Thursday, February 11, 2010

தமிழில் பாட காஞ்சியில் தடையா?

சமீபத்தில் காஞ்சி மாவட்டத்தில், கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வார் கோவிலுக்குள் தமிழில் இறைவனைப் பாட தடை செய்யப்பட்டது என்ற செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் இருந்த பார்ப்பனக் குருக்கள், தமிழில் பாட விடாமல் தடுத்திருக்கிறார்கள். இதே போல சென்ற ஆண்டு, சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சிதர்கள், தமிழில் பாடிக்கொண்டு உள்ளே சென்ற ஆறுமுகசாமி என்ற சிவாச்சாரியாரைத் தடுத்து, அடித்து விரட்டியது தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு தான் சிதம்பரம் கோவிலின் தீட்சிதர்கள் பற்றிய தில்லுமுல்லுகள், ஊடகங்கள் மூலம் உலகுக்கு அரங்கேறின. அதன் பிறகுதான் அந்த கோவிலில் தமிழ் பக்தர்கள் போடுகின்ற பணத்தையெல்லாம், உண்டியலில் இருந்து அள்ளிக் கொள்பவர்கள் தீட்சிதர்கள் என்ற செய்தி வெளியே வந்தது. அதையொட்டி தமிழக அரசும் அந்த சிவன் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. கொண்டு வந்த கையோடு அரசே ஒரு உண்டியலையும் பெரியதாக வைத்தது. இது பொறுக்காத தீட்சிதர்கள் அங்கும், இங்கும் ஓடி கடைசியாக நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். சென்னை உயர்நீதிமன்றமும், தீட்சதர்களின் மண்டையில் குட்டியது. சிதம்பரம் கோயிலை சுற்றியுள்ள நிலங்கள் எல்லாம், தீட்சிதர்களால் பிளாட் போட்டு விற்கப்பட்டது என்ற செய்தி இன்னமும் அம்பலத்திற்கு வரவில்லை. அதற்கான விசாரணைக் குழுவும், அதனாலேயே அரசால் போடப்படவில்லை. இது சைவக் கோயிலில் நடந்த திருவிளையாடல் என்றால், மேற்கண்ட கூரத்தாழ்வார் கோயில் விளையாட்டு, வைணவக் கோயிலில் நடந்த சேட்டை.
சைவமோ, வைணவமோ, அத்தகைய கோயில் களை தங்கள் கைகளுக்குள் பிடித்து வைத்திருப்பது ஒரு சிறிய சமூகம். அவர்கள் இறைவனிடம் நேரடி யாகப் பேசுவார்கள் என்றும், இறைவனின் மொழி கிருந்தம் என்றும், சமஸ்கிருதத்தைத் தெரிந்தவர்கள் தான், இறைவனிடம் பேசமுடியும் என்றும், இன்னமும் நமது தமிழ் பக்தர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மொழி தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி. அப்படி இருக்க தங்கள் தாய்மொழியை மட்டுமே அறிந்த பெருவாரியான தமிழ்மக்கள், கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றாலும், நீதிமன்றத்திற்கு நீதி கேட்டு அலைந்தாலும், அங்கெல்லாம் தமிழ் பேசப்பட்டால் மட்டும்தான், அவர்களும் அந்த நிகழ்ச்சியில் புரிதலோடு பங்கு கொள்ள முடியும். இது ஏனோ நீதி தேவதைகளுக்கும், கோயில் சாமி களுக்கும் புரியவில்லை. இரண்டு இடங்களிலும் நமது தமிழ் மக்கள், வாய்பேசாத மௌனிகளாக நின்றுவிடுகிறார்கள். அவர்களுக்கும், சாமிக்கும் இடைவெளி அதிகமாகிறது. அவர்களுக்கும், நீதிதேவதைக்கும் இடையில் பெரும் சுவர் எழுப்பப்படுகிறது. இதனால் சிறிது சிறிதாக, சாமி நம்பிக்கை அற்றவர்களாகவும், நீதிமன்றத்தை நம்பாதவர்களாகவும் அந்த தாய்மொழி மட்டுமே தெரிந்த அப்பாவி மக்கள், ஆகிவிடுகிறார்கள்.
அது கூட ஒரு வகையில், இந்த இரண்டு நிறுவ னங்களையும் தங்கள் நலனுக்கு பயன்படுத்த விரும்பும் சக்திகளுக்குப் பயனுள்ளதாகப் போய் விடுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில், தங்கள் சொந்த லாபத்திற்காக தீட்சிதர்கள், தமிழில் பாட அனுமதிக்கவில்லை என்று புரிய முடிகிறது. ஆனால் காஞ்சி கூரத்தாழ்வார் கோயிலில், தமிழில் பாசுரம் பாட மறுக்கப்பட்ட அணுகுமுறை, மேலும் சில கேள்விகளை எழுப்புகிறது. நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார் என்பவர் தலைமையில் ஆண்டாள் திருப்பாவையைப் பாடிக் கொண்டு, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஹரி மடத்து பக்தர்கள், கூரத்தாழ்வார் கோயில் மண்டபத்திற்குள் நுழைந் திருக்கிறார்கள். அந்த வைணவக் கோயிலின் முக்கிய குருக்களாக இருக்கின்ற பார்ப்பனர்களான கண்ணன் பட்டாச்சாரியாரும், பார்த்தசாரதி பட்டாச்சாரியரும் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள், பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள். தமிழ் பாசுரம் பாடுவதால் ஆச்சாரம் கெட்டு விடும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது முதலில் தமிழ்நாட்டில், தாய் மொழி தமிழில், ஆண்டவனைப் புகழ்ந்து பாடல் பாடுவதற்கு தடை என்ற மனித உரிமை மீறலாக வருகிறது. அதையும் தாண்டி, கூரத்தாழ்வார் கோயில் என்றால் என்ன என்ற வரலாற்றிற்குள் போய் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அருகே இருக்கும் திருப்பெரும்புதூரில் கி.பி. 1017ல் பிறந்தவர் ராமானுஜர். இந்த ராமானுஜர் வைணவ மதத்தில் ஒரு முக்கியத் தூணாகக் கருதப்படுகிறார். அவர் பார்ப்பனர் அல்லாத சாதியினரையும், முப்பிரி நூல் மாட்டிவிட்டு, பார்ப்பனராக மாற்றினார் என்பது வரலாறு. திருநாராயணபுரம் கோயிலில், ராமானுஜர் தாழ்த்தப் பட்ட மக்களை, கோயிலுக்குள் முதன்முறையாக அனுமதித்தார் என்பது புரட்சிகரமான செயலாக, அன்றைய காலத்தில் பார்க்கப்பட்டது. தாழ்த் தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ஆக்கிய ராமானுஜரின் முதல் சீடராக கூரத்தாழ்வார் இருந்தார். சைவ சமயத்து சோழ மன்னன் இது கண்டு பொறுக்க முடியாமல், ராமானு ஜரை பிடிப்பதற்காக தேடி இருக்கிறான். அப்போது திருநாராயணபுரத்திலேயே 12 ஆண்டுகளை ராமானுஜர் மறைந்திருந்து கழித்திருக்கிறார். சோழ மன்னனின் மறைவிற்குப் பிறகு, அவரது சீடர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பாதுகாப்பாக ஸ்ரீரங்கம் வந்திருக்கிறார். ராமானுஜரை காட்டிக்கொடுக்கச் சொல்லி, சோழ மன்னன், கூரத்தாழ்வாரை நிர்ப்பந்தித்திருக்கிறான். காட்டிக் கொடுக்க மறுத்த கூரத்தாழ்வாரின் கண்களையும், பெரிய நம்பியின் கண்களையும், மன்னர் உத்தரவுப்படி பிடுங்கி இருக்கிறார்கள் என்ற செய்தி ஊருக்கு திரும்பிய ராமானுஜருக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கூரத்தாழ்வாரின் மகனுக்கு, ராமானுஜர் பராசரன் என்று பெயர் வைத்திருக்கிறார். அவர்தான் பின்னாளில் அறிவார்ந்த தூணாக, வைணவத்திற்கு உருவாகியிருக்கிறார். அவரை பின்னாளில் பராசரர்பட்டர் என்று அழைத்திருக்கிறார்கள். ராமானுஜர் கி.பி. 1137 வரை உயிர்வாழ்ந்து தனது 120வது வயதில் மறைந்திருக்கிறார்.
அத்தகைய கூரத்தாழ்வாரின் கோயில் என்பது, சாதி மறுப்பு கோயிலாகவும், தாய்மொழிப் பாடல்களை அனுமதிக்கும் கோயிலாகவும் இருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி, அங்கே திருப்பாவை பாடிச்சென்ற போதுதான், பட்டாச்சாரியார்களின் தடை என்ற அடாவடி நடந்திருக்கிறது. திருப்பாவை 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூலாகும். வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தின் 473ம் பாடல் முதல் 503ம் பாடல் வரை திருப்பாவைப் பாடல் கள் என்று பெயர்.
அத்தகைய திருப்பாவைப் பாடல்களை பாடி வந்த பக்தர்கள் தான் கூரத்தாழ்வார் கோயிலில் தடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடை பற்றி பாதிக்கப்பட்ட நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார், அந்த வட்டார வருவாய்த் துறை ஆய்வாளரிடமும், காவல்துறை ஆய்வாளரிடமும், கிராம நிர்வாக அலுவலர்களிடமும் போய் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களும் தடை விதித்த பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே பேசி இருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாரம் இருமுறை ஏடு வெளியிட, முதல்வரை நிறுவனராகக் கொண்ட நாளேட்டில் தெளிவான கட்டுரையாக எழுதியிருக் கிறார்கள்.
ஆட்சியாளர்கள் விரும்பாவிட்டாலும், அவர்க ளது ஆதரவாளர்கள் ஊடகங்களில் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினாலும், சாதிய வெறிகளும், தமிழ் மொழி எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்னமும் நமது வழிபாட்டுத் தலங்களில் தொடர்கின்றன. இதற்குக் காரணம் என்ன? சமூக ரீதியான வன்முறை என்பது, சட்ட, திட்டங்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ அடங்குவதில்லை. அதை அடக்குவதற்கோ, அகற்றுவதற்கோ, மக்கள்தான் முன்முயற்சி எடுக்க வேண்டும்.