Saturday, January 9, 2010

வெளிநாடு வாழ் இந்தியரால் யாருக்கு லாபம்?

நேற்று புதுடெல்லியில் தொடங்கிய அல்லது தலைமை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட அல்லது கடல்கடந்த இந்தியர் விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு நடந்தது. அதற்கு இந்தியிலேயே பெயர் கொடுத்திருந்தார்கள். பிரவசி பாரதிய திவஸ் என்பது அதன் பெயர். பிரவசி என்றால் இந்தியாவில் வாழாமல், வெளிநாட்டில் வாழ்பவர் என்றோ, புலம் பெயர்ந்தவர் என்றோ பொருள். பாரதிய என்றால் இந்திய என்று பொருள். திவஸ் என்றால் தினம் என்று பொருள். ஆகவே வெளிநாடு வாழ் இந்தியர் நாள் என்பதாக இந்த மாநாட்டிற்கு பெயர். இந்த மாநாட்டை கடல் கடந்த இந்தியர்களின் விவகாரத்தை கவனிக்கும் அமைச்சகமும், எப்.ஐ.சி.சி.ஐ. என்று அழைக்கப்படும் இந்திய வர்த்தக சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கூட்டமைப்பும் சேர்ந்து நடத்துகின்றன. அதே சமயம் கோபியோ (எணிணீடிணி) என்று அழைக்கப்படும், இந்திய வம்சாவழி மக்களின் உலக சமூகம் (எடூணிஞச்டூ இணிட்ட்தணடிtதூ ணிஞூ கஞுணிணீடூஞுண் ணிஞூ ஐணஞீடிச்ண Oணூடிஞ்டிண) இதற்கான தயாரிப்புகளை உலக அரங்கில் செய்து வருகிறது.
மகாத்மா காந்தி என்றழைக்கப்படும் கரம்சந்த் காந்தி இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்ற இந்தியர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அவர் தென்னாப்பிரிக்கா சென்ற போது, அங்கே வெள்ளையர்களை எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்கள், கருப்பர் இனத்தின் உரிமைகளுக்கான வரலாற்றுப்பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. உலகத்தில் உள்ள கருப்பர் இனமக்களில் முதலில் உரிமைக்குரலை எழுப்பியவர்களாக இந்தியர்களும், அதற்கு முன்னோடியாக மகாத்மா காந்தியையும் உலகம் மதிக்கிறது. அப்படி இனவாதத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் போராடிவிட்டு, காந்தி இந்தியா திரும்பிய நாள் ஜனவரி 9ம் நாள். ஆகவே அந்த நாளை வெளிநாடு வாழ் இந்தியர்களுடைய நாள் என்பதாக அழைப்பதில் அவர்கள் பெருமைப்படுகிறார்கள். அந்த நாளில் அவர்களது கோரிக்கைகளை உருவாக்குவதற் கான மாநாட்டை கூட்டுவதில் மகிழ்ச்சி யடைகிறார்கள்.
இப்படிப்பட்ட மாநாடு முதலில் 2003ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதே நேரத்தில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு டெல்லியில் நடக்கும் இந்த பிரவசி பாரதிய திவஸ் மாநாடு 8வது மாநாடு.
அத்தகைய 10வது மாநாட்டை தொடங்கி வைக்கும் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் ஒரு நீண்ட உரையை ஆற்றியுள்ளார். இந்த மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர் மத்தியில் உள்ள சில திறமையுள்ள தனிநபர்களுக்கு, விருதுகள் வழங்கப் படுகிறது. அத்தோடு நிறுத்தாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக அல்லது பொருளாதார இயக்கப்போக்குக்காக ஈடுபடுத்துவதை ஒரு முயற்சியாக இந்த மாநாடு எடுத்துக்கொண்டுள்ளது.
இந்த மாநாட்டின் பங்கேற்பாளர்களில், இந்தியாவிலிருந்து பணி நிமித்தமாக, வியாபார காரணங்களுக்காக, வெளிநாடு சென்றிருக்கும் குடிமக்கள் இருக்கிறார்கள். அது தவிர நீண்ட காலமாக தங்களது தந்தையர், மூதாதையர் ஆகியோர் இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்தாலும், தாங்கள் பூர்வீக இந்தியர்கள் என்ற உணர்வுள்ளோர் பங்கேற்கிறார்கள். இவர்களை இந்திய வம்சாவழி குடிமக்கள் என்பதாக அழைக்கலாம். ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய கண்டங்களிலிருந்து இப்படிப் பட்டவர்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவிலிருந்து போட்ஸ்வானா, கென்யா, மடகாஸ்கர், மௌரீசியஸ், மொசாம்பிக், நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்தும் சேச்சல்ஸ், தென்னாப்பிரிக்கா, டன்சானியா, உகாண்டா, ஜாம்பியா, ஜிம்பாபாவே ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியர்கள் வந்திருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் வாழுகின்ற இந்தியர்களில், பெரும்பான்மை யானவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள்.
ஆசியா கண்டத்திலிருந்து பர்மா, ஹாங்காங், ஜப்பான், ஈரான், இந்தோனேஷியா, இஸ்ரேல், மலேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, யுனைடெட் அரபு எமிரேஸ், வியாட்நாம் ஆகிய நாடுகளில் வசிக்கின்ற இந்தியர்கள் இதில் பங்கு கொள்கிறார்கள். இவற்றில் கணிசமான நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
அமெரிக்க கண்டத்தில் பர்பாதாஸ், பேலிஸ், கனடா, கரிபியன், கிரேனடா, குண்டேலூப், கயானா, ஜமைக்கா, பனாமா, சுரினேம், டிரினிடாட், தோபகா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களும் பங்கு கொள்கிறார்கள். இவற்றில் கனடாவிலும், அமெரிக்காவிலும் தமிழர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாண்ட்ஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியர்கள் பங்கேற்கிறார்கள். இதில் சில நாடுகளில் தமிழர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஓசியானாவில், ஆஸ்திரேலியா, பிஜி, நியூ கலிடோனியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் கலந்து கொள்கிறார்கள்.
இப்படியாக உலக அளவில் என்ற சொல்லுக்கேற்ப பங்கேற்பு இருக்கிறது. இந்த முறை நடத்தப்படும் இந்த மாநாட்டில் 40 நாடுகளிலிருந்து, 1500 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் மத்தியில் துவக்க உரையாற்றிய நமது தலைமை அமைச்சர் உற்சாகமாக இந்திய பொருளாதாரம் வளரப் போகிறது என்ற ஆருடத்தை அள்ளிவீசினார்.
உலக மயமாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கும் காலம் இது. அத்தகைய வீழ்ச்சியை நேரிடையாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கும் இந்தியர்கள். அதனால் மன்மோகனது உரையில், அப்படிப்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, நாம் வீழவில்லை என்று உரைத்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இன்று இந்திய பொருளாதாரம் 7% வளர்ச்சியில் நிற்கிறது என்று மன்மோகன் கொடுத்த கணக்கு, மாநாட்டு ஏற்பாட்டாளர்களில் ஒரு அமைப்பான இந்திய வணிக சங்கங்கள் மற்றும் தொழில் அதிபர்களின் கூட்டமைப்பிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த உற்சாகம் வந்து இறங்கியுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளின் நிதி மூலதனம் தங்களது தொழில் மயமாக்கல் முயற்சிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஓரிரு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 9% மற்றும் 10% என்ற வளர்ச்சியை காட்டி விடும் என்று மன்மோகன் உறுதியளித்திருக்கிறார்.
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்தியாவில் வாக்குரிமை உண்டு என்று மத்திய அரசின் ஒரு புதிய சூளுரையை மன்மோகன் இந்த மாநாட்டில் வாக்குரிமையாக அளித்திருக்கிறார். இது வந்திருப்பவர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று புதிய கேள்விகளும் எழுந்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ஆட்சியாளர்களை சுற்றி வருகின்ற விவாதமாக இந்த குடியுரிமை பிரச்சினை இருக்கிறது. அதாவது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இரட்டை குடியுரிமை கொடுப்பது பற்றி விவாதம் தொடர்கிறது. சென்ற ஆட்சியில், இதே மன்மோகன் சிங் இரட்டை குடியுரிமை பற்றி உறுதி கூறினார். இப்போது அவர்களுக்கான வாக்குரிமை பற்றி வாக்குறுதி கொடுக்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களில், பல்லாயிரக்கணக்கான கோடிகளை மூலதனமிடக்கூடிய தகுதி உள்ளவர்கள், வாக்குரிமை என்ற அடிப்படையில் நேரிடையாக அனைத்து வாய்ப்புகளையும் பெற்று தொழில் செய்ய முடியும். அது மட்டுமின்றி இந்திய தேர்தல்களில் நின்று, ஆட்சியை கையில் எடுக்க முடியும். இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை இந்த இடத்தில் மன்மோகன் தந்துள்ளார்.
ஆனால் இந்த மாநாட்டிற்கான அழைப்பை நிரகாரித்தவர்களும் இருக்கிறார்கள். மலேசியாவில் உள்ள பல தமிழர்கள் குறிப்பாக தேர்தல் வெற்றி பெற்ற பேராளர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர். அதிலும் குறிப்பாக மலேசியா நாட்டில், பினாங்கு மாநிலத்தில் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள, பேராசிரியர் ராமசாமி இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார். இலங்கையில் வன்னிப்போர் மூலம் தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இந்திய அரசின் ஏற்பாட்டில் நடக்கும் பிரவசி மாநாட்டின் அழைப்பை மறுப்பதாக அவர் அறிவித்துள்ளார். இப்படித்தான் இந்த மாநாடு பற்றி இரு வேறு கருத்துக்களும் உலா வருகின்றன. இந்திய மக்களுக்கு இந்த மாநாடு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியுடன் நாம் வெளியே வரலாம்.