Friday, January 29, 2010

தியாகி முத்துக்குமாரின் உயிராயுதம் பலன் தந்ததா?

ஓராண்டு ஆகிறது. ஒரு இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள, மத்திய அரசின் அலுவலகமான சாஸ்திரிபவன் வளாகத்திற்குள், திடீரென தன் உடலுக்கு தானே தீவைத்துக் கொண்டார். சில முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, ஒரு ஆவணத்தையும் கூட, அந்த இளைஞர் பொதுமக்களுக்குக் கொடுத்தார். பற்றி எரிந்து கறுத்துப்போன அந்த இளைஞர் உடனடியாக மற்றவர்களை, மருத்துவமனை நோக்கி தூக்கிச்செல்லப்பட்டார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எரிந்து போன அவரது உடல், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த இளைஞரின் பெயர் முத்துக்குமார். அப்போது இலங்கைத் தீவில், வன்னிப்பகுதியில் உச்சக்கட்டமான போர் நடந்து கொண்டிருந்தது. முல்லைத் தீவில் சிக்கியிருந்த மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் மீது, சிங்கள பேரினவாத ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது. அங்கே போர் நிறுத்தம் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் குறிப்பாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் பொதுவாகவும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகளின் அரசப்படை தளபதிகள், மற்றும் உளவுத்துறையினரின் உதவியுடன், சிங்கள பேரினவாத அரசு தனது தமிழ் இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருந்தது. உலகமெங்கும் வாழும் தமிழர்களில், ஈழத்தை தாண்டி இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களைத் தான் எதிர்பார்த்து உலகமேயிருந்தது. ஆனால் இங்கோ தேர்தல் அரசியல் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. தேர்தல் அரசியலை ஒட்டி, இலங்கைத் தமிழர் நலனுக்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவையும் கூட, தேர்தல் அரசியலுக்கு சார்பானவை என்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டது. ஈழத்தமிழர் ஆதரவு மேடைகள், தேர்தல் கட்சிகளின் உள்ளூர் அரசியலையும் இணைத்தே பேசி வந்தன.
இத்தகைய சூழல் தமிழ்நாட்டில் இருக்கின்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தின. தமிழ் இன உணர்வு இளைஞர்கள் மத்தியில் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதற்கு வடிகால் என்ன என்ற கேள்வி எழும்பியது. சரியான வழியில் இளைஞர்களை இட்டுச் செல்ல, தமிழ் இன விடுதலை உணர்வுடன் ஒரு திசை வழி தேவைப்பட்டது. எங்கிருந்தாவது ஒரு ஒளிக்கீற்று வருமா என்ற எதிர்பார்ப்பு, இளைஞர்களிடம் இருந்தது. அந்த நேரத்தில் தான் தன்னை நெருப்பிட்டுக் கொண்டு, இளைஞர் முத்துக்குமார் தமிழர்களுக்காக ஒரு ஆவணத்தை அளித்து விட்டுச் சென்றார். அந்த ஆவணம் வானத்திலிருந்து வந்து விழுந்த நட்சத்திரம் போல மின்னியது.
விதியே, விதியே என் செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை என்பதாக தனது கடிதத்தை முத்துக்குமார் தொடங்கியிருந்தார். அதுவே ஒரு வரலாற்று ஆவணமாக மாறியது. முத்துக்குமாரின் தியாகத்தை அடுத்து, அதேபோல 19 தமிழர்கள் வரிசையாக நெருப்புக்கு தங்களை இரையாக்கிக் கொண்டார்கள். அனைவரும் வன்னிப்போரில் அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பதற்காகவே தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள்.
உழைக்கும் தமிழ்மக்களே என்பதாக முத்துக்குமார் தனது கடிதத்தை தொடங்கியிருந்தார். சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது; அதை தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மவுனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம் என்று அந்த இளைஞர் எழுதியிருந்தார். அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள்; உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்; உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? இப்படியாக அவர் எழுதியுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும், மரணத்தின் விளிம்பிலிருந்து எழுதப்பட்டதனால், உயிர் பெற்று எழுந்தன.
தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைவர்கள் நடத்திய போராட்டங்களைப் பற்றி அவர் எழுதியுள்ளார். தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலாயிருப்பான் என்ற முத்துக்குமாரின் வாக்கியம் பலரையும் குத்தியிருக்க வேண்டும். பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை வாழ்த்துகிறார். வழக்கறிஞர்களை பாராட்டுகிறார். ஈழத்தமிழர் பிரச்சினை என்றில்லை; காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டம் என்றாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் இந்த இரண்டு தரப்பும் தான் என்று எழுதுகிறார். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகர போரட்டங்களில் முன் கையெடுப்பவர்கள் மாணவர்கள் தான் என்றெழுதுகிறார்.
அடுத்து மருத்துவக்கல்லூரி மாணவர்களை, அவர்களது போராட்டத்தைப் பாராட்டுகிறார். எங்கள் தமிழருக்கு இன்னல் விளைத்தால் எரிமலையாகி வெடிப்போம் என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள் என்று எழுதுகிறார். தனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயல்வார்கள். அதற்கு விட்டு விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து, போராட்டத்தை கூர்மைப்படுத்துங்கள் என்று மாணவர்களுக்கு கேட்டுக் கொள்கிறார்.
முத்துக்குமாரின் அந்த வாசகங்கள் அப்படியே அன்று அமுலானது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், அனைத்துக் கல்லூரி மாணவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசியல் தலைவர்களைக் கூட, அந்த மாணவர்கள் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. உடல் முத்துக்குமார் வாழ்ந்து வந்த கொளத்தூர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கட்சிச் சார்பற்ற வணிகர் சங்க உதவியுடன் அது பார்வைக்கு வைக்கப்பட்டது. முதல் நாளிலேயே உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல வேண்டும் என்று சிலர் எண்ணினார்கள். அரசும், காவல்துறையும் அத்தகைய எண்ணத்தை பாராட்டினார்கள். ஆனால் இளைஞர்களும், மாணவர்களும், தாங்கள் தான் தீர்மானிப்பவர்கள் என்று குரலை எழுப்பினார்கள். அரசியல் தலைவர்கள் கூடிப் பேசி முடிவு செய்தாலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களது குரல் தான் கொளத்தூரில் தீர்மானமாக ஆக்கப்பட்டது. அதையொட்டி 2 நாட்களும், முத்துக்குமாரின் விருப்பப்படியே அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இளைஞர்களின் ஆவேசக் குரல்கள் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தன. முத்துக்குமாரின் உணர்வுகள் தமிழகமெங்கும் இளைஞர்கள் மத்தியில் தமிழ் இன உணர்வை ஊட்டிவிடுவது மட்டுமின்றி, கட்சி அரசியலைத் தாண்டி சிந்திக்க வைத்தது. இதே உணர்வை முத்துக்குமாரின் உயிராயுதம், உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
ஈழத்தில் எழுந்த தமிழ் தேசிய எழுச்சி அறவழிப்போராட்டமாக இருந்த காலத்தில், இனக்கலவரங்கள் பேரினவாத சக்திகளால் ஏற்படுத்தப்பட்டன. அதில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள், தவித்துப் போன தமிழர்கள் என்ற எண்ணிக்கை அவநம்பிக்கையை விதைத்தது. அதன் பிறகு எழுந்த தமிழின விடுதலைக்கான ஆயுதப்போராட்டம், இளைஞர்களுக்கு மட்டுமின்றி, தமிழர்கள் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. உச்சகட்டமாக பேரினவாத சக்திகளுக்கு ஆதரவாக, உலகெங்கிலுமுள்ள தமிழின விரோத சக்திகள் ஒன்று சேர்ந்ததால் ஒரு சரிவு ஏற்பட்டது. அதேபோல முத்துக்குமாரின் உயிர்த்தியாகம், அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றல்ல என்றாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை உயிர்ப்போடு இருக்கிறது. அதனால் தான் இன்றைய நாள் இளைஞர்கள், இன உணர்வுக் கூர்வாளை தீட்டுவதற்காக, நினைவு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இது முத்துக்குமாரின் சாதனையாகத் தான் கணக்கிடப்பட வேண்டும்.