Saturday, February 6, 2010

சீனாவை சுற்றிவளைக்கிறதா அமெரிக்கா?

மாறி வரும் உலக பொருளாதார விதிகளில், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் சரிவை சந்தித்ததையொட்டி, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியைச் சந்தித்தன. அதேநேரம் சீனாவும், இந்தியாவும் வருங்கால உலக பொருளாதாரத்தில், தலைமை தாங்கும் இடத்திற்கு வருவார்கள் என்ற செய்தி உலகெங்கும் பரவியது. சீனாவிற்கும், இந்தியாவிற்கும் மத்தியில் நிலவுகின்ற வேறுபாடுகளைத் தாண்டி, சமீபத்தில் உலக அரங்கில் இந்தியாவும், சீனாவும் இணைந்த முடிவுகளை எடுத்து வருகின்றன. சமீபத்திய இந்திய குடியரசுத் தலைவரது சீனப் பயணம் சீனஇந்திய உறவில் மேலும் நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஆசியாவில் இருக்கின்ற இந்த 2 பெரிய நாடுகளின் முன்னேற்றம் என்பது, எந்த வகையிலும் ஆசியாக் கண்டத்தையும் சேர்த்து செல்வாக்குச் செலுத்த அல்லது ஆதிக்கம் செலுத்த விரும்பும் அமெரிக்கா உட்பட்ட உலக வல்லரசுகளுக்கு விருப்பமான செய்தியாக இருக்காது. குறிப்பாக சீனாவின் முன்னேற்றம் என்பது அமெரிக்க வல்லரசுக்கு உடன்பாடான செய்தியாக இருக்க முடியாது.
இத்தகைய சூழலில் நான்கு நாட்களுக்கு முன்னால் அதிகாரப்பூர்வ சீன செய்தி நிறுவனத்தில், அந்த நாட்டின் விமானப்படை தளபதியான டைசூ என்பவர் பகிரங்கமாகவே ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் சதி என்ற தலைப்பில் அந்த கட்டுரை வெளியிடப்பட்டது. சீனாவை பிறை வடிவிலான சுற்றி வளைத்தல் என்ற போர்த்தந்திரத்தை கையாண்டு அமெரிக்கா நெருக்குகிறது என்பதாக அவர் எழுதியிருந்தார். கடந்த மே மாதம் 2425 தேதிகளில் சீனஅமெரிக்க எதிர்கால மற்றும் பொருளாதார விவாதங்களில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்த நேரத்தில், இதுபோன்ற கட்டுரை வெளியாகியிருப்பது ஆச்சரியமான செய்தியாக தோற்றமளித்தது. சோவியத் யூனியனை மென்மையாக நெறிப்பதற்காக, சீனாவை கடுமையாக கையாள்வது என்ற தந்திரத்தை அமெரிக்கா எடுப்பதாக கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.
சீன நாட்டில் இருக்கின்ற 28 பெரும் தொழிற்சாலைகளில், 21 தொழிற்சாலைகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. வர்த்தகத்தின் மூலம் சீன நாடு வளர்ந்து வருகின்ற நேரத்தில், சீனாவின் பொருளாதாரத்தை உறுதியற்றதாக செய்வதற்கு அமெரிக்காவின் இந்த கட்டுப்பாடு உதவும் என்பதாகவும் தெரிகிறது. சீனாவின் பங்குச்சந்தையிலும், வங்கிகளில் உள்ள பங்குகளிலும், சீனாவின் கனிமவளத்திலும் அமெரிக்காவின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது என்ற செய்தி ஆச்சரியமான ஒன்றாகயிருக்கிறது. சீனாவின் சுய உற்பத்தி என்ற முத்திரைகளை காலி செய்து விட்டு, அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு கிடைத்த லாபத்தை, மீண்டும் சீனாவிலேயே அமெரிக்கா மறு முதலீடு செய்து வருகிறது.
சீனாவிற்குள் தனது கரங்களை வலுப்படுத்தும் அதே நேரத்தில் அமெரிக்கா தனது நாட்டு நிறுவனங்களை சீனா வாங்கிவிடாமல் கவனமாக தவிர்த்து வருகிறது. அமெரிக்காவின் எந்தவொரு உயர் தொழில்நுட்ப ஆயுதங்களையும், சீனா வாங்கிவிடாமல் தடுத்தும் வருகிறது. அமெரிக்காவின் வருவாய் பத்திரங்களில் சீனா அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதே அமெரிக்க அரசின் விருப்பம். அதன் மூலம் அமெரிக்காவிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை வாங்குவதற்கோ, நவீன தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கோ, பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்திச் செய்வதற்கோ, சீனாவிடம் நிதி இருக்கக்கூடாது என்பது அமெரிக்காவின் ஒரு ராஜதந்திரமாக இருக்கிறது.
சமீபத்தில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிச் செய்யப்பட்ட விளையாட்டுப் பொம்மைகள் நச்சுத்தன்மைக் கொண்டவை என்று அமெரிக்கா அம்பலப்படுத்தியிருந்தது. சீனா அமெரிக்காவிற்கு விற்ற நச்சுப்பொம்மைகளுக்குப் பதிலாக, அமெரிக்கா சீனாவிற்கு நச்சுக்கடன்களை திருப்பிக் கொடுக்கிறது என்பது அமெரிக்காவில் புழக்கத்திலிருக்கும் ஒரு நகைச்சுவை. அமெரிக்காவின் தூதரக அரசியலும், சீனாவை முழுமையாக தனிமைப்படுத்துவதில் தான் குறியாகயிருக்கிறது. தென்கிழக்கு ஆசியா அமெரிக்காவின் மீது ஒவ்வொரு நாளும் அதிகமாக சார்ந்து நிற்கத் தொடங்கியிருக்கிறது என்ற செய்தியை சீன நிபுணர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.
வடகிழக்கு ஆசியாவும், வியட்நாம் இப்போது அமெரிக்க சார்பு என்ற நிலைக்குச் சென்று விட்டது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிறகு, அமெரிக்க செல்வாக்கை எதிர்த்து போட்டிப் போடுவதற்கான ஒரு சக்தி இந்த உலகத்தில் இருக்கவில்லை. அதனாலேயே பல்வேறு சிறிய நாடுகளும், அமெரிக்க சார்பு பொருளாதாரத்தை உள்வாங்கியே தங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளன. மக்கள் சீன குடியரசின் நண்பர்களாக உள்ள வடகொரியா, மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை, புதிய அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா ஏற்படுத்தியிருப்பது இந்த வட்டாரத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு சவால் விடுவது போன்றது என்பதாக அந்த கட்டுரையாளர் கருதுகிறார்.
வடகொரியா சமீபத்தில் தனது அணு ஆயுத திட்டத்தை வளர்த்து வருகிறது. அதனால் தென் கொரியாவுடன் புதிய மோதல் உருவாகியுள்ளது. அதையொட்டி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவிற்கு நெருக்கமாக செல்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமாக அமெரிக்கா மறைமுகமாக செயல்படுகிறது என்று சீன நிபுணர் கருதுகிறார். அதேபோல மியான்மர் நாட்டில் அமெரிக்காவின் புதிய தலையீடு, அந்த நாட்டை சீனாவிலிருந்து விலக்கியும், இந்தியாவிற்கு நெருக்கமாக ஆக்கவும் செய்கிறது என்பது இன்னொரு சீன உணர்தலாகயிருக்கிறது. ஆப்கான் போரில் அமெரிக்காவின் அதீதமான ஈடுபாடு, பாகிஸ்தானை அமெரிக்காவிற்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. அதேபோல இந்திய பெருங்கடலில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து போட்டு வரும் ஒப்பந்தங்களும், செயல்பாடுகளும், சீனாவின் முயற்சிகளை முறியடிக்கும் என்பதும் இன்னொரு செய்தி. சீனாவிற்குள் திபேத் பிரச்சனையை மீண்டும் கிளப்புவதிலும், அமெரிக்காவிற்கு விருப்பம் இருக்கிறது. இவையெல்லாமே சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்க தந்திரங்கள் என்கிறார் கட்டுரையாளர். இதை சீனா பற்றி ஆய்வு செய்யும் மையத்திலிருக்கும் ராஜன் எழுதுகிறார்.
இதேபோல சீன குடியரசின் முக்கிய படையான மக்கள் விடுதலை ராணுவத்தின் தளபதிகள் தங்களது ஆய்வுகளில் எழுதியுள்ளார்கள். சீன மக்கள் காங்கிரஸ் அமர்வுக்கு முன்பு, சீனக்கனவு என்று வெளியிடப்பட்ட புத்தகத்திலும் இதுபோன்ற கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்திய பெருங்கடலிலும், இலங்கைத் தீவிற்குள்ளும் இந்தியாவின் தலையீடுகளையும், செல்வாக்கையும் எதிர்த்து சீனா போட்டியிடுகிறது என்பது நாம் அறிந்த செய்தியாகயிருக்கிறது. அத்தகைய போட்டியில் இந்திய அரசின் கரங்கள் வலுப்படுவது அமெரிக்காவிற்கு சாதகமானது என சீனா கருதுகிறது.
இன்றைய உலகின் அதிகார சமன்பாட்டிற்கான முயற்சிகளில், செல்வாக்குப்பெற்ற சக்திகளுக்குள் மோதலும், போட்டியும் அதேசமயம் சமரசமும் இருந்துக் கொண்டேயிருக்கும். அதில் அதிகமான அளவு பலன்களை ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் பெறுவது என்பதே அவரவர் வெற்றியாக அமையும். இந்த சூழலில் இந்திய அரசு தனக்கு நம்பகமான சக்தியாக, அண்டையிலிருக்கும் வளர்ந்து வரும் நாடான சீனாவை கருதுகிறதா? அல்லது வளர்ந்த நாடான அமெரிக்காவை கருதுகிறதா என்பது தான், இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். புதிய அணிசேர்க்கைகளை கணக்கிலெடுத்து, சார்பு தன்மை விடுத்து, ஆசிய கண்டத்திற்கு உள்ளேயுள்ள போட்டியில் வலுப்பெறுவது ஒரு புறமும், அதேசமயம் உலக அரங்கில் முன்னேற வளரும் நாடுகளுடன் கைகோர்ப்பது மறுபுறமும் என்ற தந்திரத்தை இந்திய அரசு தைரியமாக கையிலெடுக்க முடியுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.