Friday, January 22, 2010

அண்ணா பல்கலையை சுற்றும் போபால் நச்சு ஆவி.

1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் நள்ளிரவில், மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள போபால் நகரில், அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியான, யூனியன் கார்பைடு என்ற பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி ஆலையில், நச்சு வாயு வெளிப்பட்டது. ஒரே நேரத்தில் நகரத்திலிருந்த 8,000 பேர் மரணமடைந்தனர். 25 ஆண்டுகளில் 20,000 பேர் அதன் பாதிப்பால் உயிர்பலி ஆனார்கள். இன்று வரை 1,00,000த்திற்கும் மேற்பட்டோர் குற்றுயிரும், குலையுயிருமாக தவித்து வருகிறார்கள். அது உலகத்திலேயே பெரியதொரு தொழிற்சாலை விபத்து என்பதாக வருணிக்கப்படுகிறது.
மேற்கண்ட விபத்தை காரணம் காட்டி, சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள், உலகம் முழுவதிலும் ஆபத்தான தொழிற்சாலைகள் பற்றியும், ரசயான ஆலைகளின் சுற்றுச்சூழல் தாக்கங்களைப் பற்றியும், காற்றை மாசுபடுத்தல், நீரை கெடுத்தல், நிலத்தை பழுதாக்கல் போன்ற மாசுபடுத்தல்களை பட்டியலிட்டு, பரப்புரை செய்து வருகிறார்கள். இவ்வாறாக போபால் நச்சு வாயு விபத்து என்பது ஒரு பாதகமான முன்னுதாரணமாக, மானுடத்திற்கே திகழ்ந்து வருகிறது. அதை போபால் நீதிக்கான அனைத்து நாட்டு பிரச்சாரக் குழு, எல்லா இடங்களிலும் எடுத்துச் சொல்லி வருகிறது.
அப்படி எடுத்துச் செல்லும்போது, போபாலுக்கான மாணவர்கள் என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒரு பெரும் இயக்கமாக, கல்விச் சாலைகளிலிருந்தே நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள், அரசாங்கங்கள் தங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வு கொண்டவர்களாக, மாற்றியமைத்துக் கொண்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில், நாம் அதிகமான விழிப்புணர்வை பெறுகிறோம். ஐ.நா. சபையிலிருந்து சுற்றுச்சூழல் மாசுபடுத்தல் சம்மந்தமாக, ஒரு அக்கறையான பார்வை பரப்பப்பட்டு, அதையொட்டி ஒரு கோபன் ஹெகன் மாநாடே நடத்தப்பட்டிருக்கும் போது, நாம் மேலும் அதிகமான கவனத்திற்குள்ளாகிறோம். அத்தகைய சூழலில் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கத்தின் நேரடியான வழிகாட்டலுக்குள் அமைந்துள்ள, அண்ணா பல்கலைகழகத்தில் இதுபோன்ற அக்கறை இல்லாமலிருப்பது அதிர்ச்சியை தருகிறது.
போபாலில் பேரழிவை ஏற்படுத்திய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளியான, குற்றஞ்சாட்டப்பட்ட வாரன் ஆண்டர்சன், இன்று வரை இந்திய நீதிமன்றத்தின் பிடிவாரண்டை மதித்து, இந்தியா வந்து ஆஜராகவில்லை. அப்படிப்பட்ட இந்திய எதிர்ப்பு செயல்பாட்டை கடைபிடிக்கும் ஒரு அமெரிக்க பெரு முதலாளியின் நிறுவனம், தனது போபால் நச்சு கம்பெனியை, இன்னொரு அமெரிக்க பெரு முதலாளி நிறுவனமான டௌ கம்பெனி வசம் ஒப்படைத்து விட்டது. அதை வாங்கிய டௌ கம்பெனி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதமான நட்ட ஈடும் கொடுக்க தயாராயில்லை. போபால் நச்சு கம்பெனி வளாகத்தை சுத்தம் செய்யவும் தயாராகயில்லை. இப்படிப்பட்ட டௌ கெமிக்கல்ஸ் என்ற அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியை, இந்தியாவில் கருப்பு பட்டியலில் சேருங்கள் என்ற கோரிக்கையை, நச்சு வாயு பாதிப்புக்குள்ளான போபால் மக்கள் எழுப்பி வருகிறார்கள்.
இந்தியாவின் மத்திய அரசோ அதுபற்றி செவி மடுக்க தயாராயில்லை என்பதாக தெரிகிறது. அதேசமயம் போராடும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் நிர்பந்தத்திற்காகவும், ஊடகங்கள் கிளப்பி வரும் விழிப்புணர்வுக்காகவும் அச்சப்பட்டு, தேர்தல் அரசியல் நடத்தும் நோக்கத்தில், சுற்றுச்சூழல் அமைச்சர் மூலமும், சில நேரங்களில் பிரதமரும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகிறார்கள்.
அரசியல் வாதிகளுடைய அணுகு முறை இதுபோன்று இருப்பது ஆச்சரியமான செய்தியல்ல. ஆனால் கல்வியாளர்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தான் இப்போது எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி. கல்விச் சாலைகளில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு என்பது ஒரு முக்கியமான கல்வியாக உணரப்படுகிறது. நாடுதழுவிய அளவில், மக்கள் இயக்கங்களும் கூட சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கோரிக்கைகளை தங்கள் இயக்கங்கள் சார்பாக முன்வைத்து வரும் காலம் இது. அப்படியிருக்கையில் சுற்றுச்சூழல் பிரிவை பொதுவாகவே கல்விச் சாலைகளும், குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களும் ஒரு முக்கியப் பாடமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப கல்வியை கற்றுக் கொடுக்கின்ற, கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு முக்கியத் தேவையாக இருக்கிறது. தொழிற்சாலை விபத்துக்கள் பற்றி படித்துக் கொள்ளாமல், தொழிற்சாலை உற்பத்திக்கான கல்வியை எப்படி கற்க முடியும் என்பது சாதாரண கேள்வி. உலகிலேயே பெரியதொரு தொழிற்சாலை விபத்தை பற்றி அறிந்திருக்க வேண்டியதும், அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு முக்கியமான தேவை. அதுவும் இந்தியாவில் அப்படியொரு விபத்து போபாலில் நடந்திருக்கிறது என்றால், அதுபற்றி ஆழமான புரிதல், பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். அந்த புரிதலே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அத்தகைய புரிதலையும், கவலையையும், தடுப்பு நடவடிக்கைகளையும் தங்களது பாடத்திட்டத்தில் இணைத்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இத்தகைய விவரங்கள், நமது அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டிலிருக்கிறதா என்ற வினா எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு மேற்கண்ட போதனைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படுவதில்லை. பாடத்திட்டத்திலும் அத்தகைய பேரழிவு விபத்து பற்றி விளக்கப்படவில்லை. அதுபற்றிய கேள்விகளை சம்மந்தப்பட்ட துணை வேந்தரிடம் கேட்டால் அக்கறையற்ற பதில்தான் வெளிப் படுகிறது. தொழிற் சாலைகளை உருவாக்கவும், உற்பத்தியை செய்யவும், கற்றுக் கொடுக்கப்படும் பொறியியல் கல்வியில், விபத்துகள் பற்றியும், தடுப்புகள் பற்றியும் அக்கறையற்ற போக்கு இருக்கலாமா?
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 நாட்களாக குருசேத்ரா தொழில்நுட்ப விழா 2010 என்பதாக நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது பல்கலைக்கழக நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. அதில் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை சம்மந்தமான நிகழ்வுகள், விழா போல நடத்தப்படுகின்றன. வாகனங்களை விரைவாக ஓட்டுதல் போன்ற 4சக்கர, 2சக்கர வாகனங்கள் சம்மந்தப்பட்ட போட்டிகளும் உண்டு. இவையெல்லாம் மாணவர்களை உற்சாகப்படுத்தவும் செய்யும். ஆனால் இவற்றை நடத்துவதற்கான நிதியை, பல்கலைக்கழக நிர்வாகம் சில பெரு முதலாளி நிறுவனங்களிடம் வாங்குகிறது. அதில் கருப்புப் பட்டியலில் உள்ள டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்திடம் ரூ.5,00,000 வாங்கியிருக்கிறது. அந்த கம்பெனிக்கு இந்த பல்கலைக்கழகத்தில் ஆளெடுத்துக் கொள்ளுங்கள் என்பதாக அறிவிப்பு வேறு.
மேற்கண்ட செயல்பாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகயிருக்கும், பல்வேறு கல்லூரி மாணவர்கள் எதிர்க்கிறார்கள். டௌ கெமிக்கல்ஸை, அண்ணா பல்கலைக்கழகத்தை விட்டு துரத்தச்சொல்லி கேட்கிறார்கள். அதற்காக பரப்புரை செய்கிறார்கள். ரூ.5,00,000 த்தை தங்கள் பக்கத்திலிருந்து திரட்டித் தருகிறோம். அப்போதாவது டௌ கெமிக்கல்ஸை வெளியேற்றுங்கள் என்று கூறுகிறார்கள். அதற்காக பாதிக்கப்பட்ட போபால் மக்களிடமும், அண்ணா பல்கலைக்கலையின் முன்னாள் மாணவர்களிடமும் நிதி திரட்டுகிறார்கள். அந்த நிதியை டௌ கம்பெனிக்கு திருப்பி கொடுத்தாவது, பல்கலையை விட்டு டௌவை விரட்டுங்கள் என்று கூறுகிறார்கள்.
இதற்காக அவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பேசினார்கள். துணைவேந்தர் இதுபோன்ற கவலைகளை ஏற்பவராக தெரியவில்லை. போபால் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அறிவு ஜீவித்தனமாக பேசியிருக்கிறார். இதுபோன்ற அக்கறையற்ற மனிதர்களின் கைகளில், அரசு சார்பான பல்கலைக் கழங்களை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறோமா? இதுதான் தமிழ்நாட்டில் மக்களைப் பார்த்து நாம் கேட்கவிரும்புகிறோம்.