Thursday, January 21, 2010

ஜோதிபாசு மே.வங்க எம்.ஜி.ஆர்.

1914ம் ஆண்டு ஜுலை 8ம் நாள் பிறந்த ஜோதிபாசு, இந்த ஆண்டு ஜனவரி 17ம் நாள் மறைவை எய்தினார். இவர் மே.வங்க மாநிலத்தின் முதலமைச்சராக 1977ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பொறுப்பிலிருந்தார். அதன்மூலம் இந்தியாவிலேயே நீண்டகாலம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் என்று பெயர் பெற்றார். இந்தியாவில் நாடாளுமன்ற இடதுசாரிகள், இருபெரும் கட்சிகளாக இருக்கின்றனர். அவர்களில் சி.பி.ஐ.(எம்) என்று அழைக்கப்படும் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெரிய கட்சியாக மதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி, ஆளுகைக்கு வருகின்ற இடங்களாக கேரளாவும், மே.வங்கமும், திரிபுராவும் அடையாளம் காட்டப்படுகின்றன. இது தவிர மார்க்சிஸ்ட் கட்சி அதிக செல்வாக்கை பெற்ற மாநிலமாக ஆந்திரா இருந்தது. 3 மாநிலங்களில் மட்டும் அதிகமான அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்திருக்கின்ற ஒரு கட்சியை எப்படி, தேசிய கட்சி என்று அங்கீகாரம் செய்வது என்பதான கேள்வி, தேர்தல் ஆணையத்திற்கு எழுந்தது. அப்படிப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி இருந்தாலும், மே.வங்கத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக முதலமைச்சராக, அந்த கட்சி சார்பாக ஒருவர் பொறுப்பில் இருக்க முடிந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்தளவுக்கு ஜோதிபாசுவிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. மீண்டும், மீண்டும் ஆட்சிக் கட்டிலிலே அமருவதற்கான அந்த செல்வாக்கு தான் அவரை மே.வங்க மாநிலத்தின் எம்.ஜி.ஆர். என்று எளிமையாக அழைக்கும் நிலைக்கு கொண்டுசென்றது.
1977ம் ஆண்டு முதலமைச்சராக வருவதற்கு முன்னால், 1967ம் ஆண்டே ஜோதிபாசு, மே.வங்கத்தின் துணைமுதல்வராக பொறுப்பெடுத்தார். அப்போது பங்களா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட மாநில கட்சியின் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் அவர்களது கூட்டணி வெற்றி பெற்றதையொட்டி, அஜாய்குமார் கோஷ் என்ற பங்களா காங்கிரஸ் தலைவர் முதல்வராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோதிபாசு துணை முதல்வராகவும், ஆட்சியில் அமர்ந்தார்கள்.
1967ம் ஆண்டு இவர்களது நாடாளுமன்ற இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடித்ததையொட்டி, மார்க்சிய புரட்சியாளர்கள் ஆயுதப்போராட்டத்தை தொடங்கினார்கள். மே.வங்க மாநிலத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல் பாரி கிராமத்தில் அப்படிப்பட்ட ஆயுத எழுச்சி, விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கியது. மார்க்சிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட பொறுப்பாளராக இருந்த சாருமஜும்தார் அந்த புரட்சியை வழிகாட்டி நடத்தினார். இது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த இருவழிப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது.
அதாவது 1921ம் ஆண்டு தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1940க்கு பிறகு ஆயுதப்போராட்டத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. 1950ம் ஆண்டையொட்டி அந்த கட்சி தடைசெய்யப்பட்டது. 1952ம் ஆண்டிற்கு பிறகு, தேர்தலில் நிற்கத் தொடங்கியது. அதை எதிர்த்து ஆயுதப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய புரட்சியாளர்கள், கட்சிக்குள்ளேயிருந்து கருத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லை மோதல் நடந்தது. அது சீன ஆக்ரமிப்பு என்பதாக இந்திய அரசால் பெயர் கொடுக்கப்பட்டது. அதேசமயம் பின்னாளில் நீவில் மாக்ஸ்வெல் என்ற வெளிநாட்டு எழுத்தாளர், இந்தியாவின் சீன யுத்தம் என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இப்படியாக முரண்பாடுகளின் மூலம் வெளிப்பட்ட அந்த யுத்தம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் பிளவை ஏற்படுத்தியது. டாங்கே தலைமையிலான ஒரு சாரார், காங்கிரஸ் அரசுக்கு சாதகமானவர்களாக ஆனார்கள். அதேசமயம் நம்பூத்ரிபாடு, பி.டி.ரணதிவே, சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்தார்கள். அதனால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டார்கள். ஜோதிபாசு அந்த 2வது வகையினரை ஆதரித்தார். இவ்வாறு சிறைக்குச் சென்று திரும்பிய அணியினர், 1964ம் ஆண்டு கட்சியை விட்டுப் பிரிந்து வெளியே வந்தார்கள். தங்களை மார்சிய புரட்சியாளர்களாக கூறிக்கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சி என்று பெயர்வைத்துக் கொண்டார்கள். 1965ம் ஆண்டு பர்துவான் பிளீனம் என்ற சிறிய மாநாட்டை நடத்தினார்கள். அதில் இந்திய சமுதாயத்தைப் பற்றியும், இந்திய அரசைப் பற்றியும் மறுமதிப்பீடு செய்வதும், புரட்சிக்கான பாதையை தேர்வு செய்வதும் என்ற திட்டத்தை விவாதித்தார்கள். அப்போது இந்த பெரும்தலைவர்களின் முன்வைப்புகளை எதிர்த்து, டார்ஜிலிங் மாவட்ட சாருமஜும்தார் மாற்று முன்வைப்புகளை வைத்தார்.
அதில் இந்திய அரசு சுதந்திரமானது அல்ல என்றார். தரகு முதலாளிகள் நாட்டை ஆள்கிறார்கள் என்றார். விவசாய புரட்சியே வழிமுறை என்றார். சாருமஜும்தாரின் அத்தகைய முன்வைப்புகளுக்கு எதிராக, ஜோதிபாசு உள்ளிட்ட அணி தேர்தல் பாதையை தேர்வு செய்தது. ஐக்கிய முன்னணி தந்திரம் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதை முன்வைத்தது. அதை எதிர்த்து ரகசியமாக தங்கள் செயல்பாட்டை, மஜும்தார் மேற்கொள்ளத் தொடங்கினார். அதுதான் ஜோதிபாசு அணியினர், கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியவுடன், மஜும்தார் தலைமையிலான நக்சல் பாரி புரட்சியாக வெடித்தது.
வெடித்த புரட்சி நக்சல் பாரி கிராமம் உட்பட்ட பகுதிகளை, பண்ணையார்களை விரட்டி விட்டு கைப்பற்றியது. விவசாயிகளை ஆயுதபாணியாக்கியது. அதை விடுதலைப் பகுதி என்று சீன வானொலி அறிவித்தது. வசந்தத்தின் இடிமுழக்கம் என்ற பெயரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு கட்டுரை எழுதியது. மே.வங்க மாநில உள்துறையை கையில் வைத்திருந்த ஜோதிபாசு, நக்சல் பாரி புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக, வடகிழக்கு எல்லை துப்பாக்கிப் படையினர் என்ற துணைராணுவத்தை வரவழைத்தார். நக்சல்பாரி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், முதல் பலியாக பாபுலால் பிஸ்வகர்மா என்ற புரட்சியாளர் கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் சாருமஜும்தார், கனுசன்யால் உட்பட ஜோதிபாசு அரசால் கைதுசெய்யப்பட்டனர். இப்படியாக ஒரு துணை முதல்வர் பாத்திரத்தையும், பாசு வகித்துள்ளார்.
1977ல் முதல்வரான ஜோதிபாசு, நிலச்சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்பதுதான் முக்கியமாக பேசப்படுகிறது. அவரது அந்த முயற்சி மார்க்சிஸ்ட் கட்சிக்கு தொடர்ந்து கிராமங்களில் வாக்கு வங்கியை ஏற்படுத்தித் தந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய ஆட்சியை, ராஜிவ் காந்திக்குப் பிறகு வலுப்படுத்துவதில், சர்ச்சைகள் எழுந்த காலம். அப்போது ஜோதிபாசுவை காங்கிரஸ் கட்சித் தலைமை, இந்தியாவின் தலைமையøøச்சராக பொறுப்பெடுக்க அழைத்தது. ஆனால் அத்தகைய பொறுப்பை ஏற்கக்கூடாது என மார்க்சிஸ்ட் தலைமை முடிவு செய்துவிட்டது. உள்ளபடியே பிரதமர் பொறுப்பை ஜோதிபாசு ஏற்பதற்கு, அன்றைய கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிகிருஷ்ணசிங் சுர்ஜித் உட்பட, ஜோதிபாசுவிற்கும் உடன்பாடு இருந்தது. அரசியல் தலைமைக் குழுவில் பெரும்பான்மையராகயிருந்த பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சுரி, வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்டோர் அதை எதிர்த்து வாதிட்டு, ஜோதிபாசு பிரதமர் ஆகும் வாய்ப்பை தடுத்து விட்டனர். அதைபற்றி பிறகு கருத்துச் சொல்லும்போது, அது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசு கூறியுள்ளார். ஆனால் முடிவெடுத்த நேரத்தில், கட்சிக்கு கட்டுப்பட்டு இருந்து விட்டார்.
இப்போது அவரது மறைவுக்குப் பிறகு, சோம்நாத் சாட்டர்ஜி இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். தான் சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டியதில்லை என்று ஆலோசனை கூறியதே ஜோதிபாசு தான் என்றும், அதனால் தான் கட்சி கட்டுப்பாடு தன்னை நீக்கியது என்றும் கூறியுள்ளார். தனி மனித கருத்துக்களை முன்வைத்து போராடினாலும், கட்சிக்குக் கட்டுப்பட்ட ஜோதிபாசுவின் செயல், வரலாற்றில் நிற்கிறது. அதேபோல லட்சக்கணக்கான மக்கள் அணிதிரள, இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், எஸ்.எஸ்.கே.எம் மருத்துவக் கல்லூரிக்கு, மாணவர்கள் படிப்புக்காக தானமாக வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டு ஏப்ரல் 4ம் நாள், ஜோதிபாசு தனது கண்களையும், உடலையும், ஒரு விழாவில் வைத்து தானமாக அறிவித்திருந்தார். 7 ஆண்டுகள் கழித்து, அந்த மாமனிதனின் உடல், அவரது மறைவுக்குப் பிறகும் வருங்கால தலைமுறைக்கு பயன்படுகிறது. இதுவும் அவரது இன்னொரு சாதனை.