Wednesday, February 3, 2010

மகாராஷ்டிரா பிரச்சினையும், வேலையில்லா திண்டாட்டமும்!

பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடிய வீரர்கள் மராத்தியர்களா அல்லது வடநாட்டுக்காரர்களா என்ற விவாதம் இப்போது வளர்ந்து வரும் தலைவரான ராகுல்காந்தியால் உருவாக்கப்பட்டுள்ளது. நமக்குத் தெரிந்து மகாராஷ்டிரா மாநிலத்தில், வேலைக்கு ஆள்எடுக்கும் தேர்வுகளை எழுத பீகார்காரர்கள் வருவதா என்று பிரச்சினையை கிளப்பி அடிதடி போட்டவர்கள் மகாராஷ்டிரா நவநிர்மாண் சமிதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தான் சட்டமன்றத்திற்குள் இந்தியில் பேசுவதா என்று ஒரு சமாஜ்வாதி கட்சி உறுப்பினரை தாக்கியவர்கள். அதன் எதிர்விளைவாக, பீகாரில் மகாராஷ்டிரா காரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சமிதி, வட இந்திய மாநிலங்களின் வேலையாட்களை எதிர்த்து போராடுவது என்பதற்கு ஒரு நியாயம் கூறுகிறார்கள். அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற வேலைவாய்ப்பில், சொந்த மாநிலக்காரர்களுக்கு வேலை கிடைக்காமல், வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதனால், இருக்கும் வேலை வாய்ப்பையும் இழக்க தயாரயில்லை என்ற நியாயத்தை அவர்கள் எழுப்புகிறார்கள். இந்தியா முழுவதும் பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம், ஒவ்வொரு மாநிலக்காரர்களையும், மண்ணின் மைந்தனுக்கே வேலை என்ற கோரிக்கையை நோக்கி தள்ளிவிட்டுள்ளது என்ற எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால் ராகுல் காந்தி இப்போது கிளப்பி இருக்கின்ற பிரச்சினை வித்தியாசமான சிக்கலை ஏற்படுத்துகிறது. மும்பை மீது 26/11ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நேரத்தில், பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டவர்கள் எந்த மாநிலத்தவர் என்ற கேள்வியை, ராகுல்காந்தி விவாதமாக்கியுள் ளார். பீகார்காரர்களும், உ.பி.காரர்களும், தேசிய பாதுகாப்புக்குழுவில் இருந்து கொண்டு, மும்பையில் நடந்த தாக்குதல்களை எதிர்த்து போராடி, மும்பையைக் காப்பாற்றினார்கள் என்பதுதான் ராகுல் கிளப்பி இருக்கும் புதிய சர்ச்சை. இதற்கு பதில் கொடுத்திருக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே, ஆழமான ஒரு விவகாரத்தை எழுப்புகிறார்.
மும்பை தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தும் நேரத்தில், ஏற்கனவே இந்துத்துவா பயங்கரவாதத்தில் ஈடுபட்ட, பெண் துறவியையும், முன்னாள் ராணுவ அதிகாரியையும் கண்டுபிடித்து வழக்கு போட்டதில் பிரபலமான ஹேமன் கார்க்கரே மற்றும் அசோக் காம்தே போன்ற அதிகாரிகள் பங்கைப்பற்றி விவாதம் இப்போது எழுந்துள்ளது. மும்பை தாக்குதலில் மேற்கண்ட இரண்டு முக்கிய பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டது ஏன் என்றும், எப்படி என்றும் எழுந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. அதில் ஒரு அதிகாரியின் மனைவி எழுதிய புத்தகத்தில் பல சர்ச்சைகள் கிளம்பின. தனது கணவனின் பாதுகாப்பை, மும்பை காவல்துறை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் எழுப்பியிருந்தார்.
இப்போது மீண்டும் ராகுல் காந்தி மும்பை பயங்கரவாத தாக்குதல் பற்றி கருத்துக் கூறியதன் எதிரொலியாக இந்த பிரச்சினை எழும்பியுள்ளது. மும்பை தாக்குதலில் எதிர்த்துப் போராடி உயிர் துறந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் பிரபல அதிகாரிகளான, ஹேமந்த் கார்க்கரே, அசோகாம்தே, விஜய்சலாஸ்கர், துக்கராம்ஓம்புல் ஆகியோரது தியாகத்தை ராகுல் காந்தி கொச்சைப்படுத்துகிறாரா? என்று சிவசேனா இப்போது கேள்வியை எழுப்பியுள்ளது.
இது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விவாதம் தான். ஏனென்றால் மாநில உணர்வு அதிகமாக எழும்பிவரும் ஒரு மகாராஷ்டிரத்தில், நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் மும்பைத்தாக்குதல், அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் பீதியை கிளப்பிய நிகழ்ச்சி. அதில் உயிர்தியாகம் செய்த மராத்திய அதிகாரிகளை, அந்த மாநிலத்து மக்கள் பெரிய அளவில் மதிக்கின்றனர். தாக்குதலில் பலியான அதிகாரியின் மனைவி எழுதிய புத்தகம் கூட, பெரும் பிரச்சினையை எழுப்பியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்திய அரசியலையே தலைமை தாங்குவதற்காகவும், இந்திய ஆட்சி அதிகாரத்தை வழி நடத்துவதற்காகவும் தயார் செய்யப்படும் ஒரு தலைவரான ராகுல்காந்தியின் கூற்று, சர்ச்சையை ஏற்படுத்தவே செய்யும்.
அரசியல்வாதிகள் பற்றி எரியும் ஒரு பிரச்சினையைப் பற்றி பேசும் போது, அதன் பக்கவிளைவுகளை கவனிக்காமல் பேசுவது என்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் ஒரே நாடு என்ற உயர்ந்த கொள்கையை பேச விரும்பும் ராகுல் காந்தி, இந்தியா எங்கும் எல்லா இந்தியருக்கும் சொந்தம் என்ற முதிர்ச்சியான சிந்தனையை வெளிப்படுத்த விரும்பும் இளம் அரசியல்வாதி, ஒரு மாநிலத்தில் நடந்த தாக்குதலில், போராடி உயிர்துறந்த அந்த மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளை கொச்சைப்படுத்துவது போல கருத்துக்கூறுவது என்பது ஆரோக்கியமான விளைவுகளைக் கொடுக்காது.
மகாராஷ்டிராவில் தொடர்ந்து உருவாகிவரும் இந்த மாநிலப்பிரச்சினை அடிப்படையில் என்ன காரணத்தினால் எழுகிறது என்பதை அரசியல்வாதிகள் கணிக்க வேண்டும். அடிப்படை காரணங்களே இல்லாமல், ஒரு மாநிலத்தில் ஒரு பிரச்சினை தொடர்ந்து எழமுடியாது. அதுவும் பல்வேறு நேரங்களில், பல்வேறு வகைகளில், ஒரே பிரச்சினை எழுகிறது என்று சொன்னால் அதற்கான அடிப்படை ஆராயப்படவேண்டும். இன்று மகாராஷ்டிராவில் எழுப்பப்பட்டுவரும் பிரச்சினை, நாளை இன்னொரு மாநிலத்தில் எழுவதற்கான நியாயங்கள் இருக்கின்றன.
உதாரணமாக பெரும் மக்கள் கிளர்ச்சியை கிளப்பியுள்ள தெலுங்கானா தனி மாநிலம் என்ற பிரச்சினையும் கூட, மகாராஷ்டிராவில் கிளம்பியிருக்கும் பிரச்சினையை ஒட்டியதுதான். அதாவது அந்த வட்டாரம் அல்லது மாநிலம் பின் தங்கிய நிலையில் இருக்கும் போது, தங்கள் பகுதியின் மக்களுக்கு வேலை வாய்ப்பும், தங்கள் வட்டாரத்தின் வளர்ச்சியும், இத்தகைய கிளர்ச்சியாளர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆகவே அது போன்ற அடிப்படையான மக்கள் பிரச்சினைகளில், அகில இந்திய அரசியல்வாதிகள் கவனம் செலுத்தினால், பல கிளர்ச்சிகள் தவிர்க்கப்படலாம்.
அவசரமாக ராகுல் பேசிய பேச்சு, இப்போது சிக்கலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு தான் தியாகம் செய்த மகாராஷ்டிரா மாநில காவல் அதிகாரி கார்க்கரேயிக்கு எதிரானவர் அல்ல என்ற விளக்கத்தை அதே ராகுல் கொடுக்கவேண்டியுள்ளது. இருக்கின்ற பிரச்சினைகளையே, எண்ணை ஊற்றி பற்ற வைக்கின்ற முறையில், பொருளாதாரக் கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வரும் அரசாங்கம், போதாக்குறைக்கு தங்களது அரசியல்வாதிகள் மூலம், இப்படி புதிய பிரச்சினைகளையும் கிளப்பி விட்டு விடுகிறார்கள்.
அன்றாடம் வாழ்க்கைக்கே போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில் இது போன்ற உணர்ச்சிகளைத் தூண்டிவிடும், இழிவுபடுத்தல்கள் விதைக்கப்படக்கூடாது. பாதிக்கப்பட்டதாக உணரக்கூடிய வட்டார அல்லது மாநில மக்கள் இயக்கங்களிலிருந்து உணர்ச்சிகள் வெளிப்படுவது இயற்கை. ஆனால் அனைத்திற்கும் மேலாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்ற அரசியல்வாதிகளிடமிருந்து, நிதானம் வெளிப்பட வேண்டும். ராகுல் போன்ற இளம் அரசியல்வாதிகள், எழுகின்ற பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும், பின்னால் உள்ள காரணங்களை ஆராய்ச்சி செய்ய தங்கள் நேரத்தை செலவு செய்ய வேண்டும். மாறாக உப்பரிகையில் இருப்பவரின் பார்வையிலிருந்து, உணவின்றி இருப்பவர்களைக் கண்டு கொந்தளிக்கக் கூடாது. இதை இந்திய அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் நாட்டிற்கு நல்லது.