Monday, January 25, 2010

மொழி ஏகாதிபத்தியம், உலகம் தழுவியதா?

இன்று ஜனவரி 25ம் நாள். மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள். இதை வீரவணக்க நாளாகவும், தமிழர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடைபிடிக்கிறார்கள். மொழிப்போர் என்று அவர்கள் கூறுவது, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தைத்தான். இத்தகைய மொழிப்பாதுகாப்பு போராட்டம், தமிழ்நாட்டில் மட்டும்தான் நிகழ்ந்துள்ளதா? ஆதிக்க மொழி எதிர்ப்பு என்பது இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானதா? உலகம் தழுவிய அளவில் பல்வேறு நாடுகளில், வரலாற்றின் பல்வேறு கட்டங்களில், இதுபோன்ற அந்நிய மொழியின் திணிப்பை அல்லது ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்துள்ளன. அவை அந்த வட்டாரத்தின் அல்லது நாட்டின் அல்லது இனத்தின் மொழியை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்டன. இதை மொழி ஏகாதிபத்தியம் என்று அழைக்கிறார்கள். மொழியியல் ஏகாதிபத்தியம் என்று கூறுவோரும் உண்டு.
அடிப்படையில் மரபு ரீதியாக இருந்த அதிகாரம் கைமாறும்போது, அது ராணுவ அதிகாரமாகவோ அல்லது இன்றைய காலத்தில் பொருளாதார அதிகாரமாகவோ இருக்கும் போது, ஆதிக்கம் செலுத்தும் பண்பாடு தன்னுடைய மொழியுடன் இணைந்து தனது புதிய அதிகாரத்தை செலுத்துகிறது. 1990ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, மொழியியல் வல்லுநர்கள் மத்தியில், மொழியியல் ஏகாதிபத்தியம் என்ற சொற்றொடர் பிரபலமாகிவந்தது. குறிப்பாக ராபர்ட் பிலிப்சன் எழுதிய மொழியியல் ஏகாதிபத்தியம் என்ற புத்தகம் 1992ல் வெளியானது. அதில் நாஜிகளால் பிரிட்டிஷ் கவுன்சிலை எதிர்த்த விமர்சனங்களும், உலக முதலாளித்துவம் மற்றும் உலக ஆதிக்கத்திற்காக, ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டது என்ற சோவியத்தின் ஆய்வும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழியியல் ஏகாதிபத்தியம் என்பது, பொதுவாக பண்பாட்டு ஏகாதிபத்தியம் என்ற அம்சத்தில் பார்க்கப்படுகிறது. பிலிப்சன் தனது புத்தகத்தில், ஆங்கில மொழியியல் ஏகாதிபத்தியம் என்பதை, நிர்வாகத்தை தக்க வைத்துக்கொள்ள மற்றும் ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் மத்தியில் இருக்கும் கட்டமைப்பு ரீதியான, பண்பாட்டு சமன் இன்மை என்பதை மறுகட்டமைப்பு செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடுகிறார். ஆங்கில ஆதிக்கம் என்பது, காலனி ஆதிக்க காலத்தில், இந்தியா, பாகிஸ்தான், உகாண்டா, ஜிம்பாபாவே ஆகிய நாடுகளின் மீது செலுத்தப்பட்டது என்பதாக தெரிகிறது. அதே சமயம் ஐரோப்பா கண்டத்தின் மீதும், ஆங்கில ஆதிக்கம் செல்வாக்கு செலுத்தியது. அதைக்கூட நவீன காலனிய தன்மைத்தது என்று கூறுவார்கள். ஆங்கிலம் ஒற்றைமொழி ஆதிக்கமாக இருந்தது என்பதுதான் அத்தகைய ஆய்வின் கண்டுபிடிப்பு.
தூர கிழக்கு நாடுகளில், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில், தேசிய மொழிகள் ஆங்கிலத்தால் மாற்றப்பட்டன அல்லது ஆதிக்க பண்பாட்டு மொழியால் விளிம்பிற்கு தள்ளப்பட்டன. பிரான்ஸ் நாட்டில், பிரஞ்சு மொழியின் ஆர்வலர்கள், ஆங்கில திணிப்பை எதிர்த்து போராடினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு, பிரஞ்சு மொழியோ அல்லது ஆங்கிலோ நார்மன் என்ற மொழியோ நிர்வாக மொழியாக இருந்தது. லத்தீன் மொழி திருச்சபைகளின் மொழியாக இருந்தது. பல மத்திய ஐரோப்பிய நாடுகளில், ஆங்கிலத்திற்கு பதிலாக ஜெர்மன் மொழியையே பயன்படுத்த விரும்புகிறார்கள். ஜெர்மன் மொழியே வணிகத்திற்கும், நிர்வாகத்திற்கும் பயன்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் பிரீடன், பாஸ்க், கோர்சிகன் ஆகிய மொழிகள் தனிமைப்படுத்தப்பட்டு, பிரெஞ்சு மொழியே ஆதிக்கம் செலுத்தியது. அதுபோலத்தான் இந்தியாவிலும் இந்தி மொழித்திணிப்பு என்பது, திராவிட மொழிக் குடும்பங்களால் எதிர்க்கப்பட்டது. அதாவது கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், துளு ஆகிய மொழிகளால் எதிர்க்கப்பட்டது. மேற்கு வங்கத்திலும் கூட, வங்காள மொழி பேசுவோர் இந்தி ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது 1937ம் ஆண்டையொட்டி தொடங்கியது. இந்தியே இந்தியாவின் ஒரே அதிகாரபூர்வ மொழி என்றும், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் பாடத்திட்டத்தில் கட்டாயப் படமாக்கும் மத்திய அரசின் முயற்சியும் தமிழ்நாட்டில் எதிர்க்கப்பட்டது. 1937ம் ஆண்டு சென்னை மாகாணம் என்பது தற்போதைய தமிழ்நாட்டையும், தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் இந்தி கட்டாயச் சட்டத்தை இயற்றினார். இதை எதிர்த்து மறைமலையடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஆகியோர் திருச்சியில், முதலாம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிகட்சியை சேர்ந்த பன்னீர் செல்வம், ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் கல்வி சாலை புறக்கணிப்பு வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு என்று போராட்டம் பரவியது. 1939ம் ஆண்டு பேரணியில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட, நடராசனும் தாழமுத்துவும் காவலில் மரணமடைந்தார்கள்.
இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!! செந்தமிழக்குத் தீமை வந்த பின்னும் இந்த தேகம் இருந்தொரு இலாபமுண்டோ? மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற இந்த வீரவரிப்பாட்டு திக்கெட்டும் பட்டு மோதி முற்றுகையைத் தொடங்கி வைத்தது. இப்பாட்டு மண்ணையும் விண்ணையும் தொட்டுத் தொட்டு போர்களக்கூடத்துக்குக் கட்டியம் கூறியது. சாவதிலும் தமிழ் படித்து சாகவேண்டும் எந்தன் சாம்பலது தமிழ் மணந்து வீசவேண்டும் என்று இளைஞர்கள் கிளர்ந்ததெழுந்தனர்.
ராஜாஜி வீட்டு முன் உண்ணா நோன்பு மறியல் தொடங்கப்பட்டது. ஈ.வெ.ரா. அறிஞர் அண்ணா, ஈழத்து அடிகள் பாலசுப்ரமணியம், டி.வி. நாதன், சி.டி.நாயகம் போன்ற தலைவர்களும், சிறை சென்றனர். பெரியார் வெளியிலிருந்து தலைமையேற்று தனது அடுத்த கட்ட தலைவர்களையும், சிறைக்கு அனுப்பினார்.
எதிர்ப்பை கண்டு அஞ்சிய அரசு, இந்தி திணிப்பு சட்டத்தை கைவிட்டது.
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மத்திய அரசால் இந்தி திணிப்பு கொண்டு வரப்பட்டது. 1957ல் தி.மு.க. இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் இந்தி திணிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. 1957ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள், இந்தி எதிர்ப்பு நாளாக பெரும் திரளான மக்களை திரட்டி, போராடியது. அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய, தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதி, மொழி போராட்டம் எங்களது பண்பாட்டை பாதுகாப்பதற்காக நடத்தப்படுகிறது என்றார். இது எங்கள் மக்களின் தன்மானம் என்று கூறினார்.
இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் எடுப்பு சாப்பாடு என்றும், ஆங்கிலம் என்பது சமைக்கப்பட்ட உணவு என்றும், தமிழ் என்பது தாய் தருகின்ற உணவு என்றும் அப்போது மு.கருணாநிதி கூறினார். 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில் தீர்மானித்தப்படி, சட்டஎரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நவம்பர் 16ம் நாள் அண்ணாவும், 19ம் நாள் கருணாநிதியும் கைதானார்கள். நவம்பர் 25ல் உயர்நீதிமன்ற ஆணையால் விடுதலையானார்கள்.
சின்னச்சாமி, அரங்கநாதன் என்று தொடங்கி, இந்தி எதிர்ப்புக்காக தாய்மொழி தமிழை பாதுகாப்பதற்காக, தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட வீரத்தமிழர்கள் நமது நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கிறார்கள். அவர்களது நினைவில் தாய்மொழி காக்க சூளுரை ஏற்பதுதான், இந்த நாளின் சிறப்பு. ஆங்கிலேய அரசுக்கு எதிரான இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில், பங்கேற்ற தமிழர்களைக் காட்டிலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். ஆகவே இந்தி எதிர்ப்பு, ஒரு மக்கள் இயக்கம் என்பது கண்கூடு. இந்திய துணைக்கண்டத்தில், இந்தி மொழி நுழையாத தீவாக, தமிழ்நாடு மட்டுமே இன்னமும் இருக்கிறது. அகில இந்திய அளவில், வட இந்தியாவில் நடத்தப்படுகின்ற ஒவ்வொரு கூட்டத்திலும், இன்று வரை இந்தி பேசும் பகுதிகளிலிருந்து வருகின்ற பிரதிநிதிகள், இந்தி மட்டுமே இந்திய மொழி என்பதாக சண்டையிடுகிறார்கள். இதை எதிர்த்து போராடும் முதல் குரல், தமிழர்கள் மத்தியிலிருந்துதான் இன்று வரை எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தாய்மொழி காக்க, பிற மொழி திணிப்பை எதிர்ப்போம். ஒரு நாள் வெல்வோம்.