Thursday, January 7, 2010

பெண்களின் பங்களிப்பும், சாதிகளும், இயக்கங்களும்

இந்திய தலைமை அமைச்சர் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு கருத்தை காமன்வெல்த் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கூறியுள்ளார். பல கட்சி ஜனநாயகம் இருக்கும் நாட்டில் தான் பெண்களின் பங்களிப்பும், அதிகார மேம்படுத்தலும் அதிகமாக சாத்தியமாகும் என்பதாக கூறியுள்ளார். உலகம் எங்கிலும் பெண்களுக்கான அதிகார மேம்படுத்தல் என்பது தொடர்ந்து எழுப்பப்டும் குரலாகத்தான் இருக்கிறதே தவிர, இதுவரை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த ஒரு இடத்திலும், பெண்கள் அறுதியிட்டு விட்டார்கள் என்பதாக கூறமுடியவில்லை. இதற்கான காரணங்களை உலகம் தழுவிய ஆணாதிக்கம் இருக்கிறது என்பதாக மட்டுமே பொதுவாக பார்த்துவிட்டால் போதுமா? ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும், வேர்களிலும் அதற்கான அடித்தளம் இருப்பதை காணவேண்டும்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் இங்கு பழம் பெரும் வடிவங்களாக, மக்களை பிளவு படுத்திக் கொண்டு இருப்பது சாதிகளும், மதங்களும். அத்தகைய சாதிகளையும், மதங்களையும் கடந்து ஒரே மாதிரியான அடக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பது பெண்கள். மதங்கள் பொதுவாக பெண்களை ஒரு சரக்கு பொருளாக பார்க்கின்ற சாராம்சத்தை கொண்டிருக்கின்றன. அதனால் எந்த மதத்தின் வழிபாட்டு முறைகளிலும், பெண்கள் முதன்மைப் படுத்தப் படுவதில்லை. சாதிகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பண்புகளை கொண்டுள்ளன. அந்தந்த சாதிகளின் வரலாற்று பயணத்திற்கு ஒப்ப, அவை நாகரீகத்தில் முன்னேறியும், முன்னேறாமலும், சற்று பின்தங்கியும், சகலமுறையிலும் பின்தங்கியும் இருக்கின்றன. அப்படிப்பட்ட நிலைமைகளில், மக்கள் தொகையில் சரிபாதி இருக்கின்ற பெண்கள், அந்தந்த சாதிப் பின்னணிக்கு ஒப்ப தங்களுடைய இறுத்தலை, சுயமரியாதையை அறுதியிட்டுக் கொள்கிறார்கள்.
முற்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சாதிகளை சேர்ந்த குடும்பங்கள், கல்வியை சார்ந்தும், முன்னேறிய நாகரீகங்களை தங்கள் வயப்படுத்திக்கொண்டும் இயங்கி வரும் போது, அவர்களது குடும்ப அலகிற்குள், பெண்களுக்கு ஒப்பீட்டளவு உரிமைகள் கிடைக்கப் பெறுகின்றன. இவர்கள் நில உடைமை சார்ந்த குடும்பங்களாக, பழமை வாதத்தில் ஊறிப்போன பெருச்சாளிகளாக இருந்த குடும்பங்கள். ஆனாலும் அவர்களிடம் மட்டுமே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்ட, கல்வி கற்கும் உரிமை அவர்களது குடும்பத்திற்குள், பாலின ஒடுக்குமுறையை குறைத்துள்ளது. பெண்கள் தங்களது உரிமைகளை பரிசாக கிடைத்துவிடும் என்று நம்பாமல், பறித்துக் கொள்கின்ற மனோபாவத்தை எப்போது பெறுகிறார்களோ, அப்போது தான் அவர்களால் குடும்பம் என்ற அலகிற்குள்ளும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க முடியும். இதற்கான வாய்ப்புகள் வளர்ந்து வரும் உலக சூழலில், முற்பட்ட சமூகத்தின் குடும்ப பெண்களுக்கு ஒப்பீட்டளவில் கிடைத்து விடுகிறது.
அதே சமயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வி உரிமை மற்றும் வேலை உரிமை, அரசியல் சட்டத்தில் அம்பேத்காரால் உறுதி செய்யப்பட்டதனால், அந்த மக்கள் மத்தியில் இருக்கும் முன்னேறிய பகுதியினர், குறைந்த பட்சம் அதை அனுபவிக்க முடிகிறது. அப்படி அனுபவிக்கும் சிறு பிரிவு மக்கள் மத்தியில் பெண்களுக்கான மரியாதை என்பதை போராடி பெறுவதற்கு அந்த தளங்கள் உதவிகரமாக இருக்கின்றன. மீதமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், அன்றாட கிராமப்புற பணிகளுக்கு செல்லும் உழைப்பாளி மக்களாக இருப்பதனால், அவர்கள் மத்தியிலும் பெரிய அளவுக்கு பாலின வேறுபாடுகள், பாலின இழிவுபடுத்தல்கள் இருப்பதில்லை. தன்னுடைய வாழ்க்கை தேவைக்கும், குடும்பத்தேவைக்கும், தன்னுடைய சொந்த உழைப்பை சார்ந்து இருக்கின்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்கள், தங்களது சுயமரியாதையை குறைந்த பட்சம் அறுதியிட்டுக் கொள்ளமுடிகிறது.
ஆனால் முற்பட்ட சமூகத்தின் மூலமாக முன்னேறிய தளத்திற்கும் செல்லாமல், தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மூலம் இழப்பதற்கு எதுவும் இல்லாத விடுதலை உணர்வு பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல், இடைச்சாதிகளாக இருக்கின்ற மக்கள் தொகையினரின் நிலைமை சிக்கலாக ஆகியுள்ளது. அதாவது இந்தியாவில் இருக்கின்ற சாதிக்கட்டமைப்பில், இடைச்சாதிகளாக இருக்கின்றவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராக அறிமுகமாகியிருக்கிறார்கள். இவர்களது நில உறவுகள், நிலவுடமை சமுதாய அமைப்பின் தனி சொத்துரிமை சார்ந்து இருக்கின்றன. அதனால் பழமை பழக்கவழக்கங்களும், பிற்போக்கான கருத்துக்களும் மண்டிக்கிடப்பவர்களாக, இவர்களது குடும்பங்கள் இருக்கின்றன. விவசாயத்தில் வெற்றி கிடைக்காவிடிலும், தங்களது நிலம் சார்ந்த உறவுகளை பெருமையாக கருதும் காரணத்தினால், இயல்பான தன்மையை விடுத்து பெருமைக்காக செயற்கை மரியாதைகளுடன் வாழ வேண்டியுள்ளது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கல்வியையும்,அரசாங்க வேலை வாய்ப்பையும் முற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலைமையினால், பிற்படுத்தப்பட்ட இத்தகைய இடையிலே உள்ள சாதி மக்களுக்கு, தேவையான கல்வியும், வேலை உத்தரவாதமும் கிடைக்கவில்லை.
பெரியார் கருத்துக்களின் செல்வாக்கில், தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க இயக்கத்தின் வளர்ச்சியில், மாநில அளவிலான இடஒதுக்கீடு இத்தகைய பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கிடைத்த காரணத்தினால், இங்கே கல்வியிலும், அரசாங்க வேலைவாய்ப்பிலும் பல முன்னேற்றங்களை அவர்கள் காணமுடிந்தது. ஆனால் அதே சமயம் இந்திய துணைக்கண்டத்தில் எந்த ஒரு மாநிலத்திலும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. 1993ம் ஆண்டு மண்டல் குழு அறிக்கை அமுலுக்கு கொண்டு வரப்படும் போதுதான், இத்தகைய மக்களின் எதிர்காலத்திற்கான சில வெளிச்சகீற்றுக்கள் வெளியே வந்துள்ளன.
அத்தகைய குடும்பங்களில் இருக்கின்ற பெண்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நடமாட்டப்பகுதி என்பதையே குறைவாக கொண்டுள்ளன. நிலப்பிரபுத்துவ ஆதிக்கப் பண்பாட்டில் ஒரு அங்கமான ஆணாதிக்கத்தை தொடர்ந்து எதிர்கொள்வதாகவும், புறநிலையில் கல்விக்கான வாய்ப்பின்மை என்ற சூழலும், இணைந்து சுயமரியாதையுடன் இயங்குவதற் கான வாய்ப்புக்களை அரிதாக அந்த பெண்கள் கொண்டிருக்கிறார்கள். அதனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள், ஒப்பீட்டளவில் அதிகமான அளவு அடக்குமுறையை அனுபவிக்கிறார் கள். அவர்களில் தாய்வழி சமுதாய அமைப்பின் மிச்ச சொச்சமாக வருகின்ற சில சாதிகளின் பண்பாட்டு பழக்கவழக்கங்கள், அந்த குறிப்பிட்ட சாதிசனங்கள் மத்தியில் பெண்களுக்கான அதிகார மேம்படுத்தலை குடும்பத்திற்குள் அதிகப்படுத்துகின்றன. அதுவும் கூட பழமை பழக்க வழக்கங்க ளிலிருந்து கிடைத்த ஒரு பலனாக இருக்கிறது. ஆகவே பெண்களின் அதிகார மேம்படுதல் என்பது அவர்கள் வளர்ந்த சாதி, மத பின்னணிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிணைப்புகளிலிருந்து விடுதலை பெற்ற பெண்கள், ஒப்பீட்டளவில் சுயமரியாதையுடன் நிற்கமுடிகிறது. தனிப் பெண்கள் என்று அழைக்கப்படும் அத்தகைய பெண்கள், தங்கள் மீதான குடும்ப வன்முறை இல்லாத நிலையில், சமூகத்தின் வன்முறையை மட்டும் எதிர்கொண்டால் போதும் என்பதாக இருக்கின்றனர். இதுவே ஒப்பீட்டளவு சுதந்திரம்தானே!
சிறுபான்மை மத உரிமைகளுக்காக நடத்தப்படும் அல்லது தொடங்கப்படும் இயக்கங்களில் கூட, பெண்களின் பங் களிப்பு இருக்கின்ற அல்லது அனுமதிக்கப் படுகின்ற இயக்கங்களுக்குத்தான், அதிகமான மரியாதையோ, அங்கீகாரமோ கிடைக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும். தலித் இயக்கங்களில் போதுமான அளவில் பெண்களின் பங்களிப்பு இல்லாத இயக்கங் கள், தங்களுடைய நீட்டித்த தன்மையில் தொய்வை சந்திப்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
ஆகவே பழமை நியதிகளை தாண்டி, பெண்களின் பங்களிப்பு உயர்வதனால் மட்டுமே, சமூக முன்னேற்றத்திற்கான எந்த ஒரு இயக்கமும் வளர்ச்சி பெற முடியும் என்ற உண்மை இங்கே நிரூபணமாகியுள்ளது.