Thursday, January 28, 2010

தமிழர் ஒற்றுமை சாத்தியமானது

இலங்கைத் தீவின் அதிபர் தேர்தல் முடிவடைந்துள்ளது. நடந்து முடிந்த இந்த தேர்தலே கூட, அவசர கெதியில் நடந்த குறைப்பிரசவம் தான். அதாவது இலங்கையில் நடந்து வந்த நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையை, அரசத்தலைவர் ஆட்சி முறையாக அதாவது நிறைவேற்றும் அதிகாரமுள்ள குடியரசுத் தலைவர் என்ற ஆட்சி முறையாக மாற்றியமைத்தார்கள். அத்தகைய பொறுப்புக்கு மகிந்த ராஜபக்சே வந்திருந்தார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான், மீண்டும் இத்தகைய அதிபர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும். நாளுக்கு நாள் சீர்கெட்டு வரும் இலங்கையின் பொருளதார சூழ்நிலையைக் கண்டு, மகிந்தா பீதியடைந்தார். அதிகாரம் முழுமையையும் தன் கையிலேயும், தன் குடும்பத்தினர் கையிலேயும் வைத்துக் கொண்டு, தமிழர்களுக்கெதிரான இனவாதப் போரை நடத்தி வந்தார். சிங்கள பேரினவாத சிந்தனைகளை செரித்துக் கொண்ட, ராஜபக்சே இலங்கைத் தீவின் சிறுபான்மை தமிழர்கள் கண்டு நிலைக்குலைந்தார். தமிழர்களின் வீரதீரமான போர்முறைகள், ராஜபக்சேயை தொடர்ந்து மிரட்டி வந்தன.
நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ராஜபக்சே சில வியூகங்களை வகுத்து வருகிறார். ஏற்கனவே எல்லா மாகாணங்களிலும், பிராந்திய கவுன்சில் தேர்தல்களை நடத்தி முடித்து விட்டார். அதில் பல்வேறு விதமான, தவறான செயல்களை கையாண்டு, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பணத்தை இறைத்து விட்டு, ராஜபக்சே வெற்றி பெற்றார். அத்தகைய வெற்றித் திமிரில், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது, தங்கள் சொந்த உறவுகளை 50 இடங்களில் வெற்றி பெற வைக்க ஏற்பாடும் செய்து விட்டார்.
இந்த நேரத்தில் அதிபர் தேர்தல் நடத்தினால் தான், தான் வெற்றி பெறமுடியும் என்று ராஜபக்சே நம்பினார். அவரது நம்பிக்கைக்கு பதிலடி கொடுப்பது போல, பெரிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும், ராஜபக்சேயின் சென்ற முறை கூட்டாளியான ஜனதா விமுக்தி பெரமுனாவும், இந்த முறை மகிந்தாவிற்கு எதிரான ஒரு பொதுவேட்பாளராக, சரத்பொன்சேகாவை நிறுத்தினார்கள். சரத்பொன்சேகா ஏற்கனவே ராஜபக்சேயின் இன அழிப்புப் போருக்கு, தலைமை தளபதியாக செயல்பட்டவர். ஆகவே மகிந்தாவை எதிர்ப்பதற்கு இவர் தான் சரியான வேட்பாளர் என்பதாக எதிர்கட்சிகள் தேர்வு செய்தன. அதிபர் தேர்தலில் பொன்சேகா வெற்றி பெற்று விட்டால், நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டே பெரும்பான்மையாக வெற்றி பெற்று சாதித்து விடலாம் என்று ராஜபக்சே எண்ணினார். ஆனாலும் அதிபராக பொன்சேகா வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தையே கலைத்து விடுவாரோ என்று அஞ்சினார்.
ஆனால் பொன்சேகாவோ, அதிபர் ஆட்சிமுறையை ஒழித்து விட்டு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையை கொண்டு வரப்போவதாக, தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். அதனால் அதிகாரத்தை அதிகமாக தங்கள் கைகளில் குவித்து வைத்துக்கொண்டு மட்டுமே ஆள முடியும் என்ற நம்பிக்கையுள்ள ஒரு கும்பலுக்கும், பரவலாக்கப்பட்ட ஜனநாயக முறைப்படி அதிகாரத்தை செயல்படுத்தி ஆள முடியும் என்ற நம்பிக்கையுள்ள ஒரு கூட்டத்திற்கும் இடையே நடந்த தேர்தல் அது. அதிகாரக் குவிதலை கையில் வைத்திருக்கும் கூட்டம், பல்வேறு வழிகளில் மீண்டும் அதிகாரத்தை கையிலெடுத்துள்ளது.
ஜனநாயக நடைமுறைகளிலோ, கருத்துச் சுதந்தரத்திலோ, வெளிப்படைத் தன்மையிலோ நம்பிக்கையில்லாத ஒரு கூட்டம், ஒரு தேர்தலை நடத்தி அதன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறது என்று சொன்னால், அது எப்படிப்பட்ட வெற்றியாகயிருக்கும் என்பது கண்கூடு. அதனால் தான் படுதோல்வியடைந்த எதிர்வேட்பாளர் சரத்பொன்சேகாவையும், அவரது குடும்பத்தினரையும், அவர்களுடன் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அவர்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே சிறை வைத்து, வெளிவரவிடாமல் தடுக்கக்கூடிய கொடுஞ்செயலுக்குப் பெயர் தான், தேர்தலின் மாபெரும் வெற்றி என்பதாக கொண்டாடப்படுகிறது. அவர்களை விடுதியில் சிறை வைத்திருக்கின்ற கஜபா படையணி என்ற ராணுவப் பிரிவு, கொடூரமான கொலைகளை செய்வதில் பெயர் பெற்றவர்கள். இந்தச் செய்தியை வெளியிடுவதற்கு துணியக்கூடிய, தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சிரசா தொலைக்காட்சியும், ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரபல சிங்கள ஊடகவியலாளரான லசந்தாவை கொலை செய்வதற்கு முன்பு, இதே தனியார் தொலைக்காட்சியான சிரசா என்ற மகாராஜா குழுவைச் சேர்ந்த நிறுவனம், ராஜபக்சே ஆதரவாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இத்தகைய வன்கொடுமையை, தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்யக்கூடிய ஒரு ராஜபக்சேயை இந்த உலகம் புரிந்து கொள்ளுமா?
பல ஆண்டுகளுக்கு முன்னால் பர்மா என்ற மியான்மர் நாட்டில், சூ கியூ என்ற பெண் தலைவர் மக்களால் பெருவாரியான வாக்குகள் பெற்று, வெற்றி பெற்ற பின் அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள், அவரை வீட்டுச்சிறையில் தள்ளினார்கள். அதை அண்டை நாடான இந்திய அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருந்து வருகிறது. அதேபோல இப்போது, ராஜபக்சே என்ற இலங்கை அதிபர், தான் ஒரு மகத்தான வெற்றியை அதிபர் தேர்தலில் பெற்ற பிற்பாடு, எதிர்த்துப் போட்டியிட்ட சரத்பொன்சேகாவை அவரது குடும்பத்துடன் வீட்டுக் காவல் என்பதாக வைத்திருப்பதை, அண்டை நாட்டு அரசு கேட்கப்போகிறதா? அதேநேரம் ஊடக சுதந்திரத்தை தடுக்கும் பொருட்டு, சிரசா என்ற தொலைக்காட்சியையும் சுற்றி வளைத்து நிற்கின்ற ராணுவத்தின் செயல்பாடுகளைப் பற்றி, இந்திய அரசு வாய்திறக்கப் போகிறதா?
தென்னிலங்கையில் உள்ள சிங்களர்களது பெரும்பான்மை வாக்குகளை, ராஜபக்சே குடும்பத்தினர் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழர் வாக்குகளை பெறுவதில் வெற்றி பெறவில்லை. தமிழர்கள் இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்கள் என்றும், தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்றும், மலையகத் தமிழர்கள் என்றும் பிரிந்து கிடக்கிறார்கள். வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகளில் அவர்கள், வேறுபட்ட பகுதிகளில் வாழ்கிறார்கள். நீண்ட காலமாக தங்களுக்குள் ஒன்றுப்பட்ட ஒரு கருத்துக்கு வராதவர்களாக இருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட தமிழர்கள் அனைவருமே இந்த முறை, ராஜபக்சேயை நிராகரித்து வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு வரலாற்றுப் பதிவு.
வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு நீண்ட கால பிளவை ஏற்படுத்துவதிலும், பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்துவதிலும் இதுவரை சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல மலையகத் தமிழர்களாக இருக்கின்ற இந்திய வம்சாவழியான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், காப்பித் தோட்டத் தொழிலாளர்கள், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஆகிய தமிழ் தோட்டத் தொழிலாளர்கள், தங்களை ஈழத்தமிழர்களுடனோ, தமிழ் பேசும் முஸ்லிம்களுடனோ அடையாளம் காட்டிக் கொண்டதில்லை.
இந்த முறை ராஜபக்சே குடும்பத்தின் தொடர் அடக்குமுறைகளால், ஜனநாயக மறுப்பு முறைகளால், இந்த 3 பிரிவு தமிழர்களும் அத்தகைய கொடுங்கோலனை நிராகரிப்பது எனவும், அதற்காகவே பொன்சேகாவிற்கு வாக்களிப்பது எனவும் தீர்மானித்து வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். இதுதான் ஒரு அரசியல் திருப்பு முனையாக, தமிழர்கள் மத்தியில் நடந்தேறியிருக்கிறது. சிறுபான்மை இனமான தமிழினம், தனது எதிர்ப்பை ராஜபக்சேக்கு தெரிவித்து விட்டது.
அதுவே ராஜபக்சே கும்பலால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு என்பது தங்களுக்கான சரியான அரசியல் தீர்வல்ல என்பதை தமிழ் மக்கள் நிரூபித்திருப்பதற்கு சான்று.