Sunday, January 31, 2010

பயங்கரவாதிகள், அரசியல்வாதிகளாக ஆகிறார்களா?

இன்றைக்கு புதிய ஒரு விவாதம் தொடங்கியுள்ளது. இதுவரை இந்த உலகம் பயங்கரவாதிகள் என்று யார், யாரை பட்டியலிட்டு பிரபலப்படுத்தி வந்ததோ, அவர்கள் பயங்கரவாதிகளா அல்லது அவர்களை முத்திரை குத்தியவர்கள் பயங்கரவாதிகளா என்பது தான் இந்தப் புதிய விவாதம். திடீரென ஒலிபரப்பப்பட்ட ஒசாமா பின்லேடனின் ஒலி நாடாவிலிருந்து, இத்தகைய விவாதம் மறுபதிவு செய்யப்படுகிறது. அமெரிக்க அரசு நிர்வாகமும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், தங்கள் நாடுகளின் பெரும் பணக்கார ஆலை அதிபர்களை பாதுகாப்பதற்காக, பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற கருத்தை, அமெரிக்க அறிவாளி பேராசிரியராக பெயர் பெற்ற நோம் சாம்ஸ்கி கூறிவந்தார். உலகிலிருக்கின்ற மொழிகள் அனைத்திற்கும், அடிப்படை கட்டமைப்பை விவரிக்கக் கூடிய மொழியியலுக்கு பெரும் கருத்தாளராக மதிக்கப்படுபவர் நோம் சாம்ஸ்கி. அவர் ஒரு மார்க்சியவாதியும் கூட. அந்த மாபெரும் நிபுணரின் கருத்துக்கள், எப்போதுமே உலக ஊடகங்களாலும், கருத்தாளர்களாலும் மறுக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கும்.
அப்படிப்பட்ட நோ சாம்ஸ்கியின் கருத்துக்களை இப்போது உலக பயங்கரவாதி என்று பிரபலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, ஒசாமா பின்லேடன் எதிரொலித்துள்ளதால் தான், இத்தகைய விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்க அரச நிர்வாகம், ஒரு மாஃபியா கும்பல் போல செயல்படுகிறது என்பது சாம்ஸ்கியின் கருத்துரை. சாவு வியாபாரிகள் என்று அழைக்கப்படும், உலக ஆயுத வியாபாரிகள், அமெரிக்காவில் மிகுந்து காணப்படுகின்றனர். உலகம் முழுவதிலும் எங்கே போர் மூண்டாலும், போரில் ஈடுபடும் 2 நாடுகளுக்கு மத்தியில், பொதுவான ஆயுத வியாபாரத்தை, இத்தகைய சாவு வியாபாரிகள் நடத்துகிறார்கள்.
அதாவது அமெரிக்க நாட்டில் இருக்கின்ற ஆயுத உற்பத்தி செய்கின்ற பெரும் ஆலைகளின் அதிபர்கள் தான், உலகமெங்கிலும் இத்தகைய ஆயுத விற்பனையை நடத்துகின்ற சாவு வியாபாரிகள். இவர்களது நலன்களை காப்பாற்றுவது என்பது அமெரிக்க அரசை ஆள வருகின்ற அரசியல்வாதிகளுக்கு வழக்கமாக எழுகின்ற தலைவலி. இத்தகைய சாவு வியாபாரிகளின் நலன்களை உயர்த்திப் பிடிப்பதற்காகவே, அந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகள் உருவாக்கப்படும். இந்த இழிநிலை அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் மற்ற மேற்கத்திய நாடுகளிலும், தவிர்க்க முடியாமல் உருவாகி விடுகிறது. மேற்கண்ட நாடுகளில் முதலாளித்துவம் அதன் உச்சகட்டத்திற்குச் சென்று, சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம் அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க பொருளாதாரமாக மாறிப் போனதால் ஏற்படுகிறது. அதாவது உற்பத்திக்கான வழிகாட்டலோ, கட்டுப்பாடோ, திட்டமிடுதலோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படாமல், ஒவ்வொரு தனியார் முதலாளிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டுப்பாடற்ற, கண்மூடித்தனமான சந்தையை உருவாக்குகின்ற உற்பத்திகள், அதற்கே உரித்தான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை, அமெரிக்காவின் வியட்நாம் போரின் போது, நேரடியாகக் காண முடிந்தது. அமெரிக்க ஆயுத வியாபாரிகள், தங்களது பொருளை விற்பனை செய்வதில், கண்ணும், கருத்துமாக இருந்ததால், அதையொட்டி வியட்நாம் போர் நீண்டது. போரில் சிக்கிக் கொண்ட அமெரிக்க அரசும், ஆயுத உற்பத்தி செய்கின்ற ஆலை முதலாளிகளுக்கு அதிகமாக சலுகைகளை கொடுக்கும்படி நிர்பந்திக்கப்பட்டது. இதுவே உணவு உற்பத்தி செய்கின்ற அமெரிக்க முதலாளிகளுக்கும், நுகர்பொருள்களை உற்பத்திச் செய்கின்ற அமெரிக்க முதலாளிகளுக்கும், பிரச்சனைகளை உருவாக்கியது. அத்தகைய முதலாளிகள், அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளுக்கு எதிராக சிந்திக்கத் தொடங்கினர். அதன் விளைவாக அவர்கள் ஊடகங்கள் மூலமும், இயக்கங்கள் மூலமும், வியட்நாம் போர் எதிர்ப்பு பரப்புரையை ஊக்கப்படுத்தினார்கள். அதுவே அமெரிக்க மக்களின் பொது அபிப்ராயமாக உருவானது.
சமீபத்தில் ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. அதில் இங்கிலாந்து உட்பட போராதரவு நாடுகள் ஈடுபட்டன. ஈராக்கில் சதாம் உசேனால், பேரழிவு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, காரணம் கூறி அந்த போர் நடத்தப்பட்டது. இப்போது நேற்றை அறிவிப்பில் இங்கிலாந்து முன்னாள் அதிபர் டோனி பிளேர் ஒரு உண்மையைக் கூறியுள்ளார். அதில் சதாம் உசேனை ஆட்சியிலிருந்து கீழே இறக்குவதற்காக, தாங்கள் தான் பேரழிவு ஆயுதம் ஈராக்கில் இருப்பதாக ஒரு பொய்யைக் கூறி, ஈராக் மீது போரை நடத்தினோம் என்று கூறியுள்ளார். அதற்கு எதிர்ப்பு வரும்போது, லட்சக்கணக்கான மக்கள் மரணமடைவதற்கு காரணமாகயிருந்த சதாம் உசேனை கீழே இறக்குவது எங்களுக்கு தேவைப்பட்டது என்றும் நியாயப்படுத்தியுள்ளார். தானே போருக்கு பொறுப்பு ஏற்பதாகவும் கூறியுள்ளார். ஈராக் மீது போர் தொடுக்க, பேரழிவு ஆயுதங்களை சதாம் உசேன் பதுக்கி வைத்திருப்பதாக கூறிய செய்தியை, அன்றைக்கு கண்டுபிடித்தவர்கள் என்று இங்கிலாந்து அரசின் உளவுத்துறையை கூறி வந்தார்கள். அதை அடிப்படையாகக் கொண்டே, தாம் போர் நடத்தியதாக அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம் கூறி வந்தார். இப்போது அந்த உளவுத்துறையின் கண்டுபிடிப்பு, பகிரங்கமாக வெளிவந்து விட்டது. இதைத்தான் கடைசியாக பையை விட்டு, பூனை வெளியே வந்து விட்டது என்று கூறுவார்கள். அமெரிக்க அரசும், இங்கிலாந்து அரசும் சேர்ந்து திட்டமிட்டு, ஒரு பொய்யைக் கூறி, ஒரு பெரும் போரை இன்னொரு நாட்டின் மீது நடத்த முடியும் என்பதற்கு இதை விட ஒரு சரியான உதாரணம் இருக்க முடியாது. இதில் ஒரு உண்மை வெளிப்பட்டுள்ளது. அதாவது சதாம் உசேனை பயங்கரவாதி என்று முத்திரைக் குத்திய, அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒரு பொய்யை உருவாக்கி போர் தொடுத்தவர்கள் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. அதாவது உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை இதன் மூலம் உலகம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதேபோலத் தான் இப்போது வெளியாகியிருக்கும் ஒசாமா பின்லேடனின் அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவிலுள்ள ஆயுத உற்பத்திச் செய்யும் முதலாளிகளுக்கு, எப்படி பாதுகாப்பும், சலுகையும் அளிக்கப்படுகிறதோ, அதுபோல பருவநிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தை உற்பத்திச் செய்யும், அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, இப்போது உள்ள அமெரிக்க அரசு பாதுகாப்பும், சலுகையும் அளித்து வருகிறது என்பது தான் பின்லேடனின் குற்றச்சாட்டு. மறுக்கப்பட முடியாத, உலகம் அறிந்த இந்த உண்மையை இப்போது பின்லேடன் சொல்லக் கேட்கிறோம்.
அதாவது அமெரிக்காவால் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட, பின்லேடன் இப்போது அரசியல்வாதியாக அவதாரம் எடுத்து, அமெரிக்க அரசை அம்பலப்படுத்துகிறார். இதேபோலத் தான் இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாத அரசாட்சியை நடத்தும் ராஜபக்சே, தமிழீழ விடுதலையை முன்னெடுத்த பிரபாகரனை, பயங்கரவாதி என்று முத்திரைக் குத்தி, போரை நடத்தினார். அதன் விளைவாக இன்றைக்கு உலகம் தழுவிய தமிழ் மக்கள், நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவும் அரசியல் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் அரசியல்வாதிகளாக மாறுகிறார்கள். முத்திரை குத்தியவர்கள் உண்மையான பயங்கரவாதிகள் என்று அம்பலமாகிறார்கள். இதுதான் 2010ம் ஆண்டின் தொடக்கம் நமக்குக் கூறும் கருத்துரை.