Wednesday, January 20, 2010

அரசியல் போரும், உளவியல் போரும்!

இலங்கைத்தீவில் அரசத்தலைவர் பதவிக்கான தேர்தல் வருவதற்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. அதாவது ஜனவரி 26ம் நாள் அதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முக்கியமாக ஆளும் கட்சி கூட்டணியின் மகிந்த ராஜபக்சே நிற்கிறார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பொன்சேகா நிற்கிறார். தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. இருபுறமும் நடக்கும் பரப்புரையில் நடந்து முடிந்த இனவாத போர்பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வன்னிப்போரில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் அம்பலமாகியுள்ளன. வேட்பாளர் மகிந்தாவின் சகோதரர் ஆணைப்படி களத்தில் நின்ற ராணுவ தளபதி, செய்த கொடுமைகள் தெரியவந்துள்ளன. சரண் அடைந்த விடுதலைப்புலியின் சில தலைவர்கள் உட்பட ஆயிரம் போராளிகளை கண்டபடி சுட்டுக் கொன்ற நிகழ்வு விவாதிக்கப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சேயின் கட்டளைக்கு பணிந்து, படுகொலை செய்த ராணுவ தளபதியைப் பற்றி எழுதக்கூடாது என ஊடகங்களுக்கு தடை வந்துள்ளது. ஆளுங்கட்சியை ஆதரிக்கும் நிபந்தனையை ஏற்றுக்கொண்டதால், கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் வெளிப்படையாக தெரிகிறது.
சமரசத்தை ஏற்காததால் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, அகதிகள் முகாமிலேயே அடைந்திருந்து மரணம் அடைந்த நிகழ்வும் கூட நடந்துள்ளது. வன்னிப்போரில் ஈடுபடுத்தப்பட்ட சிங்கள வீரர்கள், இளம்வயதிலேயே பலியாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. 30,000 சிங்கள வீரர்கள் வன்னிப்போரில் பலியாகியுள்ளனர். 36,000 சிங்கள ராணுவ வீரர்கள், கை, கால்களை இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த செய்திகளை வேட்பாளர் பொன்சேகா இப்போது கூறுகிறார். இதுவும் கூட சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே சிக்கலை உருவாக்கும். சர்ச்சையை எழுப்பிவிடும்.
தமிழர் பகுதிகளான வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளனர். வேட்பாளர் மகிந்தா, அமைச்சராக இருக்கின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தத்தைச் சார்ந்து, வடக்கு மாகாணத்தின் தமிழர் வாக்குகளை அடைய துடிக்கிறார். கிழக்கு மாகாணத்தில், மாகாண சபை முதல்வர் பிள்ளையானைச் சார்ந்து, தனது தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொள்கிறார்.
வேட்பாளர் பொன்சேகாவோ, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாக தனது வாக்கு சேகரித்தலை முக்கியத்துவப்படுத்துகிறார். தமிழர்களின் உடனடித் தேவைகளாக இருக்கின்ற மீள்குடியேற்றம், முள்வேலி முகாம்களிலிருந்து விடுதலை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு வளையங்களை நீக்கி சிங்கள ராணுவத்தை பின்வாங்க செய்தல், போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள முன்னால் போராளிகளை விடுதலை செய்தல், அதிபர் ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வருதல், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி விவாதித்தல், கடத்தப்பட்ட தமிழர்களை விடுவித்தல், அதில் கொல்லப்பட்டவர் குடும்பத்திற்கு உதவி அளித்தல் போன்ற அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற கணிசமான தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாக்குகளை வென்றெடுக்க முஸ்லிம் கட்சி, பொன்சேகாவிற்கு ஆதரவாக இறங்கியுள்ளது. மட்டக்களப்பு மேயராக இருக்கும் தமிழ் பெண் கூட, ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் பொன்சேகாவிற்கு ஆதரவாக பரப்புரையில் இறங்கியுள்ளார். இது போல கொழும்பு நகரில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற, ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் மனோகணேசன் மூலமாக, தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பொன்சேகாவிற்கு ஆதரவான பரப்புரை வாக்குகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இதே போல மலையக தமிழ் மக்கள் மத்தியிலும், இருபக்கமும் உள்ள போட்டி வேகமடைந்துள்ளது. மகிந்தாவிற்கு ஆதரவாக ஆறுமுக தொண்டைமான் தலைமையிலான சிலோன் தொழிலாளர் காங்கிரசும், மறைந்த சந்திரசேகரனின் கட்சியான மலையக மக்களின் முன்னணியும் இறங்கி பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு எதிராக பொன்சேகாவிற்கு ஆதரவாக, மனோகணேசனின் கட்சியினர் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில், கிராமப்புறங்களில் பயங்கரவாதத்தை ஒழித்த வீரராக மகிந்தா தன்னை காட்டிக் கொண்டு, வாக்குகளை சேகரிக்கிறார். அதில் அவருக்கு ஆதரவாக நிலைமை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படி விழக்கூடிய வாக்குகளையும் கூட, சமீபத்திய பொன்சேகாவின் அறிவிப்புகள் நிலைகுலைய செய்து விட்டன. அதாவது வன்னிப்போரில் தேவையில்லாமல் சிங்கள இளைஞர்கள் பல பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டதை பொன்சேகா கூறிவிட்டார். அதற்கும் மேலாக கை, கால்களை இழந்த இளம் சிங்கள வீரர்கள் பற்றியும் எடுத்துரைத்து விட்டார். இதுவே சிங்கள கிராமங்களை புதிதாக பாதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு சிங்கள கிராமத்திலும், போருக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் இறந்து விட்டால், அவர்களது வீட்டை சுற்றி பௌத்த மத சடங்குகள் படி, வெள்ளைத் துணியைக் கட்டுவார்கள். அப்படி வெள்ளைத்துணி கட்டப்பட்ட வீடுகள் ஒவ்வொரு கிராமத்திலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஆகவே போரின் பாதிப்பை உணர்ந்திருந்த சிங்கள கிராமப்புற விவசாய குடிமக்கள், தங்கள் வாக்குகளை யாருக்கு அளிப்பார்கள் என்பதே கேள்விக்குறியாகும்.
மேற்கண்ட இரண்டு பெரும் வேட்பாளர் களுக்கிடையில், போர்க்குற்றங் களுக்கு காரணமான இந்த இரண்டு பேரும் வேண்டாம் என்று கூறிக்கொண்டு, சிங்கள இடது முன்னணி தலைவர் டாக்டர் விக்கிரமபாகு கருணா ரத்னேயும், சிவாஜி லிங்கம் எம்.பி.யும் வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில், வட இலங்கையில் செய்தது போல, இரண்டு பேரும் சேர்ந்து வாக்கு சேகரிக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் போராட்டம், ஆதிக்க வாதிகளுக்குள் நடந்து வரும் போது, அந்நிய சக்திகளும் இதில் புதிய வகையில் பங்களிப்பு செலுத்துகின்றன.
இலங்கை அரசியலில் தொடர்ந்து தலையீடு செய்வதன் மூலம், தங்கள் நலன்களை விரிவுபடுத்திக்கொள்ளும், அல்லது வலுப்படுத்திக் கொள்ளும் அந்நிய சக்திகள், இந்த இரு பெரும் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு தரலாம் என அலைந்து திரிகிறார்கள். இவர்கள் தங்களது ஆதரவை நேரடியாக செலுத்துவதில்லை. மாறாக உளவியல் ரீதியாக பரப்புரை செய்து, உலக அரங்கில் தமிழர் மத்தியில் கருத்துப் போக்கை உருவாக்கி, தங்களது விருப்பத்தை சாதித்துக் கொள்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஊடகங்கள் மூலம் தங்களது கருத்தை இந்த அந்நிய சக்திகள் பரப்பி வருகிறார்கள். உதாரணமாக திரிகோணமலை என்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டத்தைப்பற்றி ஒரு செய்தியை அச்சு ஊடகங்களில் பரப்பி இருக்கிறார்கள். அதாவது தமிழ்மக்கள் இருபெரும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இழந்து, தேர்தலை புறக்கணிப்பார்கள் என்று திரிகோணமலை மாவட்ட மக்கள் பற்றி ஒரு தவறான அல்லது பொய்யான கருத்தை பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் தமிழ் மக்களது வாக்குகளை சிதறடித்தால், மகிந்தாவை வெற்றிபெற வைக்கலாம் என்ற மனப்பாலை சிலர் குடிக்கிறார்கள். ஆனால் திரிகோணமலை மக்கள் எப்போதுமே ரனில்விக்கிரமசிங்கே மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள். விலைவாசி உயர்வை அவரது கூட்டணி கட்டுப்படுத்தும் என்று எண்ணுபவர்கள். கூடுதலாக தமிழர் தேசிய கூட்டமைப்பு பரப்புரையை ஏற்பவர்கள். இதனால் அவர்களது வாக்குகளும், சிந்தாமல், சிதறாமல், மாற்றத்தை கொண்டு வருவதற்காகவே இருக்கிறது என்பது தெளிவு.
அரசியல் போரை இலங்கை தீவுக்குள் கட்சிகள் நடத்தினால், அனைத்துலக சமூகத்தில் உளவியல் போரை நடத்தி திசைதிருப்பும் வேலையையும், தமிழர் வாக்குகளை பிளவு படுத்தும் வேலையையும் செய்கின்ற அந்நிய சக்திகளை, உலகத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.