Monday, February 1, 2010

நாடாளுமன்றப் பாதைக்கு பரிகாசமா?

இந்தியா தனது நாடாளுமன்ற ஜனநாயக பாதையில், 63 ஆண்டுகளாக பீடு நடை போடுகிறது. 60 ஆண்டுகளாக குடியரசு நாடாக இருப்பதாகவும் பீற்றிக் கொள்கிறது. உலகிலுள்ள நாடுகளிலேயே, பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை வேறு, நமது நாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்களை நிலைகுலையச் செய்கிறது. இவை அத்தனையுமே சிறந்த நகைச்சுவை தான் என்று சொல்வது போல, ஆளுங்கட்சி கூட்டணியிலிருந்து, ஒரு அதிரடி வெடி, வெடித்துள்ளது. அதுதான் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான, தேசியவாத காங்கிரஸ் கட்சியிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் புதிய தாக்குதல்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகயிருக்கும் சரத்பவார் அவ்வப்போது காங்கிரஸ் தலைமையை எதிர்த்து, ஏதாவது கருத்துச் சொல்லி மாட்டிக் கொள்வார். சமீபத்தில் சரத்பவார், அவர் சார்ந்த விவசாய அமைச்சகப் பிரச்சினையாக வந்திருக்கும், விலைவாசி உயர்வு பற்றிக் கூறும் போது, நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்திற்கு, பாதிக் காரணத்தை இந்திய தலைமை அமைச்சர் தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தக் கூற்று பெரும் பிரச்சினையைக் கிளப்பியது. அதற்கு மழுப்பலான பதிலைச் சொல்லி, அப்போதைக்கு ஒப்பேத்தினார். ஆனால் இப்போது தேசியவாத காங்கிரசின் இன்னொரு பெருந்தலைவரான சங்மாவின் கருத்து, புதிய சிக்கலை உருவாக்குகிறது.
காங்கிரஸ் கட்சிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், மத்தியில் மட்டும் அப்படிப்பட்ட புதிய சிக்கல் எழுந்தால், அது கூட்டணிச் சிக்கல் என்பதாக அழைக்கப்படும். ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றிய புதிய கேள்விகள் என்று மட்டும் பார்க்கப்படுமானால், அது ஆட்சியாளர்களைப் பற்றிய விமர்சனம் என்பதாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் சங்மா எழுப்பியிருக்கும் புதிய கேள்வி, இந்த நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே, கூர்மையான வாள் கொண்டு, குத்தி கேட்பது போல இருக்கிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியும் அதனுடன் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளும் நிற்கின்றன.
வடகிழக்கு மாநிலத்தில் இருந்து, தேசியவாத காங்கிரசின் ஒரு தலைவராக உருவாகி வளர்ந்த பி.ஏ.சங்மா, தனது சர்ச்சைக்குரிய கருத்தை, மேற்கு மாநிலமான கோவாவில் நடந்த, மாநில அளவிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார். தான் நாடாளுமன்ற பாதையில் உருவாகின்ற அரசாங்கத்திற்கு, ஒரு வலுவான ஆதரவாளர் என்றும், ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக, மிகவும் நம்பிக்கையிழந்த நிலையில் இருப்பதாகவும் சங்மா அப்போது தெரிவித்தார். 1996 தேர்தலில் மக்களவையிலிருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும், அப்போது காங்கிரஸ் கட்சியும் அல்லாத, பா.ஜ.க.வும் அல்லாத ஒரு தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு, கர்நாடகாவின் முதலமைச்சராகயிருந்த தேவகவுடாவை கடன் வாங்கினோம் என்றும் சங்மா அப்போது தெரிவித்தார்.
அதைவிட இப்போதுள்ள தலைமை அமைச்சரான மன்மோகன் சிங் பற்றி சங்மா கூறிய கருத்துக்கள் தான் மிக முக்கியமானவை. மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவருமான, சரத்பவார் மேடையில் அமர்ந்து, அந்த மாநில மாநாட்டை தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் போது சங்மா, மன்மோகன் சிங் பிரதமரானது பற்றி தெரிவித்தக் கருத்துக்கள், இத்தகைய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2009ம் ஆண்டில் மீண்டும் இந்தியப் பிரதமர் ஒருவரை, மக்களவையிலிருந்து தேர்வு செய்வதில் தோற்றுவிட்டோம் என்றும், அதன் விளைவாக மாநிலங்களைவையிலிருந்து நமக்கு வேண்டிய பிரதமரை தேர்வு செய்தோம் என்றும் அப்போது சங்மா சுட்டிக்காட்டினார்.
அதோடு விடாமல், தான் நாடாளுமன்ற பாதையின் மீது வலுவான நம்பிக்கை உள்ளவன் என்று கூறி, மக்களவையிலிருந்து மட்டுமே ஒரு நாடு தனது பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டில் இப்படிப்பட்ட அணுகுமுறையை சிந்திக்க முடியாது என்றும் சங்மா கூறினார்.
இந்தியாவிற்கு நாடாளுமன்ற ஜனநாயக பாதையிலான வழிகாட்டலை கொடுத்தது, இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர் தான். அதனால் தானோ என்னவோ, சங்மா போன்ற பழம்பெரும் அரசியல்வாதிகள், இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்ற ஆட்சிமுறை மீது ஒரு பெரும் மரியாதையை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறை என்பது சில அடிப்படையான ஜனநாயக பண்புகளைக் கொண்டுள்ளது. அது அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது. இந்திய மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டது, இந்தியாவிலிருக்கும் மக்களவை. அது புதிய சட்டங்களை இயற்றுவதற்கும், இருக்கும் சட்டங்களை திருத்தங்கள் செய்வதற்கும், முதன்மை அதிகாரம் பெற்ற சபை. ஆனாலும் கூட இந்திய நாடாளுமன்ற பாதையிலிருக்கும் இன்னொரு அம்சமான, மாநிலங்களவை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களால், தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை கொண்ட அவை. இது நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவைக்கு, உதவிச் செய்ய உருவாக்கப்படும் அவை.
மக்களவையை நேரடியாக மக்களால் தேர்ந்தேடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட அவை என்பதை புரிந்துக் கொள்ளும்போது, மாநிலங்களவையை மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட அவை என்று அழைக்கிறோம். அதாவது மாநிலங்களவை உறுப்பினராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரை பின் கதவு வழியாக வந்தவர் என்று சொல்வது ஒரு அகில இந்திய பழக்கம். இப்படிப்பட்ட புழக்கடை வழி வருவதிலும், வந்ததிலும் வழமைப் பழக்கத்தைக் கொண்டவராக, நமது தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இருக்கின்றார். அதனால் தான் இப்போது சங்மாவின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றார். மன்மோகன் சிங், மாநிலங்களவைக்கு அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டு, வெற்றிப் பெற்றார். அதன் மூலம் தலைமை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இத்தகைய விபத்து இந்திய அரசுக்கு, இப்போது முதல் முறையாக 2009ம் ஆண்டு வந்துவிடவில்லை.
ஏனென்றால் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், 2004ம் ஆண்டிலேயே இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இப்படிப்பட்ட விபத்தைச் சந்தித்தது. பிரதமராக ஆக்கப்பட்ட மன்மோகன் சிங்கை, எம்.பி.யாக ஆக்க வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்திலிருந்த காங்கிரஸ் கட்சி, அவரை அசாம் மாநிலம் மூலமாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து, திருப்திப்பட்டுக் கொண்டது. மீண்டும் 2004ம் ஆண்டு மக்களவைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது மன்மோகன் சிங்கை பிரதமராக ஆக்குவோம் என்று வெளிப்படையாக பரப்புரைச் செய்து தான், காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணியும் தேர்தல் பிரச்சாரம் நடத்தினர். அதில் சங்மா உட்பட, தேசியவாத காங்கிரசும் அடக்கம். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் மக்களவைத் தேர்தலில், தங்களது பிரதமரான மன்மோகன் சிங்கை, தேர்தலில் நிறுத்தி மக்கள் மத்தியிலிருந்து வாக்குப் பெற்று, கொண்டுவர அவர்கள் எண்ணவில்லை. மாறாக அப்போது அவர்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீது, மாபெரும் அக்கறை தென்படவில்லை. ஒரு மாநிலங்களவை உறுப்பினரான, மன்மோகன் சிங்கையே மீண்டும் பிரதமராக ஆக்கினார்கள். இப்போது திடீர் அக்கறை வந்த தேசியவாத முக்கியத் தலைவர் சங்மா, நாடாளுமன்ற ஜனநாயக பண்புகளைப் பற்றி கவலைப்படுகிறார். ஆகவே இந்தக் கவலையின் பொருள் என்ன என்ற கவலை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
1999ம் ஆண்டு தேர்தல் மூலம் சோனியா காந்தி பிரதமராக ஆகக்கூடாது என்று, பிரச்சினையை அதிகமாக எழுப்பியதே இந்த சங்மா தான். அதனால் 2004ம் ஆண்டு தேர்தல் மூலமும் சோனியா பிரதமராவது தவிர்க்கப்பட்டது. 2009 தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட மன்மோகனின் அமைச்சரவையில், தனது மகளை அமைச்சராக சேர்த்து விட்டதும் இதே சங்மா தான். அந்த நேரம் சோனியாவை நேரில் சந்தித்து, 10 ஆண்டுகள் முன்னால் தான் எழுப்பிய, இத்தாலி நாட்டு குடிமகள் என்ற பிரச்சினைக்கு மன்னிப்புக் கேட்டதும் இதே சங்மா தான். இப்போது காங்கிரஸ் தலைமையில், மன்மோகன் சிங்கினது பதவி நாற்காலியில் கைவைக்கலாமா என சிந்திக்கும் போது, இப்படிப்பட்ட நியாயமான வாதத்தை கிளப்புகிறவராக இருப்பதும் இதே சங்மா தான்.
அதனால் எழுகின்ற சந்தேகம் வித்தியாசமாக இருக்கிறது. மக்களவைக்கு தேர்ந்தேடுக்கப்பட்ட, அன்னையையோ, மகனையோ, பிரதமராக ஆக்குவதற்கு சங்மா மூலம் காங்கிரஸ் தலைமை கிளப்பியிருக்கும் விபரீதமான ஜனநாயக வேடம் தான் இதுவா என்பதே நமது கேள்வி