Friday, February 5, 2010

தமிழால் முடியும்!

திடீரென தமிழக உயர்கல்வி அமைச்சர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். தமிழில் பொறி யியல் கல்லூரி தொடங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இது மிகவும் ஆழமான, அர்த்தம் பொதிந்த ஒரு செய்தி. ஏனென்றால் தாய்மொழியில் அனைத்தையும் பயில வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. தாய்மொழியை ஒரு பாடமொழியாக கட்டாயமாக ஆக்குவதற்கே, தமிழாசிரியர்கள் அரும்பாடு பட வேண்டியிருந்தது. தாய்மொழியில் கல்வி என்பது சாத்தியமாகாது எனதான் அறிவாளிகள் என அறியப்பட்டோர் பேசி வந்தனர். தாய்மொழி பயிற்று மொழி என்பது ஒரு ஜனநாயக ரீதியான கோரிக்கை என இன உணர்வாளர்கள் கூறிவந்தனர். மொழி என்பதையும், இனம் என்பதையும் பிரித்துப் பார்க்க முடியுமா? எந்த இடத்தில் மொழி இனத்திற்குள்ளும், இனம் மொழியின் மூலமும் வெளிப்படுகிறது என்பது விளக்கப்படவேண்டிய ஒரு அரிய சிந்தனை. இனம் என்று இந்த இடத்தில் குறிப்பிடுவது ஒரு தேசிய இனத்தை. ஒரு தேசிய இனம் என்பது 4 அடிப்படையான நிபந்தனைகளைக் கொண்டதாக இருக்கும். அதில் ஒரே மொழி பேசும் மக்கள் கூட்டம் என்பது தான் முதல் நிபந்தனை. அப்படியானால் ஒரு தேசிய இனத்தை அடையாளம் காண்பதற்கு, அதன் மொழி என்பதில் இருந்து விசயம் தொடங்குகிறது.
மொழி அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு உற்பத்தி கருவியாகவும் செயல்படுகிறது. சோவியத் யூனியனில் புரட்சியை தலைமை தாங்கிய ஜோசப் ஸ்டாலின், மொழியை பற்றி கூறும் போது, அது ஒரு சமுதாய அமைப்பின் அடித் தளமும் அல்ல. மேல் தளமும் அல்ல. ஆனால் மொழி என்பது ஒரு உற்பத்தி கருவி என்று கூறினார். உழைப்புச் சக்தியை பயன்படுத்தி, உலகில் உற்பத்திகள் செய்யப்படுகின்றன. உற்பத்திகளின் மூலம் மட்டுமே, சமூகம் முன்னேறி செல்கிறது. உற்பத்திக்கு ஒரு முக்கியத் தேவையாக, உற்பத்திக் கருவிகள் இருக்கின்றன. மொழியும் ஒரு உற்பத்தி கருவி என்று ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் கூற்று அறிவியல் ரீதியானது. மொழியின் மூலம் மட்டும் தான், பரிமாற்றம் நடைபெறுகிறது. கருத்துப் பரிமாற்றமும், செய்திப்பரிமாற்றமும், எந்த ஒரு பரிமாற்றத்திற்கும் அடிப்படையாகத் திகழுகிறது. மொழி புராதன மக்களின் வாழ்நிலையிலிருந்து வளர்ந்து வந்த ஒரு கட்டத்தைக் குறிக்கிறது. உல கெங்கிலும் தாய்மொழி என்பது தான், ஒவ்வொரு இனத்தின் வளர்ச்சிக்குமான அடிப்படையாக இருக்கிறது. அதனால் தாய்மொழிக் கல்வி, அத்தியாவசியமான ஒரு தேவையாக, ஒரு இனத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்துகிறது.
கிரேக்க நாட்டிலும், இத்தாலி நாட்டிலும், கிரேக்க மொழியும், இத்தாலி மொழியும் பயிற்று மொழியாக இருக்கின்றன. ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரீஷ், ஜப்பான், டச்சு, போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால், அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியமாக தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொண்டதே முக்கிய காரணமாக இருக்கிறது. பின்லாந்தில் கூட பின்னிஷ் மொழிதான் கல்வி மொழியாக இருக்கிறது. ஜார்ஜியாவில் ஜார்ஜிய மொழியில்தான் அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும்தான் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ, பயிற்று மொழி இருக்கிறது. அல்லது செல்வாக்கு செலுத்திக்கொண்டு இருக்கிறது. ஜப்பானில் ஜப்பானிய மொழியில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைகழகங் களிலும், அனைத்து பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படுவதனால், ஜப்பானிய மக்கள் சுயமாக சிந்தித்து, முன்னேற வாய்ப்பு இருக்கிறது. நார்வேயிலும் கல்வி மொழி நார்வேஜியன் என்பதாகதான் இருக்கிறது. ருமேனியாவில் ருமேனிய மொழி கல்வி மொழியாக இருக்கிறது. துருக்கியில் துருக்கிஷ் மொழி ணயிலேயே அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் தான், காலனிய சிந்தனை பயிற்று மொழி விசயத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது.
சில இந்திய மாநிலங்களில், தாய்மொழி தனது இடத்தை குறைந்த பட்சமாவது பெற்றிருக்கிறது. கோவாவில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தாலும், சில இடங்களில் கொங்கனி என்ற கோவா மாநிலத்தின் தாய்மொழி பயிற்று மொழியாக, கல்விச்
சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆங்கிலம் பயிற்று மொழியாக நகர்புற கல்விச் சாலைகளில் இருந்தாலும், மராத்தி மொழி ஊரகப்பகுதிகளில் பயிற்று மொழியாக இருந்து வருகிறது. அதனால் தானோ என்னவோ, மராத்தி மொழிப்பற்று அந்த மாநில மக்கள் மத்தியில், இன்னமும் மங்காத நிலையில் தொடர்கிறது. ஆந்திரபிரதேசத்தில் ஆங்கிலம் மட்டுமின்றி, தெலுங்கு மொழியும் கல்விச்சாலைகளில் பயிற்று மொழியாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் இங்கே பாட மொழியாக இருக்கிறது. அப்படி என்றால் ஆங்கிலம் ஒரு பாட மொழி என்பது போல, தமிழும் ஒரு பாட மொழியாக இருந்து வருகிறது. பயிற்று மொழியாக தமிழைக் கொண்டு வரவேண்டும் என்ற அவாவிற்கு எந்தக் குறைவும் இல்லை. தமிழ் மொழியை புகழ்ந்து பேசாத வாயே இல்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று எப்போதும் முழங்கி வருகிறோம்.
இந்தி மொழியின் திணிப்பை எதிர்த்து, தமிழ்மொழியின் பாது காப்பிற்காக போராட்டங்களை கண்ட மாநிலம் தமிழ்நாடு. அப்போதும் கூட, இந்தி திணிப்பு வேண்டாம் என்ற உரத்த அரசியல் குரல்கள், தாய்மொழி தமிழில் அனைத்தும் வேண்டும் என்ற ஆர்வக்குரலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மாறாக இந்தி என்ற வாள், தமிழை தாக்குவதற்கு வருமானால், தமிழைப் பாதுகாக்க, ஆங்கிலம் என்ற கேடயம் வேண்டுமல்லவா என்பதாகத்தான் அரசியல் குரல்கள் எழுப்பப்பட்டன. அதுவே புற்றீசல் என வளர்ந்து விட்ட ஆங்கிலப் பள்ளிகளின் கட்டவிழ்த்து விடுதலுக்குக் காரணமாக அமைந்து விட்டன. மழலைப் பள்ளிகளும், குழந்தைப் பள்ளிகளும், ஆரம் பப்பள்ளிகளும், நர்சரிகள் என்று அழைக்கப்படும் கல்விச்
சாலைகளுக்குள் அடக்கமாகின்றன. மழலைப்பள்ளிகளை, தாய்த்தமிழ் பள்ளிகள் என்று மாற்றிக்கொள்ள யாரும் தயாராய் இல்லை. ஏனென்றால் கல்வி வியாபாரமாக ஆகிப் போன இன்றைய காலகட்டத்தில், நர்சரிப் பள்ளிகள் தெருவுக்குத் தெரு தோன்றி வருகின்றன. அப்படி முளைவிடக்கூடிய மூளை செதுக் கும் சாலைகளும், ஆங்கிலத்தை நோக்கியே ஈர்க்கப்படுகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் தோழர்களும், விவசாயக் குடிமக்களும் கூட, தங்கள் பிள்ளைகள், ஆங்கிலப்பள்ளிகளில், ஆங்கில பயிற்று மொழியை கல்வி கற்கவேண்டும் என்ற தாகத்திலேதான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு புற நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது யார் குற்றம்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் தலைவர்களிடமிருந்து சில செய்திகளை நாம் கற்றுக் கொள்ளலாம். ஒரு முறை ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர், தாய்மொழி கல்வி பற்றி பேசினார். இந்திய அரசியல் சட்டத்தில் 8வது பிரிவில், போடி என்ற மொழியை சேர்ப்பதில் மகிழ்ச்சியடைந்தார். காஷ்மீரி மொழியுடன், தோக்ரி, போடி ஆகிய மொழிகள், அர
சாங்க கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கப்படும் என்ற முடிவு, குழந்தைகளுக்கு சிறந்த பயிற்று மொழியை கற்றுக் கொடுப்பதற்கு பயன்படும் என்று அவர் கூறினார்.
இப்போது உயர்கல்வி அமைச்சர் பொறியியல் படிப்பில், தமிழ் பயிற்று மொழி என்பதற்கான கல்விச்சாலை முயற்சியை அறிவிக்கிறார். காலம் கடந்த அறிவிப்பு என்றாலும், இன்னமும் தமிழ் அழியாமல் இருக்கும் போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்பு என அகமகிழலாம். தொழில் முறை கல்வியில், தமிழில் கற்றுக் கொடுப்பதுதான், அந்த தொழிலுக்கும் வளர்ச்சி; தமிழுக்கும் வளர்ச்சி. பயிற்று மொழி தமிழில் கற்றவர்களுக்குத்தான், அரசுப் பணிகளில் முன்னுரிமை வாய்ப்பு என்ற அறிவிப்பை, அரசாங்கம் செய்யும் போதுதான், வேலைக்காக படிப்பு என்ற சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டுள்ள, பெரும்பான்மை மக்கள் தமிழ் மொழிக் கல்வி மீது தாகம் கொள்வர்.