Sunday, January 10, 2010

மரபணு மாற்று கத்திரிக்காய் சரியா? தவறா?

தமிழக சட்டப்பேரவையில் மரபணு மாற்று கத்திரிக்காய் பற்றிய ஒரு விவாதம் வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எல்லைகளைத் தாண்டி, மரபணு மாற்ற கத்திரிக்காயால், அதை பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற தீமைகளை சுட்டிக் காட்டினார்கள். அவர்களுக்கு விவசாய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் கூறினார். மரபணு மாற்று விதைகளை வெளியில் இருந்து தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை என்றார். ஆனால் தமிழ்நாட்டிலேயே புதிய மரபணு கத்திரிக்காய்களை உற்பத்தி செய்ய இருப்பதாகவும், அவை மறுஉற்பத்திக்கு பயன்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதே சமயம் மத்திய அரசு மரபணு மாற்று கத்திரிக்காய்களுக்கு அனுமதி கொடுப்பதா? இல்லையா? என்பது பற்றி முடிவு செய்யும் என்றும், அதுவரை அது பயன்படுத்தப் படாது என்றும் கூடுதலாக கூறினார்.
மரபணு மாற்றுக் கத்திரிக்காயை, ஆங்கிலத்தில் பி.டி.பிரிஞ்சால் என்று அழைக்கிறார்கள். பாசிலஸ் துருஞ்சின்சிஸ் என்ற பாக்ட்டீரியாவிலிருந்து, மரபணுவை எடுத்து கத்திரிக்காய்க்குள் ஊசி மூலம் செலுத்தி, அதன் மரபணுவையே மாற்றக்கூடிய செயலால் உருவாவதுதான் இந்த பி.டி.பிரிஞ்சால். பிரிஞ்சால் பழம், ஷýட்போரர் போன்ற லெபிடாப் டெரன் பூச்சிகளை எதிர்த்து கத்திரிக்காய் செடி வளர்வதற்காக இந்த மரபணு மாற்று விதை எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்பதுதான் அதன் தயாரிப்பாளர்களது வாதம். பி.டி.பிரிஞ்சால் இந்தியாவில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. பி.டி.பிரிஞ்சால் சிறு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு புறம் பேசப்படுகிறது. அது பூச்சிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டது என்பதாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலையிலான விதைகள் அதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் அவற்றை பயன்படுத்தலாம் என்றும் அந்த விதைகள் பற்றி கூறுகிறார்கள். அதே சமயம் அதற்கு எதிரான பிரச்சாரமும் நாடுதழுவிய அளவில் தீவிரமாக இருக்கிறது.
இந்தியாவில் பொதுவாக மரபணு மாற்று தானியங்களை பற்றிய அனுபவங்களி லிருந்து பி.டி.பிரிஞ்சால் பற்றிய விமர்சனமும் எழுந்திருக்கிறது. மரபணு மாற்று மூலம் உருவாகும் உணவுகள் உடல் சுகவீனத்திற்கு வழி வகுக்கிறது என்பதும் விமர்சிக்கப் படுகிறது. ஒற்றைப்பண்பாட்டு தன்மையை உருவாக்கும் இத்தகைய மரபணு மாற்று கத்திரிக்காய் குறிப்பாக சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாகவும், அந்த விமர்சனங்கள் கூறுகின்றன. கத்திரிக்காய் அன்றாடம் மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி. மற்ற நாடுகளைப்போல் எப்போதாவது பயன்படுத்தக்கூடிய ஒரு மரக்கறியாக இல்லாமல், மரபு ரீதியான பண்பாட்டு தொடர்பு கொண்டது அது என்பதனால், கத்திரிக்காய் பற்றிய விவாதம் கடைசி மக்கள் வரை தீவிரமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட மரபணு மாற்று கத்திரிக்காய் பற்றிய சோதனைகளும், ஆராய்ச்சிகளும், அன்றாடம் பயன்படுத்தப்படும் கத்திரிக்காயை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையில் அதிகமான கவனத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்தியாவிலிருக்கின்ற கிராமப்புற மக்களும், நகர்புற மக்களும் அன்றாட பயன்பாட்டிற்கு கத்திரிக்காயை பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளில் இந்த நிலை இல்லாததனால் வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுவதை ஏற்று அப்படியே இந்த மரபணு மாற்று கத்திரிக்காயை அனுமதிப்பது என்பது இயலாத காரியம்.
நாடாளுமன்றத்தில் மேற்கண்ட கேள்விகள் எழுப்பப்படுவதற்கு முன்னால், ஜெனடிக் இன்ஜினியரிங் அப்ரூவல் கமிட்டி என்ற இத்தகைய மரபணு மாற்றங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே, மரபணு மாற்று கத்திரிக்காய்களை வணிக ரீதியாக பயிரிடுவதற்கு அனுமதி கொடுத்து விட்டது.
பாதுகாப்பு பற்றிய நியாயமான கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்டன. அறிவியல் ரீதியான அடிப்படை களைக் கொண்டுதான், முறையான ஒழுங்கு படுத்தும் கட்டுப்பாடுகளை கொண்டு வரமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் நிலைக்கு சுற்றுசூழல் அமைச்சர் தள்ளப்பட்டார். அப்போது அவர் இந்த சர்ச்சையின் மீது 6 முதலமைச்சரிகளிடம் கருத்து கேட்டிருப்பதாக தெரிவித்தார். அது தவிர இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 50 அறிவியலாளர்களிடம் இருந்து மரபணு மாற்று கத்திரிக்காய் பற்றி கருத்துக்களை கேட்டிருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் அப்போது அறிவித்தார். அதே சமயம் தான் 7 பெருநகர பயணத்தை மேற்கொண்டு, அதன் மூலம் இந்த கத்திரிக்காய் பற்றி கருத்துக்களை மக்களிடம் இருந்து கேட்டு வர இருப்பதாக கூறினார். நாடு தழுவிய அளவிலான கலந்தாலோசனைகளை நடத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை மனதில் வைத்தே, அப்படி அவர் கூறியுள்ளார். அந்த பொது விசாரணைகள் இந்த மரபணு மாற்று கத்திரிக்காய்களை தயார் செய்பவர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோருடைய பங்களிப்பில் நடத்தப் படும். பொதுக்கலந்துரையாடல்களுக்கு முன்பே வணிக ரீதியான உற்பத்தியாளர்கள் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்களது கருத்துக்கள் கேட்கப்படும். கலந்துரை யாடல்கள் வட்டார மொழிகளிலேயே நடத்தப்படும். கூடுதலாக இந்தி மொழியிலும், ஆங்கில மொழியிலும் பொது விசாரணையின் பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம். இது மட்டுமே அதிகபட்ச பங்களிப்பாளர்களை சேர்த்துக் கொடுக்கும். ஒவ்வொரு பொது விசாரணைக்கும் விவசாய சமூகம், அறிவியலாளர்கள், விவசாய நிபுணர்கள், விவசாய சங்கங்கள், நுகர்வோர் குழுக்கள், குடிமக்கள் அமைப்புகள், அரசு சார நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், அரசாங்க அதிகாரிகள், ஊடகங்கள், விதை விநியோகஸ்தர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு பிரிவினருடன் சேர்த்து, 250 பங்களிப்பாளருடன் நடத்தப்படவேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம்.
மேற்கண்ட பொது கலந்துரையாடல்கள் அழைப்பு விடுக்கப்படும் மக்களுக்கே தவிர, பொதுமக்களுக்கல்ல. அத்தகைய பொது கலந்துரையாடல்களை இந்த ஆண்டு ஜனவரி மாதமே 7 நகரங்களில் நடத்துவார்கள். சி.ஈ.ஈ. என்ற அரசு சாரா நிறுவனம் அதை நடத்தும்.
மேற்கண்ட பொது கலந்துரையாடல்கள் ஜனவரி 13ம் நாள் கொல்கத்தாவிலும், ஜனவரி 16ம் நாள் புவனேஸ்வரத்திலும், ஜனவரி 19ம் நாள் அகமதாபாத்திலும், ஜனவரி 22ம் நாள் ஐதராபாத்திலும், ஜனவரி 23ம் நாள் பெங்களூருவிலும், ஜனவரி 27ம் நாள் நாகபுரியிலும், ஜனவரி 30ம் நாள் சண்டிகரிலும் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். அப்படியானால் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இந்த பொது கலந்துரையாடலை மத்திய அரசு நடத்தவில்லை என்று பொருள். இதில் கிடைக்கும் கருத்துக்களை தொகுத்து பிப்ரவரி முதல் வாரத்தில் பிரதமரிடம் இறுதி முடிவு எடுப்பதற்காக அறிவிப்பேன் என ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்.
இத்தகைய மறுசிந்தனையே பிரதமரின் தலையீட்டால் நடந்துள்ளது. அதாவது பாதுகாப்பு பற்றிய நியாயமான கேள்விகளை, உணவு தானியத்தில் மரபணு மாற்று வருவதால் எச்சரிக்கையாக கவனிக்கவேண்டும் என்று அவர் கூறினார். இந்திய அறிவியல் காங்கிரசின் 97வது அமர்வை தொடங்கி வைக்கும் போதே, மன்மோகன் சிங், அறிவியல் நிபந்தனைகளை கறாராக பின்பற்றி, தேவையான ஒழுங்கு படுத்தல் கட்டுப்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதையொட்டியே இப்போது இரண்டாவது பொதுக்கலந்துரையாடல் நடத்தப்பட இருக்கிறது.
ஏற்கனவே கேரளா, மத்திய பிரதேசம், ஒரிசா, பீகார், சத்திஸ்கர் ஆகிய மாநில அரசுகள் இந்த மரபணு மாற்று கத்திரிக்காயை தடை செய்துள்ளன. கேரள முதலமைச்சர் இதுபற்றிய பாதிப்புகளை தொகுத்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 50 ஆண்டுகளுக்கு கேரளா இந்த பயிரை அனுமதிக்காது என்று எழுதியுள்ளார். தமிழக அரசு இத்தகைய மரபணு மாற்று விவகாரங்களை, கவனமாக எடுத்துக் கொள்ளப்போகிறதா என்ற கேள்வி எழுகிறது. அதே நேரம் ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் இதுபற்றிய கலந்துரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்த மத்திய அரசு, கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் ஏன் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை என்பதை நமது சட்டமன்றம் கேள்வி கேட்குமா? என்று மரபணு மாற்று கத்திரிக்காயின் பாதிப்புகளை உணரும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.