Tuesday, January 26, 2010

இந்தி மொழியின் எந்தப் பிரிவு தேசிய மொழி?

இந்தியத் திருநாட்டிற்கு ஒரு தேசிய மொழி வேண்டும் என்பது சிலரது விருப்பம். நிர்வாக மொழியாக, ஒரே மொழி இருக்க வேண்டும் என்பது கூட, நிர்வாகிகளின் கருத்து. மொழியின் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கத்தை அடையாளம் காட்டக்கூடியது. அப்படி இருக்கையில், இந்திய நாட்டிற்கு ஒரே மொழி நாடு தழுவிய அளவில் அதிகாரத்தில் இருக்கின்ற மொழியாக ஆக முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மொழி என்பது மக்களால் பேசப்படுவது. இந்திய நாடு பல்வேறு மொழிவாரி மாநிலங்களை கொண்டதாக இருக்கிறது. அப்படியானால் பல்வேறு மொழிகள் இங்கே புழக்கத்தில் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது, அவற்றிற்கு மத்தியில் ஒரு மொழியை மட்டும் தேர்வு செய்து, அதுதான் நாடு முழுமைக்கும் அதிகாரத்தில் இருக்க வேண்டிய மொழி என்று சொன்னால், அது பொருத்தமாக இருக்குமா? பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகளுடன் இணைந்த அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும் பொழுது, ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய தி.மு.க. மத்திய அமைச்சர் முரசொலி மாறன், இந்தியா வேறுபட்ட பல்வேறு விதமான பண்பாடுகளையும், மொழிகளையும் கொண்ட நாடு என்பதை தனது உரையில் அழுத்தமாக முன்வைத்தார். அத்தகைய உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.தான் இந்தி மொழியை, தேசிய மொழியாக அறிவிக்கும் மனோபாவம் உள்ளவர்கள். அவர்களே கூட ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, எதார்த்தங்களை அங்கீகரிக்கத் தொடங்கினார்கள்.
நேற்று குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் இந்தியை தேசிய மொழியாக அங்கீகாரம் அளித்து, அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தியை தேசிய மொழியாக்க ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அந்த நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் இத்தகைய கருத்தை கூறியுள்ளது. அந்த தலைமை நீதியரசர், இந்தி பேசும் பகுதியில் முன்னேறிய பிரிவிலிருந்து வந்திருப்பவர். ஆனாலும் கூட உண்மையை எடுத்து வைத்துள்ளார்.
1991ம் ஆண்டு அரசாங்க கணக்குப்படி இந்தியாவில் முக்கியமாக 4 மொழிக் குடும்பங்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளன. இன்டோஆரியன் மொழிக்குடும்பத்தில் 19 மொழிகள் இருக்கின்றன. அதை 7 கோடியே ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 596 பேர் பேசுகிறார்கள். திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த 16 மொழிகளை, 18 கோடியே 86 லட்சம் பேர் பேசுகிறார்கள். ஆஸ்டிரோ ஏசியாடிக் குடும்பத்தை சேர்ந்த 14 மொழிகளை 94 லட்சத்து 62 ஆயிரம் பேர் பேசுகிறார்கள். திபெத்தோ பர்மன் குடும்பத்தைச் சேர்ந்த 63 மொழிகளை 71 லட்சத்து, 95ஆயிரம் பேர் பேசுகிறார்கள்.
இந்தி மொழியின் செல்வாக்கின் கீழ் 1981லும், 1991லும் பலியாகிவிட்டதாக பட்டியலிடப்பட்ட மொழிகள், 1961ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி இருந்த நிலைமை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1கோடியே 68 லட்சத்து 6 ஆயிரத்து 800 பேர் பீகார் மாநிலத்தவர்கள் பீகாரி மொழியில் பேசி வந்தனர். அதே மாநிலத்தில் போஜ்பூரி மொழியை 79 லட்சத்து 64ஆயிரத்து 750 பேர் பேசி வந்தனர். அஸ்ஸாமிலும், மத்திய பிரதேசத்திலும் வாழ்ந்து வரும், பீகாரி மொழி பேசிய 19,000 பேர் இந்த பலியிடப்பட்ட பட்டியலில் இருக்கிறார்கள்.
1கோடியே 49லட்சத்து33ஆயிரம் பேர் ராஜஸ்தானி மொழி பேசிவந்தவர்கள், இந்தி மொழி ஆதிக்கத்திற்கு கீழே கொண்டு வரப்பட்டுள்ளனர். ஹரௌத்தி மொழி பேசி வந்த 5லட்சத்து 61ஆயிரம் பேர், ராஜஸ்தான் மாநிலத்திலேயே, இந்தியின் செல்வாக்கின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். மால்வி மொழி பேசிய
11 லட்சத்து 42 ஆயிரம் பேர் மத்திய பிரதேச மாநிலத்தில், இந்திக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 62 லட்சத்து 42 ஆயிரம் பேர் மார்வாரி மொழி பேசி வந்தனர். இப்போது இந்தி பேசுபவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜஸ்தானி மொழி பேசி வந்த 8 லட்சம் பேர், மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 லட்சம் பேர் குமௌனி மொழி பேசி வந்தனர். அவர்களும் கூட இந்திக்காரர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கார்வாலி மொழியை, உத்தரபிரதேச மாநிலத்தில் பேசி வந்த 8 லட்சம் பேர், இந்திக்காரர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். மேற்கண்ட பட்டியலில் இருக்கின்ற பல மொழி பேசுபவர்களும், தங்கள் தாய்மொழியின் கல்வியும், புழக்கமும் நசுக்கப்பட்ட நிலையில், இந்தி திணிப்பால் பாதிக்கப்பட்டு இந்திக்காரர்களாக அடையாளம் காணும் அளவுக்கு, இந்தி பேசித் திரிகின்றனர்.
1991 கணக்குப்படி இந்தியாவில் 3,372 மொழிகள் உள்ளன. அதில் 1576 பட்டியலிடப் பட்டதாகவும், 1796 பட்டியிலிடப் படாததாகவும் இருக்கிறது. 8வது பட்டியல் என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படும், மொழிகள் 22 இருக்கின்றன. மேற்கண்ட மொழிகளில் பல மொழிகள், பல்வேறு மாநிலங்களில் மாநில ஆட்சிமொழியாக இருக்கின்றன. 1956ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிற்பாடு, மாநில மொழிகள் ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில நிர்வாக மொழிகளாக ஆக்கப்பட்டுள்ளன.
அப்படி இருக்கும் போது, 500 ஆண்டுகள் மட்டுமே வயது கொண்ட இந்தி மொழி, இந்திய நாட்டின் பாரம்பரிய மொழிகளை ஆதிக்கம் செலுத்தமுடியுமா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வட்டார மொழிகள், தாங்கள் ஒரு புறம் வழக்கழிந்து போவதற்கும், அந்த இடத்தை இந்தி மொழி ஆக்கிரமித்து கொண்டதற்கும் என்ன காரணம் என்று புரியாமல், தங்கள் மொழி அடையாளத்தை இழந்தவர்களாக இருக்கிறார்கள்.
உதாரணமாக திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள, பாரம்பரிய மொழியான தமிழ் மொழியைத் தவிர, புதிதாக தங்களை அறுதியிட்டுக்கொண்ட, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் இந்த ஆதிக்கத்திற்கு கீழ்படிந்து விட்டன. அதாவது அந்த மொழிகளை பேசுகின்ற தென்னிந்திய மாநிலங்களில், கிராமப்புற மக்கள் வரை இந்தி மொழி ஊடுருவிச் சென்றுள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள நகரங்களில், சாதாரணமாக மக்கள் இந்தி மொழி தெரிந்தவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மொழிக்குடும்பத்தில், தமிழ் மொழி பேசுகின்ற மாநிலத்தில் மட்டும்தான், இந்தியின் சாயல்கூட எட்டவில்லை. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் வளர்ச்சி, சமஸ்கிருதத்தை தழுவியதாக மாறியுள்ளது. அத்தகைய விபரீதம் தமிழ் மொழிக்குள் மட்டும் ஈடேறவில்லை. ஆகவே தென்னிந்தியாவில் தமிழ்மொழி பேசும் மாநிலம் மட்டும், இந்தி மொழியின் செல்வாக்கிலிருந்து விடுபட்ட ஒரு தீவாக நிற்கிறது.
குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியபடி, இந்தி மொழியை அரசாங்க மொழியாக மத்திய அரசு அனுமதித்தாலும், அது ஒரு தேசிய மொழி அல்ல என்ற கூற்று, சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சரியான தீர்ப்பு.
அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு சிலர், அவ்வாறு இந்தி மொழியை அரசாங்க மொழியாக அறிவிக்கும் போதும், தேவநாகிரி எழுத்துரு கொண்ட இந்திதான் அப்படிப்பட்ட அரசாங்க மொழி என்பதாக அறிவித்துள்ளார்கள். அதாவது இந்தி பேசுகின்ற மாநிலங்களில் கூட, மேற்குறிப்பிட்டுள்ள தேவநாகிரி எழுத்துரு கொண்ட இந்தி என்பது, நுண்ணிய சிறுபான்மை கொண்ட மக்களால் மட்டுமே புழங்கப்படும் ஒரு மொழி. ஆகவே அரசாங்க மொழியாக, பொருத்தமற்று அறிவிக்கப்பட்டுள்ள தேவநாகிரி எழுத்துரு கொண்ட இந்தியை எதிர்த்து, ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியைக் கட்டுவது இன்றைய தேவை. நேற்றைய மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை நாம் கடக்கும் போதே, தியாகிகளின் வழித்தடத்தில் இப்படி ஒரு சூளுரையை ஏற்பதே சிறந்தது