Wednesday, January 6, 2010

காமன்வெல்த் நாடுகளும், ஜனநாயக உரிமைகளும்

புதுடெல்லியில் நேற்றுமுன்தினம் தொடங்கிய காமன்வெல்த் நாடுகளின் 5நாள் மாநாடு, இந்திய நாடாளுமன்ற பேரவைத் தலைவர் மீரா குமாரால் தலைமை தாங்கப்பட்டது. மாநாட்டை தொடங்கி வைத்து தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் உரையாற்றினார். பல்வேறு வளரும் நாடுகள் அதிகாரத்துவமிக்க அரசு முறையை தேர்வு செய்தபோது, பலகட்சி ஜனநாயகம் இந்தியாவால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்று பெருமிதமாக கூறினார். காமன்வெல்த் என்றால் என்ன? காமன்வெல்த் நாடுகள் என்றால் யார், யார்? காமன்வெல்த் நாடுகள் ஜனநாயக வளர்ச்சிக்கு உதவக் கூடியதா? இதுபோன்ற கேள்விகள் முறையாக நமது மக்களுக்கு எழவேண்டும். ஆனால் அநேகமாக நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட பெரும்பான்மையோர்க்கு, இந்த காமன்வெல்த் அமைப்புப் பற்றியும், அதன் உறுப்பு நாடுகள் பற்றியும் அதிகமான அறிதல் இல்லாமலிருக்கிறது.
54 உலக நாடுகளை உள்ளடக்கியது இந்த காமன்வெல்த் அமைப்பு. அதில் சில நாடுகள் உறுப்பினர் பொறுப்பிலிருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 6 கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. அது உலகமக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு. காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 210 கோடி. இதில் ஒரு உறுப்பு நாடான இந்தியாவின் மக்கள் தொகை மட்டுமே 117 கோடி. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள், 94% இந்த அமைப்பிலிருக்கிறார்கள். இந்தியாவிற்கடுத்து பாகிஸ்தான் நாடுதான் 17 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையுடன் 2வது பெரிய நாடாக இந்த அமைப்பிலிருக்கிறது. வங்காளதேசம் 15 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையுடனும், நைஜீரிய 15 கோடியே 40 லட்சம் பேருடனும், இங்கிலாந்து 6 கோடியே 10 லட்சம் மக்கள் தொகையுடனும், தென் ஆப்பிரிக்கா 4 கோடியே 90 லட்சம் மக்கள் தொகையுடனும், உள்ளதிலேயே குறைவாக வெறும் 12 ஆயிரம் மக்கள்தொகையுடன் துவலு என்ற நாடும் இதில் உறுப்பினராக இருக்கிறது.
நினைவுபடுத்திப் பார்த்தால் நடந்து முடிந்த டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகரில் நடந்த, ஐ.நா. சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டில், வளரும் நாடுகளுக்கு தலைமை ஏற்று சீனாவும், இந்தியாவும், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிபணியாமல் இருந்த நேரத்தில் சிறிய தீவு நாடுகளை சேர்த்துக் கொண்டு இதே துவலு நாடுதான், இங்கிலாந்தால் வழிகாட்டப்பட்டு வளரும் நாடுகளின் ஒற்றுமையை உடைக்க ஏற்பாடு செய்தது என்பது புரியும். அத்தகைய பண்புகளைக் கொண்ட இங்கிலாந்து நாடுதான், காமன்வெல்த் நாடுகளுக்கு தலைமை எடுக்கிறது என்ற செய்தி சுவையாக இருக்காது.
ஆங்கிலேய மன்னர் ஆட்சிக்கு கட்டுப்பட்டிருந்த முன்னாள் காலனி நாடுகள் பெரும்பான்மையும் இந்த காமன்வெல்த் அமைப்பில் உறுப்பு நாடுகளாக இருக்கிறார்கள். ஆங்கிலேய மன்னர் ஆட்சியின் வாரிசாகத்தான் இந்த அமைப்பு பலராலும் பார்க்கப்படுகிறது. 1884ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த ரோஸ் பெர்ரி பிரபு, ஆங்கிலேய மன்னர் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்ற சில நாடுகளை, காமன்வெல்த் நாடுகள் என்று அழைத்தார். 1887க்கு பிறகு 1911ல் இம்பீரியல் மாநாடு என்று உருவாக்கப்படும் வரை, ஒவ்வொரு காலத்திலும் முறையாக ஆங்கிலேயர் மற்றும் காலனி நாடுகளின் பிரதமர்கள் மாநாடுகளாக கூடி வருகிறார்கள். தொடக்கத்தில் 1921ம் ஆண்டு பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகள் என்று அவை அழைக்கப்பட்டன. 1926ம் ஆண்டு இம்பீரியல் மாநாட்டில் பால்பர் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள விவாகரங்களில், ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர் அல்ல என்றும், சம தரத்தில் உள்ளவர்கள் என்றும், பொதுவான இணைப்பை பிரிட்டிஷ் ராணியிடம் வைத்துக் கொள்வார்கள் என்றும், அதை பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கலாம் என்றும் அறிவித்துக் கொண்டனர். 1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் காமன்வெல்த் பிரதமர்களின் கூட்டம் ஒன்று கூடியது. அதில் லண்டன் பிரகடனம் வெளியிடப்பட்டது. குடியரசாக மாறிய சுதந்திரமடைந்த நாடுகள் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக தொடர முடியாது என்ற விதி இருந்து வந்தது. அத்தகைய விதியின் அடிப்படையில் 1950ம் ஆண்டு குடியரசாக மாறிய இந்திய அரசு பற்றிய விவாதம் எழுந்தது. அப்போது ஆங்கிலேய இறைமை என்ற சுதந்திரமான உறுப்பினர் நாடுகளின் சுதந்தரக் கூட்டு என்ற அடையாளத்தை, அதாவது ஆங்கிலேய ராணியாரின் காமன்வெல்த் தலைமையை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டு இந்தியா உறுப்பு நாடாக தொடர்ந்தது. இந்தியாவிற்கு கொடுத்தது போலவே பிற நாடுகளுக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரச்சனையை கிளப்பியது. அதனால் லண்டன் பிரகடனம் என்பது நவீன காமன்வெல்த்தின் தொடக்கமாக மாறியது. இந்திய முன்னுதாரணத்தை வைத்துக் கொண்டு, பிறநாடுகளும் குடியரசாகவோ அல்லது சட்டரீதியான மன்னர் ஆட்சியாகவோ, ஆங்கிலேய மன்னர் ஆட்சியிலிருந்து வேறுபட்டு அல்லது ஒத்த வகையில், தனி சுதந்திரத்தோடு காமன்வெல்த் உறுப்பு நாடுகளாக ஆக தொடங்கின. காமன்வெல்த் வளர்ச்சிக்கு ஒப்ப 1945க்கு முன்னால் இருந்த நாடுகள் பழைய காமன்வெல்த் என்று பெயர் பெற்றன. 1932ல் புதிய காமன்வெல்த் இயக்கத்தை வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் தொடங்கினார்கள். அது சமாதானத்தை நிறுவுவதற்காக,ஒரு அனைத்து நாட்டு விமானப்படையை உருவாக்கும் இலக்கைக் கொண்டிருந்தது. இதன் பல அம்சங்கள் ஐ.நா. சபையின் கொள்கைப் பட்டியலிலும் பின்னால் இடம்பெற்றன.
உலகப் பரப்பில் 21% பகுதி காமன்வெல்த் நாடுகளின் நிலமாக இருக்கிறது. அதில் கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை பெரும் நிலப்பரப்புக் கொண்ட நாடுகள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் காலனியாக இருந்த நாடுகள், விடுதலை அடைந்த பிறகு காமன்வெல்த்தில் சேர்ந்தார்கள் என்றாலும், முன்னாள் போர்ச்சுகீசிய காலனியாக மொசாம்பிக் நாடும் அதில் 1995ல் இணைந்தது. தென் ஆப்பிரிக்காவும் 1994ல் மறுநுழைவு பெற்றது. ஆங்கிலேய ராணியார் ஆட்சியுடன் சட்டத் தொடர்பு பெற்றிராத ரிவாண்டா நாடும் 2009ம் ஆண்டில் காமன்வெல்த் உறுப்பினரானது. சூடான், அல்ஜீரியா, மடகாஸ்கர், ஏமன் ஆகிய நாடுகள் காமன்வெல்த் உறுப்பினருக்காக விண்ணப்பித்துள்ளன. மடகாஸ்கர் மற்றும் அல்ஜீரியா நாடுகள் எப்போதுமே ஆங்கிலேய காலனிகளாக இருந்ததில்லை. 2006ம் ஆண்டில் காமன்வெல்த் செயலாளர் நாயகம் டான் மகின்னான், இஸ்ரேலும், பாலஸ்தீனமும் கூட, காமன்வெல்த் உறுப்பினராகலாம் என்று கூறினார்.
ஜனநாயகத்தை மறுக்கும் நாடுகளும், ராணுவ ஆட்சியை கொண்டுவரும் நாடுகளும் காமன்வெல்த் இடைநீக்கம் செய்யப்பட்டன. ஜனநாயக அரசாங்கத்தை காப்பதற்கான பொறுப்பு அரேரே பிரகடனம் மூலம் அறுதியிடப்பட்டது. 1995 நவம்பர் 11லிருந்து, 1999 மே 29 வரை, பிஜி, நைஜிரியா ஆகியவை இடைநீக்கம் செய்யப்பட்டன. 1999 அக்டோபர் 18ல் பாகிஸ்தான் ராணுவ ஆட்சி வந்தவுடன் இடைநீக்கம் செய்யப்பட்டது. பாக்.கில் மீண்டும் சட்டபூர்வமான ஆட்சி வந்த பிற்பாடு 2004ம் ஆண்டு மே 22ல் இடைநீக்கம் ரத்துச் செய்யப்பட்டது. மீண்டும் அவசர நிலை அறிவித்ததற்காக 2007 நவம்பர் 22ல், 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டது. ராபர்ட் முகபேயின் தேர்தல் மற்றும் நிலச்சீர்திருத்த அணுகுமுறைகளுக்காக 2002ல் ஜிம்பாபாவே இடைநீக்கம் செய்யப்பட்டது.
இதுபோன்று ஜனநாயகம், பொருளாதாரம், பாலினம், நிர்வாகம், மனிதஉரிமைகள், சட்டம், சிறியமாநிலங்கள், விளையாட்டுகள், நீட்டித்ததன்மை, இளைஞர்கள் ஆகிய பகுதிகளில் காமன்வெல்த் தனது கவனத்தைக் குவிக்கிறது. அதையொட்டித் தான் நமது பிரதமர், பலகட்சி ஜனநாயகத்தில் மட்டுமே பெண்களுக்கும் அதிகார மேம்படுத்தல் சாத்தியம் என்று கூறியுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுகள் பிரபலமானவை. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த போட்டிகள் நடைபெறும். ஆஸ்திரேலியாவில், மெல்போனில் 2006ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தது. அடுத்து 2010ம் ஆண்டு இந்தியாவில் புதுடெல்லியில் நடக்கயிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை பெருமளவில் டெல்லி அரசு செய்து வருகிறது. ஆகவே காமன்வெல்த் பற்றியும், அதன் விதிகள் பற்றியும், பொதுமக்கள் கற்று, தெளிந்துக் கொள்ளுதல், அவர்களுக்கான இன்னொரு வாய்ப்பு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.