாவும், சீனாவும் எதற்காக தமிழருக்கெதிரான இனவாதப் போரில், தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்ற கேள்வி, பதில் கிடைக்காமலேயே நின்று கொண்டிருக்கிறது.
மேற்கண்ட அண்டை நாடுகளின் அரசுகள், ஆயுதங்களை அளிப்பதும், ராணுவ ஆலோசனைகள் கொடுப்பதும், நேரடியாக களத்தில் இறங்குவதும், உளவுப் பணி மூலம் உதவுவதும் என அந்த இனவாதப் போரில் அங்கம் வகித் தார்கள். அதில் பாகிஸ்தான் தனது விமானிகளை அனுப்பி, அவர்கள் மூலம் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் விமானங்களை, போர்ப் பகுதியில் இயக்கினர். சீன அரசு அதிகமான அளவில் ஆயுதங்களை, இலங்கை அரசுக்கு போர் நேரத்தில் கொடுத்துள்ளது. இந்திய அரசு தனது உளவு செயற்கைக் கோள்கள் மூலமும், தான் அனுப்பிய ரேடார்கள் மூலமும், போராளிகள் பற்றிய நடமாட்டச் செய்திகளை, போர் நடத்திய பேரினவாத சக்திகளுக்கு கொடுத்து உதவியுள்ளது. இந்த அளவுக்கு நியாயமற்ற போர் என்ற உண்மை தெரிந்திருந்தும், எதற்காக பேரார்வத்துடன் அண்டை நாட்டு அர சாங்கங்கள், ஒரு இனவாதப் போரில் ஈடுபட்டார்கள்? இன அழிப்பு என்ற அளவுக்கு அந்தப் போர் இட்டுச் சென் றாலும், இந்த அண்டை நாட்டு அரசர் கள் ஏன் பின்வாங்கவில்லை? அந்த அளவுக்கு இந்த அண்டை நாட்டு அர சாங்கங்களுக்கு ஈழப்போரிலே என்ன ஈடுபாடு?
இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக, இந்திய அரசு இந்த இன அழிப்புப் போரில் ஈடுபட்டது என்று சொல்வாருமுண்டு. ஆனால் வேறுசில கேள்விகள் எழுகின்றன. ராஜிவ் காந்தி பொறுப்பிலிருந்த போது, கொழும்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில், ஒரு சிங்கள சிப்பாய் அவரை துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்க முயற்சித்த சதி, அனைவரும் அறிந்ததே. அந்த சிங்கள ராணுவ வீரன் மீது, இந்திய அரசோ அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையோ, அல்லது சோனியா காந்தி குடும்பமோ எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கவில்லையே ஏன்? அதேபோல ஒரு நிகழ்ச்சிக்காக, ஒரு நாட்டின் அரசு முழுவதும் ஈடுபட்டு, ஒரு இன அழிப்பை நடத்துவதற்கு துணியுமா? அப்படியானால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டுமே? அது என்ன?
ஒவ்வொரு நாட்டின் அரசும், இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஏதாவது ஒரு வகையில், பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர். இதில் நல்ல வழி அல்லது கெட்ட வழி என்ற வேறுபாட்டிற்கே இடமில்லாமல், எல்லா அரசுகளும் நடந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டிற்குள் மக்கள் மத்தியில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும், விலைவாசி உயர்வையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக வெளி யிலிருந்து, ஏதாவது வகையில் நிதி திரட்ட வேண்டியிருக்கிறது. வளராத நாடுகள் அதை அன்னிய நாடுகளிலிருந்து கடனாகப் பெறுகின்றனர். வளர்ந்த நாடுகள் அடுத்த கட்டமாக, தங்களது சுரண்டலை நாடு தாண்டி நடத்துவதற்கு, தருணம் பார்த்து அலைகின்றனர். இதில் 2வது வகை சிந்தனை இந்திய அரசையும், சீன அரசையும் பீடித்துள் ளது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டு எண்ணைய் வளங்களை, கைப்பற்ற அனுமதிக்கின்ற இந்த நாடுகள், தங்கள் பங்குக்கு தங்களை விட சிறிய நாடுகளிடம் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு முயற்சி இலங்கைத் தீவில் உள்ள எண்ணெய் வளங்களின் மீது பாய்ச்சப்பட்டது.
புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனையோ இந்திய அரசுக்கு மேலோங்கியிருக்க நியாயமில்லை. மாறாக இலங்கைத் தீவில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடிய எண்ணெய் வளங்களின் மீது இந்திய அரசுக்கு ஒரு கண் உண்டு.
இலங்கையில் தமிழர்களின் தாயகத்தில் உள்ள வடக்கு மாகாணமான மன்னாரிலும், கிழக்கு மாகாணமான திரிகோணமலையிலும், கடற்கரை ஓரத்தில் எண்ணெய் வளத்திற்கான வாய்ப்புகளை இந்த அரசுகள் முகர்ந்து பார்த்து விட்டன. திரிகோணமலை துறைமுகப் பகுதியில், சீனகுடா என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கே எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை தேக்கி வைக்கலாம். இந்தியாவின் இந்திய ஆயில் கம்பெனி நிறுவனம், இந்த இடத்தில் தனது தலைமையகத்தை வைத்துள்ளது. அதில் தேக்கி வைக்கும் பெட்ரோலையும், டீசலையும், 200க்கு மேற்பட்ட பங்குகள் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வியாபாரம் செய்து வருகிறது. இதேபோல மன்னார் மாவட்டத்தில் எண்ணெய் வளம் அதிகம் கிடைக்கிறது. அங்கு கடற்கரையோரம் கடலுக்கு உள்ளே, 100 ஏக்கர் பகுதியை, இந்திய அரசு எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்காக வாங்கி வைத்துள்ளது. ஓ.என்.ஜி.சி. என்ற எண்ணெய், இயற்கை வாயு கமிஷன், இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள இயற்கையான துறைமுகம், இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான ஒன்று. உயரமான மலைப்பகுதிகளை அருகிலேயே கொண்ட இந்த உட் துறைமுகம், போர் காலங்களிலும் கப்பல்களை உள்ளே ஒளித்து வைக்க வாய்ப்பான ஓர் இடம். அதனருகே உள்ள உவர் மலையில், இலங்கை ராணுவத் தளம் உள்ளது. அதிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, கப்பல் படை அனுப்பப்படும். யாழ்ப்பாண கப்பல் சேவையும், ராணுவத்திற்கு வேண்டிய சேவைகளும், இந்த தளத்திலிருந்து கொண்டு செல்லப்படும். ஆகவே உட்துறைமுக வீதியில், மீன்வளம் அதிகமாக கிடைத் தாலும், அதி உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில், மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. துறைமுகம் அருகே யுள்ள மாவாலை என்ற இடத்தில் ஒரு சிமெண்ட் ஆலை இருக்கிறது. அதில் இப்போது சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. கடற்கரையோரத்தில் அதை அடுத்துள்ள புல்மோட்டை என்ற இடத்தில் இலுமினேட் என்ற உயர் ரக தாதுப்பொருள் மண்ணில் கிடைக்கிறது. அங்கே வெளிநாட்டுக் கப்பல்களை மண் எடுக்க அனுமதிக்கும் திட்டத்தையும் இலங்கை அரசு வைத்துள்ளது.
2003ம் ஆண்டு மே 12ம் நாள் வெளியான செய்திப்படி, இந்தியாவின் ஐ.ஓ.சி., சிலோன் பெட்ரோலியம் கார்ப் ரேஷனுக்கு சொந்தமான, திரிகோணமலை குளப்பண்ணையை குத்தகையாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டது. அதற்காக ஐ.ஓ.சி. ரூ.200 கோடியை கொடுத்தது. 2002 செப்டம்பர் முதல், 2003 ஆகஸ்ட் வரை 0.48 மில்லியன் டன் விநியோகத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்காக இலங்கை ஐ.ஓ.சி.க்கு 10 ஆண்டுகளுக்கு வணிகத்திற்கான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு நிலவும் 35% வரியை குறைத்து 15% என்று பெறுவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கான கருவிகள் கொணர, சுங்கவரி 5 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டது. மேற்கண்ட ஒப்பந்தத்தை வெற்றிகரமாக்க இந்திய அரசு, அந்த வட்டாரத்தில் அல்லது அருகே உள்ள பகுதிகளில், எந்தவொரு ஆயுதம் தாங்கிய சட்டவிரோத குழுக்களுடைய நடமாட்டமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தேவை எழுந்தது.
அதேசமயம் சீன அரசு மன்னார் பகுதியில் எண்ணெய் மற்றும் வாயு கிணறுகளை தோண்ட திட்டமிட்டது. இந்தியாவின் நடமாட்டத்தை சமன் படுத்த, மகிந்தா அரசு சீனாவிற்கு அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தது. அந்த பகுதியை 8 பிரிவுகளாகப் பிரித்து, இந்தியாவிற்கு ஒன்றும், சீனாவிற்கு ஒன்றும், மீதி 6 பிரிவுகளை அனைத்து நாடுகளுக்கும் கொடுப்பது என 2007ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் இலங்கை அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்குள் சீனா புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன், அந்த பகுதியில் இறங்கியது. இவ்வாறாக இந்த இரு அரசுகளும் தங்களுக்கான எண்ணெய் வயல்களை கைப்பற்ற, மகிந்தாவின் இனவாதப் போருக்கு உதவ வேண்டிய கட்டாயம் எழுந்தது. தந்திரமாக இந்த இரு அரசுகளுக்கும் எண்ணெய் வளத்தை தாரை வார்த்து, அவர்களை தான் நடத்திய இனவாதப் போரில் இலங்கை அரசு ஈடுபடுத்தியது. அதன் மூலம் தனது தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தியது. அதேசமயம் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவையும் இலங்கை அரசு, எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க அழைத்தது. அதனால் தான் எண்ணெய்க்கான இந்தப் போர், ஒரு இன அழிப்பு வேலையை செய்து, சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி விட்டது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்தியப் பேரரசு, தனது மேலாதிக்க மனோபாவத்துடனும், விரிவாக்க செயல் திட்டத்துடனும், தெற்காசியா எங்கும் அதிகாரம் செய்வதற்கான தன்மைகொண்டது என்பதனால், 2000தின் பத்தாண்டுகளில் எண்ணெய் வளத்தை சுரண்டவும், இந்த இனஅழிப்பு போர் அதற்கு உதவிகரமாக இருந்து விட்டது. என்பதையும் நாம் மறக்க முடியாது. தன்நாட்டிற்கு உள்ளேயே, தேசிய இனங்களின் உரிமையை அடக்கும் ஒரு அரசிடம், நாம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.