Thursday, February 4, 2010

புத்தர் கோயில்கள், ஆக்கிரமிப்பு அடையாளங்களா?

இலங்கைத்தீவிலிருந்து வந்து கொண்டிருக் கின்ற ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு நாளும் நமது இதயத்தை குத்திக் கிழிப்பதாக இருக் கின்றன. முதலில் அவர்கள் அரசாங்கப் பணிகளுக்கு ஆட்களை நியமிப்பதில், தரப்படுத்தலை கொண்டு வந்தார்கள். அப்போது யாழ்பாணத்து படித்த பிள்ளைகள், கொழும்பு நகரில் அரசாங்கப்பணிகளில் அதிகமாக காணப்பட்டார்கள். அதுவே சில மாற்றார் களுக்கு, மாச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் தரப்படுத்தல் மூலம், தமிழர்கள் அரசுப் பணிகளுக்கு வரப்படுத்தலை இல்லாமல் செய்யலாம் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அந்த நேரம் மேற்கு பாகிஸ்தானிலிருந்து, வெகு தூரத்திலிருந்த கிழக்கு பாகிஸ்தானை பிரித்தெடுத்து விடலாம் என்ற ஆவல், அருகே இருந்த ஆதிக்கவாதிகளின் சிந்தனைகளில் ஆலவட்டம் போட்டது. அதற்கேற்ப கிழக்கு பாகிஸ்தான் என்பது வங்கமொழி பேசும், வங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் வெகுதூரத்தில் உள்ள மேற்கு பாகிஸ்தான் தலைமை, தங்களை ஆள்வதை அவர்களால் சகித் துக் கொள்ள முடியவில்லை. மேற்கு பாகிஸ்தான் தலைமைக்கும், இஸ்லாமிய மதத்தின் மூலம் மட்டுமே தொடர்பு கொண்ட அல்லது சேர்த்துக் கொண்ட அல்லது சேர்த்து வைக்கப்பட்ட கிழக்கு பாகிஸ்தானை, அதனது மக்களை புரிந்து கொண்டு ஆளத்தெரியவில்லை. மேற்கு பாகிஸ்தானின் தலைமையும் கூட, நாடாளுமன்ற பாதை என்ற நடிப்புகளின்றி, நேரடியாகவே ராணுவ ஆட்சியை விரும்பி அவ்வப்போது ஏற்று வந்தது இயல்பாகவே வங்கத்து மண் ஜனநாயகத்தை விரும்பி ஏற்கும் மண். அதனால் இரண்டு பாகிஸ்தானிற்கும் இடையிலே பிரிவுகள்தான் அதிகரித்தன. இடையில் இருக்கும் பெரும் வல்லரசு நாட்டால், சும்மா இருக்க முடியுமா? அதனால்தான் இந்தியப் படையும், வங்க தேச விடுதலையில் அக்கறை செலுத்தியது. அந்த அக்கறைக்கு பரி சாக, ஒரு நாடு பிறந்தது. அதுவே வங்கதேசம் என அறைகூவல் விடுத்தது. பெருமையாக இந்திய நாட்டின் அறிவுஜீவிகள் கூறுவார்கள். வங்கதேச தந்தை முஜ்பூர்ரஹ்மான். தாய் இந்திரா காந்தி. உண்மைதானே என்று உள்ளே பதுங்கி இருந்த எதார்த்தங்களும் கூறின. மேற்கண்ட கதை யாழ்பாண இளைஞர்கள் மீது தாக்கம் செலுத்தியது. தரப்படுத்தலில், தரைப்படுத்தப்படுகிறோமே என்று எண்ணிய இளைஞர்கள், வங்கதேசத்தின் பிறப்பை வரிந்து கொண்டு, யாழ்தேசம் என தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இந்திய நாட்டின் அரசாட்சியை அதிகமாக எதிர்பார்க்கத் தொடங்கினார்கள்.
ஈழத்தமிழனின் எதிர்பார்ப்பு இந்தியாவிடம் இருக்கிறதே என்று சிங்களர்கள் கொதித்துப் போனார்கள். தங்களது இருத்தலுக்கே ஆபத்து வருமோ என அலறிப்பார்த்தார்கள். அதிகாரத்தை கையில் எடுத்த ஆதிக்க வெறியர்கள், சூழ்நிலையின் வாய்ப்பை பயன்படுத்தி, வெறிகொண்ட தாக்குதல்களை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள். இனப்படுகொலைகள் பரவத்தொடங்கின. தமிழனின் மாமிசம் நடுத்தெருவில் விற்கத்தொடங்கியது. இனவேறுபாடு, இனப்பாகுபாடாக படமெடுத்தது. இனப்பாகுபாடு, இனப்பகையாக மாறிப் போனது. இனப்பகை, இனவெறியாக உருவெடுத்தது. இனவெறி பல உயிர்களை பலி வாங்கியது. கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாக இருந் தார்கள்.
ரத்தம் கொட்டி ஓடிய தமிழர்கள், பறந்தும், படகில் நகர்ந்து தங்கள் நிலத்திலிருந்து ஓடினார்கள். பறந்தவர்கள் பலர் ஐரோப்பாவிலே பிரிந்து
சென்றார்கள். அமெரிக்காவிலும், கனடாவிலும் அமர்ந்து கொண்டார்கள். படகில் ஏறி கடல் கடந்தவர்கள், இன்று வரை பாதிப்புகளிலிருந்து வெளியே வராமல் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இன அழிப்பு கொடூரம் இளைஞர்களை சிந்திக்க வைத்தது. அதிலும் மூத்தவர்கள், ஆயுதம் தாங்குவது பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது அகலமான கைகளை விரித்து இந்திய அரசு வரவேற்றது. தாய் தமிழகத்தின் வாழும் இன உணர்வாளர்கள் வர வேற்கவே செய்தார்கள். ஆனாலும் கூட, தங்கள் இனத்தாருக்கு இன்முகம் காட்ட இவர்களால் முடியும். வேண்டிய ஆயுதமும், பயிற்சியும் கொடுக்க யாரால் முடியும்? அங்கேதான் இந்திய அரசு தனது பற்களைக் காட்டி, வரவேற்பு என்ற பெயரில் வலையை விரித்தது. விரித்த வலையை யாரும் விபரீதமாக எண்ணிப்பார்க்கவில்லை.
தான் ஆளும் நாட்டிலேயே, தனி அடையாளத் துடன் தேசிய இனங்களாக வாழும் மனிதர்களை சகித்துக் கொள்ளா நிலையில் ஒரு அரசு அனுபவம் பெற்று நின்று கொண்டிருக்கிறது. காஷ்மீர் தேசிய இனம் இந்த அரசுக்கு தொடர்ந்து தொல்லையாய் இருக்கிறது. நாகர்கள் எத்தனை ஆண்டுகளாக, ஆயுதங்களை கீழேப் போடாமல் அச்சுறுத்தி வருகிறார்கள்? மிசோக்கள் தங்கள் பங்குக்கு, இந்திய அரசுடன் தூதரகப் பேச்சு போல, துரத்தி வருகிறார்களே? அஸ்ஸாம் மக்களும் இந்திய அரசை ஏற்காமலேயே, இடஞ்சல் செய்வதை தாங்க முடியுமா? இப்படித்தான் அறுதியிட்ட தேசிய இனங் களைக் கூட, இந்திய அரசு எண்ணிப்பார்த்தது. அந்த நேரம் தான் ஈழப்பிரச்சினை, இந்திய அரசு நிகழ்ச்சி நிரலில் முதன்மையாய் பட்டது. இன்முகத்தோடு ஈழத்து இளைஞர்களை, இந்திய அரசு வரவேற்றது. ஆயிரக்கணக்கில் வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் ஆர்வத்தோடு கடல் தாண்டினர். தாண்டி வந்தவர்களுக்கெல்லாம், தாரை, தப்பட்டை இல்லாமலேயே வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் பல குழுக்களுக்கும், பல இடங்களில் முகாம்கள். முகாம்களை தேடி, நாடிச் சென்று அமைத்துக் கொள்வது, அவரவர் திறமை. ஆனால் அதற்குப் பிறகு, அங்கே வரும் வகை வகையான மத்திய உளவுத்துறை. எட்டிப்பார்க்கும் மாநில உளவுத்துறை. உணவுக்கு தொகை. பயிற்சிக்கு ஆள் எடுப்பு. பலவித பயிற்சிகள். கடைசியில் ஆயுதங்கள். தேசிய இனங்களை சிறைக்கூடமாக வைத்திருக்கின்ற ஒரு அரசால், தேசிய இன விடுதலை ஒன்றுக்கு விரும்பிய படி உதவிட முடியுமா? யாரும் இதை எண்ணிப்பார்க்க, நேரத்தை விரயம் செய்ய தயாராய் இல்லை. இப்படித்தான் தொடங்கப்பட்டது பாய்ச்சலான போர். அப்போதிலிருந்தே, ஒவ்வொரு கட்டமும் தன் கைக்குள் அடங்கவேண்டும் என்று எண்ணிப்பார்ப்பது விரிவாக்க அரசுக்கு, விளை யாட்டாகப் போனது.
அதனால் தான் இலங்கைத் தீவின், இரண்டு இனங்களின் தலைமைகளுக்கும், ஆயுதபாணியாக ஆக்குவதற்கு தன்னால் ஆன உதவியை அண்டை அரசு செய்யமுடிந்தது. இப்போது வருகின்ற செய்திகள் அதிர்ச்சியைத் தருகின்றன. இன அழிப்புப் போரை நடத்திய இனவாத அரசு, இனச்சுத்திகரிப்பு செய்ய தமிழர் நிலங்களில், சிங்களரை குடியமர்த்தினர். இனச்சுத்திகரிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும், ஒரே நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள். அதனால் தான் ஏ9 நெடுஞ்சாலையின் வழியெங்கும், அதிகமாக வளர்ந்துள்ள அரச மரங்களை, தங்கள் அரசின் மரங்களாக எண்ணிக்கொண்டு, ஒவ்வொன்றிலும் புத்தக் கோவில்களை அவர்கள் புதுப்பிக்கிறார்கள். இதை மவுனமாக அனுமதிக்கும், அண்டை அரசும் ஆண்டை அரசாக நடக்கத் தொடங்கியது. அசோக சக்கரவர்த்தி இந்தியாவில ஆண்ட போது உள்ள அடையாளங்களை அள்ளிக் கொடுத்து, இனச்
சுத்திகரிப்புக்கு, பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு, இவர்கள் பாதை அமைக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் ஆளும் சீன அரசும், புத்தமதத்தைக் கருவியாக்கினால், அசோகன் வழிவந்த இந்திய அரசும் இதையே செய்து போட்டி போட, ஈழம்தான் கிடைத்ததா?
தமிழனின் அடையாளம், தமிழனின் நிலம், தமிழ னின் பண்பாடு காப்பாற்றப்பட என்ன செய்ய வேண்டும் என ஆராயும் நேரமிது.