Sunday, January 17, 2010

நீதியரசர் தினகரன் மீது பாய்வது நீதியா?

நீதியரசர் பி.டி. தினகரன் கர்நாடகா மாநிலத்தின் தலைமை நீதியசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மீது நிலம் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு என்பதாக ஒரு பிரச்சனையை சென்னை உயர்நீதிமன்றத்தின் சில வழக்கறிஞர்கள் கிளப்பினார்கள். சம்பந்தப்பட்ட நிலம் என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற தலித் மக்கள் வாழுகின்ற குடியிருப்பின் அருகே இருக்கும் நிலம். இந்த நிலம் குற்றம் சாட்டப்பட்டவர் சொத்தாக இருக்கிறது என்ற செய்தியை, பிரச்சனை எழும்பியவுடன், குறிப்பிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி செய்தார். அதன்பிறகு இந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் மூலமாக தீவிரமாக கையிலெடுத்தார்கள். அவர்கள் அதற்கான போராட்டத்திலும் இறங்கினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் இதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தலித் மக்களுக்கு நீதியரசர் பொறுப்பிலிருக்கும் நிலங்களை பறித்து விநியோகம் செய்ய வேண்டும் என்பதாக கோரிக்கை வைத்தார்கள்.
சம்பந்தப்பட்ட நீதியரசர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனால், அதே சமூகத்தைச் சேர்ந்த பல தலைவர்களிடமிருந்து, நீதியரசருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. இந்த நேரத்தில் தமிழக அரசின் அணுகு முறை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருக்கும் கணிப்புக்கு எதிராக வெளிப்பட்டது. அதனால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சித்தலைவரும் தனது கருத்தை அல்லது மதிப்பீட்டை மாற்றிக் கொண்டது போல் செய்தி வெளியானது.
குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நிலம் என்பது தான் நீதியசராக பொறுப்பெடுப்பதற்கு, முன்னமேயே வாங்கிய சொத்து என்பதாக நீதியரசரிடமிருந்து பதில் வந்தது. தமிழக அரசும் அதே அணுகுமுறையை மேற் கொண்டது. ஆனாலும் பிரச்சனையை கையில் எடுத்தவர்கள், அதை விடுவதாக இல்லை.
இந்த பிரச்சனை எழுப்பப்பட்ட நேரம் இப்போது முக்கிய விவாதத்திற்கு வந்திருக்கிறது. நீதியரசர் தினகரனை உச்சநீதிமன்றத்திற்கு ஒரு நீதியரசராக எடுப்பதற்கான ஆலோசனைப் பட்டியல் வெளியிடப்பட்ட நேரத்தில் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. நீதியரசர் தினகரன் மீது 12 குற்றங்கள் செய்ததாக, எதிர்தரப்பு சுட்டிக்காட்டுகிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மாநிலங்களவையை சேர்ந்த 75 உறுப்பினர்களின் கையெழுத்துக்களைப் பெற்று, அதன் மூலம் மாநிலங்களவை தலைவர் அன்சாரியிடம், நீதியரசர் தினகரன் மீது உரிமைப்பிரச்சனை எழுப்பவேண்டும் என்பதாக புகார் கொடுத்திருந்தார்கள். அதற்கு எதிராக 100 தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் கையெழுத்திட்டு, தினகரன் மீதான குற்றச்சாட்டு என்பது சாதி ஆதிக்க உணர்வுடன் எழுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், தெரிந்த வருமான எல்லைகளைத்தாண்டி, சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் வீட்டு வசதி வாரியத்தில் 5 வீடுகளை சட்ட விரோதமாக பெற்றதாக இன்னொரு குற்றச்சாட்டு. பினாமி பெயர்களில் சொத்துக்களை மாற்றிக் கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு. விவசாய நிலங்களை சட்டப்பூர்வமான உச்ச வரம்பு எல்லையை மீறி வைத்திருப்பதாக இன்னொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழை மக்களது வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட பொதுச் சொத்தையும், அரசாங்க சொத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக மற்றொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழைகளின் மனித உரிமைகளை மீறியதாக இன்னொரு குற்றச்சாட்டு. அதிகாரபூர்வமான விசாரணை நடந்து வரும் போது, சாட்சியங்களை உடைத்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது நீதி பரிபாலன அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நேர்மையற்ற உத்தரவுகளை தனக்கு வேண்டிய மற்றும் நேரடியான நலன்களில் அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு இப்படியாக பட்டியல் போடப்பட்ட குற்றச்சாட்டுகள் 55 பக்கம் கொண்ட நோட்டீசாக, தற்போது உச்சநீதிமன்றத்தில் நிற்கிறது.
மாநிலங்களவைத் தலைவர் அன்சாரியிடம் குற்றச்சாட்டுக்களை கையெழுத்திட்டு கொடுத்தவர்களில் பல்வேறு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால், இடதுசாரிகளும், மற்றும் பா.ஜ.க.வினரும் அந்த கையெழுத்திட்ட உறுப்பினர் பட்டியலில், தினகரன் மீது பாய்ந்துள்ளார்கள். இந்த 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை வாங்கிய அன்சாரி, இப்போது அதை உச்சநீதிமன்றத்தில் வைத்திருக்கிறார்.
இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள், நாடாளுமன்றத்தில் உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மட்டுமே பொறுப்பிலிருந்து நீக்கப்படமுடியும். இந்த பிரச்சனையில் அவைத்தலைவர் அன்சாரி உச்சநீதிமன்றத்தால் நடத்தப்படவேண்டிய நேரடி விசாரணையின் மூலம் தான், உண்மைகளை கொண்டு வரமுடியும் என்ற நோக்கத்தில், மேற்படி பிரச்சனையை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றுள்ளார்.
உச்சநீதிமன்றம் இப்போது நீதியரசர் பி.எஸ்.சிற்புகார் தலைமையில் 3 நீதியரசர்களைக் கொண்ட ஒரு பெஞ்சிடம் இந்த வழக்கை கொடுத்துள்ளது. அந்தப்பட்டியலில் நீதியரசர் ஏ.ஆர்.தவே, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரும் பிரபல சட்ட வல்லுநருமான பி.பி.ராவ் ஆகிய மூவர் கொண்ட கமிட்டியை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்து அதன் கையில் நேற்று இந்த வழக்கை கொடுத்துள்ளார். இது இப்போது நீதியரசர்களுக்கு மத்தியிலும் புதியதொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான கே.ஜி.பாலகிருஷ்ணன், பி.டி.தினகரனை நியாயப்படுத்தி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயரும் நேரத்தில் மட்டும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவது ஏன் என்பதுதான் அவரது ஆழமான கேள்வி.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசராக தினகரன் எடுக்கப்பட்டபோது, ஒரு சிறிய குற்றச்சாட்டு கூட, அவருக்கு எதிராக எழவில்லை. அதே போல 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகா மாநிலத்தில் உயர்நீதிமன்றத்திற்கான, தலைமை நீதியரசராக அவர் அறிவிக்கப்படும் போது, எந்த ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது எழுப்பப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்கள் குழுவால், உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக எடுக்கப்பட முன்வைக்கப்படும் நீதியரசர்கள் பட்டியலில் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட பிறகுதான், தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. மேற்கண்ட கருத்துக்களை கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இது உள்ளபடியே கவனிக்கவேண்டிய ஒரு செய்தியாக இருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள், ஏதாவதொரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதியரசராக உயர்த்தப்படவேண்டுமானால், அந்த நேரத்தில் ஏற்கனவே அதே மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தலைமை நீதியரசராக எங்காவது இருந்தால், பின்னவருக்கு வாய்ப்பில்லை என்ற பழக்கம் இருக்கிறது. அதனால் தினகரன் உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயர்த்தப்படும் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படும் போது, அதிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதியரசர் இப்ராஹிம் கலிபுல்லா, ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இப்போது தினகரன் உச்சநீதிமன்றம் செல்லும் பரிந்துரை தடுக்கப்பட்ட நிலையில், அவர் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக தக்கவைக்கப்படுகிறார். அதனால் இப்ராஹிம் கலிபுல்லாவின் உயர்வுக்கான பரிந்துரையும் கூட, அப்படியே நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் தலித் சமூகம் மட்டுமல்ல, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நீதியரசரும், தனது நியாயமான உயர்வு கிடைக்காமல் தடுக்கப்படுகிறார். இத்தகைய செயல்களுக்குப் பின்னால், இந்தியாவின் புற்றுநோயான சாதி ஆதிக்க சதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் எழுப்பியிருக்கும் கேள்விக்கு விடைகாணவேண்டியது அனைவரின் கடமையாகும். ஏன் ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படும் நேரத்தில் மட்டும் குற்றம் சாட்டப்படுகிறார் என்பதே அந்தக் கேள்வி. நிலவும் சாதி, சனாதன சமூதாய அமைப்பில், சம்பந்தப்பட்டவர் எந்த சமூகத்திலிருந்து வருகிறார் என்பதும், அவருக்கு எதிராக கிளப்பப்படும் குற்றச்சாட்டுகள் எந்த சமூகத்தவரிடமிருந்து வருகிறது என்பதும் ஒரு முக்கியமான சமுதாயக் கேள்வி. இத்தகைய கேள்வியை கேட்காமலும், விடை காணாமலும் நாம் சரித்திரத்தின் இந்தப்பகுதியிலிருந்து தப்பித்துச் செல்லமுடியாது.