Sunday, January 3, 2010

பெண்களால் முடியாதது இல்லை ஆனால் முடியாது!

உலக வரலாற்றில் சாகசப்பயணங்கள் அனைவராலும் எப்போதும் வியந்து பாராட்டப்படும். அதிலும் குறிப்பாக அண்டார்க்டிக் பனிமலையின் உச்சத்தில் ஏறும் சாகசப்பயணம், பறந்து சென்று மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதை காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு உருவாகி 60 ஆண்டுகள் நிறைவானதையொட்டி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. 8 காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த 8 பெண்கள் அந்த சாகசப்பயணத்தில் ஒரே குழுவாக சென்றார்கள். இந்திய நாட்டின் பெண்மணியான ரீனா கவுசல் உடன், புரூனே, சைப்ரஸ், கானா, ஜமைக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய ஏழுநாடுகளின் சாகசப்பயணிகளும் அதில் அடக்கம். அந்த பயணத்தின் வெற்றியில், ரீனா கூறியிருக்கும் அனுபவம் வித்தியாசமானது. அதிலிருந்து அவர் எடுத்திருக்கும் படிப்பினை குறிப்பானது. அதில் தனது பயண வெற்றியை இந்தியப் பெண்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்பதாக அறிவித்திருக்கிறார். பெண்களால் முடியாதது எதுவுமே கிடையாது என்பதாகவும் கூறியிருக்கிறார்.
அப்படியானால் பல சாதனைகளை பெண்களால் ஏன் சாதிக்கமுடியவில்லை என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழவேண்டும். அண்டார்க்டிகா பனிமலையின் ஒப்பந்தம் ஒன்று, உலக நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. 1981ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டது. அதன்பிறகு அறிவியல் ஆராய்ச்சிக்காக அண்டார்க்டிகாவில் பல்முனை அறிவியல் ஆய்வு நடத்தப்பட்ட அது அண்டார்க்டிகாவுக்கான தேசிய மையம் மற்றும் கடல் ஆராய்ச்சி ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. இந்தியாவிற்கும் கூட அங்கே ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிலையம் நிரந்தரமாக இருக்கிறது. 1988ம் ஆண்டு மைத்ரி என்ற பெயரில் கிழக்கு அண்டார்க்டிகாவில் அது நிறுவப்பட்டது. அதில் மண்ணியல், பூகோளம், மருத்துவம் ஆகியவை பற்றிய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பிரியதர்ஷினி ஏரி என்ற தளத்தை சுற்றி சுத்தமான தண்ணீரில் இருக்கும் ஏரி இருக்கிறது. இந்தியா அங்கே இரண்டாவது ஆராய்ச்சி நிலையத்தை லார்ஸ் மண் மலையருகே நிறுவ இருக்கிறது. அது 2012ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும். அந்த இரண்டாவது நிலையம் கடல் ஆராய்ச்சியை முக்கியமாக நடத்தும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அண்டார்க்டிகா பனிபிரதேசத்தில்தான், 7 நாட்டு பெண் வீராங்கனைகளுடன், இந்திய நாட்டின் வீராங்கனை ரீனாவும், தனது சாகசப்பயணத்தை நடத்திக் காட்டியிருக்கிறார். அதனால் அவரது அனுபவத்திலிருந்து எடுத்த படிப்பினைகளில், பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்ற உணர்தல் அனுபவ ரீதியானது. ஆனாலும் நடைமுறையில் அத்தகைய அனுபவ சொற்கள் செயல்படுகிறதா? ஏன் செயல்படவில்லை? இப்படிப்பட்ட கேள்விகள் இதையொட்டி எழுப்பப்படவேண்டும்.
உலக நாடுகளில் அனைத்திலுமே பெண்களுக்கான உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் அறியப்பட்டுள்ள நியதி. ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு உருவாக்கிய, அகிலத்தின் மனித உரிமை பிரகடனத்திலேயே பாலின சமத்துவம் இல்லை என்ற செய்தியையும், பாலின உரிமை அடிப்படையான மனித உரிமை என்ற குறிக்கோளையும் பதிவு செய்திருக்கிறார்கள். பெண்களுக்காக அவர்களது உரிமைக்களுக்காக ஐ.நா.சபையின் மூலம் பெய்ஜிங்கில் நடத்தப்பட்ட உலக பெண்கள் மாநாட்டில் இத்தகைய விவரங்கள் அலசப்பட்டன. பெண் உரிமையும், மனித உரிமையே என்ற முழக்கம், உலகம் எங்கிலும் பரவியது. இன்றுவரை தொடர்ந்து பேசப்படும் பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் கொண்டு வருவதற்கான மசோதா, பல்வேறு காரணங்களால், பல்வேறு கட்சிகளின் தலையீடுகளால், பல்வேறு ஆட்சியாளர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தடுக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம்.
வலிமையான பணிகளைப் பெண்கள் செய்யமுடியாது என்றும், கடுமையாக உழைக்க பெண்களால் முடியாது என்பதாகவும், தொழில் நுட்ப பணிகளை பெண்கள் அறியமாட்டார்கள் என்பதாகவும், போர் நடவடிக்கைகளில் பெண்கள் சாதிக்க வாய்ப்பில்லை என்பதாகவும் கருத்துக்கள் ஆண்களால், எங்கெணும் பரப்பப்பட்ட செய்திகள்தான் கடந்த காலங்களை நிரப்பி வந்தன. பெண்களுக்கென்று எளிமையான வேலைகளைக் கொடுத்துவிடுங்கள் என்றும், பெண்கள் மென்மையானவர்கள் என்றும், அதனால்தான் கடுமையான பணிகளை செய்ய இயலாதவர்கள் என்றும் ஒரு பரப்புரை இங்கே ஏற்கனவே பரப்பப்பட்டுள்ளது. அது அனுதாபத்தின் தருணமாக உருவான ஒரு கருத்தாக்கம் என்றுதான் பொதுவாக எண்ணுகிறார்கள். ஆனால் அதில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வேறு கோணத்தில் காணப்படவேண்டும்.
அதாவது பல்வேறு விதமான பணிகளில், குறிப்பாக கடினமான பணிகள் என்று அறியப்படும் வேலைகளில், பெண்களை ஈடுபடுத்தும் போது, அவர்களது கவனக்குவிதலும், அக்கறையும், விடாப்பிடியான உழைப்பும் சேர்ந்து அவர்களது தனித்திறமைகளை நிரூபிக்கும் நிலைமைக்கு கொண்டு விட்டுவிடும். அப்படி பெண்கள் தங்களை நிரூபித்துவிட்டால், ஆண்கள் எந்தவிதத்தில் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்ற மதிப்பீடு பிரச்சினை விவாதத்திற்கு வந்துவிடும். அப்படிப்பட்ட விவாதங்கள் ஆண்களுடைய தலைமையை, அல்லது ஆதிக்கத்தை அல்லது தனிப்பெருமையை நொறுக்கி விடும். இப்படி நொறுங்கி விழத் தயாரில்லாத, ஆண் ஆதிக்கம் என்பது இந்த இடத்தில் தனது வேலையைக் காட்டுகிறது. அது ஒரு சிந்தனைப்போக்கு. அந்த சிந்தனைப்போக்கு செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு காலக்கட்டத்தில், ஒரு சமூகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் பெண்களை அவர்களது திறமையை வெளிப்படுத்தக்கூடிய களங்களுக்கு வரவிடாமல் செய்வது என்ற ஒரு தந்திரத்தை, ஆண்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால்தான் அதற்கான சூழலை ஏற்படுத்தக்கூடிய மதிப்பீடுகளை, நியதிகளை, கருத்துக்களை சமூகத்தின் கருத்துக்கோப்புகளாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
மேற்கண்ட போலியான அல்லது செயற்கையான உருவாக்கத்தை செய்ததைத்தான் ஆணாதிக்க உருவாக்கம் என்பதாக பெரியார் தொடங்கி அனைத்து பெண்ணியவாதிகளும் இன்று வரை அறுதியிட்டு கூறிக்கொண்டிருக் கிறார்கள். இத்தகைய காரணங்களினால்தான் இன்று வரை, அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்களிப்பு என்பது அறிமுகப்படுத்தப் படாமலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டில் வாகன ஓட்டுநராக பெண்கள் வரமுடியாது என்று இருந்த ஒரு சூழலில், நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓட்டியாக பயிற்சி பெற்று பணிக்கு வந்தார். அப்படி இருந்தும் தடுக்கப்பட்ட அவர், பெண்கள் இயக்கத்தின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்துடன் விவாதங்களை நடத்தி, தனது பணியிடத்தை தக்க வைக்க வேண்டிவந்தது. அதுபோல சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ராணுவப்பணிகளில் அதிரடி படை வீரர்களாக பெண்கள் எடுக்கப்படுவார்களா என்ற விவாதத்தில் சுஷ்மா சுவராஜிற்கு, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதில் கூறினார். அந்த பதிலும் கூட, முடியும் ஆனால் முடியாது என்பதுபோல இருந்தது. அதாவது அதிரடிப் படையில் கமான்டோக்களாக பெண்கள் உடனடியாக வரமுடியாது என்றும், ஆனால் பெண்கள் எல்லாவற்றிலும் முன்னேறி வரமுடியும் என்பதால், ராணுவத்திலும் பல பெண்கள் சேர்க்கப்பட முடியும் என்றும் அமைச்சர் கூறினார். இப்படிப்பட்ட அந்தோணியாரின் சிந்தனைப்போக்குகள்தான், அல்லது முன்வைப்புகள்தான், வளைந்து கொடுத்து பதில் கூறும் ஆண்களிடம் அண்டிக்கிடக்கிறது.
பெண்களுக்கு 33 விழுக்காடு முடிவுகளை திட்டமிடுகின்ற, நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளில் கொடுப்பது என்ற மசோதா, உலகளாவிய ஆய்வின் அடிப்படையில் உருவான ஒன்று. அதாவது ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில், ஆராய்ச்சியின் மூலம் கிடைத்த விடையாக, குறைந்த பட்சம் திட்டமிடும் இடங்களில், தீர்மானிக்கும் தளங்களில் 3ல் ஒரு பங்கு விழுக்காடு இருக்கின்ற பாலினப்பிரிவு தங்களது உரிமைகளை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதையொட்டியே 100ல் 33% என்பதாக பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதலில் பெறுவது என்ற முழக்கம், உலகெங்கிலும் பரவியது.
அப்படியானால் இந்த உலகம் ஆணாதிக்க உலகம் என்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டு, அதில் 50% உள்ள மக்கள் பிரிவினர், குறைந்த பட்சம் 33% பெற்றாலாவது பரவாயில்லை என்ற கோரிக்கைதான் உரிமைக் கோரிக்கையாக எழுப்பப்படுகிறது. அதற்குக் கூட வழியில்லாத ஒரு அரசியல் அமைப்பை, சமூக காரணங்களினால் இந்தியாவில் இன்று வரை நாம் கட்டிக்கொண்டு அழுகிறோம். எப்போதுதான் ரீனாக்களின் கனவுகளை நனவாக்கப்போகிறோம் என்று சொரணையோடு இந்த சமூகத்தை கேட்கலாம்.